Wednesday, August 25, 2010

காயத்ரி ஜப மகிமை

"காயத்ரி ஜபம்" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு எழுதியிருந்தோம். அதன் முக்கியத்துவத்தைக் கருதி மேலும் கொஞ்சம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. அதன் பெருமை தெரியாததாலோ என்னவோ பெரும்பாலானவர்கள் சிரத்தை இல்லாமலும் அரைகுறையாகப் பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுவதுமாக இருக்கிறார்கள். அன்றையதினம் விடுமுறையாக இருந்தாலும் நிதானமாக, சிரத்தையுடன் ஜபம் செய்வார்களா என்பது வேறு விஷயம். அப்பா எப்பொழுது எழுந்திருப்பார் என்று பார்த்துக்கொண்டே அருகில் ஜபம் பண்ணும் பிள்ளை. அப்பாவும் பிள்ளையுமாக ஜபம் பண்ணியதைப்(??) பார்த்துப் பூரித்த அம்மா. எவ்வளவு பேர் வீட்டில் இது போல் நடக்கிறது? தினசரி சந்த்யாவந்தனத்தைப் பண்ணாமல் ஆவணி அவிட்டத்தையும் காயத்ரி ஜெபத்தையும்கண் துடைப்பாகப்பண்ணும் குடும்பங்கள் இக்காலத்தில் அதிகரித்து வருகின்றன.

மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் செய்யப்படுவது இக்கர்மா. தீட்டு வந்த போது கூட இதைச் செய்ய வேண்டும். ஸ்ரீ பரமேச்வரன் இதைச் செய்ததாக குமார சம்பவத்தில் கவி காளிதாசன் குறிப்பிடுகிறார். இதைச் செய்யாமல் வேறு எந்தக் கர்மாவை செய்தாலும் பலன் தராது. வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யும் இடம், தேவ பூஜை செய்யும் இடம்,பசுமாடு கட்டும் கொட்டகை,துளசி மாடம் ஆகியவற்றின் அருகில் காயத்ரி ஜபம் செய்வது அதிகப் பலனைத்தரும். ஹோமமாகச் செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் காரிய சித்தியும் பாப நிவர்த்தியும், இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும்.

அர்த்தம் தெரியாததால் இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவை விட்டு விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. ஆ சத்யேன எனத் தொடங்கும் மந்த்ரம் தீர்காயுளைப் பிரார்த்திக்கிறது. அதன் சுருக்கமான பொருளாவது: " நூறு வருஷம் உதய காலத்தில் சூரிய மண்டலத்தைத் தரிசிப்போம்.நூறு வருஷம் ஜீவிப்போம். நூறு வருஷம் புத்திர பௌத்ராதிகளோடு இருப்போம்.நூறு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வோம். அப்பொழுது நல்ல சொற்களையே பேசுவோம். நல்ல சொற்களையே கேட்போம்.சத்ருக்கள் யாரும் எங்களை ஜெயிக்கப்படாதவர்கள் ஆவோம். " என்று ப்ரத்யக்ஷ தெய்வமான சூர்யனிடம் வேண்டப்படுகிறது.

இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவைப் பண்ணாமல் ஆயுளை வீணாகக் கழிக்கக் கூடாது. விடுமுறை நாட்களில் அதிக ஆவர்த்தி ஜபம் பண்ண முடியும். ரிடையர் ஆனவர்கள் இத்தனை வருஷம் பண்ணமுடியாமல் போயிருந்தாலும் இனிமேலாவது அதிக சிரத்தையுடன் செய்ய ஆரம்பிக்கவேண்டும். இதனால் குடும்பம் க்ஷேமம் அடைவதோடு,லோக க்ஷேமமும் உண்டாகும். நமது எல்லா அபராதங்களையும் மன்னிக்கும் வேத மாதா இதற்கு அருள் செய்ய பிரார்த்திக்கிறோம்.

Wednesday, August 4, 2010

ஆதி சைவர்களைப் போற்றுவோம்


அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடும்போது சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்கள் எனப்படும் சிவாசார்யார்களை ,"முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்று போற்றியிருக்கிறார். பஞ்சம் வந்த போதும் இடைவிடாமல் பசியோடும் களைப்போடும் சிவாலய பூஜை செய்த அழகாபுத்தூர் எனப்படும் அரிசிற்கரைப் புத்தூர் புகழ்த்துணை நாயனாரை சிறப்பித்து அந்த ஊர் பதிகத்தில் பாடியிருக்கிறார்.அப்படி பூஜை செய்ததால் அச்சிவாசாரியாருக்கு சுவாமி தினமும் படிக்காசு கொடுத்ததாக வரலாறு. கோயில்களிலிருந்து நிலக்குத்தகை மூலம் அர்ச்சகர்கள் பெற்று வந்த நெல்லும் நின்றுவிடவே கிராமங்களில் உள்ள அர்ச்சகர்கள் சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். மறுநாள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவிப்போரும் உண்டு. நிலையான வருமானம் இல்லாததால் அல்லல் படுவோர் பலர். இத்தனை கஷ்டங்களை சுமந்து கொண்டும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கிராமங்களிலேயே இருந்து கொண்டு பூஜை செய்யும் வயது முதிர்ந்த சிவாசார்யார்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலவகையான உதவிகளை செய்து வருகிறது நமது சபை. ஐந்து கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் பல்லாண்டுகளாகப் பூஜை செய்து வரும் சிவாசார்யார்களுக்கு மரியாதை செய்யும் வகையில் கடந்த ஆகஸ்ட் முதல் தேதி அன்று திருவாழ்கொளிப்புத்தூர் என்று தேவாரத்தில் வழங்கப்படும் ஸ்தலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தலத்து சிவாச்சாரியாரும் மற்றும் நீடூர்,மேலானல்லூர்,இலுப்பப் பட்டு, வழுவூர் ஆகிய ஸ்தலத்து சிவாசார்யார்களும் தங்கள் மனைவியருடன் வந்திருந்தனர்.

செல்லும் வழியில் நீடூர் சிவாலய தரிசனமும் சுவாமியின் காலசந்தி அபிஷேகமும் கண் குளிரக் கண்டோம். தேவேந்திரன் காவேரி மணலால் செய்த மூர்த்தம். கோவிலுக்கு வெளியில் உள்ள காளிதேவியின் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டபின், திருவாழ்கொளிபுத்தூரை அடைந்தோம். மாயூரத்திலிருந்து ஏற்பாடு செய்திருந்த பர்சாரகர்எங்களுக்கு முன்னாலேயே வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த க்ஷேத்ரம் பாடல் பெற்றது. அர்ஜுனனின் வாளைப்புற்றுக்குள் சுவாமி மறைத்து வைத்துவிட்டுப் பிறகு அருள் செய்ததால் ஊருக்கு இந்தப் பெயர் வந்தது. பஞ்ச காலத்தில் சுவாமி இரத்தின மழையாகப் பெய்ததால் ரத்னபுரீச்வரர் எனப்படுகிறார். பிரமரகுந்தலாம்பிகை (வண்டுவாழ் குழலி) என்று அம்பாளுக்குப் பெயர். எல்லா திரவியங்களுடன் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. அலங்காரம் ஆனவுடன் ஐந்து சிவாசார்யார்களும் சுவாமியின் அருகாமையில் நின்றுகொண்டு வில்வ தளங்களால் ருத்ர த்ரிசதி அர்ச்சனை செய்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின்னர் அம்பாளுக்கும் , துர்கைக்கும் அர்ச்சனைகள் நடந்தன.

அந்தந்த ஊர் சுவாமி அம்பாள் என்று சிவாசார்யா தம்பதிகளைப் பாவித்து சங்கல்பம், அர்ச்சனை,தூபம்,தீபம் ,பாதங்களில் நலங்கு இடுதல் ஆகியவை செய்யப்பெற்று வேஷ்டி - புடவைகளோடு ரூ.௨000 சம்பாவனையும் வழங்கப் பட்டது. மனமகிழ்ந்த தம்பதிகளும் ஆசி வழங்கினர்.

துர்க்கை சன்னதியின் எதிரில் மத்தியான போஜனம் பரிமாறப்பட்டது. இவ்வாறு மன நிறைவோடு விழா இனிதே நிறைவுற்றது.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. எவ்வளவு செய்தாலும் தகும். மாதாந்திர நிரந்தர வருமானம் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் நல்லது. மாதம் முன்னூறு ரூபாய் ஏற்பாடு செய்யும்படி ஒரு சிவாசாரியார் கேட்டுக் கொண்டதன் பேரில் எனது வங்கி கணக்கிலிருந்து அவரது வங்கி கணக்கிற்கு அத்தொகை வழங்க ஏற்பாடு செய்தாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். மாதம் தோறும் பிரசாதம் அனுப்புகிறேன் என்றார். அவருக்குத் தபால் செலவு வைக்க மனம் வரவில்லை. மேலும் அவர் வற்புறுத்தவே, மாதாந்திர சிவராத்திரி அன்று சுவாமிக்கு ருத்ர த்ரிசதி அர்ச்சனை செய்து எல்லோருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டால் போதுமானது என்றேன்.