Monday, March 24, 2014

கடிகாரம் காட்டும் தத்துவம்

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒன்றில் நாட்டம் இருக்கத்தான் செய்கிறது. வயது ஆக ஆக , இதில் மாற்றம் எற்படுவதும் உண்டு. தலைகீழாக மாறிவிடுவதையும் பார்க்கிறோம். சூழ்நிலைகளாலும் இவ்வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் எல்லோரும் மறந்து விடுவது ஒன்று உண்டு. ஒரு நாள் ஆனவுடன் நமது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டது என்று நினைப்பதில்லை. சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்க்கை அமைக்கப்பட்டுவிட்டது. நம்மை அறியாமலேயே, நாம் சாவி கொடுத்த பொம்மை போல இயங்கிக்கொண்டிருப்பதை  மறந்து விடுகிறோம். கொடுக்கப்பட்ட சாவி முடிந்தவுடன் இயக்கமும் நின்றுவிடுகிறது. மீண்டும் சாவி கொடுக்கமுடியாத பொம்மை இது. " use and throw" என்கிறார்களே அதுபோலத்தான்!  எப்படி இயங்குகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களிலும் பலவகை !  ஆன்மிகம் வேறு, கடவுள் பக்தி வேறு என்று ஒரு அறிவு ஜீவி சொன்னால் அதையும் பிரசுரிக்கும் போலி ஆன்மீகப் பத்திரிகைகள் !  இவர்களது சிந்தனைகள் எல்லாம் வித்தியாசமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு பிதற்றுகிறார்கள். இதைப் படிப்பவர்களும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். எதிலும் வியாபாரம் தலை விரித்து ஆடுகிறது. ஆன்மார்த்தம் விலகிக் கொள்கிறது. பக்தி கேள்விக்குறியாகிவிடுகிறது. பக்தி இல்லாத ஆன்மிகம் வெறும் வேஷமே. " பக்தியால் யான் உன்னைப் பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாடி" என்கிறார் அருணகிரிநாதர். " பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே, பரமயோகீ ''  என்று உருகுகிறார் திருநாவுக்கரசர்.

பத்து நாட்களில் எத்தனை கோயில்கள் பார்த்தேன் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு. மனம் ஒன்றிப் பார்த்திருப்பார்களா என்றால் சந்தேகமே. எண்ணிக்கைதான் இவர்களுக்கு முக்கியம். திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் பார்த்தீர்களே, அங்கே தட்சிணாமூர்த்தி தனது கரங்களில் மானும் மழுவும் ஏந்தியபடி காட்சியளிப்பதைப் பார்த்தீர்களா என்று  கேட்டால் , " அப்படியா , பார்க்கவில்லையே" என்றே பதில் வரும். அவர்களின் நினைவில் இருப்பதெல்லாம் கோவில் வீதிக் கடையில் திருநெல்வேலி அல்வா வாங்கியதுதான்!

இன்னும் சிலரோ, பிரதான மூர்த்திகளைப் பார்ப்பார்கள். போட்டோவும் எடுப்பதில் தீவிரமாக இருப்பார்கள். புராண வரலாறுகளில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். ஊர்ப் பெயர் எப்படி வந்தது என்று கேட்டுக் கூடத் தெரிந்துகொள்ள முனைய மாட்டார்கள். அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே அக்கறை இல்லாத போது வெளி ஊர்க் காரர்களைப் பற்றிக் கேட்பானேன்! கும்பகோணத்திற்குப் பக்கத்தில் வலங்கைமான் என்று ஒரு ஊர் இருக்கிறது. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேட்டுப் பாருங்கள். " யாருக்குத் தெரியும்? " என்று பதில் வருமே தவிர, "உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் கேட்டுத்   தெரிந்து கொள்கிறோம் " என்று ஆர்வம் காட்ட மாட்டார்கள். (வழக்கமாகத்  தனது இடது கரத்தில் மான் ஏந்தியவராகக் காட்சி தரும் சோமாஸ்கந்தர், இந்த ஊர் ஆலயத்தில் வலக் கையில் மானை ஏந்தியதால் ஊரின் பெயரும் வலங்கைமான் ஆனது.)

ஒரு கடிகாரத்தில் சுற்றிவரும் முட்கள் போல நாமும் பகலையும் இரவையும் மாறி மாறி சுற்றி வருகிறோம். பொழுதுபோனால் பொழுது வரும் என்று சுற்றாமல் பன்னிரண்டாகப் பிரிக்கப்பட்ட மணி நேரத்தை பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களாகப் பாவித்து அவற்றை வலம் வரவேண்டும். வினாடி முள்ளைப்போல் கிடுகிடுவென்று சுற்றிவந்து மனத்தில் எதுவும் நிலைக்காமல் போவதை விட, பெரியமுள் போலவாவது  சற்று மெதுவாக வலம் வரும்போது பல்வேறு  புரியாத  புதிர்கள் விளங்க ஆரம்பிக்கின்றன.  அடுத்த நிலையாகச் , சிறிய முள்ளின் வேகத்துக்கு வந்து,  பரபரக்காமல் இறை ஆற்றலுக்குத் தலை வணங்கி ஒவ்வொரு ஜோதிர் லிங்கத்தையும் அனுபவிக்கிறோம். முள் சிறிதானாலும் கிடைக்கும்  அனுபவம் பெரியது. கடிகாரம் என்றாவது ஒருநாள் நின்று விடும்போது, அச்சிறுமுள்ளும் அந்த நிலையிலேயே நின்று பேரின்பம் பெற்றுவிடுகிறது.  கடிகாரம் மணியை மட்டுமா காட்டுகிறது? பெரிய தத்துவத்தை அல்லவா உள்ளடக்கிக் கொண்டு எதுவும் தெரியாதது போல மீண்டும் மீண்டும் வலம் வருகிறது !  

No comments:

Post a Comment