Sunday, November 4, 2018

பிரபலப்படுத்த வேண்டாம்

ஆக்கிரமிக்க மட்டுமே தெரியும்.ஆதரவு தரத் தெரியாது 
ஒரு சில விஷயங்களைப் பிரபலப்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. எப்படியெல்லாம் காசாக்கலாம் என்று அலையும் பணவெறியர்களிடையில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் பல தருணங்களில் மறந்து விடுகிறோம். இது மேற்கத்திய நாடுகள் கொளுத்தி  விட்ட தீ . அது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளையும் தாக்கி சுயலாபம் சம்பாதிக்கத் தூண்டி விட்டது. காட்டில் உள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூடப் பாதுகாப்பு இல்லை. எதை வேட்டையாடி அதன் உறுப்புக்களை விற்றால் காசாக்கலாம் என்று கற்றுக் கொடுக்கும் கயவர்கள் அவர்கள். இப்பணவலையில் நம்மவர்களும் விழுவது பரிதாபம். இந்நிலையில் நம் கலைச்செல்வங்களையும் களவாடி விற்கத் தொடங்கி விட்டனர். 

பெரும் பணக்காரர்கள் நமது புராதனக் கலைச்செல்வங்களை வாங்கிக்  கலைப் பொருள்களாக வைத்துக் கொள்வதும், அருங் கலைக்கூடங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிப்பதும் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். உற்சவ மூர்த்திகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோம் என்று கூறி அவற்றை எடுத்துச் சென்ற அறநிலையத்துற அதிகாரிகள் சிலர் இதற்கு உடந்தை எனக் கேள்விப்பட்டவுடன் ஆன்மீக உலகமே அதிர்ச்சி அடைந்தது.  மேலும் இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அடியார் கூட்டங்கள் என்று சொல்லிக் கொள்ளும் குழுக்கள் பலவும் புலம்புவதோடு சரி. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்பலவீனத்தைக் கொள்ளையர்கள் தொடர்ந்து பயன் படுத்திக் கொள்கிறார்கள். கல்லாலான மூர்த்திகளும் ,கல் தூண்களும், நகைகளும், உண்டியல்களும் களவாடப்படும் நிலையில் கோவிலில் எதைத்தான்  கொள்ளைக்காரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்? 

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பல கோயில்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன என்று ஆறுதல் அடையும் முன்பே, அவற்றின் பாதுகாப்பு இன்மையும் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. வெளிநாட்டவர்கள் பலரிடமும் நமது மூர்த்திகளின் புகைப்படங்கள் ஆல்பங்களாகச்  சேகரிக்கப்படுகின்றன. அவற்றை வைத்துக் கொண்டு தங்களது வலைத்தளங்களில் எழுதுவது பொழுது போக்காகச் சிலருக்கு ஆகி விட்டது. இவர்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. மூலவர்களையும்,உற்சவர்களையும் படம் எடுத்து வெளியிட வேண்டாம் என்று சொன்னால் கேட்பவர் இல்லாததால் இவ்விபரீதங்கள் தொடர்கின்றன. 

களவாடப் பட்ட மூர்த்தி கைப்பற்றப் பட்ட செய்தியை வெளியிடும் ஊடகங்கள் அவை எவ்வாறு களவாடப்பட்டன என்பதிலும், சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு எத்தனை கோடி என்பதிலுமே கவனம் செலுத்துகின்றன. இதனால் சிலர் அத்தவறான வழிக்குச் செல்லத் தூண்டப்படுகிறார்கள் என்பதை உணரவில்லையா, அல்லது கவலைப்படவில்லையா என்று தெரியவில்லை. 

இணையதள நண்பர்களுக்கும், ஆலய அர்ச்சகர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் . மூர்த்தியின் சிறப்பைப் புராணத் துணை கொண்டு மட்டுமே விளக்குங்கள். இதுபோன்ற மூர்த்தி ஏழு உலகத்திலும் கிடையாது என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். ஆலய பாதுகாப்புக்காக அன்பர்களை ஈடுபடச் செய்யுங்கள். அபிஷேகம்,தீபாராதனை ஆகியவற்றைப் படம் எடுப்பதையும்,வீடியோ எடுப்பதையும் அனுமதிக்காதீர்கள். திருமண நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளை எந்த மூர்த்தி சன்னதியிலும் எடுக்கக் கூடாது என்று சொல்லுங்கள். அவற்றைக் காரணம் காட்டிவிட்டுப்  பின்னணியில் உள்ள மூர்த்திகளையும் சேர்த்துப் படம் எடுக்கக் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

களவாடப்பட்ட மூத்திகளில் மிகச் சிலவே கைப்பற்றப் பட்டுள்ளன.  கைப்பற்றினாலும்  அவற்றை உரிய கோயில்களுக்குத திருப்பித் தந்து தகுந்த பாதுகாப்புச் செய்து கொடுக்கப்படுவதில்லை. எனவே, மரகதம்,கோமேதகம், ஸ்படிகம் என்றெல்லாம் வர்ணிப்பதால் ஆபத்தே அதிகரிக்கிறது. உத்தரகோசமங்கையில் இன்று நடந்த சம்பவம் இதை உறுதி செய்கிறது. மார்கழித் திருவாதிரை நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் படம் பிடித்து வலைத்தளத்திலும், பத்திரிகைகளிலும் போட்டதால் வந்த விளைவாகக் கூட இருக்கலாம். இந்நிலையில் சின்னஞ்சிறு கிராமக் கோயில்களில் என்னதான் நடக்காது ? 

தரிசிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்கவே படம் எடுத்துப் போடுகிறோம் என்று சமாதானம் சொல்கிறார்கள். மூர்த்திகளே இல்லாமல் போய் விட்டால் எதைப் படம் எடுக்கப் போகிறார்கள் ? போதாக் குறைக்கு சினிமாவும், சின்னத்திரை நாடகங்களும் சம்பந்தமில்லாத நடனக் காட்சிகளுடன் கோயில்களில் படம் எடுக்கப்படுவதும் எல்லோரும் அறிந்ததானாலும் யாராவது கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா? இல்லையே !! இப்படி எழுதினாலும் ஆதரவாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் மிக மிகச் சிலரே !  கருத்து எதுவும் தெரிவிக்காவிட்டாலும் தெரிந்தவர்களிடம் பகிரவாவது செய்கிறார்களா ? அதுவும் இல்லை என்றே ஏமாற்றத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. நூறு பேரிடம் சொன்னால் ஒருத்தராவது கேட்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இன்னும் எத்தனை நாள் தான் விரக்தியோடு காத்திருப்பது ?    

2 comments: