அண்மையில் அன்பர் ஒருவர் சொன்னார் , " குருபீடங்களில் பெரும்பாலானவை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டவை. அதற்கு முன்னதாக, மக்கள் வேத- சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்களையே அணுகியிருக்கக் கூடும்." என்றார். ஒரே மடாதிபதி அனைத்துப் பகுதி மக்களையும் இணைப்பது மிகவும் கடினமான செயல். ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு மடம் நிறுவுவது என்பது ஆதி சங்கரர் காலத்திலிருந்தே இருந்து வந்தது. அப்படி இருந்தும், கால் நடையாச் சென்று மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து அங்கே சில நாட்கள் தங்கிப் பூஜைகள் செய்தும்,மக்களை நல்வழிப்படுத்தியும் வந்தவர்கள் சிலரே.
நாளடைவில் அந்நியர்களது படையெடுப்பால் கலாசார மாற்றங்கள் நிகழ இருந்தபோது மடங்கள் தோன்றி தர்மப் பிரச்சாரம் செய்யலாயின.நாகரீகத் தாக்கமும் மக்களைப் பாதித்தபடியால் மடாதிபதிகளின் யாத்திரைகள் அத்தியாவசியமாயிற்று.கால் நடையாகவே நாட்டின் பெரும்பகுதிகளுக்குச் சென்று வந்த காஞ்சி பெரியவர்களது கருணை இங்குக் குறிப்பிடத்தக்கது.
மடங்களுக்குப் பாரம்பர்யமாக வரும் பூஜை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மக்களை நல்வழிப் படுத்துவது. மடங்களில் பெரும்பாலானவை கிராமங்களில் அமைந்திருப்பதால் மடாதிபதிகள் தங்களுக்கு அண்மையில் உள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களுக்கு அருளாசி வழங்குவது சாத்தியமாகிறது. தங்களைச் சார்ந்தவர்களையும், மடத்துச் சிப்பந்திகளையும் இவ்வாறு கிராமங்களுக்கு அனுப்ப முடியும்.
என்ன காரணத்தாலோ மடாதிபதிகளின் கிராம விஜயங்கள் அவ்வூர்க் கோயில்களின் கும்பாபிஷேகம் மற்றும் சில வைபவங்களுக்குப் போவதோடு நின்று விடுகிறது. தங்கள் மடங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களுக்கும் எப்போதாவது தான் விஜயம் செய்கிறார்கள் . அந்தக் கோயில்கள் கும்பாபிஷேகம் கண்டு எழுபது ஆண்டுகள் ஆகி , விமானங்களில் மரம் முளைத்து, மேற்கூரை ஒழுகினாலும் திருப்பணிகளை மேற்கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை. உள்ளூர் மக்களுக்குக் கோயில்களுக்குத் தினமும் வரவேண்டும் என்ற எண்ணம் இவர்களது விஜயத்தால் ஏற்படலாம் அல்லவா?
கிராமங்களுக்கு மடாதிபதிகள் அடிக்கடி வராததால் மக்களில் சிலர் வேறு திசையை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்களைப் பிறரும் பின்பற்றுகிறார்கள். கோயில்கள் கைவிடப்படும் நிலை உருவாகிறது. சிப்பந்திகளைத் திரும்பிப் பார்க்கவும் நாதி இல்லை. இதனால் சமயத்திற்கே பேராபத்து ஏற்படுகிறது என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம். நகரங்களுக்கு மட்டும் வாகனத்தில் வந்து பார்த்து விட்டுப் போவதால் கிராமங்கள் மெல்ல மெல்ல அவற்றின் பாரம்பரியத்தை இழக்கின்றன.
கிராமங்களில் அழைத்து ஆதரிப்பவர்கள் குறைந்து விட்டது என்பதை ஏற்க முடியாது. அப்பாவி கிராமவாசிகள் தங்களது ஊருக்கு நல்லது செய்ய யாராவது வெளியூரிலிருந்து வந்தால் அவர்களைத் தலை மேல் தாங்குகிறார்கள். நாம் அவர்களை அலட்சியப்படுத்தினால் அவர்கள் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விலகுவார்கள்.வருமானத்திற்குத் தவிக்கும் அவர்களை ஆசை காட்டி மயங்கச் செய்பவர்கள் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவை அரவணைப்பு ஒன்றே.
இப்படிச் சொல்வதால் மடாலயங்களைக் குறை கூறுவதாக எண்ணக் கூடாது. எத்தனையோ சமயப் பணிகள் ஆற்றி வரும்போது இதனைச் சற்று கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்ற விண்ணப்பமே இது.காலத்தால் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் இதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . காலம் தாழ்த்தினால் கை விட்டுப் போகும் நிலை வருவதன் முன் இன்றே இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தாழ்மையாக விண்ணப்பிக்கிறோம்.எல்லாம் சிவன் செயல் என்றாலும் அப்பெருமானே நமது பணியையும் ஒரு பொருட்டாக உவந்து ஏற்பான் அல்லவா?