படித்துப் பட்டம் வாங்குவது ஒரு விதம். கௌரவப் பட்டம் வாங்குவது இன்னொருவிதம். பட்டம் கொடுப்பது
ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் படித்துப்பட்டம்
வாங்கியவரை அந்த ஒன்றில் மட்டும் பாராட்டிவிட்டுப் போகட்டும். அலகில் கலைகள் அத்தனையும் வல்லவராகப் பாராட்ட வேண்டாமே! உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சொல்லுவோம். ஒருவர் தமிழ் நூல்கள் சிலவற்றைக் கற்றுவிட்டால் அவரை முத்தமிழ் காவலர் என்றோ
முத்தமிழ் விரகர் என்றோ எப்படி அழைப்பது ? தமிழ்க் கடவுளாகவே
கூட அவர்களை வருணிக்கிறார்கள். அதேபோன்று நடனம், நடிப்பு
,இசை போன்ற துறைகளிலும் பட்டங்கள் தாராளமாகவே கொடுக்கப்படுகின்றன. உலகநாயகனாகவே புகழத்தொடங்கிவிடுகிறார்கள்.
அந்தக் காலத்தில் தமிழில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களை
வித்துவான் பட்டம் தந்து கௌரவிப்பார்கள். செய்யுள் இயற்றும்
பெரும் புலமை படைத்தவர்களை "மகா வித்துவான்" என்றும்
கௌரவித்தனர். தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் ஆசிரியரும் ஏராளமான தமிழ் நூல்களை இயற்றியவருமான
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் "மகாவித்துவான்" என்று திருவாவடுதுறை ஆதீனத்தால் கௌரவிக்கப்பட்டார். அது
தமிழ்தாய்க்கே தந்த கெளரவம்.
"தமிழ் விரகர்" என்ற தூய பட்டம், திருஞானசம்பந்தப் பெருமான் ஒருவருக்கே
உரியது. அதுபோல , "சைவ சிகாமணி" என்ற பட்டமும் அவருக்கே உரியது. இன்று சைவ நூல்களைப்
பற்றிப் பேசியும் எழுதியும் வருபவர்களை தமிழ் விரகர் என்றோ திருமுறை வித்தகர்
என்றோ தமிழாகரர் என்றோ எப்படி ஏற்றுக்கொள்வது? சிறந்த பேச்சாளர்கள்
எல்லாம் நாவன்மை படைத்தவர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களை நாவுக்கரசர்
என்று எப்படிப் போற்ற முடியும்?
பட்டங்களை அளிக்கும் நிறுவனங்களும், அடியார் திருக் கூட்டங்களும், திருமடங்களும் நமது அருளாளர்களின்
பெருமைக்கும்,புகழுக்கும் குந்தகம் ஏற்படாமலும், எல்லைக்கு உட் பட்ட வகையில் அப்பட்டங்களைத் தருவது நல்லது என்று எண்ணுகிறோம். இவ்வாறு ஓகோ என்று புகழ்வதன்மூலம் பட்டங்களைப் பெறுவோர் இறுமாப்பு அடையவும்
வாய்ப்பு உண்டு.தமது பெயருக்கு முன்னர் கௌரவ பட்டங்களைப் போட்டுக் கொள்வதைத் தவிர்ப்பதால் மனம்
மாசடைவதைத் தவிர்க்க முடியும். ஏதாவது போட்டுக் கொள்ளவேண்டும்
என்று தோன்றினால்,
"ஆரூரன் அடிமை" என்று போட்டுக்கொள்ளலாமே! எண்திசையும் புகழும்படி செங்கோல் ஓச்சிய ராஜ ராஜ
சோழனும், தன் பெயரை, " சிவபாதசேகரன்" என்று எவ்வளவு அடக்கத்துடன்
கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார் பார்த்தீர்களா?
இந்தக் காலத்தில் பத்திரிகைகளும் பட்டங்களோடு பெயர்களைக்
குறிப்பிடுவதில் முன் நிற்கின்றன. சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோரைக் குறிப்பிடும் பொது, "வெடிகுண்டு வெங்கடேசன்" " அரிவாள் அறிவழகன்" "புல்லெட் பூபதி" என்றெல்லாம் அடைமொழி கொடுக்கிறார்கள். சர்வதேச கொள்ளைக்காரர்களைக் குறிப்பிடும்போதும் இப்படித்தான்! தமிழகக் கோயில்களிலிருந்து தெய்வத் திருமேனிகளைக் கடத்தி விற்ற கொள்ளைக் காரனை
, சிலநாட்கள் முன்பு, ஒரு தமிழ் செய்தித் தாள், " கடத்தல் மன்னன்" என்று குறிப்பிட்டிருக்கிறது. விட்டால் "கடத்தல் திலகம்" " கடத்தல்
சக்கரவர்த்தி" என்றெல்லாம் குறிப்பிடுவார்கள் போலிருக்கிறது. அவன் எவ்வளவுக்கு விற்றான் என்பது பொது மக்களுக்குத் தெரிய வேண்டுமா? இப்படி சமூகத்தில் பொறுப்புடன் செயல் பட வேண்டிய பத்திரிகைகள் பரபரப்பான செய்தி
வெளியிடுவதாக நினைத்து மேன்மேலும் தவறுகள் நடக்கத் தூண்டுகோலாக மாறிவிடக் கூடாது.
இனிமேலாவது, இதுபோன்ற
பட்டங்களைத் தந்து மக்களின் மதியை மழுங்கச் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்
கொள்கிறோம். நம்மை எவ்வளவு
அடக்கமாக ஆக்கிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம். பல்லவனது பெருஞ்சேனையை நடத்திய சேனாபதியான பரஞ்சோதியார் தன்னைச் "சிறுத் தொண்டர்" என்றே கூறிக்கொண்டார். தான் செய்த சிவதருமங்களில் எல்லாம் தன் பெயரை எழுதாது, தான் வழிபடும் குருநாதரான திருநாவுக்கரசரின்
திருப்பெயரையே எழுதினார் அப்பூதி அடிகள். தனது திருப்பதிகம் ஒன்றின் நிறைவுப்
பாடலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
" .. அடி நாய் .." என்று தன்னைச் சொல்லிக் கொள்வதைக் காண்க. இதுபோலவே, மாணிக்க வாசகரும் " நாயிற் கடையாய்க்
கிடந்த அடியேற்கு.."
என்றும், " வேண்டேன் புகழ்.." என்றும் அருளியுள்ளார். ஆனால் நமக்கோ இதுபோன்ற பணிவு இன்னும் எத்தனை பிறவிகளுக்குப் பிறகு வருமோ தெரியவில்லை .
ஆலயங்களில் அடியார்களோடு இணைந்து கைத்தொண்டு செய்யும் போது
உயர்ந்த மனப்பான்மை சிறிது சிறிதாக நம்மைவிட்டு அகலுவதைக் கண்கூடாகக் காணலாம்.அடியார்க்கு
அடியானாகும் பண்பு மேலோங்கத் தொடங்குவதையும் காண முடிகிறது. “உனக்குப் பணி செய்ய உன்தன்னை
எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீ தா” என்றபடி,
அத்தகைய பண்பையும் பணிவையும் இறைவனே அருளவேண்டும்.
"இதுபோன்ற பணிவு இன்னும் எத்தனை பிறவிகளுக்குப் பிறகு வருமோ தெரியவில்லை"....மிகவும் இதயத்தை தொட்டவரிகள்...அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் சொல்லியது மிகவும் சிறப்பானது. சாலைகளில் நடக்கும் போது தலைவர்களின் பட்டங்களை கேட்டு கேட்டு காதுவலியே வந்துவிடும் போலிருக்கிறது...
ReplyDelete