Tuesday, October 21, 2014

" தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே "

அனைவருக்கும் இன்ப மயமான தீபாவளி வாழ்த்துக்கள், அதென்ன " இன்ப மயமான தீபாவளி " என்று கேட்கலாம். உலகில் அனைவரும் இன்பத்தை மட்டுமே விரும்புவர். " இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று திருமுறையில் சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக்காட்டுவர்.. யாருக்கு எந்நாளும் இன்பமே வரும்  என்று யோசித்தால், திருமுறையிலிருந்தே விடை கிடைப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.. மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்க வேண்டும்:
 " பெருந்துறைப் பெருமான்,  உன் நாமங்கள் பேசுவார்க்கு இன்பமே வரும்; துன்பம் ஏது உடைத்து ? என்பது திருவாசகம். அதாவது இறைவனை பக்தி செய்து, அவனது நாமங்களையே எப்போதும் இடைவிடாமல்  பேசுபவர்களுக்கு  ( " சிவாய நம  என்று இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்று ஔவையார் சொன்னபடி) ஒவ்வொரு நாளும் இன்ப மயம் தான். அப்படிப்பட்ட பக்குவவான்களுக்குத் துன்பத்தையும் இன்பமாகவே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். அவர்களுக்கு எந்த வித அச்சமோ, பாவமோ, நோயோ  அண்டாது. இதைதான் சம்பந்தரும்,  "அச்சம் இலர்  பாவம் இலர் கேடும் இலர் அடியார்; நிச்சம் உறு நோயும் இலர் " என்று அருளினார்.  ஒருக்கால் வினைப்பயன் காரணமாக நோய் வந்தாலும் அவர்கள் இறைவனது நாமங்களையே உச்சரிப்பர். இதனை ,   " நோயுளார்  வாய் உளன் " என்றார்  ஞான சம்பந்தர் .

ஆனந்த மயமான தீபாவளிப் பண்டிகையன்று  எத்தனையோ  பேர்  அம்மகிழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் போகிறது என்பதனையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பண்டிகை தினத்தன்று ஆஸ்பத்திரிகளில் நோய்வாய் பட்டுக் கிடப்போர்  , பண்டிகைச்  செலவுகளுக்குத் தேவையான பொருளாதார வசதி இல்லாமல் கவலைப் படுவோர், பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருப்போர் , உறவினர்  எவரேனும் ஓர் ஆண்டுக்குள் உயிர் நீத்திருந்தால் பண்டிகை இல்லாமல் போகும் நிலை என்று இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்நன்னாளில் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது.  அவர்களும் இனி வரும் ஆண்டுகளில் ஏனையோருடன் மகிழ்ச்சியாக தீபாவளித் திருநாள் கொண்டாடி மகிழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

சிவபெருமானுக்கு உகந்த சதுத்தசி தின இரவில் உதயத்திற்குச் சற்று முன்பாக இதனைக் கொண்டாடி அவனருளைப் பெறுகிறோம். இறைவன் ஒளி மயமானவன் . ஒளி வடிவானவன். ஒளிக்கு ஒளி தருபவன். சூரியன்,சந்திரன் ,அக்னி ஆகிய மூன்றும் அவனது திருக் கண்கள். எனவே உலகுக்கு ஒரு சுடராய் நிற்கும் அப்பெருமானை தீப ஒளியில் வழி  படுவது மிகவும் பொருத்தம் தானே!  " சோதியே,சுடரே,சூழொளி விளக்கே" என்றும், " ஒளி வளர் விளக்கே " என்றும் ,        " கற்பனை கடந்த சோதி" என்றும் திருமுறைகள் அவனது பெருமையைப் பேசுகின்றன.

கல்விக்கூடங்களில் புன்சென் பர்னர் (Bunsen Burner) என்பதைக் கொண்டு பொருள்களைச் சூடேற்றுவதைப் பலரும் கண்டிருப்பர். அதனை ஒரு நிலைக்குக் கொண்டு வரும் போது, நீல நிறத்தோடு சுடர் எரிவதைக் காணலாம். அதை விட முக்கியம், அச்சுடருக்குள் மற்றொரு சுடரும் தெரிவதைக் காண முடியும். "சோதியுட் சோதி" என்று பரமேச்வரனைத் திருவிசைப்பா வருணிப்பது அப்போது நினைவுக்கு வர வேண்டும். அவனோ சுயம் பிரகாசனாகத் திகழ்பவன்.

ஆகவே, தீப ஒளியைக் காணும் போதெல்லாம், ஒளிக்குக் காரணனாக விளங்கும் சிவனது கருணையை நன்றியுடன் தியானிக்க வேண்டும்.  "தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே, திருவையாறு அகலாத செம்பொற்   சோதி"  என்று அப்பர்  பெருமான் கூறுவதும் இதன் காரணமாகத் தான்.
  சிவசன்னதியில் விளக்கிட்டால் ஞானம் உண்டாகும் என்று தேவாரம் உணர்த்துகிறது. அரச பதவியும் கிடைக்கும் என்று வேதாரண்யத் தல  புராணமும்   கூறுகிறது. வேதாரண்யம் சிவாலயத்தில் தீபத்து நெய்யை ஒரு எலி உண்ண  வந்தபோது, அதன் மூக்கு,  தீபச் சுடரில் பட்டுவிடவே, அதற்குச் சுட்டுவிட்டது. அதனால், மூக்கைப் பின்னுக்கு அது இழுத்துக் கொண்டபோது, தீபத் திரியும் சிறிது வெளிவர, அத்தீபம் முன்பைவிட அதிகமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வேதாரண்யப்பெருமான் அந்த எலி, தீபத்தைத் தூண்டிவிட்டதாகக் கொண்டு, அதனை அடுத்த பிறவியில் மகாபலி என்ற அரசனாக்கினார். இதனால், சிவசன்னதியில் விளக்கேற்றுவதன் சிறப்பை அறியமுடிகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்பார்கள். நாம் அங்கு சென்று அந்த அழகைக் கண் குளிரத்  தரிசிக்க வேண்டாமா?

தீபாவளித் திருநாளன்று நம் இல்லங்களிலும், அருகிலுள்ள சிவாலயத்திலும் அகல் விளக்கினை ஏற்றுவோம். வினைகள் அகல வேண்டுவோம்.  விளக்கேற்ற எண்ணெய் இல்லை என்ற நிலை இனிமேல் ஒரு கோவிலில் கூட நிகழக் கூடாது. இதனை, தீபாவளித் திருநாளை முன்னிட்டு உறுதி மொழியாக ஏற்கலாம். எல்லாவற்றையும் நம் சுகத்திற்காகவே அமைத்துத் தந்த இறைவனுக்குப் பிரதியாக இதைக் கூட செய்யக் கூடாதா? 

1 comment:

  1. தீபாவளி நமக்குக் கேதார விரதமும் கூட. இனிய தீபாவளி.
    http://www.shaivam.org/siddhanta/feskedha.html

    ReplyDelete