நாளடைவில் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரிமாறப்படுவது
அதிகரித்து வருகிறது. சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசவோ எழுதவோ துணிந்து விட்டார்கள்.
தனிமனிதனது நம்பிக்கைக்கு இந்த நாடு அனுமதி அளிக்கும் அதே வேளையில் அதை
துஷ்பிரயோகம் செய்வது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. நமது
கொள்கையை பிறர் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்? அவரவர்கள் விருப்பப்படி
நடந்து கொள்வதைக் குறை கூறி அவர்களைப் புண் படுத்துவது இப்போது கை வந்த கலை
ஆகிவிட்டது.
தெய்வ நம்பிக்கையும் அப்படித்தான். நம்பிக்கை இல்லாதவர்
ஒதுங்கிப் போகட்டுமே! இன்ன தினத்தில் கோவிலுக்கு அனைவரும் வந்து ஆஜர் கொடுக்கவேண்டும்
என்றா வற்புறுத்துகிறார்கள்? இத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டும் மண்ணை வாரித்
தூற்றுவது எதனால்? நம்பிக்கையே இல்லாதவன், பழக்க வழக்கங்களைக் குறை கூறுகிறான்.
மரபுகளை மாற்றி அமைக்கத் துடிக்கிறான். இதை வைத்தே பிழைப்பும் நடத்துகிறான். கண்டனம்
தெரிவிப்போர் இல்லாததை சாதகமாக்கிக் கொள்கிறான்.
சினிமா,நாடகம்,தொலைக் காட்சி, செய்தித் தாள்கள் ஆகியவை
இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு நேரத்தில் ஆன்மீகச் செய்திகளைச் சேர்த்துக் கொள்ளும்
இவர்கள் மறு நேரத்தில் அதற்கு நேர் மாறாக நம்பிக்கை உள்ளவர்கள் மனதை நோக
அடிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் சம்பாதிப்பது ஒன்று தான்.
மற்றபடி சமுதாய நலன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் வெளி வேஷமே.
பெரிய சீர்திருத்த வாதம் செய்வதாக நினைத்துக் கொண்டு
ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி கட்டலாம் என்று அபத்தமாக உளறுகிறார்கள். கேட்டால்
மக்கள் சேவையே மகாதேவன் சேவை என்று பொன் (புண் ? ) மொழி உதிர்க்கிறார்கள். கோயில்கள்
மக்கள் நலனுக்காகவே ஏற்பட்டவை என்பதை அறியாத மூடர்கள் பின் எப்படிச் சொல்ல
முடியும்? சமூக சேவை வேண்டாம் என்று எந்த மதமாவது சொல்கிறதா? மக்கள் சேவையும்
மாதேவன் சேவையும் இரு கண்கள் என்ற மரபைத்தானே
நாம் பின்பற்றி வருகிறோம்!
ஆஸ்பத்திரி வேண்டும் என்பவர்கள் மருத்துவத்தால் நிரந்தரத்
தீர்வு காண முடிவதில்லை என்பதை ஏன் நினைப்பதில்லை? இவர்கள் கொடுக்கும் மருந்தும்
மாத்திரையும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தும்
தெருவுக்குத் தெரு மருத்துவ மனைகள் ஏற்படுத்திப் பணம் சம்பாதிக்க வேண்டுமா?
ஏழைகளாக இருந்தாலும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் குறைந்த பட்சம் ஐநூறு
ரூபாயாவது இல்லாமல் செல்ல முடியுமா? அரசு மருத்துவ மனைகளின் தரத்தையும் சேவையையும்
மேம்படுத்தி,அனைவரும் பயனுறச் செய்யலாமே? மத்திய அரசு டெல்லியில் உள்ள எய்ம்ஸ்
மருத்துவ மனைக்கு ஈடாக தமிழகத்தில் கட்டித்தர முன்வந்தும் ஏன் இன்னும் செயல்
படுத்த முடியவில்லை?
சிவபெருமானை “ ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்கிறது ருத்ரம்.
எல்லா வைத்தியர்களுக்கும் மேலான, முதன்மையான வைத்தியன் என்பது கருத்து. வைதீஸ்வரன்
கோயிலில் சுவாமிக்கு வைத்திய நாதன் என்று பெயர். உலகிலுள்ள நாற்பதாயிரத்துக்கும்
அதிகமான நோய்களைத் தீர்ப்தற்காக இத்தலத்தில் எழுந்தருளினான் என்பது தல புராணம்.
இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி நோய் நீங்கப்பெற்றோர் அநேகர் உளர். “
தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை“ என்று இத்தலத் தேவாரமும் பெருமானைப்
பரவுகிறது.
உலகில் பிறந்துவிட்டால் கூடவே வருவன நோயும்,அவலமும் தான்.
இன்பம் வருவது சிறிது அளவே தான். இதனை உணர்ந்த முன்னோர்கள் இனி ஒரு பிறவி வேண்டாம்
என்று வேண்டினார்கள். அனாயசமான மரணம் இறுதிக் காலத்தில் ஏற்படவேண்டும் என்று சிவ
பூஜையில் ஒவ்வொரு நாளும் பரமேசுவரனை பிரார்த்திக்கிறோம். ஆஸ்பத்திரியில் முதிய வயதில்
வாயிலும் மூக்கிலும் குழாய்களைச் செலுத்தியும், துளித் துளியாக ஆகாரத்தைச்
செலுத்தியும் காப்பாற்ற முடியாது போகம் நிலையில், மருத்துவர்களே, “ இனி செய்வதற்கு
ஒன்றுமில்லை, கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் “ என்னும்போது கைதர வல்லவன் யார் என்று
சற்று யோசிக்க வேண்டும். இறைவன் நோயை அகற்றும் மருத்துவன் மட்டுமல்ல. பிறவியாகிய
நோயையே அகற்றுபவன். அதனால்தான் அவனை பவரோக ஔஷதீசுவரன் என்கிறோம்.
இனியாகிலும் ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி வேண்டும்
என்பவர்கள் தமது அறியாமை நீங்கி மக்களுக்கு
நல்லதை எடுத்துச் சொல்ல முன்வர வேண்டும். அதற்குத்
தயாராக இல்லாவிட்டால் இதுபோன்று உளறாது தன வேலை உண்டு தான் உண்டு என்று
இருந்தால் அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
Very sound and relevant criticism of irresponsible statements, dear Sekhar. Thanks for sharing.
ReplyDeleteQuite right. Before it is too late we have to pool our resources both human and monetary and see that the village temples are renovated and kept open for everybody. Janakiraman. Nagapattinam
ReplyDelete