Saturday, September 19, 2020

இன்னல்களை ஏற்கும் மனம்


 முகநூலாகட்டும், வாட்சப் ஆகட்டும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தது அதன் பயன். நமது நண்பர்களாக ஒத்த மனமும் செயல்பாடும் கொண்டவர்கள் அமையைப் பெறுவது இதற்கு மிகவும் அவசியமாகிறது. இவ்வளவு பார்த்துப் பார்த்து நண்பர் வளையத்தை அமைத்துக் கொண்டாலும் சில சமயங்களில் ஊடுருவல்கள் நிகழ்வதால் வெறுப்புக்கு ஆளாகிறோம். ஆனால் இத்தகைய ஊடுருவல்கள் சமயம், கலை, இசை போன்றவற்றில் அதிகமாகக் கலப்பதில்லை. தெரியாத பல தகவல்கள் பரிமாறப் படுகின்றன. பலரது மனக்குமுறல்களும் பிரச்சினைகளும் தெரிய வருகிறது. ஆனால் வலைப் பதிவுகள் பல படிப்போர் இல்லாமல் போவதும் உண்டு. நட்பு வளையத்தில் உள்ள பலர் படிப்பதோ பின்னூட்டம் இடுவதோ இல்லை. சில சமயங்களில் திருப்பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆலயங்களின் இடிபாடுகளைப் பற்றிப் புகைப்படங்களுடன் பதிவு செய்தாலும் அதிக பட்சமாக ஒரு " லைக் " போட்டு விட்டுக் கடந்து போய் விடுகிறார்கள். " வேலை வெட்டி இல்லாமல் " எழுதியவரின் மன நிலையைப் பற்றிக் கவலைப் படவா போகிறார்கள் ?   

முக நூலில் ஒரு அன்பர் திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களை அருமையாகக் குறிப்பிட்டிருந்தார். உபயதாரர்களை முன்னிலைப் படுத்தி அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பலரும் அறியும் வகையில் அவர் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. துரும்பைக் கூடக்  கிள்ளிப் போடாத பல அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களின் மிரட்டல்களைத் திருப்பணிக் குழுவினரும் உபயதாரரும் சந்திக்க வேண்டியிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இதில் பங்கு பெற்ற  அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களைக் கூடவே இருந்து பார்ப்பவர்கள் உள்ளூர்க் காரர்களும் ஆலய சிப்பந்திகளுமே ஆவார்கள். திருப்பணி செய்ய அனுமதி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிர்வாக அதிகாரிகள், வேலை நடக்கும்போது வருகை தருவதில்லை. கும்பாபிஷேகம் செய்யும் தேதியையும் இவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே தீர்மானிக்க வேண்டி உள்ளது. கும்பாபிஷேக யாக சாலை நிகழ்ச்சிகளிலும் இவர்களுக்கு அக்கறை இல்லை. கும்பாபிஷேகத்தன்று சௌகரியப்பட்டால் மட்டுமே வருவார்கள். அதிலும் ஆலய  முதல் மரியாதை தரப்படவேண்டும் என்பது என்னவோ எழுதப்படாத சட்டம். 

முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு ஒரு கிராமக் கோயில் சிவாச்சாரியார் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மையே ஆயினும், சிறு அணில் போல நாங்களும் இறைவனுக்குப் பணி  செய்கிறோம் என்று  எழுதியிருந்தார். எதார்த்தமாகச் சொல்லப்போனால் நாம் அனைவரும் அணில்களே ! ஒரு ஏழை அடியவன் இறைவனுக்குப் பூவும் நீரும் கொண்டு வந்து தர முடியும். ஒரு வகையில் அதுவும் அணில் சேவையே. அதைப் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றால் சுவாமிக்குச் செய்யும் பூஜையும் அத்தகையதே. பழுதுற்ற ஆலயத்தை இறைவன் தந்த செல்வத்தைக் கொண்டு திருப்பணி செய்யும் உபயதாரர் சேவைகூட அணிலின் செய்கை போன்றதே. நாம் ஒவ்வொருவரும் இறைவன் நமக்குத் தந்ததை அவனுக்கே அர்ப்பணிக்கிறோம். இத்தகைய மனோபாவம் இருந்துவிட்டால், மாலை, மரியாதை, கல்வெட்டில் உபாயதாரர் பெயர் பொறிப்பது போன்றவை எழ நியாயமே இல்லை.  ஆன்மீகப் பயணத்தில் ஏதோ வகையில் பணி செய்வதே முக்கியம் ஆதலால் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. 

அறியாமல் செய்த செயலையும் ஈசன் ஆராதனையாக ஏற்றுக் கொள்கிறான். ஆறறிவற்ற உயிர்களது செயலும் சிவாராதனையாக ஆகி விடுகிறது. வேதாரண்யம் கோயிலில் கருவறையில் விளக்கில் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தபோது அவ்விளக்கிலிருந்த எண்ணையை ஒரு எலி உண்ண வந்தது. அத்தீபத்தால் அதன் மூக்குச்  சுட்டிடவே, தனது மூக்கைத் திரியுடன் சேர்த்து வெளியே இழுத்துக் கொண்டது. அதனால் தீபம் மேலும் பிரகாசமாக   எரியவே, தீபத்தை மேலும் தூண்டியதாக இறைவன் அதனை ஏற்றுக் கொண்டு, அவ்வெலியை மறு  பிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக்கினான் என்பது வரலாறு. திருவானைக்காவலில் சிலந்தியும், யானையும் அருள் பெற்றதும் இந்த அடிப்படையில் தான்.

ஆன்மீகவாதிக்கு அடக்கமும், பலன் எதிர்பாராத மனமும், பிறர் துயர் கண்டு உதவும் கொள்கையும்  , எதிர்ப்புக்களைக் கண்டு சலியாத மனமும், எல்லாம் சிவன் செயலே என்ற தெளிந்த சிந்தையும் இன்றியமையாதவை. இவை எல்லாம் இறைவனது அருட்கொடைகள். தன்னிச்சையால் நடைபெறுவன  அல்ல. இதையே அப்பர் பெருமானும், " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் " என்று அருளிச் செய்தார். " பழித்து இகழ்வாரையும் உடைய பெருமானுக்கு யாரை ஆட்கொள்வது யார் மூலம் பணி கொள்வது என்பது தெரியும். அவனன்றி எதுவும் நடை பெற இயலாது என்பதை மாணிக்கவாசகரும்.

" ... சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே, ஒன்று நீயல்லை அன்றி ஒன்று இல்லை, யார் உன்னை அறியகிற்பாரே " என்றருளியமை காண்க.

 அதுபோலவே,திருப்பணியில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்களையும் இன்னல்களையும் ஏற்கும் மனத்தையும் இறைவன் நமக்குத் தந்தருளவேண்டும். அவ்வருள் கிட்டி விட்டால் இப்பிறவி தூய்மை பெற்று விடுகிறது. " என் கடன் பணி  செய்து கிடப்பதே " என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. 

  


.     

4 comments:

  1. சிவ சிவ சிவ சிவாய நம ஓம்.
    சர்வம் ஸ்ரீ சிவார்ப்பணம்.
    திருச்சிற்றம்பலம் சிவ சிதம்பரம்.
    தொகுப்புகள் அபாரம். சிவ ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்த விஷயங்கள் கொட்டி கிடக்கிறது இங்கே. முத்து குளித்து எடுத்து அனுபவிக்க ஈசன் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும்.
    சிவ சிவ சிவ சிவாய நம ஓம்.

    ReplyDelete
  2. கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய நினைக்கும் நல்ல அன்பர்கள் கும்பாபிஷேகம் முடியும் வரை சந்திக்கும் இன்னல்களை படிக்கும் போதே மனம் மிகவும் வேதனை படுகிறது..

    ReplyDelete
  3. தாய்மையைக் குறித்து சிந்தித்தால் அளவற்ற அன்பும் தாங்க இயலாத
    பிரசவ வேதனையைத் தாங்கும் பொறுமையும் நினைவுக்கு வரும். இரண்டுமே இறைவன் ஒவ்வொரு தாய்க்கும் அளித்துள்ள பேறுகள்தாம். இறைப் பணியில் அளவற்ற ஆர்வத்தையும், அதிகாரிகளும் இதர அறிவிலிகளும் வாரி வாரி வழங்கும் மனோவேதனையைப் பொறுத்துக் கொள்ளும் திறனையும் தெய்வம் அவ்வாறே அர்ச்சகப் பெரு நல்லோருக்கு வரமாகவே தந்திருக்கிறான் போலும்!

    ReplyDelete