Saturday, August 16, 2014

பாழடையும் குளங்கள்

தலயாத்திரையில் தீர்த்தயாத்திரையும் அடங்கிவிடுகிறது. உதாரணமாகக் காசிக்குச் செல்பவர்கள் விச்வநாதரையும்,கங்கையையும் தரிசிப்பதும் , இராமேச்வரத்திற்குச் சென்று இராமனாதரைத் தரிசிப்பதோடு, அனைத்துத் தீர்த்தங்களிலும் நீரா டுவதும் தொன்றுதொட்டு நடந்து வருபவை. தீர்த்தங்கள் எல்லாம் சிவவடிவமாகவே கருதப்படுபவை. "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே" என்கிறது அப்பர் தேவாரம்.

பொதுவாக எல்லாத் திருக்கோயில்களின் அண்மையிலும் திருக்குளங்கள் இருக்கக் காண்கிறோம். இவை அனைத்தும் இறைவனுக்குச் சமமான புனிதத்துவம் வாய்ந்தவை. வேண்டிய அனைத்தும் வழங்கும் வள்ளல் தன்மை வாய்ந்தவை. தீரா நோய்களைத் தீர்த்து அருள வல்லவை. எடுத்துக்காட்டாக  வைத்தீஸ்வரன் கோயில் ஆலயத்திற்குள் உள்ள சித்தாமிர்தத் தீர்த்தத்தின் சிறப்பைக் கூறும்பொழுது அதன் துளி ஒன்று நம் மீது பட்டாலே வினையும் நோயும் நீங்கப்பெறும் என்று நூல்கள் வாயிலாக அறிகிறோம்.

 திருவாரூருக்கு அண்மையில் உள்ள திருக்காரவாசல் (திருக்காறாயில்)என்ற பாடல் பெற்ற சிவத் தலத்தின் திருக்குளப்படிக்கட்டுக்களைக் கருங்கல்லால் அமைத்துக்  கட்டியுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பக்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதன் எழிலான காட்சியையே மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

ஆலயத்தோடு தொடர்புடைய குளம் , திருக்குளம் எனப்படுகிறது. ஏனையவற்றைக் குளம் என்று மட்டும் அழைக்கிறோம். அவை மக்களின் அன்றாட தேவைகளுக்காக அகழப்பெற்றவை. கிராமங்களில் அத்தகைய குளங்கள் நீராடுவதற்கும், துணி தோய்க்கவும், பாத்திரங்களைக் கழுவவும் பயன்படுத்தப்படுகின்றன.. இவற்றைத் திருக்குளங்களில் ஒருபோதும் செய்யக்கூடாது. நமது பிற தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குளங்கள் கால்நடைகள் நீர் பருகவும்,நீராடவும் எதுவாக ஒருபுறம் படிக்கட்டுக்கள் இல்லாமல் அப்பிராணிகள் எளிதாக இறங்கும் வகையில் சரிவாக அமைக்கப் பட்டிருக்கும். இவற்றை சிறந்த தருமங்களாக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்தார்கள்.   "குளம் பல தொட்டும்"  என்பது சம்பந்தர் வாக்கு. குளம் அமைப்பது சிறந்த சிவதருமம் என்பது இதனால் அறியப்படுகிறது. இவற்றைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய நாம் பாழடிக்கிறோம் என்பது உண்மை. புதிய குளங்களை அகழும் புண்ணியத்தை ஏற்காவிடினும், பழைய திருக்குளங்களையும் ஏனைய குளங்களையும் தூர்க்கத் துணிந்துவிட்டோம்.

கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளம், திருவாரூரிலுள்ள கமலாலயத் திருக்குளம்  போன்றவற்றில் மக்கள் பெருந்திரளாக வந்து நீராடுவர். எனவே இவற்றை மாசுபடாமல் காக்க வேண்டியது நம்  ஒவ்வொருவரின் கடமை. திருக்குளங்களிலேயே,குப்பைகளையும் பிற கழிவுகளையும் வீசத் துணிந்துவிட்ட நாம், ஏனைய குளங்களை அலட்சியப்படுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. பல இடங்களில் கிராம ஊராட்சிக் கட்டிடங்களே கோயில் நிலங்களிலும் நீர்நிலைகளை ஒட்டியும்  ஆக்கிரமித்துக்   கட்டப்பட்டிருக்கும்போது, பிறருக்கும் தைரியம் வந்துவிடுகிறது.

இந்நிலையில் வயதானவர்களைத் திருத்துவதென்பது சாத்தியமாகத் தோன்றவில்லை. கிராமப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நமது ஊரிலுள்ள திருக்குளமும் பிற குளங்களும் எவ்வாறு பாழாகிக் கிடக்கின்றன என்பதை அவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று நேரில் காட்டி விளக்க வேண்டும். அவை தூர்க்கப்படுவதால் நிலத்தடி நீரின் அளவு பாதிப்படைகிறது என்பதை எடுத்துக் கூற வேண்டும். குளம் , வாய்க்கால் ஆகியவற்றிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கோடைக்காலத்தில் அகற்ற முன்வர வேண்டும்.குளங்களைச் சுற்றிக் கருவேலி மரங்கள் இருந்தால் அவை அருகிலுள்ள நிலத்தடி நீரைப் பெரிதும் உறிஞ்சி விடுகின்றன என்று அறியப்பெற்று, அவற்றைப் பலர் நீக்க முன்வருகின்றனர். இளைய சமுதாயத்தின் சீரிய பங்கினால்  திருக்கோயில்களும்  திருக்குளங்களும்  மீண்டும் பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்விளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆணி வேராகவும் ஏணிகளாகவும் திகழும் ஆசிரியப்பெருமக்கள் ,கல்வி புகட்டுவதோடு நின்றுவிடாமல் சமூக சிந்தனையையும் உருவாக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும் என்பது நமது வேண்டுகோளும் ஆசையும் ஆகும். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாங்கம்  நல்லாசிரியர் விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும். ஆசிரியர்கள் முன்வருவார்களா? நல்லாசிரியர்களாகத் திகழ்வார்களா?  

1 comment:

  1. There are specific rituals followed in ome temple. For example devotees take a holy dip in the temple tank before worshiping Vaitheeswaran in the temple. It is also a local belief that dissolving jaggery, salt and pepper in the waters cures skin diseases. At Thirunallar Temple devotees take a holy bath in the Holy water tank called Shani Theertham in the morning. They apply gingely oil on the head and apply soapnut powder and take holy dip. They leave their clothes in the tank itself.

    ReplyDelete