Sunday, October 14, 2018

கேலிச்சித்திரங்களில் கடவுள்

பொதுவாகவே ஒரு தெய்வச்  சிலையைக்  காணும்போது நம்மை அறியாமலே ஒரு பய பக்தி ஏற்பட வேண்டும். சாலையில் நடந்து போகிற போக்கில் கோயில் கண்ணில் பட்டால் செருப்பைக் கூடக் கழற்றாமல், இரு கன்னங்களையும் விரல்களால் தொட்டு விட்டு மேற்கொண்டு நடக்கத் தொடங்கினால் அதை பயம் கலந்த பக்தி என்று எப்படிச் சொல்வது? அதே போலக்  கோயிலில் ஆகட்டும், வீடுகளில் ஆகட்டும், சுவாமி விக்கிரகங்களைத் தீண்டிப் பூஜை செய்யும்போது அவற்றை எதனால் செய்யப்பட்டது என்ற எண்ணமே மாய்ந்து, தெய்வமே நேரில் எழுந்தருளியதாகக் கொள்ளும் மனோபாவமும் பக்தியும்,அச்சமும் ஒருங்கே வர வேண்டும். இல்லாவிட்டால் கல்லாகவும் உலோகமாகவும் நினைத்துக் கொண்டே பூஜை செய்வதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியது தான் ! 

ஓவியர்களும் கேலிச்சித்திரம் வரைவதற்குத்  தெய்வத் திருவுருவங்களை இஷ்டம்போல் வரைவதை விட்டு விட்டு  வேறு உத்திகளைக் கையாளலாம்.  சில்பி அவர்களது கை வண்ணத்தில் வெளியான தெய்வப் படங்களைப் பார்க்கும்போது, அந்த ஓவியங்கள் வரையும்போது சில்பி அவர்கள் எவ்வளவு நுணுக்கமாகவும், தெள்ளத் தெளிவாகவும் அத்திருவுருவங்களைக் கண்டு ஓவியம் வரைந்தார் என்பதைப் பார்க்கும்போது  வியப்பாக இருக்கும். 

கல்லிலும் உலோகத்திலும் தெய்வ வடிவில் அமைப்பவர்களில் சிலர்  தியான சுலோகம் காட்டிய வழிப்படி நின்ற காலம் போய் காலண்டர்களில் காணப்படும் ஓவியங்களை நாடுகின்றனர்.   இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய தொன்றாகும். கடவுள் வடிவங்களில் கணபதியை வைத்தே பெரும்பாலும் இதுபோன்ற வித்தியாசங்கள் உண்டாக்கப்படுகின்றன. அவர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வரைவது, கோடானு கோடி மக்கள்  வழிபடும் தெய்வம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்ணாடி போடுவது, சாய்வு நாற்காலியில் உட்கார்வது  போன்ற கற்பனைகளைக் கடவுளிடம் காட்டுவது கேலி செய்வதைப் போல இருக்கிறது. 

கேலி சித்திரத்தை ஏன் பெரிதாகப் பொருட்படுத்துகிறீர்கள் என்று கேட்கலாம். எவ்விதக் கட்டுப்பாடோ வரம்புமுறையோ இல்லாமல் மட்டற்ற சுதந்திரம் கொடுத்து விட்டதால் ஓவியர்கள் மட்டுமல்லாமல் எவர் வேண்டுமானாலும் கடவுளர்களை சித்தரிப்பது என்று ஆகிவிட்டது. இந்த நவீன காலத்தில் தன்னிச்சையாகச் செயல் படுவதைத் தடுக்க எவராலும் இயலாது. என்றாலும் பய பக்தியுடன் தெய்வங்களை வழிபடுவோரது மனத்தைப் புண் படுத்துகிறார்கள் என்பதையாவது அவர்கள் அறியச் செய்ய வேண்டாமா? 

2 comments:

  1. வர வர மேலோட்டமாகவே எதுவும் நடக்கிறது. உணர்வுகளும் அப்படியே. இருசக்கர தலை கவசத்துக்கு விநாயகர் சொல்லும் அறிவுரையாவது என் போல் உனக்கு மாற்று தலை கிடைக்காது.

    ReplyDelete
  2. தலை பாதுகாப்பு கவசம் அணிவது பற்றி எத்தனையோ slogan இருக்கும்போது, விநாயகர் அறிவுரை சொல்வது போன்ற கற்பனை விந்தையாக உள்ளது. தலைவலி நிவாரணி என்றால் இவர்களுக்கு இராவணனின் பத்து தலைகள் ஞாபகம் வரும். நாத்திகவாதிகளோ, பிரமனுக்கு நான்கு தலைகள், முருகனுக்கு ஆறு தலைகள் என்பதை அவர்களது வக்கிர புத்திக்கு ஏற்ப நகையாடுவர். கடவுளை எவ்வளவு நகையாடினாலும் நமக்கென்ன என்று இருக்கும் மக்கள் இருக்கும்போது இப்படித்தான் தொடரும்.

    ReplyDelete