Thursday, November 29, 2018

பொன் மாணிக்கவேல் ஐயா பதவிக்காலம் நீடிக்கட்டும்

பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள்.  நன்றி: வலைத்தளம் 
தமிழக போலீஸ் துறை அதிகாரி ஐ. ஜி. திரு. பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களின் பதவிக்காலம்  நவம்பரில் முடிவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. நேர்மையான அதிகாரிகளுள் என்றும்  மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் மாமனிதர் இவர். உலக அளவில் நடைபெறும் கொள்ளைகளை அறிந்து அபாரமாகச் செயல் புரிந்த இவரது அரும் பணிக்காக அரசும்,மக்களும் தலை வணங்கியே ஆக வேண்டும். சிலை மீட்ட செம்மல் போன்ற பட்டங்கள் கொடுத்துப் பாராட்டி விட்டுப் பொன்னாடைகள் போடுவதைக்காட்டிலும், அவரது துறையைச் சேர்ந்தவர்கள் இவருடைய  அடிச் சுவட்டில் பணியாற்றுவதே இவருக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

1960 களிலிருந்தே சிலைக் கடத்தல்கள் நடைபெறுவதாகக் கண்டறிந்த இவர் முனைப்பாகச் செயலாற்றியதால் தான் பல கொள்ளை போன விக்கிரகங்கள் மீட்கப் பட்டன. இன்னும் அவர் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருந்தும், பதவிக்கால நிறைவானது குறுக்கிடுவது பெரும் தடையாக இருக்கிறது. இன்னும் அவரது பதவிக்காலம் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது நீடிக்கப்பட வேண்டும் என்பது ஆன்மீக அன்பர்களின் அவா. நிறைவேற்ற வேண்டியது அரசின் கையில் தான் உள்ளது. கடத்தல் வாதிகளுக்குத் துணையாக அரசு அதிகாரிகளோ ஆட்சி வர்க்கத்தைச் சார்ந்த பிறரோ ஒருபோதும் துணை போய் விடக் கூடாது. நேர்மையான அதிகாரியின் செயல்பாட்டுக்கு இடையூறாக அரசியல் புகுந்து விட்டால் நேர்மையின் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய் விடும். 

ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு ஐயா அனுபவங்கள் பலவற்றை நிச்சயமாகச் சந்தித்திருக்கக் கூடும். அந்தப் பாதை எவ்வளவு கரடு முரடானது என்றும், ஆபத்துக்கள் நிறைந்தது என்றும், அவர் நன்றாக அறிவார். இத்தனையையும் மீறிச்  செயல் பட்டார் என்றால், அவருக்குத் துணிவும், ஆண்டவன் அருளுமே துணையாக நின்றன என்று நிச்சயமாகக் கூறலாம். 

பரபரப்பான தகவல்களுக்காகவே தவம் கிடக்கும் மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் அவரிடமே கேள்வி கேட்பார்கள். மீட்டுக் கொண்டு வந்த சிலையின் சந்தை விலை என்ன என்பார்கள். அதையே தலைப்புக் கட்டித் தொலைக் காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடுவதோடு, கொள்ளை அடித்தவனை " சர்வதேசக் கடத்தல் மன்னன் " என்று வர்ணிப்பார்கள் அந்த மானம் கெட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் நமது ஐயா பாடுபட்டு சிலைகளை மீட்டு வந்ததைப பாராட்ட மனம் இருக்கிறதோ இல்லையோ, வெளியிடுவதற்குச் சூடான தகவல் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். 

பதுக்கி வைத்த கற்சிலைகளை ஐயா மீட்ட பிறகு அவற்றைப்  பாது காப்பாக வைக்க ஒரு இடம் கூடத் தரவில்லை நமது அரசு. அதற்கும் தளராமல் தமது அலுவலகத்திலேயே அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

கொள்ளைக் காரர்கள் வெளி நாட்டவர்களது கைக்கூலியாகச் செயல் பட்டு நமது மூர்த்திகளைத் திருடிச் சென்றதைத் தான் நாம் கேள்விப் பட்டு வந்தோம். வேலியே பயிரை மேய்வது போல அறநிலையத்துறையின் கோயில் மூர்த்திகள் பாதுகாப்புக்காக ( ??? )  வேறு கோயிலில் வைக்கப் பட்டது போக, அக்கோயிலில் பணியாற்றும் அறநிலையத்துறை ஊழியர்களும், மேலதிகாரியின் துணையோடு  களவாடிச் சென்று விற்றதை  நமது ஐயா அவர்கள் கண்டறிந்து அனைவருக்கும் வெளிப்படுத்தியவுடன்  ஆன்மீக உலகே அதிர்ச்சி அடைந்தது. விக்கிரகத்தையே மாற்றி ஏமாற்றிய  கேடு கேட்ட பிழைப்புக்கு ஸ்தபதி ஒருவரும் உடந்தை என்பது மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது.

ஐயா அவர்களின் சீரிய தொண்டால் அறநிலையத்துறையின் ஒழுங்கீனங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படத் துவங்கியுள்ளன. ஆயிரத்திற்கும் மேலான அறநிலையத் துறை கோயில்கள் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டமை அம்பலமாகி உள்ளன. 

அரும்பாடு பட்டு ஐயா அவர்கள் மீட்டுத் தந்த மூர்த்திகள் உரிய கோயில்களில் தகுந்த பாதுகாப்பு வசதிகளோடு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூஜை செய்ய வழி வகுத்தால் தான் அவருடைய அயரா உழைப்புக்கு நாம் தரும் நன்றிக் கடன் ஆகும். ஆனால் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகமோ, பணியாளர்களோ,  உள்ளூர் வாசிகளோ தொடர்ந்து அலட்சியம் காட்டுவது வேதனைக்கு உரியது. 

ஏதும் பொறாதவற்றுக்கெல்லாம் போராட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவிக்கும்  உள்ளூர் வாசிகளும் பிற ஊர் அன்பர்களும் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் ? நமது தெய்வ நம்பிக்கையும், ஈடுபாடும் அவ்வளவு தானா ? வெறும் வாய்ப் பேச்சில் வல்லவர்களா நாம் ?  

Sunday, November 25, 2018

வேண்டாம் இந்தத் துவேஷம்

ஞானத்தமிழ் தந்த ஞானசம்பந்தர் 
பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிற்கும் இறைவனுக்கு உருவமும் உண்டு;அருவமும் உண்டு; அவ்விரண்டும் கலந்த அருவாருவமும் உண்டு. " நின் உருவம் ஏது " என்று கேட்கிறார் காரைக்கால் அம்மையார். பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் சமமாக நோக்கும் பக்குவம் எல்லோருக்கும் எளிதாக வந்து விடாது. அவரவர்க்குத் தங்களது பாதையே உயர்ந்தது என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். இப்படி இறைவனைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாத நிலையில், தாம் படித்த நூல்களை அரைகுறையாகப் புரிந்து கொண்டு வாதமிடுவோரும், பிறரைப் பழிப்போரும் நிறைய இருக்கிறார்கள். தாங்கள் சார்ந்த சமயமோ தெய்வமோ உயர்ந்தது என்று மட்டும் இருக்காமல் பிற சமயத்தவரைக் குறை சொல்லியும்,ஏளனம் செய்தும் பிழைப்பு நடத்துவோரும் இருக்கிறார்கள். 

அண்மையில் அகச்சமயத்தைச் சார்ந்த ஒருவரது வீடியோ வெளியாகியிருந்தது. அவரது ஆச்சாரியார் ஒருவர் சீர்காழியில் திருஞானசம்பந்தரை சந்தித்ததாகவும், அவரது பாடல்கள் சம்பந்தரது பாடல்களை விட உயர்ந்ததால் ( ?? ) சம்பந்தர் அவருக்குத் தனது வேலைப் பரிசாகக் கொடுத்ததாகவும்  ஒரு கற்பனைக் கதையை அந்த வீடியோவில் வெளியிட்டிருந்தார். முதலில் அவ்விருவரும் சமகாலத்தவர்கள் அல்லர் என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். கல்வெட்டுச் சான்றோ,பழைய இலக்கியச் சான்றோ, ஒலைசுவடிச் சான்றோ இல்லாத நிலையில் இப்படி ஒரு பொய்யுரை தேவைதானா? 

பாடலைத் தலைகீழாகப் படிக்கவும் முடியும் என்பதோடு பொருளும் , பண்ணும் சிறந்து விளங்கும் ஒரு   பதிகத்தையே ( 11 பாடல்கள்)  அருளினார் சம்பந்தர் . உதாரணத்திற்கு அப்பதிகத்தின் முதல் பாடல் இதோ:

"  யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா       
    
     காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா . " 

இது போல் பாடல் அவரிடம் உண்டா என்று நாம் வாதம் செய்யப்போவதில்லை. வேறு எவரது பாடலுக்கும் தாழ்ந்தது சம்பந்தர் பாடல் அல்ல என்று மட்டுமே இங்கு நிரூபிக்க விரும்புகிறோம்.

இப்பதிவை அவர் பார்க்க வேண்டும் என்றுகூட நாம் விரும்பவில்லை. தமிழ்த் தாயின் ஆபரணங்களுள் சிறந்த ஒன்றாகவாவது சம்பந்தப் பெருமான் அருளியதை ஏற்பதில் அவருக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. ஒருவேளை இதற்கு மூல காரணம் சிவ துவேஷம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? 

நாம் அவரிடம் மட்டுமல்ல, அகச் சமயத்தைச் சேர்ந்தவர்களிடமும், நமது சமயத்திலிருந்தே சமய நெறிகளுக்குப் புறம்பாகச் செயலாற்றுபவர்களிடமும்  பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.  இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்குள் வாதம் செய்து கொள்வதும், உட்பிரிவுகளிடையில் சண்டையிட்டுக் கொள்வதும் , புராணங்களைத் திரித்து மக்களிடையே பரப்புவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டிய செயல்கள். இதனால் மக்களிடையே துவேஷம் அதிகரிக்குமே தவிர வேறு ஒன்றும் ஆகப்போவதில்லை. இதனால் கடவுள் மறுப்பாளர்களும், பிற சமயத்தவர்களும் மேன் மேலும் நம்மை நோக்கிக் கற்களை வீசத் தொடங்குவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். 

இத்தனை நாட்கள் சந்தித்த பிரிவுகள் போதும். அடுத்த சந்ததியர்க்கு ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொடுப்போம். நல்ல நெறிகளை எடுத்துரைப்போம். ஒருமாநிலத்தில் நாத்திகர்களும், பிற மதத்தவர்களும் போக, இறை நம்பிக்கை உடையவர்கள் வெறும் பத்து சதவீதமே என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

சமயச் சான்றோர்கள் அகச்சமயங்களின் வேறுபாடுகளைக் களைந்து இணங்கி வாழ வித்திடவேண்டும். அதைச்  செய்யத் தவறியவர்கள் தான் இதுபோல் வேலைக் கொடுத்தார், கோலைக் கொடுத்தார் என்றெல்லாம் வீணாகப் பேசி, பொய்யை மெய்யாக்கத் துடிக்கிறார்கள். இவர்கள் முதலில் செய்ய வேண்டியது தங்களிடம் உள்ள துவேஷ புத்தியைக் களைய வேண்டும் என்பதே. இதைச் செய்தாலே பெரும் புண்ணியமாகிவிடும். ஒற்றுமை மேலோங்கும். பிறரும் நம்மை ஏசுவதற்கு  அஞ்சுவர். நமது சமயத்திற்காக இதைக்கூடச் செய்யக் கூடாதா ?    

Sunday, November 4, 2018

பிரபலப்படுத்த வேண்டாம்

ஆக்கிரமிக்க மட்டுமே தெரியும்.ஆதரவு தரத் தெரியாது 
ஒரு சில விஷயங்களைப் பிரபலப்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. எப்படியெல்லாம் காசாக்கலாம் என்று அலையும் பணவெறியர்களிடையில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் பல தருணங்களில் மறந்து விடுகிறோம். இது மேற்கத்திய நாடுகள் கொளுத்தி  விட்ட தீ . அது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளையும் தாக்கி சுயலாபம் சம்பாதிக்கத் தூண்டி விட்டது. காட்டில் உள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூடப் பாதுகாப்பு இல்லை. எதை வேட்டையாடி அதன் உறுப்புக்களை விற்றால் காசாக்கலாம் என்று கற்றுக் கொடுக்கும் கயவர்கள் அவர்கள். இப்பணவலையில் நம்மவர்களும் விழுவது பரிதாபம். இந்நிலையில் நம் கலைச்செல்வங்களையும் களவாடி விற்கத் தொடங்கி விட்டனர். 

பெரும் பணக்காரர்கள் நமது புராதனக் கலைச்செல்வங்களை வாங்கிக்  கலைப் பொருள்களாக வைத்துக் கொள்வதும், அருங் கலைக்கூடங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிப்பதும் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். உற்சவ மூர்த்திகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோம் என்று கூறி அவற்றை எடுத்துச் சென்ற அறநிலையத்துற அதிகாரிகள் சிலர் இதற்கு உடந்தை எனக் கேள்விப்பட்டவுடன் ஆன்மீக உலகமே அதிர்ச்சி அடைந்தது.  மேலும் இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அடியார் கூட்டங்கள் என்று சொல்லிக் கொள்ளும் குழுக்கள் பலவும் புலம்புவதோடு சரி. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்பலவீனத்தைக் கொள்ளையர்கள் தொடர்ந்து பயன் படுத்திக் கொள்கிறார்கள். கல்லாலான மூர்த்திகளும் ,கல் தூண்களும், நகைகளும், உண்டியல்களும் களவாடப்படும் நிலையில் கோவிலில் எதைத்தான்  கொள்ளைக்காரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்? 

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பல கோயில்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன என்று ஆறுதல் அடையும் முன்பே, அவற்றின் பாதுகாப்பு இன்மையும் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. வெளிநாட்டவர்கள் பலரிடமும் நமது மூர்த்திகளின் புகைப்படங்கள் ஆல்பங்களாகச்  சேகரிக்கப்படுகின்றன. அவற்றை வைத்துக் கொண்டு தங்களது வலைத்தளங்களில் எழுதுவது பொழுது போக்காகச் சிலருக்கு ஆகி விட்டது. இவர்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. மூலவர்களையும்,உற்சவர்களையும் படம் எடுத்து வெளியிட வேண்டாம் என்று சொன்னால் கேட்பவர் இல்லாததால் இவ்விபரீதங்கள் தொடர்கின்றன. 

களவாடப் பட்ட மூர்த்தி கைப்பற்றப் பட்ட செய்தியை வெளியிடும் ஊடகங்கள் அவை எவ்வாறு களவாடப்பட்டன என்பதிலும், சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு எத்தனை கோடி என்பதிலுமே கவனம் செலுத்துகின்றன. இதனால் சிலர் அத்தவறான வழிக்குச் செல்லத் தூண்டப்படுகிறார்கள் என்பதை உணரவில்லையா, அல்லது கவலைப்படவில்லையா என்று தெரியவில்லை. 

இணையதள நண்பர்களுக்கும், ஆலய அர்ச்சகர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் . மூர்த்தியின் சிறப்பைப் புராணத் துணை கொண்டு மட்டுமே விளக்குங்கள். இதுபோன்ற மூர்த்தி ஏழு உலகத்திலும் கிடையாது என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். ஆலய பாதுகாப்புக்காக அன்பர்களை ஈடுபடச் செய்யுங்கள். அபிஷேகம்,தீபாராதனை ஆகியவற்றைப் படம் எடுப்பதையும்,வீடியோ எடுப்பதையும் அனுமதிக்காதீர்கள். திருமண நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளை எந்த மூர்த்தி சன்னதியிலும் எடுக்கக் கூடாது என்று சொல்லுங்கள். அவற்றைக் காரணம் காட்டிவிட்டுப்  பின்னணியில் உள்ள மூர்த்திகளையும் சேர்த்துப் படம் எடுக்கக் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

களவாடப்பட்ட மூத்திகளில் மிகச் சிலவே கைப்பற்றப் பட்டுள்ளன.  கைப்பற்றினாலும்  அவற்றை உரிய கோயில்களுக்குத திருப்பித் தந்து தகுந்த பாதுகாப்புச் செய்து கொடுக்கப்படுவதில்லை. எனவே, மரகதம்,கோமேதகம், ஸ்படிகம் என்றெல்லாம் வர்ணிப்பதால் ஆபத்தே அதிகரிக்கிறது. உத்தரகோசமங்கையில் இன்று நடந்த சம்பவம் இதை உறுதி செய்கிறது. மார்கழித் திருவாதிரை நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் படம் பிடித்து வலைத்தளத்திலும், பத்திரிகைகளிலும் போட்டதால் வந்த விளைவாகக் கூட இருக்கலாம். இந்நிலையில் சின்னஞ்சிறு கிராமக் கோயில்களில் என்னதான் நடக்காது ? 

தரிசிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்கவே படம் எடுத்துப் போடுகிறோம் என்று சமாதானம் சொல்கிறார்கள். மூர்த்திகளே இல்லாமல் போய் விட்டால் எதைப் படம் எடுக்கப் போகிறார்கள் ? போதாக் குறைக்கு சினிமாவும், சின்னத்திரை நாடகங்களும் சம்பந்தமில்லாத நடனக் காட்சிகளுடன் கோயில்களில் படம் எடுக்கப்படுவதும் எல்லோரும் அறிந்ததானாலும் யாராவது கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா? இல்லையே !! இப்படி எழுதினாலும் ஆதரவாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் மிக மிகச் சிலரே !  கருத்து எதுவும் தெரிவிக்காவிட்டாலும் தெரிந்தவர்களிடம் பகிரவாவது செய்கிறார்களா ? அதுவும் இல்லை என்றே ஏமாற்றத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. நூறு பேரிடம் சொன்னால் ஒருத்தராவது கேட்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இன்னும் எத்தனை நாள் தான் விரக்தியோடு காத்திருப்பது ?    

Friday, November 2, 2018

செல்லப்பெண்ணாய் இருக்கணும்

வலைத் தளத்தில் எப்போதோ படித்து மகிழ்ந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன. அதை எழுதியவர் யாராக இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும்.இக்காலத்துப் பெற்றோர்களும் திருமணம் ஆக இருக்கும் பெண்களும் அதை அவசியம் படிக்க வேண்டும் என்பதால் அதனை மீண்டும் இங்கு பகிர்கிறோம்.ஒரு வழக்கமான வாழ்த்து போலத் தோன்றினாலும் அதில் பொதிந்துள்ள கருத்துக்கள் உயர்ந்தவை.  எல்லோரும் மெச்சும் பெண்ணாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதிலும் " செல்லப் பெண்ணாய் வாழ வேண்டும் " என்று வாழ்த்தும் நெஞ்சம் தந்தைக்கே உரியது எனலாம். ஏனென்றால் தந்தையிடம் மகளுக்கும் , மகளிடத்தில் தந்தைக்கும் உள்ள பாச உறவு இணை இல்லாதது. மனைவியின் சொல்லையும் மீறி பெண்ணிடம் அதிகம் செல்லம் கொடுக்கும் தந்தையைப் போலவே, அப்பாவிடம் எல்லோரையும் விட அதிக உரிமையோடு, தான் வேண்டியதைக் கேட்டுப் பெறுபவள் பெண் தானே ! 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான உறவுகளை உயர் கல்வியும், பொருளாதாரமும், நாகரிகமும், புதிய வாழ்க்கை முறைகளும் பாதிக்கின்றனவோ என்று அச்சப் பட வேண்டி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகப்  பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் போதிய அளவு இல்லை என்றே கூறலாம். உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஆண்-பெண் இருவருமாக ஒரே பள்ளியில் படிப்பதோடு நிறுத்திக் கொண்டு, அதன் பிறகு தனித் தனிக் கல்விக் கூடங்களில் படிப்பது மேலாகத் தோன்றுகிறது. இக்கருத்தைத் தற்காலத்தில் ஏற்பவர்கள் இல்லாமல் இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள் அக்குழந்தைகள் பலருக்குக்  கொடுமைகள் நடப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்கிறார்களா? ஆண்கள் கல்வி பயிலும் பள்ளிகளில் ஆண் ஆசிரியரும் பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளும் இருந்தால் ஓரளவாவது பாதுகாப்பு கிடைக்கலாம். 

வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையோ மேலும் கவலையை அளிப்பதாக உள்ளது. சக ஆண் ஊழியர்களால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இத்தனையையும் சகித்துக் கொண்டுதான் வேலைக்குச் சென்று வர வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் பணி புரியும் இடங்களிலாவது வேலையைத் தேர்ந்து எடுக்கலாம். படித்து விட்டு சும்மா இருக்கலாமா என்பதற்காகவாவது வேலைக்குப் போனால் இதையெல்லாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. மனதுக்குள் குமுறிக்கொண்டே அவர்கள் நாட்களைக் கடத்துவது எத்தனை பேருக்குப் புரியும் ? 

பலத்த பீடிகைக்குப் பிறகு சொல்ல வந்த விஷயத்திற்கு வர வேண்டி இருக்கிறது. சிவாசாரியார் மற்றும் வைதீகர்கள் தங்கள் பெண்களைப்  படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவதால் அப்பெண்கள் தங்கள் கௌரவத்திற்கேற்ற வரங்களையே விரும்புகின்றனர். வைதீகம் செய்வதும், கோவில் பூஜை செய்வதும் இப்பெண்களுக்குக்  கேவலமாகத் தோன்றுகிறது போல் இருக்கிறது. இதனால் சுமார் முப்பதாயிரம் சம்பாதிக்கும் சிவாச்சார்ய- வைதீகப் பையன்களை இப் பெண்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் தாங்களே அச்சம்பளம் வாங்கும்போது பையன் ஒரு லட்சமாவது வாங்கணுமே என்கிறார்கள். இதில் பெண்ணைப் பெற்றவர்களும் உடந்தை! அவளது சம்பளத்தைக்கொண்டே அவளது கல்யாணத்தை நடத்தி விடலாம் அல்லவா? இப் பேராசையால் காலம் தாழ்ந்து கொண்டே போகிறது. பலருக்குத் திருமணம் ஆகாமலே போய் விடுகிறது. இன்னும் சிலர் வேறு மார்கங்களில் சென்று தாங்களாகவே வாழ்க்கைத் துணையை முடிவு செய்கின்றனர். அப்போதுதான் பெற்றோர்களுக்குத் தான் செய்த தவறு தெரிய வருகிறது. அதற்குள் எல்லாம் முடிந்து விடும்  நிலையில் எந்தப் பயனும் ஏற்படாமல் வாழ்க்கை நரகமாகிறது. பெண்களும், பெற்றோர்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். 

இப்போதெல்லாம் நகரங்களுக்கு இணையாகக் கிராமங்களில் வசதிகள் பெருகி வருகின்றன. இரு சக்கர வாகனம்,தொலை பேசி, ஆட்டோ , சமையல் வாயு போன்ற சிலவற்றை இங்குக் குறிப்பிடலாம். அதோடு வீட்டுக்குத் தேவையான அத்தனை உபகரணங்களையும் அருகிலுள்ள ஊரில் சென்று  வாங்கி வந்து பயன் படுத்தலாம். மனத்தை அதற்குத் தயார் படுத்திக் கொள்வதொன்றே அப்பெண் குழந்தை செய்ய வேண்டியது. அப்படிச் செய்து விட்டால் வைதீகமோ,கோவில் பூஜையோ உயர்ந்ததாகவே தெரியும். வேலைக்குக் காலை முதல் மாலை வரை சென்று சம்பாதிப்பதைச்   சில மணி நேரங்கள் மட்டுமே வைதீகத்திலும் கோவில் பூஜையிலும் செலவழிப்பதால் சம்பாதிக்க முடியும். அதன் மூலம்   கிடைக்கும் மன நிம்மதி இருக்கிறதே, செய்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும். அதிகாரிகளிடம் கைகட்டி நிற்பதைக் காட்டிலும் ஆண்டவனிடம் கை கட்டித் தண்டனிட்டு நிற்பதன் உயர்வும்  புரிய வரும். உறவுகள் மேம்படும். பரம்பரையும் காப்பாற்றப் படும். ஆதி தம்பதிகளான பார்வதி-பரமேசுவர்கள் அருள வேண்டும். 

ஆசையோடு வளர்த்த செல்ல மகள் பெற்ற சந்தோஷத்தைப் பார்த்த தகப்பனாரது மன நிலையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது. மலையத்துவஜன் பெற்ற பெருவாழ்வு  மீனாக்ஷி தேவியாகத்  தோன்றியது போலத் தன்  செல்ல மகள் தகுந்த வரனோடு மணம் புரிவதைக் கண்களில் ஆனந்த நீர் அருவி பொழிய அவர்   காண்பார்  என்பதைச் சொல்லவா வேண்டும் ?