Saturday, January 21, 2017

மகேசனுக்காக மக்கள் குரல் ஒலிக்குமா ?


ஜனநாயக முறை எனப்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அம்மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாது போகும் பட்சத்தில், மக்கள்  தாங்களாகவே முன்வந்து ஒரே குரலாக ஒலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றனர். பல கால கட்டங்களில் இவ்விதம் குரல்கள் எழுப்பப்பட்டு இருந்தாலும் ஆன்மீக உலகில் மட்டும் இன்னமும் ஒலிக்காதது வியப்பாக உள்ளது. 

எண்ணிக்கையில் பார்த்தால் நாத்திக வாதிகளை விட ஆன்மீகவாதிகள் பல மடங்கு அதிகமாக இருந்தும், நாத்திக வாதம் ஒலிக்கும்போது ஆன்மீக வாதிகள் மௌனிகளாகி விடுகின்றனர். சமயக் கடவுளர்களை இழித்தும் பழித்தும் பேசுபவர்களை எவரும்  கண்டிக்கக் கூட முன்வராததும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நாத்திகர்கள் உரிமைக்குரல் எழுப்புவதும் வியப்புக்குரியதே!

ஆலயங்களுக்குச் செல்வோர் கூட்டம் விசேஷ நாட்களில் அதிகரித்து வந்தபோதிலும், எத்தனையோ ஆலயங்கள் இடிந்தும், மரம் முளைத்தும், இருப்பதைக் கண்ட  ஆன்மீகவாதிகள், " ஐயோ பாவம் " என்று மட்டுமே குரல் எழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார்கள். வருமானம் உள்ள கோயில்களில் அறநிலையத்துறை தொட்டதற்கெல்லாம் கட்டணம் வசூலித்தும் , நாம் வாய் திறக்காமல் அதைச் செலுத்துவதோடு உண்டியலையும் நிரப்பிவிட்டே வருகிறோம். 

சமூக வலைத்தளத்தில் வெளியான கும்பகோணம் கும்பேஸ்வர சுவாமி ஆலயக் கட்டணப் பட்டியலே இங்கு நீங்கள் காண்பது: 

இதை விடப்  பிரபலமானதும் மக்கள் அதிகமாக வருகை தருவதுமான ஆலயங்களில் வசூலாகும் கட்டணங்கள் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். 

அபிஷேகக் கட்டணம் என்று வசூலிக்கிறார்கள். சுவாமி மலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயிலில் வசூலிக்கப்படும் அபிஷேகக் கட்டணத்தை இங்கு எடுத்துக் காட்டாகத் தரலாம். அபிஷேகம் செய்யாதவர்கள் பொது தரிசனத்தில் நிற்பவர்களுக்கு சுமார் பத்து பதினைந்து அடி முன்பாக நின்று தரிசிப்பதற்கு சிறப்புக் கட்டணமாக முப்பது ரூபாய்  வசூலிக்கப்படுகிறது. 750 ரூபாயாக இருந்த அபிஷேகக் கட்டணம் தற்போது 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பேர் அபிஷேகத்திற்குப் பணம் செலுத்தியிருந்தால் சற்றுக் கூடுதலாகப் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வளவே! ஒரு பாத்திரத்தில் நைவைத்தியப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கு இவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டுமா ?

திருப்பணி செய்ய வேண்டுமா? உபயதாரரைப் பிடியுங்கள். நித்திய அன்னதானமா, உபயதாரரைப் பிடியுங்கள். திருவிழா நடைபெற வேண்டுமா? அதற்கும் உபயதாரர்! இப்படி எல்லாவற்றுக்குமே உபயதாரர் வேண்டுமென்றால் ஆலய நிர்வாகத்தையும் தக்கவர்களிடம் கொடுத்து விடலாமே என்ற கோரிக்கை எழுகிறது. மேலும் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் வேறு திசையில் திருப்பி விடப்படுவதாகப்  புகார்கள் எழுகின்றன. கோயில் நிலங்களும்,கட்டிடம் போன்ற சொத்துக்களும் சூறையாடப்பட்டு விட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர் நில புலங்களைக் கொண்ட ஆலயங்களும் உபயதாரரை நம்பியே இருக்கின்றன. விளக்கு ஏற்ற எண்ணெய்  இல்லை என்கிறார்கள். இந்த நிலையில் சிப்பந்திகளுக்குக் கொடுக்கப்படும் சில நூறுகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிகாரிகள் மட்டும் எதையும் விட்டு வைக்காமல் கம்பீரமாக வலம் வருகின்றனர்.  

இதுபற்றியெல்லாம் ஒருமித்த குரலாக  ஆத்திக அன்பர்கள் செயல் படாதது ஏன் என்று புரியவில்லை.அரசை நம்புவதால்  முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது. முன்பெல்லாம் மடாதிபதிகள் ஊர் ஊராகக் கால் நடையாகவும் பல்லக்கிலும் சென்று அங்கு தங்கி மக்களை நல்வழிப்படுத்தியதோடு அவ்வூர் ஆலயங்களின் புனரமைப்புக்கும் பராமரிப்புக்கும் ஆவன செய்தார்கள் என்று அறிகிறோம். ஆனால் இப்போது ஏன் அவர்கள் வருகை தருவதில்லை என்று மக்கள் ஏங்குகிறார்கள். ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்று வாயளவில் சொல்லிக்கொண்டு இருக்கும் அன்பர்களும்  முன்வந்து பணியாற்ற வேண்டிய வேளை  இப்போது வந்து விட்டது. 

தமிழ் வேறு சிவம் வேறு அல்ல. " தமிழன் கண்டாய்" என்று இறைவனைப் போற்றுகிறது தேவாரம். இடைக்காடர் என்ற தமிழ்ப்புலவரைப்  பாண்டியன் மதியாமலிருந்தான்  என்பதற்காக மதுரைக் கோயிலை விட்டே நீங்கி இறைவனும் இறைவியும்  வைகை ஆற்றங்கரைக்குச் சென்று வட திருவாலவாய் என்ற இடத்தில் தங்கியபோது  பாண்டியன் தனது தவறுக்கு வருந்தி மன்னித்தருளுமாறு வேண்டிய பின்னரே திரும்பவும் இருவரும் ஆலவாய்க்குத் திரும்பியதாகத்  திருவிளையாடல் புராணம் காட்டும். இறைவனே சங்கப்புலவராக எழுந்தருளித் தலைமை தாங்கியதையும் அப்புராணம் விரிவாகக் கூறுகிறது. அதேபோல் , காஞ்சியில்  தனது பக்தரான தமிழ்ப் புலவர் தன்னை மதிக்காத இடத்தில் தானும்  பெருமாளும், இருக்கக்கூடாது எனக் கருதி, பெருமாளையும் பாம்பணையைச் சுருட்டிக்கொண்டு தன்னோடு வருமாறு ஒரு பாடல் பாடியதும் அவ்வண்ணமே பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு பெருமாளும் களி கண்ணனோடு சென்றதால் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப்படுகிறார். 

தெய்வத்தை மறந்து விட்டுத் தமிழ் வாழ வேண்டும் என்று எப்படிச்  சொல்ல முடிகிறது?  இரண்டும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதன என்பது புரியாதது போலப் பாசாங்கு செய்கிறார்களா, அல்லது வேறு உள் நோக்கம் உண்டா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். 

இனியாவது ஆன்மீக அன்பர்கள் தெளிவு பெறவேண்டும். எத்தனை எத்தனையோ இழந்து விட்டோம் . இனியும் எதையும் இழக்கக் கூடாது. நமது முன்னோர்களது சாபமும் அடுத்த தலைமுறையினரின் சாபமும் நம்மைச்  சும்மா விடாது.

3 comments:

  1. Am sharing your sorrow in Facebook, dear Sekar!

    ReplyDelete
  2. குறிப்பாக நம் தேசத்தில் அநேகரிடம் ஆன்மீக உணர்வு மிகுதியாகவே காணப்படுகிறது. அது கடவுளிடம் கொண்டுள்ள பக்தி என்பதை விட அதுவே ஒரு மூடபக்தி பரவலாக வியாபித்திருக்கிறது. ஆக இது ஒரு பலவீனம். இதை தவறாக பயன் படுத்தி பலர் பல விதமாக பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களில் முன்நிலை வகிப்பவர்கள் ஆன்மீக பிரசாரகர்கள், சில துறவிகள், கோவில் அமைப்புகள். கேட்பாரற்று காணப்படும் பல சிறு கோவில்கள் ஒரு புறம். பிரபலமாகிவிட்ட வேறு சில கோவில்களில் அலைமோதும் கூட்டம். பணம் கொடுத்து டிக்கட் வாங்கி பகவான் தரிசனம் என்ற அவல நிலை. எல்லோரிடமும் கையில் பணம் நன்றாகவே விளையாடுகிறது. அதில் ஒரு பகுதியை கோவில் வளாகங்களில் திருமஞ்சனம், நிவேதனம் என்று வாரி இறைத்து ஈஸ்வரனின் அருளை பெற்று விடலாம் என்று முயற்சிப்பது ஒரு வகை மூடபக்தி. 1952 ஆண்டு வெளி வந்த ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் – ………………கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகக்கூடாது என்பதற்காக……………………………. என்று கதாநாயாகன் வாதிடுகிறான். அன்று அது வசனம் அளவில் இருந்தது. இன்று அந்த வசனத்திற்கு உயிரூட்டும் வகையில் பலர் முன்னின்று செயல்படுகின்றனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்.
    பகவான் தூணிலுமிருப்பார் துரும்பிலுமிருப்பார் என்ற பிரகலாதனின் அறிவுரை பொய்த்து போய் விட்டது. கடவுள் சர்வ வ்யாபி. எல்லா இடத்திலும் பரவலாக உளர். தன் சொந்த வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஒருவன் ஆழ்ந்து சிந்தித்தால் உள்ளத்திலுறையும் பகவானை நன்கு உணரலாம். நல்ல நேர்மையான அப்பழுக்கற்ற ஆன்மீக பிரச்சாரம் மக்களுக்கு புத்தி தெளிவை ஏற்படுத்தும். ஜனநெரிசல் மிகுந்த கோவிலுக்கு செல்வதை தவிர்த்து ஒருவன் வீட்டிலேயே பூஜையில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டு மனநிறைவை அடையலாம். மக்களை ஆட்படுத்தியுள்ள மூடபக்தி களையப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால், " ஜன நெரிசல் மிகுந்த கோவிலுக்குச் செல்வதை தவிர்த்து ஒருவன் வீட்டிலேயே பூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனநிறைவை அடையலாம் " என்பதை ஏற்க முடியவில்லை. வைத்தீஸ்வரன் கோவில்,சுவாமி மலை போன்ற தலக் கோவில்கள் நெரிசல் மிக்கவை தான். ஆனால் அவை எத்தனையோ குடும்பங்களின் குலதெய்வக் கோயில்களாக விளங்குவதால் அங்கு செல்வதைத் தவிர்க்க முடியாது. வீட்டில் பூஜை செய்தாலும் ஆலய தரிசனம் முக்கியமானது. குலதெய்வக் கோயில்கள் நீங்கலாக மற்றக் கோயில்களுக்குச் செல்பவர்களுக்கு ஜன நெரிசல் பிடிக்காவிட்டால் பராமரிப்பின்றி இருக்கும் எத்தனையோ ஆலயங்களுக்குச் சென்று வழிபாட்டு மனநிறைவைப் பெறலாம். அக் கோயில்களும் புத்துயிர் பெற முடியும்.

      Delete