Thursday, October 26, 2017

தீர்த்தம் என்பதும் இறை வடிவமே

இராமேசுவரம் ஆலய தீர்த்தங்கள் சில - இணையதளப் படம் 
" சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று பாடி அருளினார் அப்பர் ஸ்வாமிகள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. உலகம் யாவையும் படைத்த பெருமான் தீர்த்தங்களையும் படைத்தான் என்பது அதில் அடங்குவது தானே என்று நினைக்கலாம். ஏழண்டத்திற்கும் அப்பால் நின்ற பரம்பொருள் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறான் அல்லவா? அப்படி இருக்கும்போது தீர்த்தத்தைத் தனியாகக் குறிப்பிடுவானேன் என்று தோன்றும். மறுபடியும் மேலேசொன்ன அவரது வாக்கைப் படித்தால் அதற்கு  விளக்கம் கிடைக்கும். தீர்த்தங்கள் படைத்தார் என்று குறிப்பிடாமல், " ஆனார் "   என்று அல்லவா   சொல்லியிருக்கிறார்!  அதேபோல , " வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் " என்பதால் வேதமும் தமிழும் இறைவனது வடிவங்களே என்று தெரிகிறது. 

 தீர்த்தம் வேறு,  சிவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. காரணம் , ஈசுவரன் எப்படிப் புண்ணிய மூர்த்தியோ அதேபோல தீர்த்தமும் புண்ணிய தீர்த்தம் எனப்படுகிறது. எல்லா நீர் நிலைகளையும் நாம் புண்ணிய தீர்த்தமாகவா கருதுகிறோம்? புண்ணிய தலங்களில் அமைந்துள்ள திருக்குளங்களையும் , கிணறுகளையும்,ஆறுகளையும் மட்டுமே அந்தந்த ஊர்த் தல புராணங்கள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. தீர்த்தப் படலம் என்றும்,தீர்த்தச் சிறப்பு என்றும் தலங்கள் மீது அமைந்துள்ள  புராணங்களில் பாடப்பெற்றிருப்பதைக் காணலாம்.  " தீர்த்தனை, சிவனை சிவலோகனை " என்று அப்பர் பாடுவதை, கங்கை என்னும் தீர்த்தத்தை முடி மேல் கொண்டவன் என்று மட்டும் பொருள் கொள்ளாமல், எல்லா தீர்த்தங்களையும் தன் வடிவாகவே கொண்டவன் என்று பொருள் உரைப்பது இன்னும் சிறப்பாக அமையும். 

தீர்த்த யாத்திரை என்ற சொல்லை நோக்கும்போது, தீர்த்தங்களில் நீராடுவதன் பொருட்டு யாத்திரை மேற்கொள்ளுதல் என்ற விளக்கத்தைப் பெற முடிகிறது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றுமே யாத்திரை செய்பவர்களுக்குக் கிடைத்து  விடுவதால் அன்னோர்க்கு சற்குருவும் கிடைத்து விடுவார் என்கிறார் தாயுமானவர். திருவிழாக்களிலும் தீர்த்தவாரி முக்கிய நிகழ்ச்சியாக இன்றும் கருதப்படுகிறது. அப்போது, திருக்கோயிலில் இருந்து எழுந்தருளும் அஸ்திர தேவருக்கும் அப்புண்ணிய தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

காசியில் கங்கா நதி ஒன்றிலேயே பல கட்டங்கள் இருப்பதால், யாத்ரீகர்கள் அங்கெல்லாம் சென்று நீராடி நற்பலனைப் பெற்று வருகிறார்கள். ஒரே நீர்தானே எல்லாக் கட்டங்களிலும் வருகிறது என்றும் ஒரு துறையில் நீராடினால் போதாதா என்றும் குறுக்குக் கேள்விகள் கேட்பதில்லை. அதேபோல இராமேசுவரம் ஆலயத்திற்குள் உள்ள எல்லாக் கிணறுகளிலும் மக்கள் நீராடி யாத்திரையின் பயனைப் பெறுகிறார்கள். சில தீர்த்தங்கள் . அருகருகே இருந்தாலும் சுவை , நிறம் ஆகியவை வேறுபடுவதை அங்கு சென்றவர்கள் கவனித்து இருக்கலாம். 

விழாக் காலங்களில் கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக வடக்கு ப்ராகாரத்திலுள்ள ஆறு தீர்த்தங்களைக் கோயிலுக்குள் இடமாற்றம் செய்ய இருப்பதாகச்  செய்தி வந்துள்ளது. இது துரதிருஷ்டமான முடிவு என்றே கூறலாம். கிணறு வேண்டுமானால் மனிதன் தோண்டலாம். அப்படித் தோண்டப்பட்டவற்றைத்  தீர்த்தம் என்று நாம் அழைப்பதில்லை. தோண்டிய கிணற்றிலிருந்து கங்கையை வரவழைக்க நாம் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் அளவிற்குத் தவம் செய்யவில்லை. நமது ஊனக் கண்களுக்கு எல்லாமே சமமான நீர் நிலைகளாகவே தெரிவதால் ஏற்பட்டுள்ள விபரீதம் இது. அந்த புண்ணிய தீர்த்தங்களை மூடி விட்டு அதேபெயரில் கோயிலுக்குள் வேறு இடத்தில் கிணறு தோண்டி விடுவதால் எவ்வாறு அவை பழையபடி தீர்த்தங்கள் ஆக முடியும் என்று தெரியவில்லை. ஆன்மீகப் பெரியவர்கள் சிலரும் இதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர் என்ற செய்தி  உண்மையாக இருந்தால் அதை என்னென்று சொல்வது? மக்களது நம்பிக்கையைப்  பயன் படுத்திக்கொள்ளும் செயலாக இது அமைந்து விடக்கூடாது. ஆன்மீகப் பெரியவர்களாகட்டும், அற  நிலையத் துறையாகட்டும், இது பற்றிய விரிவான அறிக்கையை மக்கள் நலனுக்காக வெளியிடுவார்கள் என்று நம்புவோமாக. 

1 comment:

  1. துரதிருஷ்டமான முடிவு...

    ReplyDelete