Thursday, October 2, 2014

ஆலயத் தூய்மை

நியமம்  என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் நம்மை வகுத்துக் கொள்வது எனலாம். ஒரு நாள் மட்டும் பின்பற்றிவிட்டு, பின்னர் விட்டுவிடுவதை எப்படி நியமம் என்று சொல்ல முடியும்? சண்டேச நாயனார் அருகிலுள்ள மண்ணியாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் நிறுவி, சிவபூஜையில் தூய பசும் பாலால் அபிஷேகித்து வருவதைத் தினமும் பின்பற்றிவந்ததாகப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மார்க்கண்டேயரது சிவபூஜையும் அப்படித்தான்.            ' நித்தலும் நியமம் செய்து " என்று அதனைச் சிறப்பிப்பார் அப்பர் பெருமான். நியமங்களில் பலவகைகள் இருக்கின்றன. ஆகார நியமம்,ஆசார நியமம் என்று இப்படிப்பட்டவை நம்மை ஒழுங்குபடுத்தவே ஏற்பட்டுள்ளன. அகத் தூய்மை, புறத் தூய்மை என்பார்களே, அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கண்டதை /அனுபவித்ததை இப்பொழுது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் சரஸ்வதியின் படம் மாட்டியிருப்பார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்தியும், தூய வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்தும் ,தூய வெண்ணிற அன்னம் அருகிருக்க,  தூய நீரோடையின் அருகில் தேவியானவள் ,புத்தகத்தையும், மாசில் வீணையையும் ஏந்திய அருட்கோலம் அது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளே தூய்மையின் வடிவமாகவும் தூய்மையின் இருப்பிடமாகவும் காட்சி அளிப்பது போல் தோன்றியது. நம்மை அறியாமலே, அத் தூய்மைக்குத் தலை வணங்கத் தோன்றியது.அதன் பலன் தானோ என்னவோ திடீரென்று ஒருநாள் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குவந்து அவ்வகுப்பிலேயே தூய்மையாக உடை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருபவன் என்று அறிவித்துவிட்டுப் புத்தகங்களைப் பரிசாக அளித்துச் சென்றது இன்னமும் பசுமையான நினைவாகவும் சரஸ்வதி தேவியின் கருணையாகவும் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.  இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இன்று நாட்டையே தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது இவ்வாறு  பழைய நினைவைத் திரும்பிப்பார்க்க நேரிட்டது.

சுத்தம்,சுகாதாரம் என்று பள்ளிக்கூடங்களில் சொல்லிப்பார்த்தோம். சுத்தம் சோறு போடும் என்று எழுதியும் வைத்தோம். கண்ட இடங்களில் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் கண்டித்தும் பார்த்தோம். தெருக்களைக் குப்பைக்கூடங்களாக்குவதையும் , ஆறுகளை மாசுபடுத்துவதையும் தவிக்கவேண்டும் என்று ஆண்டு தோறும் கத்தியும் பார்க்கிறோம். கடற் கரை  மணல் களங்கப் படுத்தப்படுகிறது. கண்டு கொள்வாரைக் காணோம்! தூய்மை நாள் அல்லது தூய்மை வாரம் என்று ஒரு நாள் இதையெல்லாம் சரிப்படுத்த முனைவதோடு சரி. தொடர்ந்து கண்காணிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நோய்கள் பரவினால் குப்பை அள்ளுவதும், கொசு மருந்து அடிப்பதும் வாடிக்கை ஆகி விட்டது. இந்நிலையில் சுத்தமான இந்தியாவை எப்படி உருவாக்குவது? எத்தனை ஆண்டுகள் தான் நம் மக்கள் அசுத்தத்திலேயே வாழ்க்கை நடத்தப் போகிறார்கள்? ஒருவேளை அசுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்களோ?

மனத்தூய்மையே இல்லாதபோது புறத் தூய்மை எங்கிருந்து வரும்? தெய்வம் குடிகொள்ளும்  கோயிலுக்கு   உள்ளும் புறத்தும் அசுத்தப்படுத்தும் மக்களை எப்படித் திருத்தப்போகிறோம்?  இன்று காலை சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற போதும் இதே நிலையைத்தான் காண வேண்டியிருந்தது.  வடக்கு மாட வீதியிலிருந்து, மேற்கு கோபுர வாசலுக்குச் செல்லும் பாதையில் கொட்டியுள்ள குப்பைகள் குவிந்து கிடந்தன. அங்கு வீசும் துர்நாற்றத்தைச்  சகிக்க முடியாமல் மூக்கைப்பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய நிலை! கோவிலுக்கு ISO சான்றிதழ் பெறுவது முக்கியமல்ல. ஆலயத்தின் தூய்மைதான் இறைவனை வழிபட வருவோர் பெறும் முதல் அருட் பிரசாதம். பல  கோவில்களில் பிரசாதக் கடைகளை அனுமதித்துள்ளதால்   அவற்றைச் சுற்றிலும் எச்சில் இலைகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டு   மனம் சுளிக்கத்தான் செய்கிறது. அன்னதானம் செய்யட்டும் . அதே சமயத்தில் அன்னதானக் கூடம் குப்பைக் கூடமாக மாறாமல் இருக்கக் கூடாதா? எனவே , கோயில்கள் அமைதிக் கூடங்களாக விளங்கத் தூய்மைதான் முதல் படி. இதை மக்களும், நிர்வாகிகளும் உணருவது எப்போது?     

No comments:

Post a Comment