உடற்பிணியும் பசிப்பிணியும்
சிவபாதசேகரன்
எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று கூறுவார்கள். அரை சாண் வயிறே பிரதானம் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடும் காலம் இது. வேலை தேடுவதோடு வேலையும் ( முருகனது கரத்திலுள்ள வேலையும் ) தேடுவது ஏனோ பலருக்கு மறந்து விட்டது. வயிற்றுப் பிழைப்புக்கு என்று சொல்லிக் கொண்டு வேலைக்குப் போனவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதால் இறைவனைப் பற்றிய சிந்தனையே எழுவதில்லை.
அறுவடை ஆகி வந்த
நெல்லைச் சேமித்து வைக்க அந்தக் காலத்தில்
இல்லங்களில் மரத்தாலான கிடங்கு ஒன்றோ அல்லது பலவோ இருந்தது. அதைத் தஞ்சாவூர் ஜில்லாக் காரர்கள் பத்தாயம் என்று
அழைப்பார்கள். அதில் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல் சேமித்து வைக்கப்படும்.
அதற்கும் மேல் நெல் விளைந்தால் வெளியில் கொடுப்பார்கள். அறுபத்து மூன்று
நாயன்மார்களுள் ஒருவர் கோட்புலி நாயனார் என்பவர். அவர் தமது இல்லத்தில்
தனித்தனியாக நெல்லை சேமித்து வைத்து ஒரு பகுதியை வீட்டு உபயோகத்திற்கும் மற்றொன்றை
சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்கவும் பயன்
படுத்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சிறுத்தொண்ட நாயனாரும் தினந்தோறும்
ஒரு சிவனடியாரைத் தனது இல்லத்திற்கு
அழைத்து வந்து அன்னமிட்டதையும் அப்புராணம் மூலம் அறிகிறோம்.
வறியவர்களுக்கு அன்னமிடாமல் ஒரு நாள் கூடக் கழியக் கூடாது
என்ற தரும சிந்தனை மிக்கவர்கள் பலர் வாழ்ந்த காலம் போய் தற்போது காக்கைக்குக் கூடப்
பிடி அன்னம் தராத காலத்தில் நாம்
வாழ்கிறோம். காக்கையும் உண்ணும் முன்பாகத் இனத்தைக் கூவி அழைக்கும். இறைவனுக்கு அர்ச்சிப்பதும் பசுமாட்டுக்கு ஒரு வாயளவு உண்ணத்
தருவதும் உண்ணும் முன்பு ஒரு கைப்பிடி பிறர்க்கு ஈவதும் மிகுந்த புண்ணியம் தரும் செயல்களாம். இதனைத்
திருமூலரும் எடுத்தருளுவார்.
வீட்டுத் திண்ணைகள் தேசாந்திரிகள் தங்கவும் உணவருந்தவும்
பயன் பட்டன. அன்ன சத்திரங்கள் இருந்த ஊர்களில் அந்தத் தருமம் தழைக்க நல்ல மனம்
கொண்டவர்கள் தங்களது நிலங்களை அளித்தனர். விழாக் காலங்களில் வரும் வெளியூர்
பக்தர்களுக்கு உணவளிக்கத் தகுந்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.நாளடைவில் தருமசிந்தனை சுருங்கித் தன்னலம்
மேலோங்கியவுடன் ஏழை எளியவர்கள் வறுமையின்
எல்லைக்கே விரட்டப் பட்டனர்.
அன்னதானம் என்று சொல்லிக் கொண்டு தனது பண பலத்தை நிரூபிப்
பவர்கள் உண்மையிலேயே பசியால் வாடும் மக்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.
கல்யாண சத்திரங்கள், உணவகங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான உணவு விரயமாக்கப் படுகிறது.
பாவம், அதற்கும் தவம் கிடக்கும் காக்கைகளும் தெரு நாய்களும் நம்மூரில் உண்டே !
பிறவி என்பதே ஒருவகையில் பிணிதான். உடலுக்கு வரும் பிணிகள் பல்லாயிரம் இருக்க உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்காவிட்டால் அதுவே பசிப் பிணி ஆகி விடுகிறது. தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிட்டால் ஜகத்தை அழித்திடுவோம் என்று பாரதி நினைவு நாளன்று வீர வசனம் பேசுபவர்கள் என்றாவது கிராமப்புறங்களில் நாள் கணக்கில் பசியோடு வாடும் நபர்களுக்கு இரங்கி அன்னமிட்டதுண்டா ? “ இரப்பவர்க்கு ஒன்று ஈயேன் “ என்றும் இரப்பவர்க்கு ஈய வைத்தார் “ என்றும் திருமுறை வரிகளைப் பாடுபவர்கள் வாழ்க்கையில் அந்த நல்லுபதேசத்தைச் செயல் படுத்துகிறார்களா ?
சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவரும், நெருங்கிய நண்பருமான ஒருவரைப் பற்றி இங்கே கூற ஆசைப் படுகிறேன்.
திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில்
குடும்பத்துடன் வாழும் இந்த நண்பர் ( பெயர் குறிப்பிடுவதை வேண்டாதவர். எவ்வித விளம்பரமுமின்றிச்
சிவப்பணி செய்பவர்) தனது ஊர்ச் சிவாலயத்தை
அழிவிலிருந்து காக்க அரும்பாடு பட்டவர். உபயதாரர்களைக் கண்டறிந்து அவர்கள் மூலம்
ஆலயத் திருப்பணி , கும்பாபிஷேகம் ஆகியன செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
இவரது ஊருக்கு அருகில் உள்ளது தண்டலைச்சேரி என்ற சிவ ஸ்தலம் . இதற்குத் தண்டலை நீணெறி என்று தேவார காலத்தில் பெயர். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதும் கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்றதும் இக்கோயிலுக்கான தனிச் சிறப்புக்கள்.இதற்கு அருகிலுள்ள கணமங்கலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அரிவாட்டாய நாயனார் என்பவர் இவரது இயற்பெயர், தாயனார் என்பது. இறைவனது திருவமுதுக்காகத் தினமும் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் அளித்து வந்தார். தனது செல்வம் யாவும் குன்றிப்போய் வறுமைவந்தபோதிலும் அந்த நியமத்திலிருந்து தவறவில்லை. ஒருநாள் அருகிலிருந்த வயலுக்குச் சென்று செந்நெல்லும் கீரையும் மாவடுவும் பறித்து வரும்வழியில் கால் இடறியதால் கமரில் அவை யாவும் சிந்திவிடவே, இன்றையதினம் திருவமுதளிக்கத் தவறி விட்டேனே என்று வருந்திய நாயனார் தனது கழுத்தை அரிவாளால் அரிய முற்பட்டபோது பெருமான் அவரைத் தடுத்தருளி ஆட்கொண்டதாகப் பெரியபுராணம் கூறும். இதன் காரணமாக அவருக்கு அரிவாள் தாயர் (அரிவாட்டாயர் ) என்னும் தூய நாமம் உண்டாயிற்று.
நாயனாரது அரும்பணி நமது நண்பரை ஈர்த்துவிட்டது போலும். அவ்வூரிலும் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள முதிய ஏழைகளுக்கு உணவைத் தனது இல்லத்தில் தயார் செய்துகொண்டு விநியோகித்து வருகிறார். இப்பணியில் ஒரு சிலரிவருக்குத் துணை செய்தாலும் நாமும் இச் சிவ புண்ணியத்தில் ஈடுபட விரும்புகிறோம்.
மண்ணில் பிறந்ததன் பயனே சிவனடியாருக்கு உணவளித்தல் என்ற சேக்கிழார் பெருமானது வாக்கு இப்படிப்பட்ட நல்லோர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது. நிறைவு செய்யும் முன்னர் ஒரு மனம் வருத்தம் தரும் செய்தியையும் சொல்ல வேண்டியிருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் தனது காலை இழந்தவர் இந்த நண்பர் என்பதே அது. மதிய உணவும் இரவு நேர சிற்றுண்டியும் தன வீட்டிலிருந்தே சமைத்து ஏழைகளுக்கு வழங்கும் உயர்ந்த பணியைச் செய்து வருகிறார். தினமும் செயற்கைக் காலின் துணை கொண்டு , தனது இரு சக்கர வண்டியில் பல கிராமங்களுக்குச் சென்று இந்தத் தெய்வீகப் பணியைக் கடந்த பத்து மாதங்களாக ஒரு நாளும் தவறாமல் செய்து வருகிறார். இவரது வருகைக்காக வழி மேல் விழி வைத்து வெறும் வயிற்றுடன் காத்திருக்கும் அந்த ஏழை மக்களின் முகங்கள் இவரைக் கண்டவுடன் மலர்வதில் வியப்பில்லை தானே. அவருக்கு இந்த முக மலர்ச்சி ஒன்றே போதும். பாராட்டை எதிர்பார்க்காத அபூர்வ மனிதர் எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்துகொண்டு சேவை மனப்பான்மை கொண்டவராக இருப்பதே இம்மண் செய்த பாக்கியம்.
Outstanding
ReplyDeleteVery very touching. பிரதோஷ புண்ய தினத்தில் இந்த செய்தி கேட்க தேனாய் இனிக்கிறது.
ReplyDeleteஎல்லாம் சிவமயம்.
ஈசன் யார் மூலமாக யாருக்காக எதற்காக ஏன் எப்படி எவ்வாறு படி அளக்கிறார் என்பது தேவ இரகசியம். தன் நலம் அற்ற சேவை பாராட்டு எதிர்பார்க்காவிட்டாலும் பாராட்டப்பட வேண்டியது அவசியம்.
ReplyDeleteஅன்னமிடாமல் ஒரு நாள் கூடக் கழியக் கூடாது என்ற தரும சிந்தனை மிக்கவர்கள் பலர் வாழ்ந்த காலம் ...இப்படி கூட ஒருகாலம் இருந்தது என்பதை தங்களது வரிகள் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் உணவளிக்கும் அருந்தொண்டை செய்யும் அன்பரை புகை படத்திலாவது பார்த்திருக்கலாமே என்ற எண்ணம் வந்தது.
ReplyDeleteஇந்த நிலையில் பலர் இருந்த நாட்களும் உண்டு. ஆனால் இன்றைய நிலையில் எது உண்மை. எது மாறுபட்டது என்று அறியவே நாட்கள்ஆகின்றன.
ReplyDelete