இப்படியும் மொழியின் பெயரில் திணிக்கப்படும் மாற்றங்கள். |
மனிதனோ தன் வயிறு நிரம்பிவிட்டால் தன்னைச் சுற்றி உள்ளவற்றை ஆராயத் தொடங்குகிறான். இதற்கு ஆறாவது அறிவு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிந்தனைகள் பலவிதம். ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் அவை இயங்குகின்றன. தனக்கு என்று ஒரு பாதையை வகுத்துக் கொள்ள ஆரம்பிப்பதோடு, காலம் காலமாக வழி காட்டிய பாதைகளை மாற்றிக் கொள்ளவும் தயாராகி வருவதைத் தனி மனிதனது சுதந்திரம் என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.
ஆன்மீகத்தையும் இந்தத் தனி மனித சுதந்திரம் விட்டு வைக்கவில்லை. இதைத்தான் திருஞான சம்பந்தர், " புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு " என்று குறிப்பிடுகிறார். நம்மை நல்ல கதிக்கு அழைத்துச் செல்வதற்கு இறைவன் வேதங்களையும், ஆகமங்களையும், திருமுறைகளையும் தோற்றுவித்தான். அதிலும் ஆகம வழியில் இறைவனை வழிபடுவது தமிழகத்திற்கு உரிய தனிச் சிறப்பு. ஆகமம் இறைவனது வடிவேயாதலை மாணிக்க வாசகப் பெருமானும் , " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் " என்று பாடியருளினார். எனவே, ஆகமத்தைப் புறக்கணிப்பது என்பது சிவபெருமானையே புறக்கணிப்பதற்குச் சமம். ஆகமம் முத்தி நெறியை அறிவிப்பது. அதனை ஒதுக்கினால் மூடர்களாகத்தான் ஆக ஏதுவாகிறது. " முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை" என்பது திருவாசகம்.
ஆகமம் வடமொழியில் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காகச் சிலர் அதனைப் புறக்கணிப்பதோடு தமிழில் உள்ள திருமுறைகளைக் கொண்டே பூஜைகளையும் கும்பாபிஷேகங்களையும் நடத்துகிறார்கள். ஆகமத்தில் ஆலய பிரதிஷ்டை, விழாக்கள் நடத்தும் முறை, கும்பாபிஷேகம் நடத்துதல் போன்ற கிரியைகள் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் திருமுறைகளோ இறைவனைத் துதிப்பதற்கு உரிய தோத்திரங்களாகத் திகழ்கின்றன. இவ்விரண்டுமே நமக்கு முக்கியம்தான். ஒன்றிற்குப் பதிலாக ஒன்று என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் இவ்விரண்டையுமே இறைவன் விரும்பி ஏற்கிறான் என்பதைப் புராணங்கள் மூலமும், அருள் நூல்கள் வாயிலாகவும் அறிகிறோம். தவறாக வழிகாட்டுபவர்களால் ஏற்பட்ட விபரீதப் போக்கு இது. எப்படி வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு என்றும் வாதிடுவர்.
கோயில் அமைப்புக்களிலும் தங்களுக்குப் பிடித்தவகையில் சிலர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். உதாரணமாகச் சிவாலயங்களில் கிராம தேவதைகள் மற்றும் குருமார்களின் சிலைகளை வைக்கிறார்கள். மற்றும் சிலர் அக்குருமார்களுக்குத் தனி ஆலயங்களே எழுப்புகிறார்கள். வேத மந்திரங்கள் கொண்டு அவற்றிற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இப்புதிய குருமார்கள் மீது காயத்திரி மந்திரம், சுப்ரபாதம், அஷ்டோத்திரம் போன்றவை இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
மக்களும் இவற்றால் கவரப்பட்டுத் தங்களது பரம்பரைகள் போற்றி வந்த தெய்வ வழிபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு புதியதோர் வழிபாட்டை ஏற்கிறார்கள். துறவிகள் சிலரும் தங்கள் மடத்துக் கோட்பாடுகளை மதியாமல் இதுபோன்ற ஆலயங்களுக்குச் சென்று , தாங்களே தீபாராதனையும்,பூமி பூஜை முதலியவற்றையும் செய்கிறார்கள். கேட்டால் எல்லாவற்றிலும் சிவத்தைப் பார்க்கிறேன் என்று சமாதானம் சொல்வார்கள்.
மற்றும் சிலர் கயிலாய வாத்தியம் என்று பெயரிட்டு வாத்தியங்களை செவிப் பறை கிழியும் அளவுக்கு முழக்குகின்றனர். அவர்களைச் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் வேறு. அதில் சுய நினைவில்லாமல் சிலர் போடும் ஆட்டம் பாட்டம், முகத்தைச் சுளிக்கச் செய்கிறது. விழாக் காண வந்த மனோநிலை நம்மை அறியாமலேயே பறந்தோடி விடுகிறது.
மேற்கண்ட மாற்றங்களுக்கு / மாயைகளுக்கு இதுவரையில் வைணவ சமயம் ஆட்படவில்லை என்றே தெரிகிறது. திவ்வியப்பிரபந்தத்தைக் கொண்டு சம்ப்ரோக்ஷணம் செய்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? " மண்ணில் நல்ல வண்ணம் " பாடி சில சைவக் குழுக்கள் திருமணம் செய்வதைப்போல வைணவத்தில் பார்த்திருக்கிறோமா? கைலி கட்டிய சுய நினைவில்லாத சுவாமி தூக்கிகளை வைணவம் அனுமதிக்காது. இவர்கள் கைலாய வாத்தியம் என்று முழக்குவதைப் போல் அவர்கள் வைகுண்ட வாத்தியம் என்று முழக்கமிடுவதில்லை. அந்த அளவுக்கு ஆகம நெறிகளைப் பின்பற்றுகிறார்கள். இப்படி இருக்கும்போது சைவத்தில் மட்டும் ஏன் மாற்றம் ஏற்படுத்தத் துடிக்கிறார்கள்? அனுமதிகள் எப்படித் தாராளமாக வழங்கப்படுகிறது? அப்படியே ஆகம மீறல்கள் நடைபெறும்போது மடாதிபதிகள் ஏன் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிப்பதில்லை? " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்றும், " ஆகம சீலர்க்கோர் அம்மானே " என்று திருமுறைகள் கூறியும் அதற்காகவாவது பின்பற்றலாம் அல்லவா?
சில மடங்களின் கண்காணிப்பில் இருந்துவரும் ஆலயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பணி காணாது மரம் முளைத்தும் மேற்கூரை விரிசலோடு இருப்பதைக் கண்டும், அம் மடாதிபதிகள் மௌனிகளாக இருப்பதைக் காணும்போது , இவர்கள் தமக்கு முந்தைய மடாதிபதிகள் காட்டிய வழியிலிருந்து மாறுகிறார்களோ என்ற ஐயம் உண்டாகிறது. இதனால் தானோ என்னவோ மக்களுக்கும் ஆகம விதி மீறுவதற்குத் தைரியம் வந்து விடுகிறது. வழி நடத்தி உய்விக்க வேண்டியவர்களே விலகி நிற்கும்போது மக்களை எப்படிக் குறை சொல்வது?
Dear Sekhar, When love of Lord Siva's sacred Murti and love for the language in which the Nayanmars sang prompt some devotees to use the Thirumurai alone for worship, the Lord will love it, I think. But when they do it because of biases against Sanskrit and the Vedic scholars, He will certainly not like it. We must pray to Him to instill good sense in the minds of all people who have the privilege of worshiping his archa-Murtis. Regards. Desikan
ReplyDeleteவைணவம் அனுமதிக்காத இந்த மாற்றம் சைவத்தில் மட்டும் ஏன்?- மிகச் சரியான கேள்வி.
ReplyDeleteஐயா, தங்கள் ஆதங்கம் புரிகிறது. வாத்தியங்கள் விஷயத்தில் பல கோயில்களிலும் குளறுபடிகளை கோயில் நிர்வாகம் செய்யும் துறையே செய்கிறது. நாதஸ்வரம் மற்றும் மேளத்திற்கு பதில் சாக்ஸபோன் வாசிக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரு வாத்தியக்கோஷ்டிகள் , பாரம்பரிய கோஷ்டியினரை பின் தள்ளி புதிய வாத்தியங்களை வாசிப்பதை கேட்கும் துர்பாக்கியம் ஏற்பட்டது.
ReplyDeleteநாதஸ்வர கோஷ்டியினர் மனம் நோந்திருப்பார்கள். கோயிலோடு பரம்பரையாக சம்பந்தப் பட்ட எல்லாருமே வருந்தும்[ அர்ச்சகர்கள் மட்டுமல்ல] சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.