நல்லாசிரியர் என்பவர் யார்? மாணவர்களால் பெரிதும் விரும்பப்படுபவரா, அல்லது வகுப்பிலுள்ள அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்பவரா அல்லது தேச பக்தியையும் நன்னெறியையும் போதிப்பவரா அல்லது மற்ற ஆசிரியர்களை விடச் சிறந்தவரா என்பதில் , எந்தவகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம். நல்ல ஆசிரியருக்கான அடையாளம் எது என்பது இன்னமும் முழுமையாக வரையறுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
பள்ளியை விட்டு அகன்றவுடன் எத்தனை மாணவர்களும் பெற்றோரும் அவ்வாசிரியர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்? வெகு சிலரே !! படிக்கும்போதே நல்லொழுக்கம் இல்லாத மாணவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களைத் திருத்த வகை அறியாமல் மனம் நொந்து போகிற ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். என்னதான் திறமையாகப் பாடம் நடத்தினாலும் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இக்காலத்தில் மிகவும் கடினம்.
சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் வரும்போதே மாணவர்களது முகத்தில் குதூகலம் தெரிவதைக் கண்டிருக்கிறோம். அதே சமயம் சில பரம சாதுவான ஆசிரியர்கள் வந்தால் கூச்சல் போடுபவர்களையும் பார்க்கிறோம். மதிப்பும் மரியாதையும் அவர்கள் வாயைத் திறந்து பாடம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தானாகவே ஏற்படுவது. அவர்கள் கற்பித்த பாடத்தைக் கேட்டு அமைதியாக மணி ஒலிக்கும் வரை இருக்கும் மாணவர்களைக் காணும் போது அந்த ஆசிரியரைப் பாராட்டவே தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். வீண் பேச்சைத் தவிர்ப்பவர்கள். மாணவர்கள் நலன் ஒன்றையே கருதி அவர்களை உயர்த்த முயற்சிப்பவர்கள்.
தக்ஷிணாமூர்த்தியாக இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றியபோது சனகாதி முனிவர்கள் பெருமானது சின்முத்திரையைப் பார்த்த மாத்திரத்தில் தெளிவு பெற்றதாகத் திருவிளையாடற்புராணம் கூறுகிறது. பெருமான் தனது திருவாயைத் திறக்காமல் சின்முத்திரை காட்டியே உபதேசம் செய்தார் .
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை, ஆறங்கம், ஆகியவற்றில் வல்ல நான்கு முனிவர்களுக்கும் வாக்குக்கு அப்பாற்பட்ட பரிபூரண மௌன நிலையில் , அனைத்துமாகி அதே சமயம் அல்லதுமாகி எல்லாப் பொருள் உண்மைகளையும் தனது சின் முத்திரையால் காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நாமும் நினைந்து இப்பிறவித் தொடரை வெல்வோமாக என்று அப்புராணத்தில் வரும் பாடல் இதையே காட்டுகிறது.
அறுபதுகளில் ஆறாண்டுகள் எனது தாயாரது பெற்றோரிடம் தங்கி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீ நாக சுப்பிரமணிய அய்யர் அவர்கள். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளமே பெற்று வந்தார்கள். வீட்டு வாடகைக்கும் பிற செலவுகளுக்கும் அது போதாததாக இருந்தது.அப்படிப்பட்ட வறுமையிலும் மிகக் கடினமாக உழைத்த உத்தமர்கள் அவர்கள். ஒருநாள் அவருக்கு வறுமையின் கொடுமை மேலும் பாதிக்கவே, வகுப்பறையில் மாணவர்களாகிய எங்களிடம் தழுதழுத்த குரலில், " நான் மிகவும் வறுமையால் கஷ்டப் படுகிறேன். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பன்னிரண்டு ரூபாய் கடனாக வாங்கித் தர முடியுமா " என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்தது. எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.
எனது பெற்றோர்கள் சென்னையிலிருந்து வரும்போது எனக்கு ஒரு ருபாய் கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம். ஏதாவது தின் பண்டங்கள் வாங்கிச் சாப்பிடட்டும் என்பதற்காக அப்படிக் கொடுத்து வந்தார்கள். ஆனால் நானோ அதைச் செலவழிக்காமல் ஒரு டப்பியில் போட்டு வைத்திருந்தேன். ஆசிரியருக்கு அதிலிருந்து எடுத்துக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. டப்பியிலும் அவர் கேட்ட அளவு சில்லரை இருந்தது. மறு நாள் அதை எடுத்துக் கொண்டு ( வீட்டில் யாரிடமும் சொல்லாமலே) பள்ளிக்குச் சென்றேன். அதைக் கொடுக்கும் முடிவை சக மாணவர்களிடம் சொன்னபோது அவர்கள் என்னைத் தடுத்தனர். " கொடுத்தால் திரும்பி வராது. பட்டை நாமம் தான் " என்றார்கள். நானோ, " எதற்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் ? ஆசிரியருக்கு நமது பாத காணிக்கையாக இருக்கட்டுமே" என்றேன். அவர்களோ ஏளனம் செய்தனர். அது என்னைப் பாதிக்கவில்லை. ஆசிரியரின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணி ஒலித்ததும் ஆசிரியர், சோர்ந்த முகத்துடன் வகுப்பில் நுழைந்தார். அவர் அமர்ந்தவுடன் அவர் அருகே சென்று அந்த பன்னிரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவரிடம் கொடுத்தேன். உடனே எனது இரு கரங்களையும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார். அவரை எப்படிச் சமாதானம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
ஒருவாறு சமாதானம் அடைந்த ஆசிரியர், " உன்னுடைய இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீ வாழ்நாளில் நன்றாக இருப்பாய். இந்தப் பணத்தைக் கண்டிப்பாக அடுத்த மாதம் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் முன்போலவே ஏளனம் செய்தனர். " விடாதே இந்த மாதம் போய் அவரிடம் திருப்பித் தரும்படி கேள் " என்று தூண்டி விட்டார்கள். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "அவருக்கு எப்போது முடியுமோ அப்போது கொடுக்கட்டும். இல்லாவிட்டாலும் நான் முன் சொன்னபடி அதைக் குரு காணிக்கை என்று நினைத்துக் கொள்கிறேன்" என்றேன். ஆனால் ஆசிரியருக்கோ தன்னால் திருப்பித் தர முடியவில்லையே என்ற எண்ணம் இருந்து வந்தது. துக்கம் தொண்டையை அடைக்கும்படி அவரே ஒருநாள் இதைக் கூறி விட்டார். அதற்குப் பிறகும் அவரை மேலும் வருந்தச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசி வரை அவரிடம் அது பற்றிப் பேசவே இல்லை. ஆனால் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்று விட்டது போன்ற உணர்வு அன்றுமுதல் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது. அவரை இன்றும் நினைத்து நெகிழ்ந்து ஆசிரியர் தினத்தன்று அஞ்சலி செய்வதல்லால் அவருக்கு இந்த அற்பன் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும் ?
அன்று செய்ததைப்போல இன்றளவும் உதவிகளை தொடர்ந்து செய்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிறீர்கள். 🙏🙏🙏
ReplyDeleteGood story for present Young generation
ReplyDeleteதனக்கு மிஞ்சினால் தானம் என்றாலும்,
ReplyDeleteசெய்ய மனம் வந்தாலும், அந்த உதவியும்
காலத்தால் செய்த உதவியாக அமைந்தாலும்
அவை எல்லாம் இறைவன் செயல் அன்றி வேறல்ல.