Sunday, May 4, 2014

சிவாசார்யர்களுக்கு ஓர் அழைப்பு


சிவாலயங்களில் நித்திய பூஜை செய்வதற்குத் தனி  உரிமை உடையது சிவாசார்யர் குலம். சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் இப்பரம்பரை, ஆதிசைவப் பரம்பரை என்று வழங்கப்படும். இவ்வாறு முப்போதும் திருமேனி தீண்டும் ஆதி சைவர்கள் அரசர்களாலும் மக்களாலும் ஆதரவளிக்கப்பட்டு வந்தனர். கோவில் வருமானம் இல்லாமல் போனதாலும், போதிய ஆதரவு இல்லாததாலும் இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதோடு தங்கள் குழந்தைகளையும் கோயில் பூஜைக்கு விடத் தயங்கும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது..


செலவினங்கள் அதிகரித்து வரும் தற்காலத்தில் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகக் கடினமாகிவிட்டபடியால், அடுத்த தலைமுறையினரைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இவ்வாறு ஒரு சாரார் , தங்கள் பரம்பரைத்தொழிலை விட்டு விட்டுப் பிற வேலைகளுக்குச் செல்வதால் கோயில்களில் பூஜை செய்வோர் குறைந்து பல கோயில்களில்  ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் நிலையும்  ஏற்பட்டுள்ளது.

சிவாகம பாடசாலைகள் பல கற்பார் இன்றி  மூடப்பட்டும், எஞ்சியவைகளில் கற்போர் எண்ணிக்கை குறைந்தும் வருவது கவலை அளிப்பதாக உள்ளது.  பாடசாலைகளில் தேர்ச்சிபெற்ற மாணாக்கர்கள் பலர் நல்ல ஊதியம் சம்பாதித்த போதிலும் , அவர்களுக்குத் திருமணம் நடப்பது மிகக் கடினமாக ஆகி வருகிறது. காரணம், ஆதிசைவ குலப்பெண்கள் பலர்தங்கள் எதிர் காலம் பற்றிய கவலையினால் வேலைக்குச் செல்லும் தங்கள் குலத்து ஆண்களையே மணம் செய்ய விரும்புவதுதான்! 

உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜைக்குக் குந்தகம் ஏற்படாதவாறு நம்மால் ஆனதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பின் வரும் திட்டம் மூலம் ஆர்த்ரா பவுண்டேஷன்சிவாசார்ய பரம்பரையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சி நற்பயனை அளிக்க ஆகமங்களை அளித்த முழு முதற்கடவுளான பரமேச்வரனது பாத கமலங்களைச் சிந்தித்துப் பிரார்த்திக்கிறோம்.
·         + 2 படித்த சிவாசார்ய குல மாணவன் , சிவாலயத்தில் காலையிலும் மாலையிலும் பூஜை செய்யும் பட்சத்தில், PF இணைந்த நல்ல சம்பளத்துடன் , கம்ப்யூடர்  தொடர்பான  வேலை அளிக்கப்படும். இதனால் , கோவிலில் பூஜை நடைபெறுவது பாதிக்கப்படாததோடு, அதிக வருமானம் ஈட்டவும் வகை செய்யப்படுகிறது. இவ்வாறு வேலைக்குச் செல்வதால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடையும் நீங்கப்பெறும்.
·         ஏழ்மையில் வாடும் சிவாசார்யர்களுக்கு ஆதரவாக, அவர்களது குழந்தைகளை சிவாகமப் பள்ளிகளில் சேர்க்கும் பட்சத்தில், ஒவ்வொரு குழந்தைக்காக ரூ 2000 , மாதந்தோறும் அக் குழந்தையின் தந்தைக்கு வழங்கப்படும். உபநயனம் ஆன  8 முதல்  10 வயதுக் குழந்தைகளை இவ்வாறு ஆகம பாடசாலைகளுக்கு அனுப்புவதால், தேர்ச்சி பெற்ற சிவாசார்யர்களை உருவாக்க முடியும்.

சிவாசார்ய குலம் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தால்  இத்தகைய முயற்சியானது  மேற்கொள்ளப்படுகிறது. அணுகுமுறையில் மாற்றம் ஏதேனும் தெரிவித்தால் அதனை நிச்சயம் பரிசீலிக்கலாம். இதனை ஏற்கும் விருப்பம் உள்ளவர்கள் ஆர்த்ரா பவுண்டேஷனை 9840744337 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  

Saturday, April 26, 2014

சிலைத் திருட்டைத் தடுக்க முடியாதா?

அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தரன் என்ற ஊரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய உற்சவ விக்கிரகங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் களவாடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரபரப்புச் செய்திகளுக்காகவே காத்துக் கொண்டு இருக்கும் பத்திரிகைகளும்  வழக்கம்போல செய்தியை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து ஓய்ந்து விட்டன. ஆனால், கொள்ளைக்காரனுக்குக் "கடத்தல் மன்னன்" என்று பட்டம் மட்டும் தவறாமல் கொடுத்து வருகிறார்கள்! சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மட்டும் விசாரணை நடத்தி வந்தது. கொள்ளைக்காரன் சுபாஷ் கபூர் என்பவனைக் கைது செய்து விசாரித்ததில் இச்சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரிய வந்து, அவற்றை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிவபுரம்,திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் சிலைகளும் கடத்தப்பெற்று , லண்டனில் வழக்கு நடைபெற்ற பின்னர் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தன. இவ்வாறு பல்லாண்டுகளாக இத்திருட்டுத் தொழில் நடைபெற்றும், நமது அறநிலையத்துறையும்,ஊர்மக்களும் ஏன்  அலட்சியமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதவுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது தெரிந்தும் நிர்வாக அதிகாரி என்ன செய்து கொண்டு இருந்தார்? ஊர்மக்களாவது கதவைப் பழுது பார்க்கக் கூடாதா? மெய்க்காவல் செய்பவர் எல்லாக் கோயில்களிலும் இல்லையா? அப்படியானால் ஐந்தடி உயரமான மூர்த்தி களவாடுவதற்குள்  கூக்குரல் எழுப்பலாம் அல்லவா? மணியையாவது ஓலிக்கச் செய்யலாம் அல்லவா? சோதனைச்சாவடிகள் தூங்கிக் கொண்டு இருந்தனவா? வெளி நாட்டுக்குக் கப்பல் மூலமும் விமானம் மூலமும் அனுப்பப்படும் சரக்குப்       பெட்டிகள் ஸ்கேன் செய்யப்படுவதில்லையா; அல்லது அதிகாரிகளும் கொள்ளைக்காரர்களுக்கு  உடந்தையா? இப்படிப் பல கேள்விகள் கேட்கத்தான் வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பறிகொடுத்து விட்டுப் புலம்புவதை விட, சிலை கடத்தலைத் தடுக்க அரசு என்ன செய்கிறது என்பதே முக்கியம். சிலை பாதுகாப்பு மையங்கள்  அமைத்திருக்கிறோமே என்று அறநிலையத் துறை உடனே பதில் சொல்லும். கோவில் தோறும் இருக்க வேண்டிய மூர்த்திகளை இவ்வாறு கும்பலாக ஒரே இடத்தில் வைத்துப் பூட்டிவிடுவது  எந்த விதத்தில் நியாயம்? அரசு எடுத்துக்கொண்டு போனாலும், கொள்ளைக்காரன் எடுத்துக்கொண்டு போனாலும் கடைசியில்,கோயிலில் அம்மூர்த்திகள் இல்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை! பாதுகாப்பு  மையங்களில் அபிஷேகம் இன்றிப் பாசியும் தூசியும் பிடித்துக் கிடக்கும் அவற்றைக் காண்போர் இதயம் கலங்கும். இதுவே அச்சிலைகளுக்கு நிரந்தரமான புகலிடமாக இருந்தால் காலப்போக்கில் எந்த ஊர் விக்கிரகம் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பாதுகாப்பு மையங்களில் செய்யப்படும் பாதுகாப்பை(?) ஒவ்வொரு கோவிலிலும் செய்தால் என்ன? வலுவான சுவரும் ,கதவும், உறுதியான பூட்டும், பாதுகாப்புக் கேமெராவும் அவசர கால அலாரமும் , மெய்க்காவலர் ஒருவரும் இருந்து விட்டால் எப்படிக் களவாட முடியும்? உற்சவ மூர்த்தி அறையை இருவர் தனித் தனி சாவிகள் போட்டால் மட்டுமே திறக்க முடியும் என்று முறைப்படுத்த வேண்டும்.எத்தனையோ கோவில்களில் சுற்றுச் சுவர் இல்லாது இருந்தும் அறநிலையத்துறை மெத்தனமாகவே இருக்கிறது. இவர்கள் சுவர் கட்டுவதற்குள் எஞ்சியுள்ள சிற்பங்களும் சிலைகளும் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது.  பெரும் வருமானம் ஈட்டித் தரும் ஆலயங்களின் உபரி நிதியிலிருந்து இதைச் செய்ய முடியாதா? முடியாது என்றால் அதற்கென்று ஒரு அரசுத் துறையும்,அதிகாரிகளும் எதற்கு என்று மக்கள் கேட்கத்தான் செய்வார்கள்.  

Friday, April 18, 2014

மயிலையில் கலை விழா

ஆடலரசனான நடராஜப் பெருமானை ந்ருத்த ராஜா என்று வடமொழியில் கூறுவர். அவன் ஆடும் சிற்றம்பலம் ந்ருத்த சபை என்றும் அப்பெருமான் சபா நாயகன் என்றும் அடியார்களால் போற்றப்படுவதைக் காணலாம்.  அவனது திருவடிகளோ " மலர் சிலம்படிகள்" . அதாவதுசிலம்பினை அணிந்த பொற்பாதங்கள். அத்திருவடியைக் கண்ட கண் கொண்டு வேறொன்றைக் காணவும் வேண்டுமோ என்பார் அப்பர் சுவாமிகள். அக்குஞ்சித  பாதத்தைத் தரிசிக்கப் பிறவியும் வேண்டுவது என்றார் அவர். எனவே, ஆடற்கலை பயிலும் மாணாக்கர்கள் சலங்கையைக் காலில் கட்டிக்கொள்ளும்போதே ஆனந்த தாண்டவ மூர்த்தியின் நினைவு வரவேண்டும். அவனிடமிருந்து வந்த கலை அல்லவா இது?

பல ஆலயங்களில் கலை விழா நடத்துகிறார்கள். ஆனால் அமைப்பாளர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சிவராத்திரியை ஒட்டி நடைபெறும் விழாவானால் சிவபெருமானைப் பற்றிய சொற்பொழிவோ, இசை நிகழ்ச்சியோ அல்லது நடன அரங்கோ நடத்தலாம். அதேபோல் நவராத்திரியை ஒட்டிய நிகழ்ச்சிகள் அம்பிகை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் தெரிந்தவர்கள் என்பதற்காகவோ அல்லது சிபாரிசு செய்யப்பட்டதாலோ சில இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிவாலயமாக இருந்தால் சிவன், அம்பிகை, விநாயகர், முருகன், அடியார்கள் ஆகியோருக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதேபோல், பெருமாள் கோயிலாக இருந்தால் ராமாயணம், பாரதம்,பாகவதம் போன்ற புராண சொற்பொழிவுகளை நடைபெறச்செய்யலாம். ஒரே ஆலயத்தில் சிவ - விஷ்ணு சன்னதிகள் இருந்தால் மேற்கூறிய எல்லாவற்றையும் நடத்துவது பொருத்தமாக இருக்கும். சிவாலயத்தில் நடைபெறும் கலை விழாவில் சிவ சம்பந்தமான நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுவது பொருத்தம்.

மயிலாப்பூர் கபாலீச்வரர் கோயிலில் 2014 ஏப்ரல் மாதம் நடைபெறும் கலை விழாவில் முதல் நாள் (18.4.2014) அன்று, வெங்கடாத்திரி வைபவம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. "மயிலையே கயிலை கயிலையே மயிலை " என்று சொல்லிக்கொண்டு இவ்விதம் பொருத்தமற்ற நிகழ்ச்சியை எவ்வாறு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. கயிலையில் வெங்கடாத்திரி வைபவம் நடைபெறுகிறதா? இல்லையே! அதனைப் பார்த்தசாரதி திருக்கோயிலில் நடத்தினால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்! விழாக்குழுவினர் யோசிக்க வேண்டும். நிகழ்ச்சியின் மீதோ, அமைப்பாளர்கள் மீதோ அல்லது ஆலய நிர்வாகத்தின் மீதோ நமக்குச் சற்றும் காழ்ப்பு உணர்ச்சி இல்லை. இருக்கப்போவதும் இல்லை. செய்வதைத் திருந்தச் செய்யலாம் என்ற எண்ணத்தால் மட்டுமே இவ்வாறு எழுத நேர்ந்தது. குறை கூறும் எண்ணம் அறவே இல்லை.இதனைச் செயல் படுத்த வேண்டியவர்கள் ஆடல் பயிலும் மாணாக்கர்களே . ஆடற் கலைக்கே அதிபதியான சபாபதியை முன்னிட்டு மயிலையில் நடனம் நடைபெற்றால் அதுவே கயிலையாகப் பரிணமிக்கும் என்பதில் ஐயம் இல்லை.   

Monday, April 14, 2014

ஆகம வழி நிற்போம்

 சிவபெருமானை  ஆகமமாகவே ஆனவன்  என்கிறார் மாணிக்கவாசகர். " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் " என்கிறது திருவாசகம். நம் தென் தமிழ் நாட்டிலுள்ள சிவாலயங்கள் ஆகம வழிப்படி அமைக்கப்பெற்றவை. அதை மாற்றம் செய்வதோ அல்லது புதிதாகக் கட்டப்படும் சிவாலயங்களை ஆகமத்தை ஒட்டாமல்  தமக்குப் பிடித்தவகையில் மாற்றிக்கொள்வதோ  பெரும்  பிழையே ஆகும். சிவாலய நிர்மாணம் என்பது எந்தெந்த சன்னதிகள் ஆலயத்தின் எவ்விடத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஆகமங்கள் மூலம் அறிகிறோம்.

வட நாட்டில்  போற்றப்படும்  சில தெய்வங்களையும் , மகான்களையும் வடிவமைத்து நமது சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்கின்றனர் சிலர். இப்படிச் சொல்வதால் அத்தெய்வங்களையும் மகான்களையும் போற்றக்கூடாது என்பது அர்த்தமல்ல. வேண்டுமானால் அவர்களுக்குத் தனிக் கோயில்கள் கட்டிக் கொள்ளட்டும். சிவாலயத்திற்குள் சன்னதி அமைக்க வேண்டாமே! அதேபோல் நம்மூரில் வாழ்ந்த மகான்களுக்கும் சிலை அமைத்து சிவாலயங்களில் வைக்கக் கூடாது.

வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று எண்ணி என்னென்னவோ புதுமைகளை செய்யத் துணிந்து விட்டார்கள். கேட்டால் எங்கும் இல்லாத வகையில் இங்கு அமைக்கப்படுகிறது என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்குப் பத்திரிகைகளும் துணை போகின்றன.

வட நாட்டில் செய்யாத பூஜை முறைகளை எல்லாம் அந்தப் பக்கத்து மூர்த்திகளை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு பால்,தயிர்,பஞ்சாமிர்தம் ,விபூதி,சந்தனம் முதலிய பொருள்களால் அபிஷேகம்  செய்து பின்பற்றுகிறார்கள்.. அப்படிச் செய்யும்போது வேத முழக்கமும் ஒலிக்கிறது. இம்முழக்கத்தை எத்தனையோ கிராமக் கோயில்கள் கேட்பதற்குக் காத்துக் கொண்டு இருக்கின்றன!

இப்படிப் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகான்களின் சன்னதிகள் பிரபலப்படுத்தப்பட்டு, மூல மூர்த்தியின் சன்னதியின் பால் கவனம் குறைய ஆரம்பித்து விடுகிறது.. பணம் வசூலாகிறது என்றால் இதுபோன்ற சன்னதிகளை அமைக்க வேண்டுமா? இருக்கிற சன்னதிகளைப் பராமரித்தாலே போதுமானது என்று உணர மாட்டார்களா?

அருள் நூல்களில் காணப்படும் வாசகங்களைத் தமக்குப் பிடித்த தெய்வங்கள் மற்றும் மகான்களின் பெயரில் மாற்றிக் கொள்ளும் போக்கையும் காண்கிறோம். யார் மனத்தையும் புண் படுத்தக்கூடாது என்பதால் இங்கு விரிவாக அது பற்றிச் சொல்ல வேண்டாம். தங்களுக்கு உள்ள பக்தியைக் காட்டிக் கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கும்போது இப்படிச் செய்வானேன்?  

விநாயகருக்கும் முருகனுக்கும் புதியதாக யாரும் புகழ் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் என்று ஆறு கோயில்களை அடையாளம் காட்டுகின்றனர். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் என்பதோடு , எட்டாவது படை வீடு வரையில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பஞ்ச பூதத் தலங்கள் என்றால் எங்கள் மாவட்டத்திலும் பஞ்ச பூதத்  தலங்கள் உண்டு என்கிறார்கள். நவக் கிரகங்கள் வழிபட்ட கோயில்கள் என்றால் சென்னையைச் சுற்றிலும்கூட  நவக் கிரகக் கோயில்கள் உண்டு என்கிறார்கள். இப்படியே போனால் பிற்காலத்தில் வரும் சந்ததிகளுக்கு நமது முன்னோர் சுட்டிக் காட்டிய கோயில்கள் எவை என்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும்.

இதேபோலத்தான் சிவாலயங்களில் ஆகமத்திற்கு உட்படாத சன்னதிகளை அமைப்பதும். ஆன்மீகப் பெரியோர்களும் சிவாசார்யப் பெருமக்களும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாநகரங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நிறைய நடைபெற்றாலும் கிராமப் பகுதிகளில் அவ்வாறு இல்லை என்று எண்ணிக் கொண்டு     இருந்தோம். இப்போது அங்கேயும் தவறுகள் அரங்கேறுகின்றன. இத்தகைய தவறுகள் கண்டிப்பாகத் திருத்தப்பட வேண்டும் இல்லாவிட்டால் அவை வேரூன்றி விடும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று வாதிட ஆரம்பித்து விடுவர். ஆகமங்கள் அர்த்தமற்றவைகளாக ஆகிவிடக்கூடாது. " ஆகம சீலர்க்கோர் அம்மானே" என்று  சுந்தரர் கூறுவதால் ஆகமத்தின் சிறப்பும் பெருமானின் பெருமையும் ஆகமங்களைப் போற்றுவோரின் பெருமையும் ஒருங்கே வெளிப்படுகிறது அல்லவா?

Monday, March 31, 2014

பட்டமும் பணிவும்

படித்துப் பட்டம் வாங்குவது ஒரு விதம். கௌரவப் பட்டம் வாங்குவது இன்னொருவிதம். பட்டம் கொடுப்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் படித்துப்பட்டம் வாங்கியவரை அந்த ஒன்றில் மட்டும் பாராட்டிவிட்டுப் போகட்டும். அலகில் கலைகள் அத்தனையும் வல்லவராகப் பாராட்ட வேண்டாமே! உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச்   சொல்லுவோம். ஒருவர் தமிழ் நூல்கள் சிலவற்றைக் கற்றுவிட்டால் அவரை முத்தமிழ் காவலர் என்றோ முத்தமிழ் விரகர் என்றோ எப்படி அழைப்பது ? தமிழ்க் கடவுளாகவே கூட அவர்களை வருணிக்கிறார்கள்.  அதேபோன்று நடனம், நடிப்பு ,இசை போன்ற துறைகளிலும் பட்டங்கள் தாராளமாகவே கொடுக்கப்படுகின்றன. உலகநாயகனாகவே புகழத்தொடங்கிவிடுகிறார்கள்.

அந்தக் காலத்தில் தமிழில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களை வித்துவான் பட்டம் தந்து கௌரவிப்பார்கள். செய்யுள் இயற்றும் பெரும் புலமை படைத்தவர்களை "மகா வித்துவான்" என்றும் கௌரவித்தனர். தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் ஆசிரியரும் ஏராளமான தமிழ் நூல்களை இயற்றியவருமான திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் "மகாவித்துவான்" என்று திருவாவடுதுறை ஆதீனத்தால்          கௌரவிக்கப்பட்டார். அது தமிழ்தாய்க்கே தந்த கெளரவம்.

 "தமிழ் விரகர்" என்ற தூய பட்டம், திருஞானசம்பந்தப் பெருமான் ஒருவருக்கே உரியது. அதுபோல , "சைவ சிகாமணி" என்ற பட்டமும் அவருக்கே உரியது. இன்று சைவ நூல்களைப் பற்றிப் பேசியும் எழுதியும் வருபவர்களை  தமிழ் விரகர் என்றோ திருமுறை வித்தகர் என்றோ தமிழாகரர் என்றோ எப்படி ஏற்றுக்கொள்வது? சிறந்த பேச்சாளர்கள் எல்லாம் நாவன்மை படைத்தவர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களை நாவுக்கரசர் என்று எப்படிப் போற்ற முடியும்?

பட்டங்களை அளிக்கும் நிறுவனங்களும், அடியார் திருக் கூட்டங்களும், திருமடங்களும் நமது அருளாளர்களின் பெருமைக்கும்,புகழுக்கும் குந்தகம் ஏற்படாமலும், எல்லைக்கு உட் பட்ட வகையில் அப்பட்டங்களைத் தருவது நல்லது என்று எண்ணுகிறோம். இவ்வாறு ஓகோ என்று புகழ்வதன்மூலம் பட்டங்களைப் பெறுவோர் இறுமாப்பு அடையவும் வாய்ப்பு உண்டு.தமது பெயருக்கு முன்னர் கௌரவ  பட்டங்களைப் போட்டுக் கொள்வதைத் தவிர்ப்பதால் மனம் மாசடைவதைத் தவிர்க்க முடியும். ஏதாவது போட்டுக் கொள்ளவேண்டும் என்று தோன்றினால்,     "ஆரூரன் அடிமை"  என்று போட்டுக்கொள்ளலாமே!  எண்திசையும் புகழும்படி செங்கோல் ஓச்சிய ராஜ ராஜ சோழனும், தன்  பெயரை,      " சிவபாதசேகரன்" என்று எவ்வளவு அடக்கத்துடன் கல்வெட்டில் பொறித்து  வைத்திருக்கிறார் பார்த்தீர்களா? 

இந்தக் காலத்தில் பத்திரிகைகளும் பட்டங்களோடு பெயர்களைக் குறிப்பிடுவதில்  முன் நிற்கின்றன. சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோரைக் குறிப்பிடும் பொது, "வெடிகுண்டு வெங்கடேசன்" " அரிவாள் அறிவழகன்"  "புல்லெட் பூபதி" என்றெல்லாம் அடைமொழி கொடுக்கிறார்கள். சர்வதேச  கொள்ளைக்காரர்களைக் குறிப்பிடும்போதும் இப்படித்தான்! தமிழகக் கோயில்களிலிருந்து தெய்வத் திருமேனிகளைக் கடத்தி விற்ற கொள்ளைக் காரனை , சிலநாட்கள் முன்பு, ஒரு தமிழ் செய்தித் தாள், " கடத்தல் மன்னன்" என்று குறிப்பிட்டிருக்கிறது. விட்டால் "கடத்தல் திலகம்" " கடத்தல் சக்கரவர்த்தி" என்றெல்லாம் குறிப்பிடுவார்கள் போலிருக்கிறது. அவன் எவ்வளவுக்கு விற்றான் என்பது பொது மக்களுக்குத் தெரிய வேண்டுமா? இப்படி சமூகத்தில் பொறுப்புடன் செயல் பட வேண்டிய பத்திரிகைகள் பரபரப்பான செய்தி வெளியிடுவதாக நினைத்து மேன்மேலும் தவறுகள் நடக்கத் தூண்டுகோலாக மாறிவிடக் கூடாது. 


இனிமேலாவது, இதுபோன்ற பட்டங்களைத் தந்து மக்களின் மதியை மழுங்கச் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நம்மை எவ்வளவு  அடக்கமாக ஆக்கிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு  வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம். பல்லவனது பெருஞ்சேனையை நடத்திய சேனாபதியான பரஞ்சோதியார் தன்னைச்  "சிறுத் தொண்டர்" என்றே கூறிக்கொண்டார். தான் செய்த  சிவதருமங்களில் எல்லாம் தன்  பெயரை எழுதாதுதான் வழிபடும் குருநாதரான திருநாவுக்கரசரின் திருப்பெயரையே எழுதினார் அப்பூதி  அடிகள்.  தனது திருப்பதிகம் ஒன்றின் நிறைவுப் பாடலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள், " .. அடி நாய் .." என்று தன்னைச் சொல்லிக் கொள்வதைக் காண்க. இதுபோலவே, மாணிக்க வாசகரும் " நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு.."  என்றும், " வேண்டேன் புகழ்.." என்றும் அருளியுள்ளார். ஆனால் நமக்கோ  இதுபோன்ற பணிவு இன்னும் எத்தனை பிறவிகளுக்குப் பிறகு  வருமோ தெரியவில்லை .

 ஆலயங்களில்  அடியார்களோடு இணைந்து கைத்தொண்டு செய்யும் போது உயர்ந்த மனப்பான்மை சிறிது சிறிதாக நம்மைவிட்டு அகலுவதைக் கண்கூடாகக் காணலாம்.அடியார்க்கு அடியானாகும் பண்பு மேலோங்கத் தொடங்குவதையும் காண முடிகிறது. “உனக்குப் பணி செய்ய உன்தன்னை எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீ தா”  என்றபடி, அத்தகைய பண்பையும் பணிவையும் இறைவனே அருளவேண்டும்.    

Monday, March 24, 2014

கடிகாரம் காட்டும் தத்துவம்

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒன்றில் நாட்டம் இருக்கத்தான் செய்கிறது. வயது ஆக ஆக , இதில் மாற்றம் எற்படுவதும் உண்டு. தலைகீழாக மாறிவிடுவதையும் பார்க்கிறோம். சூழ்நிலைகளாலும் இவ்வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் எல்லோரும் மறந்து விடுவது ஒன்று உண்டு. ஒரு நாள் ஆனவுடன் நமது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டது என்று நினைப்பதில்லை. சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்க்கை அமைக்கப்பட்டுவிட்டது. நம்மை அறியாமலேயே, நாம் சாவி கொடுத்த பொம்மை போல இயங்கிக்கொண்டிருப்பதை  மறந்து விடுகிறோம். கொடுக்கப்பட்ட சாவி முடிந்தவுடன் இயக்கமும் நின்றுவிடுகிறது. மீண்டும் சாவி கொடுக்கமுடியாத பொம்மை இது. " use and throw" என்கிறார்களே அதுபோலத்தான்!  எப்படி இயங்குகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களிலும் பலவகை !  ஆன்மிகம் வேறு, கடவுள் பக்தி வேறு என்று ஒரு அறிவு ஜீவி சொன்னால் அதையும் பிரசுரிக்கும் போலி ஆன்மீகப் பத்திரிகைகள் !  இவர்களது சிந்தனைகள் எல்லாம் வித்தியாசமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு பிதற்றுகிறார்கள். இதைப் படிப்பவர்களும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். எதிலும் வியாபாரம் தலை விரித்து ஆடுகிறது. ஆன்மார்த்தம் விலகிக் கொள்கிறது. பக்தி கேள்விக்குறியாகிவிடுகிறது. பக்தி இல்லாத ஆன்மிகம் வெறும் வேஷமே. " பக்தியால் யான் உன்னைப் பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாடி" என்கிறார் அருணகிரிநாதர். " பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே, பரமயோகீ ''  என்று உருகுகிறார் திருநாவுக்கரசர்.

பத்து நாட்களில் எத்தனை கோயில்கள் பார்த்தேன் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு. மனம் ஒன்றிப் பார்த்திருப்பார்களா என்றால் சந்தேகமே. எண்ணிக்கைதான் இவர்களுக்கு முக்கியம். திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் பார்த்தீர்களே, அங்கே தட்சிணாமூர்த்தி தனது கரங்களில் மானும் மழுவும் ஏந்தியபடி காட்சியளிப்பதைப் பார்த்தீர்களா என்று  கேட்டால் , " அப்படியா , பார்க்கவில்லையே" என்றே பதில் வரும். அவர்களின் நினைவில் இருப்பதெல்லாம் கோவில் வீதிக் கடையில் திருநெல்வேலி அல்வா வாங்கியதுதான்!

இன்னும் சிலரோ, பிரதான மூர்த்திகளைப் பார்ப்பார்கள். போட்டோவும் எடுப்பதில் தீவிரமாக இருப்பார்கள். புராண வரலாறுகளில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். ஊர்ப் பெயர் எப்படி வந்தது என்று கேட்டுக் கூடத் தெரிந்துகொள்ள முனைய மாட்டார்கள். அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே அக்கறை இல்லாத போது வெளி ஊர்க் காரர்களைப் பற்றிக் கேட்பானேன்! கும்பகோணத்திற்குப் பக்கத்தில் வலங்கைமான் என்று ஒரு ஊர் இருக்கிறது. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேட்டுப் பாருங்கள். " யாருக்குத் தெரியும்? " என்று பதில் வருமே தவிர, "உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் கேட்டுத்   தெரிந்து கொள்கிறோம் " என்று ஆர்வம் காட்ட மாட்டார்கள். (வழக்கமாகத்  தனது இடது கரத்தில் மான் ஏந்தியவராகக் காட்சி தரும் சோமாஸ்கந்தர், இந்த ஊர் ஆலயத்தில் வலக் கையில் மானை ஏந்தியதால் ஊரின் பெயரும் வலங்கைமான் ஆனது.)

ஒரு கடிகாரத்தில் சுற்றிவரும் முட்கள் போல நாமும் பகலையும் இரவையும் மாறி மாறி சுற்றி வருகிறோம். பொழுதுபோனால் பொழுது வரும் என்று சுற்றாமல் பன்னிரண்டாகப் பிரிக்கப்பட்ட மணி நேரத்தை பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களாகப் பாவித்து அவற்றை வலம் வரவேண்டும். வினாடி முள்ளைப்போல் கிடுகிடுவென்று சுற்றிவந்து மனத்தில் எதுவும் நிலைக்காமல் போவதை விட, பெரியமுள் போலவாவது  சற்று மெதுவாக வலம் வரும்போது பல்வேறு  புரியாத  புதிர்கள் விளங்க ஆரம்பிக்கின்றன.  அடுத்த நிலையாகச் , சிறிய முள்ளின் வேகத்துக்கு வந்து,  பரபரக்காமல் இறை ஆற்றலுக்குத் தலை வணங்கி ஒவ்வொரு ஜோதிர் லிங்கத்தையும் அனுபவிக்கிறோம். முள் சிறிதானாலும் கிடைக்கும்  அனுபவம் பெரியது. கடிகாரம் என்றாவது ஒருநாள் நின்று விடும்போது, அச்சிறுமுள்ளும் அந்த நிலையிலேயே நின்று பேரின்பம் பெற்றுவிடுகிறது.  கடிகாரம் மணியை மட்டுமா காட்டுகிறது? பெரிய தத்துவத்தை அல்லவா உள்ளடக்கிக் கொண்டு எதுவும் தெரியாதது போல மீண்டும் மீண்டும் வலம் வருகிறது !  

Tuesday, March 18, 2014

மங்கையர் திலகம்

                                                                                                      Pic courtesy: Shaivam.org
பெண் என்றாலே கருணையின் வடிவம் என்றும் உயர்ந்த குணங்களின் இருப்பிடம் என்றும் ஆன்றோர் கருதினர். ஒரு உருவமோ,ஒரு நாமமோ இல்லாத பரம்பொருளை ஆண் வடிவிலும் பெண் வடிவிலும் இரண்டும் கலந்த அர்த்த நாரீச வடிவிலும் வழிபடுகிறோம். பாலை மட்டுமல்ல. நல்ல குணங்களையும் புகட்டும் குணவதியாகவும் தாய் கருதப்படுகிறாள். அத்தாயை விடச் சிறந்த தயாபரன் இறைவன் ஒருவனே.  தாய் அன்புக்காக ஏங்குபவர்க்கு அவன் ஒருவனே தாயும் ஆக முடியும். திருச்சிராப்பள்ளியிலும் வட குரங்காடுதுறையிலும் இறைவனே பிரசவ காலத்தில் உதவியதை இது காட்டுகிறது.

 இப்படி அகில உலகங்களுக்கும் தாயான ஈசனே தனது திருவாயால் " அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்கால் அம்மையார். கணவனே தன்னை வணங்கிய பிறகு மானுட உடலைத் துறந்து பேய் வடிவம் வேண்டிப்பெற்ற புனிதவதி அவர். அறுபத்துமூவர் திருவுருவங்களுள் அம்மையார் ஒருவர் மட்டும் அமர்ந்த நிலையில் காணப்படுவார். அதேபோல், திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்துச்  சைவம்  தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியும் பெருமை மிக்கவர். " எங்கள்  தெய்வம்" என்று சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்டவர்.

இவ்வளவு வானளாவிய புகழ் வாய்ந்த மங்கையர் குலத்தின் தற்போதைய நிலை என்ன? பெண் உரிமை , பெண் சுதந்திரம், ஆட்சியில் ஒதுக்கீடு, என்றெல்லாம் குரல்கள் ஒலித்தும் உண்மையில்    பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லையே! அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வணங்கப்படவேண்டிய பெண்மை இப்படி விபரீதங்களைச் சந்திக்க வேண்டியதற்குப்  பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எப்போது நமது வாழ்க்கை முறையில் நமக்கு ஒத்துவராத மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டோமோ அப்பொழுதிலிருந்தே  இதுபோன்ற விளைவுகளைச்  சந்திக்க ஆரம்பித்து விட்டோம்.

உயர் கல்வியும்,வேலை வாய்ப்புக்களும் பெண்களுக்கு விளைவித்துள்ள நன் மைகளைவிடத் தீமைகளே  அதிகம் என்கின்றனர். பெற்றோர் பலர்  தமது பெண்கள் அடங்காமல் போய்விட்டதாகப் புலம்புகின்றனர். தற்காலச் சூழலில் சிக்காமல் பெண்களை வளர்க்காது  விட்டதன் பலன் இது என்றும் கருதுகிறார்கள். முன்பு திரைப்படத்தோடு நின்றது இப்போது வீடு தேடி வந்து விட்டது. மதியம் குறைந்தது நான்கு மணி நேரமாவது தாய்மார்கள் மெகா சீரியல்கள் பார்க்கிறார்கள். இரவு குடும்பத்தோடு நள்ளிரவு வரை பார்த்துவிட்டுக் காலை ஏழு மணி வரை தூங்குவது அதை விடக் கொடுமை. அத்தனை தொடர்களிலும் காட்டப்படுவது ஓயாத அழுகையும்,பழி வாங்குவதும் எழுதவே கை கூசும் சதித் திட்டங்களுமே . தான் விரும்பிய ஒருவனை மணக்கமுடியாமல் பெற்றோரின் நிர்பந்தத்திற்காக வேறொருவனை மணந்த ஒரு பெண் , தன்னை சந்திக்க வந்த தனது தந்தையிடம் என்ன பேசுகிறாள் தெரியுமா? " உனக்கு அறிவு இருக்கா?  உன்னை வெட்டி போட்டுடுவேன். கோவில் என்று கூட பார்க்க மாட்டேன். உன்னை நாற  அடிச்சுடுவேன்"  என்பன அவள் கக்கிய விஷ  வார்த்தைகளில் சில. வசனம் எழுதுபவர்கள் தங்களது பேனாவை விஷத்தில் தோய்த்து எழுதுகிறார்கள் போல் இருக்கிறது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம், பணம் ,... பெண் குழந்தைகள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?  விளம்பரம் தந்து ஆதரிக்கும் பொறுப்பற்ற கம்பெனிகள் நம் நாட்டில் ஏராளம். மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் விளம்பரங்கள் வந்து குவிகின்றன. இதற்கு சென்சார் இருந்தால் மட்டும் என்ன நடந்து விடப் போகிறது?

ஆனால் அடிப்படைக் காரணம் பெண்களிடமே இருக்கும்போது அடுத்தவர்களைக் குறை கூறி என்ன பயன்?  எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று பெண்கள் கிளம்பிவிட்ட போது யாரை நொந்து கொள்வது?  இப்படியாவது சம்பாதிக்க வேண்டுமா? தாங்கள் அழிவதோடு மற்ற இளம் குழந்தைகளையும் அல்லவா இந்த அற்ப வலையில் விழச் செய்கிறார்கள்! இந்த மாயையில் முதியவர்கள் கூட மயங்கி விடுகிறார்களே ! செல்போனும் டிவி யும் செய்துள்ள நன்மைகளை விட அநியாயங்களே மிக மிக அதிகம். கண்ட கண்ட பாடல்களைப் பதிவு செய்துகொண்டு ஓடும் பஸ்ஸில் பெண்கள் மத்தியில் அவற்றை அலற விடும் மாணவர்களை சக பிரயாணிகளோ , நடத்துனரோ தட்டிக் கேட்பதில்லை. அக்கிரமத்திற்கு எல்லை இல்லாமல் போய் விட்டது. பத்திரிகைகளும் இவற்றை அரங்கேற்றம் செய்கின்றன. எப்படியாவது பத்திரிக்கை விற்றால் போதும்.

தாய்க்குலம் என்று வாயளவில் பேசினால் போதாது. அக்குலம் எப்படிச் சித்தரிக்கப்படுகிறது என்று தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது என்? இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டியது என்ன என்பதை சிந்திப்போம். தனது குலப்பழக்க வழக்கங்களைக் கற்று அவற்றைப் பின்பற்றுதல்,   இளமையில் இருந்தே தெய்வபக்தியோடு இருத்தல் , தீய சக்திகளைப் புறக்கணித்தல் போன்ற நற்குணங்களோடு திகழ வேண்டும். சத்ரபதி சிவாஜியின் தாயாரைப் போல் நல்ல மகனை நாட்டுக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் தேசத்திற்கு நல்ல காலம் பிறக்கும். இல்லா விட்டால் மனித வாழ்க்கை மிருக வாழ்க்கை ஆகிவிடும்.

காரைக்கால் அம்மையாரை நினைத்தவுடன் நம் மனம் புனிதமடைவதை அனுபவத்தால் அறியலாம். பங்குனி சுவாதியன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது. அன்று கோயில்களில் நடைபெறும் வழிபாட்டின்போது, அம்மங்கையர்  திலகத்தின் அருளால் நம் பெண் குழந்தைகள் எல்லாப் பேறும் பெற்றுப் பெரு   வாழ்வு வாழ வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திப்போம். புனிதவதியார் அருளால் பெண்மணிகள் மேலும்  புனிதமாகிப் பிரகாசிக்கட்டும்.