Wednesday, May 16, 2018

திருவெறும்பூர் கல்வெட்டுக்கள் இறைந்து கிடப்பதா ?

திருவெறும்பியூர் ஆலய வெளிப் பிராகாரம் 
வரலாறு, கலை ஆகியவற்றில் ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்  அந்த வரலாறுகளையும் , கலைகளையும் தாங்கி நிற்கும் கோயில்கள் இடிந்து கிடந்தும், கல்வெட்டுக்கள் சிதறிக் கிடந்தும் இருப்பது தெரிந்தும்கூட ,என்ன செய்து கொண்டு          இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களின் நிலையும் இதே தான். இப்படி இருக்கும்போது இந்த ஆர்வலர்களுக்குப் பட்டம் கொடுப்பதும், அவர்களது புத்தகங்களை வெளியிடுவதும் மாத்திரம் தொடர்கிறது. இராஜராஜனின் ஆயிரம் ஆண்டு விழா, இராஜேந்திரனின் ஆயிரம் ஆண்டு விழா  என்று பல லட்சங்கள் செலவாவதே மிச்சம். அம்மாமன்னர்கள் கட்டிய கோயில்களைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டாதவர்களை ஆர்வலர்கள் என்று எப்படிக் கூறுவது ? 

பிராகார மதிலை ஒட்டி சிதறிக் கிடக்கும் கல்வெட்டு 
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது திரு எறும்பியூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற சிவத் தலம். இவ்வூர் மக்களால் தற்போது திருவெறும்பூர் என்று அழைக்கப்படுகிறது. அங்கு மலை மேல் அமைந்துள்ள கோயில் கோட்டை போன்ற அமைப்பைக் கொண்டது. இக்கோயில் முதலாம் ஆதித்த சோழர் காலத்தில்  கட்டப்பட்டது என்கிறார்கள். சுந்தர சோழர் காலத்தில் இங்கு திருப்பதிக விண்ணப்பம் செய்வதற்காக நான்கு பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டதாகக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இந்திரனும்  பிற தேவர்களும் எறும்பு வடிவில் வழிபடப்பெற்ற புராணச் சிறப்புடையது இத் திருக்கோயில்.ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் ஏற்பட்ட போரில் மேரு மலைச்  சிகரம்  சிதறவே, அதிலிருந்து விழுந்த ஒரு பாகமே இம்மலை ஆயிற்று என்பர். சில கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தக்ஷிண கைலாயம் என்கின்றன. மேலும் இவ்வூருக்குப் பிரமபுரம், லக்ஷ்மிபுரம், மதுவனபுரம், இரத்தின கூடம், மணிகூடம், குமரபுரம், பிப்பிலீசுவரம் , எனப் பலப் பெயர்கள் உண்டு. 

முதல் இராஜேந்திர சோழர் காலக்  கல்வெட்டு ஒன்றில் இத்தலத்து இறைவன் பெயர் திருவெறும்பியூருடைய மகாதேவர்   என்றும், முதல் ஆதித்த சோழர் காலக் கல்வெட்டில் திருக்கயிலாயத்து மகாதேவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

 இராஜகேசரி வர்மனது 21 கல்வெட்டுக்கள் கோயிலின் மூலச் சுவர்களில் காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் விளக்கு எரிக்கவும், நாள்தோறும்  திருமஞ்சனத்திற்காக ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரவும் 15 கழஞ்சுப் பொன் கொடுத்த செய்தி காணப்படுகிறது. செம்பியன் சேதி வேளாளன் என்பவனது அறக் கொடைகள் பற்றியும் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. கோயில் விமானம் எடுப்பித்தும் , திருப்பதிகம் பாட ஏற்பாடு செய்தும், மடவார் விளாகம் அமைத்துக் கொடுத்தும் , வாய்க்கால் வெட்ட நிலம் அளித்தும், திருக்குளத்தைப் பராமரிக்க நிவந்தம் அளித்தும், இவன் செய்த சிவதர்மம் பேசப்படுகிறது.

தமிழக வரலாற்றைத் தெரிவிக்கும் கல்வெட்டுக்களின் இன்றைய நிலை பரிதாபத்துக்குரியது. சில இடங்களில் அவற்றின் மேல் சுண்ணாம்பும் வண்ணமும் அடித்திருப்பார்கள். இன்னும் சில இடங்களில் அக்கல்வெட்டுக்களை மறைத்துக் கட்டியிருப்பார்கள். ஆனால் திருவெறும்பூரில் பிராகார மதிலை ஒட்டிக் கல்வெட்டுக்கள் திறந்த வெளியில் சிதறிக் கிடக்கின்றன. ஒருவேளை திருப்பணி செய்தவர்களின்  " திருப்பணியாக "  இருக்கக் கூடும். இது யார் கண்ணிலும் படவில்லையா ? கல்வெட்டு எழுதப்பெற்ற கற்கள் முழுமையாக அங்குக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றின் புகைப்படங்களே இங்கு இடம் பெறுகின்றன.

கல்வெட்டு , வரலாறு ஆர்வலர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் ? நிர்வாக அதிகாரி முதல் ஆணையர் வரை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதற்கான  விடை இருக்கிறதா?   கல்வெட்டைப் படி எடுப்பதோடு வேலை முடிந்து விட்டது என்று தொல்லியல் துறை நினைக்கிறதா ? இந்த அநியாயத்திற்கு யார் தான் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள் ? 

வெளியே அகற்றப் பெற்ற கல்வெட்டுக்களை உரிய இடத்தில் மறுபடியும் வல்லுனர்கள் உதவியுடன் நிலை பெறச் செய்ய வேண்டும். வரலாற்றுப் பொக்கிஷம் காப்பாற்றப்பட வேண்டும். வரலாற்றுச் செய்திகளை வைத்துக் கொண்டு புத்தகம் எழுதிச்  சம்பாதிப்பவர்கள் காதில் இந்த வேண்டுகோள் விழும் என்று நம்புகிறோம்.