Friday, October 31, 2014

" முன்னவனே , முன் நின்று அருள் "


ஆலயத் திருப்பணி செய்பவர்களை " திருப்பணிச் செல்வர் " என்றும்    திருப்பணிச் சக்கரவர்த்தி " என்றும் தற்காலத்தில் பட்டங்கள்  தந்து கௌரவிக்கிறார்கள்.  உண்மையில் பார்த்தால் இவர்கள் ஏற்கனவே செல்வந்தர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரிய மனம் படைத்தவர்களாக இருப்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மைதான். ஒருகாலத்தில் பிரம்மாண்டமான அளவில் இதனைச் செய்த மன்னர்களுக்கும், அண்மைக்காலத்தில் திருப்பணிகள் பல செய்த நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் கிடைக்காத கெளரவம் இது. காளஹஸ்தி கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரையும் திருப்பணிச் செட்டியார் என்றுதான் அழைத்தார்கள். இதுவோ  பட்ட மழை பொழியும் காலம்!.

உண்மையில்,இந்தப் பட்டங்களுக்கெல்லாம் சொந்தக்காரன் யார்  தெரியுமா? பரமேச்வரன் தான். அவன்தான் " செல்வன்"  " சக்கரவர்த்தி " என்ற  புகழுக்கெல்லாம் உரியவன். திருஞான சம்பந்தரும் , " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்றார். கையில்  செல்வமே இல்லாத அடியார்  ஒருவர்  வீதிதோறும் கையில் பாத்திரம் ஏந்தியவராக, " சிவ தர்மம் " என்று அறைகூவி, அதனால் கிடைத்ததைக்கொண்டு கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலைத் திருப்பணி செய்தார்.  கண் இரண்டும் இல்லாத தண்டியடிகள் நாயனார், திருவாரூர் கமலாலயத்தில் கயிறைப் பிடித்தவாறு  மெதுவாக இறங்கிக் கைகளால் மணலை  வாரிக் கரையில் சேர்க்கும் தூர்வாரும் தொண்டினைச் செய்து வந்தார். நமிநந்தி அடிகள் நாயனாரோ, அக்குளத்து நீரால் தியாகேசப் பெருமானுக்குத் தீபம் ஏற்றினார். திருக்குளத்தின் மகிமையும், அதில் திருப்பணி செய்த அருளாளர்களின் பெருமையும் அளவிடற்கரியது.

திருவாரூரில் " கோவில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி , செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி  " என்பார்கள். அத்திருக் குளத்தைக் கமலாலயம் என்பார்கள். சோழர் காலத்தில் அது "தீர்த்தக் குளம் என்று அழைக்கப்பட்டது. பங்குனி உத்திரம் முதலிய விசேஷ நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுவதும் இங்குதான். இதில்  64 புனித கட்டங்கள் இருப்பதாகக் கூறுவர். திருவாரூர்த் திருக் கோயிலையே  கமலாலயம் என்று கூறுவதும் உண்டு. வன்மீக நாதர் சன்னதிக்குப் பின்புறம் மகாலக்ஷ்மியின் சன்னதி உள்ளது. திருமகள் பூஜித்ததால் திருவாரூர், கமலாபுரம், ஸ்ரீ புரம் ,   கமலா நகரம்,ஸ்ரீ நகரம் என்றெல்லாம் போற்றப்படுவது இந்த ஊர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விட்டது. பெரிய மனிதர்கள் வரை எல்லோரும் பார்த்தும் அதனைச் சரி செய்ய வில்லை. சமீபத்தில் பெய்த மழையால் சுவற்றின் இன்னொரு பகுதியும் இடிந்து விட்டது. இந்நிலையில் நன்கொடையாளர்கள் யாரும் முன்வராததாலோ என்னவோ, அரசின் இந்து சமய அறநிலையத்துறையே முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான டெண்டர் விவரம் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறது. மேற்குப் புறம் உள்ள சுவற்றைத் திரும்பக் கட்ட உத்தேச மதிப்பீடு ரூ 7644018 என்று வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையில் கும்பாபிஷேகமே செய்து விடலாமே என்று கேட்கத்தான் செய்வர். உயரம் குறைவாக உள்ள அச் சுவருக்கு இவ்வளவு ஆகுமா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படியே ஆனாலும், வேலையின் தரம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழாமலும் இல்லை. இப்படி ஒப்பந்தம் செய்து விடப்பட்ட வேலைகளின் தரத்தைத் தான் அற நிலையத்துறைக் கோயில்களில் பார்க்கிறோமே!

கட்டுமானப் பொருள்களை அறநிலையத் துறை வழங்கி, உபயதாரர்கள் , கட்டும் பணியைத் தகுந்த ஆட்கள் மூலம் செய்து கொடுத்தால் வேலையின் தரம் நிச்சயம் நன்றாக இருக்கும். ஒதுக்கப்பட்ட தொகை தவறான வழிகளில் செல்வது தடுக்கப்படும். இதெல்லாம் நடக்கக் கூடியது தானா என்று நினைக்கக் கூடும். நம்மில் எத்தனை பேர்  இது பற்றிக் கவலைப் படுகிறோம்?   ஏதாவது,யாராவது செய்துவிட்டுப் போகட்டும் என்று தானே கண்ணை மூடிக்கொண்டு செயலற்று இருக்கிறோம்!

ஆயிரம் வேலி நிலங்களைக் கொண்டது எனப்படும் இப்பெருங் கோயில் இப்படி உரிய வருவாய் இன்றி அரசையும், உபயதாரர்களையும் நம்பும்படி ஆகிவிட்டது  கொடுமையிலும் கொடுமை. குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்றில் கோயில் நிலத்திலிருந்து நெல் தவறாமல் வழங்க ஏற்படுத்திய சாசனத்தைப் படித்தால், அந்த வருமானம் இக்காலத்தில் இருந்தால் தியாகேசனது கோயில் திருப்பணிக்கோ, தேர் திருப்பணிக்கோ, திருக்குளத் திருப்பணிக்கோ , திரு விழாக்கள் நடத்துவதற்கோ , கும்பாபிஷேகம் செய்யவோ யார் தயவும் வேண்டியதில்லை தானே !

தில்லையைப்போல் திருவாரூரிலும் அறநிலையத் துறை ஒதுங்கிக் கொண்டு இறை அன்பர்களால் ஆலய நிர்வாகம் நடைபெற்று முறைப்படி வருவாய் வசூலிக்கப்பெற்றால் இது சாத்தியமே ! நடக்குமா என்று கேட்கலாம்.    "முன்னவனே முன் நின்றால்  முடியாத பொருள்  உளதோ " என்றபடி வீதி விடங்கப் பெருமான் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும். அதற்கு நாம் உரியவர்களாவதுதான் முக்கியம். " முன்னவனே,  முன் நின்று அருள் என்று எல்லோருமாக வேண்டினால் தியாகேசன் நிச்சயம் செவி சாய்த்து அருளுவான்.   

1 comment:

  1. அதற்கு நாம் உரியவர்களாக மாறுவது.....சிவசிந்தனைவுடன் வாழும்போது...சரிதானா?......

    ReplyDelete