Wednesday, October 18, 2017

தவ வலிமை

காஞ்சி காமகோடி பெரியவர்கள் 
                     ஒரு காலத்தில் விருத்திராசுரனால் தேவர்கள் அனைவரும்  துன்புறுத்தப்பட்டபோது அவனைப்  போரிட்டு வெல்ல முடியாமல் போன தேவேந்திரன், திருமாலின் அறிவுரைப்படி ததீசி முனிவரை அணுகினான் . பாற்கடலைக் கடைந்த காலத்தில் தேவாசுரர்களின் ஆயுதங்கள்  ததீசி முனிவரிடம் சேர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அவற்றை எவரும் திரும்பக் கேளாது போகவே, ததீசி முனிவர் அவ்வாயுதங்களை விழுங்கி விட்டார். அவை யாவும் ஒன்று சேர்ந்து அவரது வஜ்ஜிரமான முதுகுத் தண்டாக ஆயின. அந்த வஜ்ஜிரப்படையை முனிவரிடம் பெற்றுப் போரிட்டால் அசுரனை அழிக்கலாம் என்று திருமால் கூறியிருந்தபடியால் அதனை முனிவரிடம் தேவர்கள் யாசித்தனர். 

ததீசி முனிவர் தேவர்களிடம் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம்: "  இந்த உடல் அழியும் தன்மையை உடையது. அவ்வாறு அழிந்தபின், அதை நாய்கள் தமக்குச் சொந்தம் என்கின்றன. .இயமனோ அது என்னுடையது என்று கைப்பற்றுகிறான். காட்டிலுள்ள பேய்களோ தமக்கே உரிய இரையாகக் கருதிக் குதூகலிக்கின்றன. ஆனால் அத்தருணம் வரையில் நாம் இவ்வுடல் நம்முடையது என்று நினைக்கிறோம்.இப்புழுக் கூட்டை நம்முடையது என்றும்  எல்லாம் நமக்கே சொந்தமானது என்றும்  கருதி , பிறருக்கு இம்மி அளவும் தானம் செய்யாமலும் உதவாமலும் கல் நெஞ்சர்களாக இருக்கிறோம். நீங்கள் அசுரர்களால் துன்பம் அனுபவிக்கும் இந்நேரத்தில் இவ்வுடம்பால் உங்களுக்குத்  தீமை விலகி  நன்மை ஏற்படப்போகிறது என்றால் அதை விட இவ்வுடல் எடுத்ததன் பலன்  எனக்கு வேறு என்ன இருக்கப் போகிறது " என்று கூறி சமாதியில் அமர்ந்து,  கபாலம் திறக்கப்பெற்று,விமானமேறி, சிவலோகம் அடைந்தார். அவரது பூதவுடலிலிருந்து எடுக்கப்பெற்ற வச்சிராயுதம் மூலம்  இந்திரன் விருத்திராசுரனைப் போரிட்டு வென்றான். இதை வள்ளுவரும் " என்பும் உரியர் பிறர்க்கு " என்று சிறப்பிக்கிறார். 

நான்கு ஆசிரமங்களுள் சந்நியாச ஆசிரமம் பிறர்க்கெனவே தன்னை அர்ப்பணிப்பதாக அமைவது. இதையே வேறு விதமாகச் சொல்லப்போனால், பிறர் செய்வதற்கு  அரிய தருமத்தை இராப் பகலாகச் செய்வதற்காகவே ஏற்பட்டதாகக் கூடக் கொள்ளலாம். ஆகவேதான் அதனைப் புனிதமானது என்கிறோம்.சராசரி மனிதன் செய்வதையே தானும் செய்தால் அவர் எப்படி சந்நியாசி ஆக முடியும்? பிறர் ஆனந்தமாக வாழ்வதற்குத் தவம் செய்பவரே  தவசி. நம் நாட்டில் இத்தனை கஷ்டங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் கேட்டபோது அதற்கு அவர், " நான் செய்யும் தவம் போதவில்லை என்றே நினைக்கிறேன். ஆகவே நான் மேன்மேலும் கடும் தவத்தை மேற்கொள்ள வேண்டும். உலக நன்மைக்காக பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும் " என்றார்களாம். 

தவம் சிறக்க வேண்டும் என்றால் நாட்டின் மூலை  முடுக்கிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று தவமும் பூஜையும் செய்து அங்கு சில நாட்கள் தங்கி ,மக்களை ஆட்படுத்த வேண்டும். காஞ்சிப் புராணம் அப்பர் பெருமானைக் குறிப்பிடுகையில் " நடை அறாப் பெருந்துறவு "அவர் பூண்டு ஒழுகியதாகக் கூறுகிறது. இங்கு நடை என்பது காலால் நடந்து வருவது என்பதை விட ஒழுக்கம், தவம் என்றெல்லாம் பொருள் கொள்வதே சிறப்பு. இதைத்தான் காஞ்சிப் பெரியவர் அனுசரித்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்கள் நம்மைப் போல் பண்டிகை கொண்டாடுவதில் நமக்கு நிகராக இருக்க மாட்டார்கள். நம்மைப் போல் வாணங்கள் கொளுத்திக் கொண்டு இருக்க மாட்டார்கள். தீப ஒளியில் இறைவனைக் கண்டு நமக்கும் காட்டும்  கருணை பாலிப்பவர்களாகவே இருப்பார்கள். 

நாட்டில் மழை பொய்க்கிறது. ஆறுகள் வற்றிப் போகின்றன. குளங்களும்,நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இப்படி இருந்தும், நா வற்றும் அளவுக்கு சிலர்  நாத்திகம் பேசி மக்களைக்  கெடுக்கின்றனர். ஒற்றுமை இன்மையின் உச்ச கட்டத்தைப் பார்க்கிறோம். தீயவற்றைச் செய்வதில்  பயம் போய் விட்டது. அக்கிரமங்கள் தலை விரித்து ஆடுகின்றன. துறவறம் மேற்கொள்வோரும் வாய்ப் பேச்சோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தவ வலிமையால் மக்களின் துயர் தீர்க்க முன் வருவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் மக்களது நம்பிக்கையை விரைவில் இழக்கக் கூடும். இப்போதாவது அவர்கள் தவத்திற்கும் பூஜைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்களா?   

1 comment:

  1. My dear Sekhar,
    It has been such a privilege having lived in South India at a time when Mahaperiyaval was walking in our midst.
    Did we deserve even that? Has that shining example made any difference in the way most of us conduct our lives?

    ReplyDelete