Sunday, January 6, 2019

உள்ளூர்க்காரர்களுக்கு அக்கறை இல்லையா ?

திருச்சோற்றுத்துறையில் மக்களின் ஈடுபாடு 
தினமும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஊரிலும் கோயில்கள் அமைந்தன. உள்ளூர்  மக்களும்  ஆலய வழிபாட்டைத் தினசரி கடமையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். மக்களிடையே நாத்திகம் விதைக்கப்பட்ட காலத்திலிருந்துதான்  திருக் கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டுக்  கேட்க நாதி இல்லாமல் போய் விட்டது.  போதாக் குறைக்கு நகரங்களையும் வெளி நாடுகளையும் நோக்கி மக்கள் நகரத் துவங்கியதும்  பராமரிப்பு என்பது அநேகமாக இல்லாமல் போய் விட்டது. எஞ்சியுள்ள உள்ளூர் மக்களோ அக்கறை இன்றி, கோயில்கள் மரம் முளைத்துப் போய் இடிந்து விழுவது கண்டும் திருப்பணிக்கான முயற்சி எடுக்காமலேயே இருக்கிறார்கள் !  அறநிலையத்துறை ஆலயங்கள் மட்டுமல்லாமல்  ஒரு சில ஆதீனக் கோயில்களும் பல்லாண்டுகளாகத் திருப்பணி செய்யப்படாமல்  மரங்கள் முளைத்துக் கிடப்பதைக்  காணும் போது வேதனையே ஏற்படுகிறது.

நன்றி :   வலைத்தளப்படம் 
சமூக வலைத்தளங்களில் பலர்  இவ்வாறு ஆதீனக் கோயில்கள்  மரம் முளைத்துப் போய் இடிபாடுகளோடு காணப்படுவதைப் புகைப் படங்களோடு வெளியிட்டுத் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.  கேட்டால், பாலாலயம் செய்தாகி விட்டது என்றோ, திருப்பணி அனுமதி கிடைக்கவில்லை என்றோ நிர்வாகத்திலிருந்து பதில் வரும். பாலாலயம் செய்துவிட்டால்  மட்டும் போதாது. ஆறு மாத காலத்திற்குள்ளாவது திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் நடை பெற வேண்டும்.  வருமானம்  நிறைய இருக்கும் தேவஸ்தான நிதியிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோயிலைக் கூடத் திருப்பணி செய்ய முடியாதா ? 

நன்றி : வலைத்தளப் படம் 
வலைத் தளத்தில் எழுந்துள்ள மற்றுமோர் குற்றச்சாட்டும் அனைவரது கவனத்திற்கும் உரியது. அதாவது ஒரு பிரபலமான கோயிலில் திரைப்படக் காட்சிகள் எடுக்க அனுமதி கொடுத்திருப்பதுதான் !  ஆலயத்திற்கு வருமானம் தேவைதான். அதற்காக எந்த வழியின் மூலமாகவும்  வரலாம் என்று முடிவு எடுக்கலாமா ?  ஆலயம் என்பது வழிபாடு நடைபெறும் இடம் . அங்கு வருவோரை வழி மறிக்கின்றனர்  படப்பிடிப்புக் குழுவினர். நம்மில் பலரும் ஆலயத்திற்கு வந்தோம் என்பதையே மறந்து வெட்கமில்லாமல் படப்பிடிப்பு பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். 

குருபீடங்களுக்குத் தெரியாததல்ல. அவர்களைக் குறை கூற நாம் யார் ? அறுபது ஆண்டுகளாகத் திருப்பணி செய்யவில்லையே என்ற ஏக்கமே மக்களை இவ்வாறு வேதனைப் படச் செய்கிறது. பிழையானால் பொறுப்பர் என நம்புகிறோம். 

உள்ளூர்க் காரர்களுக்கு மட்டும் நம்முடைய கோயில் என்ற உணர்வு இருந்தால் இந்நிலை ஏற்படுமா? நமக்கென்ன என்றல்லவா இருக்கிறார்கள் !  இதைத்தான் பிற மதத்தவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர். " அரன்  பொற்கழல் உள்  இருக்கும் உணர்ச்சி இல்லாதவர் நள்ளிருப்பர்  நரகக் குழியிலே " என்றார் அப்பர் சுவாமிகள்.  நம்  ஊர்க் கோயில் மரம் முளைக்கலாமா என்று கவலைப் படுவோர் சிலரே.  மரத்தை அகற்றுவதையும் வெளியூர்க் காரர்களே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா ?  திருப்பணி, கும்பாபிஷேகம் ஆகிய எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கும் ஊர்கள் ஏராளம்.   

உள்ளூர்க்காரர்களுக்குத் தங்கள் கோயில் மீது அக்கறை இல்லாமல் போகலாமா ? கும்பாபிஷேகம் ஆன பிறகாவது தினமும் கோயிலுக்கு வந்து, நித்திய பூஜைகள் நடை பெறச் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லையே .
  
உள்ளூர்க் காரர்களுக்கு உணர்ச்சி ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியம். தட்டிக் கேட்க ஆளில்லாததால் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு முற்றோதுதல் செய்தால் மட்டும்  போதுமா ?  களப்பணி ஆற்றினாலே இதுபோன்ற கைவிடப்பட்ட கோயில்களைக் காப்பாற்ற முடியும்.  அடியார் கூட்டங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளூர்க் கார்களை  நல்வழிப் படுத்த வேண்டும். அவ்வாறு நல்வழிப் படுத்த வேண்டியவர்கள்  பாராமுகமாய் இருப்பதால் அப்பொறுப்பைப்  பொது மக்களே ஏற்க வேண்டி உள்ளது.
  
விதி விலக்காகச்  சில ஊர்களில் உள்ளூர் மக்கள் முழுமையாகத் தங்களை ஆலயத்தோடு இணைத்துக் கொண்டிருப்பது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் அற நிலையத் துறையின்  தயவை எதிர் பார்ப்பதில்லை. கோயிலைப் பளிச்சென்று வைத்துக் கொண்டு தொண்டு ஆற்றுகிறார்கள். 

மார்கழி வைகறையில் பாவைப் பாடல்கள் மங்கள ஜோதியுடன் 
உதாரணத்திற்குத் திருவையாற்றுக்கு அண்மையில் உள்ளதும், சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்றுமான திருச்சோற்றுத்துறை ஓதன வனேசுவர சுவாமி ஆலயத்தைக் குறிப்பிடலாம். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  ஆலய வழிபாட்டில் சிறந்து விளங்குவதை அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத் தெரியும். மார்கழியில் திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி பாடல்களைப் பாடிக் கொண்டு வீதிகளை வலம் வரும் காட்சி கண்டோரைப் பரவசப் படுத்தும். இதுபோல மற்ற ஊர்களும்  அக்கறையோடு செயல் பட்டால்  பிரகாரங்கள் புதர்கள் முளைத்துப் பாம்புகளின் கூடாரங்களாக ஆகாமல் காக்கலாம். உதவிக் கரம் நீட்ட வெளியூர் மக்கள் பலர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எதையும் எதிர்பாராமல் உழவாரப் பணி செய்கின்றனர். ஆனால் பயன் படுத்திக்கொள்ளத்  தயாராக இல்லாத உள்ளூர் வாசிகளையும் , வெறும் பெயர்ப் பலகையில்   " ...... க்குச் சொந்தமான "  என்று பொறித்துக் கொள்ளும் நிர்வாகத்தையும்  யாரால் மாற்ற முடியும் ? ஈசன் திருவருள் ஒன்றே இந்நிலையை மாற்ற வல்லது.