காவிரிக்கு ஹாரத்தி |
மயிலாடுதுறையில் நடைபெறும் காவேரி புஷ்கரம் பற்றித்தான் எத்தனை எத்தனை கருத்துக்கள் ! ஆழ் துளைக் குழாய் மூலம் எடுக்கப்படும் நீரில் புஷ்கரம் கொண்டாடுவதா என்று ஒரு மடாதிபதியே கேட்டதாக வெளியிடப்பட்ட செய்தியைப் படித்து மிகவும் வருந்தினோம். வறண்டு கிடக்கும் ஆலயத் திருக்குளத்திலும் இவ்வாறு எடுக்கப்படும் நீரிலேயே தீர்த்தவாரி செய்யப்படுவது குறித்து இவர் என்ன கருத்து தெரிவிப்பார் என்று தெரியவில்லை. மக்களது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும் வரையில் இவ்வித ஆராய்ச்சிகள் எடுபட மாட்டா என்பதை அறிய வேண்டும். சாயப் பட்டறைக் கழிவுகளும், சாக்கடை நீரும் ஆற்றிலேயே விடப்படுகின்றன என்பது என்னவோ உண்மை தான். அந்த நீரில் மட்டும் குளிக்கத்தயார் என்கிறாரா இவர்? கங்கையைத் தூய்மைப் படுத்த முயலுவதில் தவறில்லை. அதைப் புனிதப் படுத்துவதாக மட்டும் எண்ண வேண்டாம். ஏன் என்றால், கங்கை என்று சொல்வதே புனிதம் என்று நம்பும் பாரம்பர்யத்தில் வந்தவர்கள் அல்லவா நாம்? " புண்ணியா புனிதா " என்று திருமுறைகள் ஒலமிட்டு யாரைத் துதிக்கின்றனவோ அந்த பரமேசுவனிடத்திலிருந்து வரும்போது அது புனிதமாகி விடுகிறது.
இதுபோன்ற மிகப் பெரிய நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைப்பது எவ்வளவு சிரமானது என்பதை மிகச் சிலரே உணருவார்கள். மற்றவர்களது கண்களுக்குக் குறைகள் மாத்திரமே தெரிய வரும். குறைகள் எங்கே தான் இல்லை? குறை சொல்வதற்கு மற்றோர் காரணமும் உண்டு. பொறாமை என்பதே அது. அடுத்தவர் பெயரும் , புகழும் பெறுவதை சகிக்காத நிலைதான் அது. நம்மால் செய்ய முடியாததை/செய்யத் தயங்குவதை மற்றவர்கள் செய்கிறார்களே என்று எண்ணத்தில் மனம் வெதும்புவர்களுக்கு என்ன சொல்வது?
144 ஆண்டுகளுக்கு மகா புஷ்கரம் நடப்பதற்கான ஆதாரம் இல்லை என்று எழுதுகிறார் ஒருவர். இவருக்கு ஒன்று மட்டும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆதாரம் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இந்த நிகழ்ச்சி பலதரப் பட்ட மக்கள் ஒருங்கிணைய வழி வகுத்தது என்பதை இவரால் மறுக்க முடியுமா? கிராமக் கோயில்கள் சிலவற்றில் (மடத்துக் கோயில்கள் உட்பட ) நடைபெறும் தீர்த்த வாரிகளில் நீராட வருவோர் சிலரே! ஆதீனத் தம்பிரான்கள் கூட வராத ஆலயங்கள் உண்டு. இப்படி இருக்கும்போது இவர்கள் மக்களை ஒருங்கிணைக்கத் தவறி விட்டார்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா? சில நூறு நபர்களே துலா உற்சவத்தின் போது நீராடும் அதே படித்துறைகளில் லக்ஷக் கணக்கான மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து நீராடியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
எழுத்து சுதந்திரம் என்ற போர்வையில் எது வேண்டுமானாலும் எழுதுவது என்பது வாடிக்கை ஆகி விட்டது. மற்றவர் செய்கை பிடிக்காவிட்டால் மௌனியாக இருந்து விடலாம். கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் யார் வற்புறுத்தப் போகிறார்கள்? இப்படி அறிக்கை விடுவதால் யாருக்கு லாபம்? நாத்திக வாதிகளுக்கும், மற்ற சமயத்தவர்களுக்கும் தூற்றுவதற்கு வசதி செய்து கொடுக்காமல் ஒதுங்கி இருப்பது நாட்டுக்கும் சமயத்திற்கும் இவர்கள் செய்யும் பேருபகாரமாக இருக்கும்.
You have spoken on behalf of all good people of faith, dear Sekhar, bless your sincere devotion!
ReplyDeleteThank you Sir, for your encouraging words, as always.
DeleteRegards