Wednesday, October 7, 2020

ஆர்வக் கோளாறா அல்லது ஆகம விதி மீறலா ?

   

                                                     சிவபாதசேகரன்


மக்களை ஒன்றிணைத்து உயர் கதி காட்டுவதே இந்து சமயக் கோட்பாடு ஆகும். கடவுள் ஒருவரே என்றும் அவரே பல்வேறு வடிவங்களில் தோன்றி அருளுவதும் தோன்றாமலே துணையாய் நின்று தனது அருவ நிலையை உணர்த்துவதும் இதன் அடிப்படைக் கொள்கைகள் ஆகும்.

வழிபடுவோரின் இஷ்ட தெய்வத்திற்கான உருவில் தோன்றி, அவர்களை  நெறிப்படுத்தும்  அப்பரப்பிரம்மம் , உருவம் கடந்து, பெயரும் கடந்து நின்று  பக்குவ நிலைக்கேற்றபடி அறிவுறுத்துவதை  உணராமலேயே பலரது வாழ்க்கை கழிந்து விடுகிறது.    

எடுத்த எடுப்பிலேயே அருவத்தைப் பற்றிப் பேசினால் எல்லோருக்கும் விளங்காது என்பதால் தாயிற் சிறந்த கருணையோடு நம்மைப் படிப்படியாக மேலே உயர்த்திய பிறகே அத்தத்துவத்தை பரம்பொருள் நமக்கு உணர்த்துகிறது.

குழந்தைக்கு எது பிடிக்கிறதோ அதைப்  பெற்றோர் வாங்கித்தந்து மகிழ்வூட்டுகின்றனர். அது மரத்தாலான பொம்மையாக இருந்தாலும் குழந்தையைப் பொறுத்தவரையில் வடிவமே முக்கியம்.எத்தனை ஆண்டுகள் அப்பொருள் மீதே அக்குழந்தைக்கு ஆசை இருக்க முடியும் ? ஆகவே வேறொன்றை நாடுகிறது. அது வேறு வடிவத்தில் இருந்தாலும் மரத்தால் ஆன வேறொன்று என்று குழந்தை நினைப்பதில்லை. நம்மைத் திருப்திப் படுத்த இறைவன் பல வடிவங்களில் தோன்றினாலும் பரம்பொருள் ஒன்றே எனத் தோன்றுவது ஞானத்தின் மூலமடையப்பெறும்  தெளிவு. “ தேற்றனே, தேற்றத் தெளிவே “ என்கிறது திருவாசகம்.

இத்தனை தெய்வ வடிவங்கள் ஏன் என்று தத்துவமறியாதவர்கள் இன்றளவும் வினா எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் உருவ வழிபாட்டின் அவசியத்தையும் உணர வேண்டும். தங்கத்தை உருக்கிய பிறகே அதை எவ்வடிவத்தில் வார்க்கலாம் என்பது சாத்தியமாகிறது. மனத்தையும்  தங்கம் போலத்தான் உருக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் அது பாறை போலவே நின்று விடும். “ வன்பராய் ஒக்கும் என் சிந்தை “ என்கிறார் மணிவாசகர். ஆகவேதான் “ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக “ வேண்டுவார் அருணகிரிநாதர்.  

பல்வேறு வடிவங்களில் இறைவன் தோன்றினாலும் அந்தந்த உருவங்களுக்கான மூர்த்தி தியானப்படி அவ்வடிவை நமது முன்னோர் கல்லிலும்,மரத்திலும்,உலோகத்திலும் அமைத்துத் தந்தனர். கணபதி வடிவைக் குறிப்பிடுகையில் “ ஐந்து கரத்தனை  ஆனை முகத்தனை , இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை” என்றும் “ “ கைத்தல நிறைகனி” யைக் கொண்டவனாகவும் நமக்கு அடையாளம் காட்டினர்.      “ கணபதியேல்  வயிறு தாரி” என்று விவரிக்கிறது தேவாரம். “ மூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப ..” என்று வடமொழி ஸ்லோகமும் கணேச வடிவைக் காட்டுகிறது.

எப்பொழுதும் குழந்தை வடிவில் காட்சி தரும் கணபதியின் வடிவழகில் மயங்காதார் யார் ? அதிலும் சதுர்த்தி விரதம் இருந்து , தான் மனத்தகத்தில் கண்ட அப்பெருமானைக் கோயிலில் காணச் செல்லும் பக்தனுக்கு அவ்வடிவை வேறு கடவுளாக மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எல்லாம் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்று உணரும் பக்குவம் ஏற்படாத வரை தனித் தனி உருவங்களாகவே தோற்றமளிக்கவேண்டியது எதிர்பார்ப்பாக ஆகி விடுகிறது.

உள்ளதை உள்ளபடியே தோன்றச் செய்வதோடு அதனைப் பரிமளிக்கச் செய்வதே அலங்காரம் ஆகும். மூலவரையோ  உற்சவரையோ நமது விருப்பத்திற்கேற்ப மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. ஒரு பிள்ளையார் கோவிலில் விநாயக சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து அவர் மடியில் நெட்டியால் ஆன முருகனை ஒரு ஆண்டும், பால கிருஷ்ணனை மற்றொரு ஆண்டும், அத்யந்த பிரபு என்று பாதி ஹனுமாராகச் சித்தரித்து வேறோர் ஆண்டும் அலங்காரம் செய்திருந்தார்கள். அலங்கார விதி என்ற நூலில் இவ்வாறெல்லாம் மூலவரையோ உற்சவரையோ  மாற்றக் கூடாது என்று தெளிவாகக் கூறப் பட்டிருந்தும் இது போன்ற விதி மீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பக்தர்களும் வேறு வழியின்றிக் கடந்து செல்கிறார்கள். சிவலிங்கத் திருமேனி உருவாரூபம் ஆனது என்பது தெரிந்தும், பாணத்தில் முகம் வரைகிறார்கள். அதில் பாதி அம்பிகை உருவத்தையும் சேர்த்து வரைந்து அர்த்த நாரீச்வரர் என்று சொல்லுகிறார்கள். நவராத்திரி அலங்காரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அண்மையில் நடந்த சங்கட ஹர சதுர்த்தி நாளன்று சேலம் இரத்தின விநாயகருக்கு வெங்கடேச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு முக நூலில் படமும் வெளியாகி இருந்தது. நெற்றி முழுதும் நாமம் இட்டதோடு பாசாங்குசம் ஏந்திய பின் கரங்களில் சங்கு சக்கரங்களை அமைத்து அலங்காரம் செய்துள்ளனர். கேட்டால் சங்கு பாணிப் பிள்ளையார் என்றும் விகட சக்கர விநாயகர் என்றும் காஞ்சியில் பிள்ளையார் இருப்பதை அறியவில்லையா என்று திருப்பிக் கேட்பார்கள்.

 ஒரு சிவாலயத்தில் மூலஸ்தான அம்பிகைக்கு வெங்கடாசலபதி அலங்காரம் செய்துவிட்டு , துர்வாசருக்கு அவ்வாறு காட்சி அளித்ததாக ஒரு கதையையும் சேர்த்து விடுகிறார்கள். நம்மூரில் எத்தனையோ பாலாஜி மந்திர்கள் உள்ளன. ஒரு வெங்கடேச பக்தன் ஆண்டு முழுதும் அங்கு சென்று பெருமாளை மனம் குளிர வழிபடலாம். மற்ற கோயில்களில் உள்ள மூர்த்தங்களை பெருமாளாக மாற்ற வேண்டிய தேவையே இராது. அப்படிச் செய்தால் அது வருவாய் நோக்கத்தோடுதான் இருக்க முடியும். படிப்படியாக உருவம் கடந்த அருவம் நோக்கிப் பயணப்படும்போது ஒரு உருவத்தை மற்றோர் உருவமாக மாற்றி இன்னும் எத்தனை யுகங்கள் தான் அதே நிலையில் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.   

  

2 comments:

  1. தெளிவும் நிதானமும் பளிச்சிடும் தீர்வு. நியாயமான அபிப்பிராயம்.

    ReplyDelete
  2. ஆலய அர்ச்சகர்கள் மூல விக்ரகங்களை மரப்பாச்சி பொம்மை போல் கையாள்வது மிகத் தவறு. அருமையான பதிவு

    ReplyDelete