இயற்பகை நாயனார் , திருச்சாய்க்காடு |
இந்தப் பகுத்தறிவுவாதிகள் சொல்வதை மட்டும் பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் வெறுப்பின் உச்சத்திற்கே போய் வாய்க்கு வந்தபடி ஏசியும், எழுதியும், வன்முறைகளில் ஈடுபட்டும் ஆத்திக அன்பர்களை நோக அடிக்கின்றனர். அவர்களை நீதித் துறையோ அல்லது அரசாங்கமோ கண்டிக்க முடியாத நிலை. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றும் எழுதலாம் என்றும் குறிக்கோள் கொண்டவர்களை எப்படித் திருத்த முடியும்? அவர்களது செயல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு , வாய் பொத்தி , மௌனியாகத்தான் இருக்க வேண்டி உள்ளது! போதாக் குறைக்கு சமூகத் தளங்கள் மூலம் இதுபோன்ற கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன் பூம் புகாருக்கு அருகில் உள்ள சாயாவனத்தில் (திருச் சாய்க்காட்டில்) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான இயற்பகை நாயனாரது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது என்பதை ஒரு அன்பர், நாயனாரது வரலாற்றுச் சுருக்கத்தோடும், விழா பற்றிய படங்களுடனும் முக நூலில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஆங்கிலத்தில் கருத்துத் தெரிவித்திருந்த ஒருவர் ( ன் விகுதி இவருக்குப் பொருத்தமாக இருக்குமோ?) நாயனாரை " lunatic " என்று குறிப்பிட்டிருந்ததோடு சேவை என்ற பெயரில் இப்படிச் செய்ததாகவும் ஏசியுள்ளார்.
உண்மையில் யார் பைத்தியம் என்று புரியவில்லை. சிவனடியார்களுக்கு எவை தேவையோ அவற்றை முழுவதும் வாரித் தந்த வள்ளலான நாயனாரா அல்லது வேறு யாராவதா? யாசகமாக எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத அபூர்வ குணம் கொண்டவர் நாயனார் என்பதை உலகம் அறிவதற்காக சிவபெருமான் நடத்திய நாடகத்தின் தத்துவம் அறியாதவர்கள் இப்படித்தான் பேசுவர் போலும் !
செயற்கரிய செயல்களைச் செய்த பெரியோர்களை உலகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடுகிறது. " இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் " என்று சுந்தரரால் போற்றப்பட்ட இயற்பகையாரது குருபூஜை இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் கொண்டாடப்படுகிறது. நம் போன்ற வீணர்களின் நினைவை, நாம் மறைந்த பின்னர் நம் சுற்றத்தார்களே மறக்க ஆரம்பிக்கும் நிலையில் , உலகம் போற்றும் உத்தமர்களைப பித்துப் பிடித்தவர்கள் என்று, எல்லாம் தெரிந்தவனைப் போலப் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.
நாயன்மார்கள் காலத்திற்கு முன்பும் பின்பும் பல அடியார்கள் தோன்றியிருந்த போதிலும் சுந்தரர் அருளிய தேவாரப் பதிகத்தில் வரும் அறு ப த்து மூன்று நாயன்மார்களையாவது நாம் நெஞ்சாரப் போற்றி வணங்க வேண்டும். அறுபத்து நான்காவது நாயனார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த இடம் வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை. வழங்கவும் கூடாது. எப்படிப்பட்டவர்கள் அவ்வாறு ஒருவரைப் புகழ்ந்தாலும் அது சிவாபராதம்.
சமூக வலைத் தளங்களில் கருத்துத் தெரிவிப்பதால் ஏற்படும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகமாகத் தெரிகிறது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அந்தப் பக்கம் என்ன வேலை? ஒருவேளை பிறர் மனதைப் புண்படுத்துவதே வேலையோ? இனியாவது பிறரைப் புண்படுத்தாமல், பண்படுத்த முயற்சி செய்வார்கள் என்று நம்புவோம்.
அறம் மிகுந்ததாகக் கருதப்பட்ட கிருத யுகத்தைச் சார்ந்த புராணக்கதைகளிலிருந்தே நாம் அறியக் கூடிய ஒரு உண்மை, சான்றோருக்கு அண்மையிலும் அடுத்தும் அவ்ர்களை இகழ்வோரும், அவர்களைத் துன்புறுத்துவோரும் அதிக அளவில் இருந்து வந்து இருக்கிறார்கள் என்பதே. சாதாரண மக்களுக்கு இறைவன் அருளி இருக்கும் ஆறாவது அறிவின் மூலம் இவர்கள் சமூகத்தில் எத்துணை வலியவர்களாக, தனவந்தர்களாக, படித்தவர்களாக இருந்தாலும், இறையன்பும், இறைத் தொண்டர் பால் மதிப்பும் இல்லாதவிடத்து கயவர்களிலும் கடையாக இருப்பது நன்றாகவே புலப்படும். இறைவன் பொறுப்பது போலவே சமூகமும் இப் புல்லர்களைப் பொறுத்திருந்து காட்டிக் கொடுத்து உரிய வகையில் தண்டித்து விடும். கவலை வேண்டாம்.
ReplyDelete