Saturday, September 19, 2020

இன்னல்களை ஏற்கும் மனம்


 முகநூலாகட்டும், வாட்சப் ஆகட்டும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தது அதன் பயன். நமது நண்பர்களாக ஒத்த மனமும் செயல்பாடும் கொண்டவர்கள் அமையைப் பெறுவது இதற்கு மிகவும் அவசியமாகிறது. இவ்வளவு பார்த்துப் பார்த்து நண்பர் வளையத்தை அமைத்துக் கொண்டாலும் சில சமயங்களில் ஊடுருவல்கள் நிகழ்வதால் வெறுப்புக்கு ஆளாகிறோம். ஆனால் இத்தகைய ஊடுருவல்கள் சமயம், கலை, இசை போன்றவற்றில் அதிகமாகக் கலப்பதில்லை. தெரியாத பல தகவல்கள் பரிமாறப் படுகின்றன. பலரது மனக்குமுறல்களும் பிரச்சினைகளும் தெரிய வருகிறது. ஆனால் வலைப் பதிவுகள் பல படிப்போர் இல்லாமல் போவதும் உண்டு. நட்பு வளையத்தில் உள்ள பலர் படிப்பதோ பின்னூட்டம் இடுவதோ இல்லை. சில சமயங்களில் திருப்பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆலயங்களின் இடிபாடுகளைப் பற்றிப் புகைப்படங்களுடன் பதிவு செய்தாலும் அதிக பட்சமாக ஒரு " லைக் " போட்டு விட்டுக் கடந்து போய் விடுகிறார்கள். " வேலை வெட்டி இல்லாமல் " எழுதியவரின் மன நிலையைப் பற்றிக் கவலைப் படவா போகிறார்கள் ?   

முக நூலில் ஒரு அன்பர் திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களை அருமையாகக் குறிப்பிட்டிருந்தார். உபயதாரர்களை முன்னிலைப் படுத்தி அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பலரும் அறியும் வகையில் அவர் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. துரும்பைக் கூடக்  கிள்ளிப் போடாத பல அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களின் மிரட்டல்களைத் திருப்பணிக் குழுவினரும் உபயதாரரும் சந்திக்க வேண்டியிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இதில் பங்கு பெற்ற  அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களைக் கூடவே இருந்து பார்ப்பவர்கள் உள்ளூர்க் காரர்களும் ஆலய சிப்பந்திகளுமே ஆவார்கள். திருப்பணி செய்ய அனுமதி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிர்வாக அதிகாரிகள், வேலை நடக்கும்போது வருகை தருவதில்லை. கும்பாபிஷேகம் செய்யும் தேதியையும் இவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே தீர்மானிக்க வேண்டி உள்ளது. கும்பாபிஷேக யாக சாலை நிகழ்ச்சிகளிலும் இவர்களுக்கு அக்கறை இல்லை. கும்பாபிஷேகத்தன்று சௌகரியப்பட்டால் மட்டுமே வருவார்கள். அதிலும் ஆலய  முதல் மரியாதை தரப்படவேண்டும் என்பது என்னவோ எழுதப்படாத சட்டம். 

முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு ஒரு கிராமக் கோயில் சிவாச்சாரியார் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மையே ஆயினும், சிறு அணில் போல நாங்களும் இறைவனுக்குப் பணி  செய்கிறோம் என்று  எழுதியிருந்தார். எதார்த்தமாகச் சொல்லப்போனால் நாம் அனைவரும் அணில்களே ! ஒரு ஏழை அடியவன் இறைவனுக்குப் பூவும் நீரும் கொண்டு வந்து தர முடியும். ஒரு வகையில் அதுவும் அணில் சேவையே. அதைப் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றால் சுவாமிக்குச் செய்யும் பூஜையும் அத்தகையதே. பழுதுற்ற ஆலயத்தை இறைவன் தந்த செல்வத்தைக் கொண்டு திருப்பணி செய்யும் உபயதாரர் சேவைகூட அணிலின் செய்கை போன்றதே. நாம் ஒவ்வொருவரும் இறைவன் நமக்குத் தந்ததை அவனுக்கே அர்ப்பணிக்கிறோம். இத்தகைய மனோபாவம் இருந்துவிட்டால், மாலை, மரியாதை, கல்வெட்டில் உபாயதாரர் பெயர் பொறிப்பது போன்றவை எழ நியாயமே இல்லை.  ஆன்மீகப் பயணத்தில் ஏதோ வகையில் பணி செய்வதே முக்கியம் ஆதலால் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. 

அறியாமல் செய்த செயலையும் ஈசன் ஆராதனையாக ஏற்றுக் கொள்கிறான். ஆறறிவற்ற உயிர்களது செயலும் சிவாராதனையாக ஆகி விடுகிறது. வேதாரண்யம் கோயிலில் கருவறையில் விளக்கில் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தபோது அவ்விளக்கிலிருந்த எண்ணையை ஒரு எலி உண்ண வந்தது. அத்தீபத்தால் அதன் மூக்குச்  சுட்டிடவே, தனது மூக்கைத் திரியுடன் சேர்த்து வெளியே இழுத்துக் கொண்டது. அதனால் தீபம் மேலும் பிரகாசமாக   எரியவே, தீபத்தை மேலும் தூண்டியதாக இறைவன் அதனை ஏற்றுக் கொண்டு, அவ்வெலியை மறு  பிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக்கினான் என்பது வரலாறு. திருவானைக்காவலில் சிலந்தியும், யானையும் அருள் பெற்றதும் இந்த அடிப்படையில் தான்.

ஆன்மீகவாதிக்கு அடக்கமும், பலன் எதிர்பாராத மனமும், பிறர் துயர் கண்டு உதவும் கொள்கையும்  , எதிர்ப்புக்களைக் கண்டு சலியாத மனமும், எல்லாம் சிவன் செயலே என்ற தெளிந்த சிந்தையும் இன்றியமையாதவை. இவை எல்லாம் இறைவனது அருட்கொடைகள். தன்னிச்சையால் நடைபெறுவன  அல்ல. இதையே அப்பர் பெருமானும், " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் " என்று அருளிச் செய்தார். " பழித்து இகழ்வாரையும் உடைய பெருமானுக்கு யாரை ஆட்கொள்வது யார் மூலம் பணி கொள்வது என்பது தெரியும். அவனன்றி எதுவும் நடை பெற இயலாது என்பதை மாணிக்கவாசகரும்.

" ... சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே, ஒன்று நீயல்லை அன்றி ஒன்று இல்லை, யார் உன்னை அறியகிற்பாரே " என்றருளியமை காண்க.

 அதுபோலவே,திருப்பணியில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்களையும் இன்னல்களையும் ஏற்கும் மனத்தையும் இறைவன் நமக்குத் தந்தருளவேண்டும். அவ்வருள் கிட்டி விட்டால் இப்பிறவி தூய்மை பெற்று விடுகிறது. " என் கடன் பணி  செய்து கிடப்பதே " என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. 

  


.     

Saturday, September 5, 2020

சொல்லாமல் சொன்ன ஞானாசிரியர்


 நல்லாசிரியர் என்பவர் யார்?  மாணவர்களால் பெரிதும் விரும்பப்படுபவரா, அல்லது  வகுப்பிலுள்ள அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்பவரா அல்லது தேச பக்தியையும் நன்னெறியையும் போதிப்பவரா அல்லது மற்ற ஆசிரியர்களை விடச் சிறந்தவரா என்பதில் , எந்தவகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம். நல்ல ஆசிரியருக்கான அடையாளம் எது என்பது இன்னமும் முழுமையாக வரையறுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. 

பள்ளியை விட்டு அகன்றவுடன் எத்தனை மாணவர்களும் பெற்றோரும் அவ்வாசிரியர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்? வெகு சிலரே !! படிக்கும்போதே நல்லொழுக்கம் இல்லாத மாணவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களைத் திருத்த வகை அறியாமல் மனம் நொந்து போகிற ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். என்னதான் திறமையாகப் பாடம் நடத்தினாலும் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இக்காலத்தில் மிகவும் கடினம். 

சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் வரும்போதே மாணவர்களது முகத்தில் குதூகலம் தெரிவதைக் கண்டிருக்கிறோம். அதே சமயம் சில பரம சாதுவான ஆசிரியர்கள் வந்தால் கூச்சல் போடுபவர்களையும் பார்க்கிறோம். மதிப்பும் மரியாதையும் அவர்கள் வாயைத் திறந்து பாடம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தானாகவே ஏற்படுவது. அவர்கள் கற்பித்த பாடத்தைக் கேட்டு அமைதியாக மணி ஒலிக்கும் வரை இருக்கும் மாணவர்களைக் காணும் போது அந்த ஆசிரியரைப் பாராட்டவே தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். வீண் பேச்சைத் தவிர்ப்பவர்கள். மாணவர்கள் நலன் ஒன்றையே கருதி அவர்களை உயர்த்த முயற்சிப்பவர்கள். 

தக்ஷிணாமூர்த்தியாக இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றியபோது சனகாதி முனிவர்கள் பெருமானது சின்முத்திரையைப் பார்த்த மாத்திரத்தில் தெளிவு பெற்றதாகத் திருவிளையாடற்புராணம் கூறுகிறது. பெருமான் தனது திருவாயைத் திறக்காமல் சின்முத்திரை காட்டியே உபதேசம் செய்தார் .

கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை, ஆறங்கம், ஆகியவற்றில் வல்ல நான்கு முனிவர்களுக்கும் வாக்குக்கு அப்பாற்பட்ட பரிபூரண மௌன நிலையில் , அனைத்துமாகி அதே சமயம் அல்லதுமாகி எல்லாப் பொருள் உண்மைகளையும் தனது சின் முத்திரையால் காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நாமும் நினைந்து இப்பிறவித்  தொடரை வெல்வோமாக என்று  அப்புராணத்தில் வரும் பாடல் இதையே காட்டுகிறது. 

அறுபதுகளில் ஆறாண்டுகள் எனது தாயாரது பெற்றோரிடம் தங்கி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில்  படித்துக் கொண்டிருந்தபோது  வகுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீ நாக சுப்பிரமணிய அய்யர் அவர்கள். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளமே பெற்று வந்தார்கள். வீட்டு வாடகைக்கும் பிற செலவுகளுக்கும் அது போதாததாக இருந்தது.அப்படிப்பட்ட வறுமையிலும் மிகக் கடினமாக உழைத்த உத்தமர்கள் அவர்கள். ஒருநாள் அவருக்கு வறுமையின் கொடுமை மேலும் பாதிக்கவே, வகுப்பறையில் மாணவர்களாகிய எங்களிடம் தழுதழுத்த குரலில், " நான் மிகவும் வறுமையால் கஷ்டப் படுகிறேன். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பன்னிரண்டு ரூபாய் கடனாக வாங்கித் தர முடியுமா " என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்தது. எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. 

எனது பெற்றோர்கள் சென்னையிலிருந்து வரும்போது எனக்கு ஒரு ருபாய் கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம். ஏதாவது தின் பண்டங்கள் வாங்கிச் சாப்பிடட்டும் என்பதற்காக அப்படிக் கொடுத்து வந்தார்கள். ஆனால் நானோ அதைச்  செலவழிக்காமல் ஒரு டப்பியில் போட்டு வைத்திருந்தேன். ஆசிரியருக்கு அதிலிருந்து எடுத்துக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது.   டப்பியிலும் அவர் கேட்ட அளவு சில்லரை இருந்தது. மறு நாள் அதை எடுத்துக் கொண்டு ( வீட்டில் யாரிடமும் சொல்லாமலே) பள்ளிக்குச் சென்றேன். அதைக் கொடுக்கும் முடிவை சக மாணவர்களிடம் சொன்னபோது அவர்கள் என்னைத் தடுத்தனர். " கொடுத்தால் திரும்பி வராது. பட்டை நாமம் தான் " என்றார்கள். நானோ, " எதற்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் ? ஆசிரியருக்கு நமது பாத காணிக்கையாக இருக்கட்டுமே"  என்றேன். அவர்களோ ஏளனம் செய்தனர். அது என்னைப் பாதிக்கவில்லை. ஆசிரியரின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணி ஒலித்ததும் ஆசிரியர், சோர்ந்த முகத்துடன் வகுப்பில் நுழைந்தார். அவர் அமர்ந்தவுடன் அவர் அருகே சென்று அந்த பன்னிரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவரிடம் கொடுத்தேன். உடனே எனது இரு கரங்களையும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார். அவரை எப்படிச்  சமாதானம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவாறு சமாதானம் அடைந்த ஆசிரியர், " உன்னுடைய இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீ வாழ்நாளில் நன்றாக இருப்பாய். இந்தப் பணத்தைக் கண்டிப்பாக அடுத்த மாதம் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் முன்போலவே ஏளனம் செய்தனர். " விடாதே இந்த மாதம் போய் அவரிடம் திருப்பித் தரும்படி கேள் " என்று தூண்டி விட்டார்கள். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "அவருக்கு எப்போது முடியுமோ அப்போது கொடுக்கட்டும். இல்லாவிட்டாலும் நான் முன் சொன்னபடி அதைக் குரு  காணிக்கை என்று நினைத்துக் கொள்கிறேன்" என்றேன். ஆனால் ஆசிரியருக்கோ தன்னால் திருப்பித் தர முடியவில்லையே என்ற எண்ணம் இருந்து வந்தது. துக்கம் தொண்டையை அடைக்கும்படி அவரே ஒருநாள் இதைக் கூறி விட்டார். அதற்குப் பிறகும் அவரை மேலும் வருந்தச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசி வரை அவரிடம் அது பற்றிப்  பேசவே இல்லை. ஆனால் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்று விட்டது போன்ற உணர்வு அன்றுமுதல் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது. அவரை இன்றும் நினைத்து நெகிழ்ந்து ஆசிரியர் தினத்தன்று  அஞ்சலி செய்வதல்லால் அவருக்கு இந்த அற்பன் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும் ?  


   

Thursday, September 3, 2020

தகவல் அறிய முன்வருவோமா ?


 பொதுவாகவே நம் மக்களுக்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. சட்ட நுட்பங்கள் தெரியாவிட்டாலும் சட்டத்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகக் கூடத்  தெரிவதில்லை. அதே நேரத்தில் அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்து நீதியின் முன் நிறுத்தப்படும்போது எனக்குச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றால் சட்டம் நம்மை மன்னிக்காது. நம்மைச் சுற்றிலும் பல குற்றங்கள் நடக்கும்போதும் சட்ட வல்லுனர்களும் காவல் துறையும் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடுகிறோம். பள்ளிகளில் சட்டத்தின் அடிப்படைகளையாவது வாழ்க்கைக்குப் பயன் படும் அளவில் கற்பிக்கலாம். அரசின் கட்டுப்பாட்டில் கல்வி, காவல், நீதி ஆகியவை இருக்கும்போது ஆட்சியாளர்களின் கொள்கைகள் அவற்றில் புகுத்தப்பட்டு அதுவே சட்டமும் ஆகி விடுகிறது. 

இந்து அறநிலையத் துறை எதற்கு என்று அதைச் சட்டம் ஆக்கிப் பல ஆண்டுகள் கேள்விகளை எழுப்பாமல் இப்போது எழுப்பத்  தொடங்கியுள்ளனர். எந்த வழக்கும் அவ்வளவு எளிதில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் அறநிலையத் துறையயைப் பற்றி யார் கவலைப் படப்  போகிறார்கள்? அந்த தைரியத்தில் தான் அக்கிரமங்கள் தொடர்கின்றன. வழக்குத் தொடுத்தால் தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டுமோ தெரியாது.

இந்து அற  நிலையத்துறை  பற்றிய சட்டத்தைப் படித்தவர்களுக்காவது அதை எடுத்துக் காட்டி வழக்காடத் தோன்றவில்லை இத்தனை காலமும். இதற்கு இப்போதாவது ஒரு சிலர் முன் வந்து நீதி மன்றத்தை நாடியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தி ஆகும். தகவல் அறியும் சட்டம் என்று ஒன்று இருப்பதே அநேகருக்குத் தெரிவதில்லை. அதன் மூலமாகவாவது விவரங்களை அறியவும் அதற்கேற்ப வழக்குத் தொடுக்கவும் முடியும். ஆனால் வழக்குக்கான செலவை யாரும் ஏற்கத்  தயங்குவதால் விடியும்  காலம் அவ்வளவு எளிதில் உதயமாகும் என்ற நம்பிக்கை ஏற்படுவதில்லை. 

ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெறும் வாயால் புலம்பிக்கொண்டு இருந்து கொண்டு அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க முன்வருவதில்லை. மடாலயங்களும், வசதி படைத்த ஆத்திகர்களும் முன் வரலாம். அதுகூட இத்தனை ஆண்டுகளும் நடக்காதபோது ஏழை அடியார்கள் இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?   அவரவர்களுக்கு அவரவர் கவலை. தங்களை எக்காலத்திலும் பாதுகாத்துக்  கொள்வதே அவர்களது கவலை. 

ஆத்திக உலகம் ஒன்றுபட்டால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பே இல்லை. அறநிலையத்துறைக்கு மாற்று ஒன்று அமையும் வரை இறைவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடப்போகிறார்களா? மற்றொரு அமைப்பை மக்களே வகுத்துக் கொண்டு கோயில்களையும் அவற்றின் உடைமைகளையும் பாதுகாக்க முடியாதா ? அந்த அமைப்பில் சட்ட வல்லுநர்கள் இடம் பெற்றால் வாதிடுவதற்குச்  செலவழிக்க வேண்டுமே என்ற கவலை இருக்க முடியாது அல்லவா ? அவ்வல்லுனர்களும் மகேசன் பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்யும் புண்ணியம் பெறலாமே. 

இந்து அற  நிலையத்துறையின்  கீழ் தற்போது 44120 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 36000 கோயில்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 10000 கூட இல்லை என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அத்தனை கோயில்களுக்கும் நிலங்களும் கட்டிடங்களும் இருந்தும் இவ்வளவு வருமானம் தான் வருகிறது என்றால் இதற்கு யார் காரணம்? பொறுப்பு ஏற்காத வரை அற நிலையத்துறை எதற்கு என்று கேட்பது நியாயம் தானே ! 

உண்டியல் முதலியவற்றால் பண மழை கொட்டியபோதிலும் வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் இத்துறையால் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் பணி  செய்பவர்களுக்கோ அற்ப சம்பளமும் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை. அந்த அப்பாவிகள் உருட்டல்களையும் மிரட்டல்களையுமே சந்தித்து வருகிறார்கள்.   அதிகார துஷ்பிரயோகமும், ஊழல்களும் சிலை கடத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் தொடர் கதைகள் ஆகி விட்டன. 

கூடிய சீக்கிரமே இறை சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி இதற்கான செயல் முறையை வகுக்க வழி காண வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு வரும்வரை இன்னும் எத்தனை முறைகேடுகள் நடைபெறுமோ  தெரியவில்லை. அதைத் தடுப்பதற்காகவாவது மற்ற வேலைகளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.செய்வார்களா? ( செய்யத் துவங்குவோமா என்று கேட்பதே பொருத்தம் )  ஒவ்வொரு ஊர் மக்களும் தகவல் அறியும் சட்டம் மூலம் அந்தந்தக் கோயில்கள் பற்றிய விவரங்களை அறிய முன்வர வேண்டும். அப்போதாவது நல்ல காலம் பிறக்குமா என்று பார்ப்போம். இறைவன் துணை நிற்பான்.

Wednesday, August 12, 2020

என்று அகலும் இந்தத் துவேஷம் ?


 சமயப்பொறை, அழுக்காறு, அவா இன்மை, வெறுப்பின்மை ஆகியவற்றைக் காலம் காலமாகப் போதித்தும் கடைப்பிடித்தும் வரும் நாடு இது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். மிகக் கடினமான கால கட்டங்களைத் தாண்டி வந்தும் நமது அடிப்படைக் கொள்கைகள் மாறாததன் காரணம், இது முனிவர்களும் சித்தர்களும் வாழ்ந்த தெய்வீக பூமி என்பதாகும். இவ்வளவு இருந்தும் இதற்குச்  சோதனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பேராசையே இதற்கு முக்கிய காரணம் எனலாம். ஆகவேதான் மாணிக்கவாசகப் பெருமானும் , " பேராசையாம் இந்தப் பிண்டம் அற " எனப் பாடினார். பல்லாயிரம் கோடிகள் ஈட்டியவர்களுக்கும் அப்பேராசை விடுவதாக இல்லை. ஆட்சி பீடத்தில் இருந்தால் கோடிகள் கொட்டும் என்று ஆகிவிட்டது. அதற்காக எதையும் செய்யத்துணிந்து விட்டனர். 

தமது வேட்கைக்குத் தடையாக இருப்பவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களை ஏசுவது அன்றாடம் நடைபெறுகிறது. அது மட்டுமல்ல. எதிலும் ஈடுபடாமல் சிவனே என்று இருப்பவர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இத்தனைக்கும் அவர்களது ஆதரவு இல்லாமலும் தங்கள் நோக்கம் நிறைவேறும் என்று அறிந்தும் தூற்றுதல் தொடர்கிறது. அதைப் பார்த்துவிட்டு, அவர்கள் வழி நிற்போரும் துவேஷத்தை உமிழ்கிறார்கள். பிளவு ஏற்படுத்தத்  துடிக்கும் கழுகுகள் வேறு உன்னிப்பாகக் காத்திருக்கின்றன. " நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே " என்ற வாக்கை அவர்கள் உணரப்போவது எப்போது? 

சமயத்தின்  ஏற்றத்தைப் பற்றியே பதிவிடும் நாம் சர்ச்சைகளுக்குள் புக விரும்பாவிடினும் சிலவற்றைத் தெளிவு படுத்தும் கடமையை மட்டுமாவது செய்ய வேண்டும் எனது தோன்றுகிறது. அந்த வகையில் அவ்வப்போது நிகழும் விரும்பத்தகாதவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதில் தவறில்லை என்று கருதுகிறோம்.

சமூக வலைத்தளங்களை நல்ல பயன்களைத் தரும் வகையில் உபயோகிக் காமல்   ஒருவரை ஒருவர் பழிக்கும் வகையில் ஈடுபடும் சிலரது பதிவுகளால் பாதிப்புக்கள் அதிகம். சமய நூல்களை அதிகம் கற்காத பாமர மக்கள் அவற்றை உண்மை என்று நம்பித் தாமும் அச்செயல்களில் ஈடு படுகின்றனர். 

அண்மையில் ஒரு அன்பர், நம்  நாட்டில் நிலவும் துவேஷ எண்ணங்களைக் கண்டித்துச் , சிறப்பான வகையில் தனது முக நூல் பதிவு ஒன்றில்  குறிப்பிட்டிருந்தார்.நல்லெண்ணம்  கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டிய பதிவு அது. அதைப் படித்த ஒருவரோ, யாரும் எதிர்பாராத வகையில் மாற்றுக்  கருத்து என்ற பெயரில் துவேஷத்தை உமிழ்ந்திருந்தார். அந்தணர்கள் வலையில் அந்த அன்பர் வீழ்ந்து விட்டதாகப்  பின்னூட்டம் அளித்திருந்தது வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

சமயம் பற்றி எதுவுமே அறியாத நிலையில் வாய்க்கு வந்தபடி பேசுவதும் ஏசுவதும் தட்டிக் கேக்க எவருமே இல்லாததால் தொடர்கின்றன.சமய அறிவு உள்ளவர்களும் ஒதுங்குவதால் இவர்களது ஆட்டம் தொடர்கிறது. சமய நூல்களைக் கசடறக் கற்று விட்டுப்  பின்னூட்டம் இடுவதை விடுத்து, அபாண்டமாக எந்தப் பிரிவினரையும் இழித்துப் பேசுவது முறை ஆகாது. 

அறுபத்து மூவரில் ஒருவரான அப்பூதி அடிகள் நாயனார் ஓர் அந்தணர். அவர்   சிவபெருமானுக்கும் சிவனடியாருக்குத்  தொண்டு செய்வதொன்றையே  குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். திருவதிகையில் சிவபெருமானது அருளால் சூலை நோய் நீங்கப்பெற்ற திருநாவுக்கரசரைக்  குருநாதராக ஏற்று அவரைக் காண வேண்டும் என்ற பெரு விருப்போடு வாழ்ந்தார். தனது மக்களுக்கு மட்டுமல்லாது தான் செய்யும் சிவ தருமங்களுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்து வந்தார். 

திருத்தல யாத்திரையாக திருப்பழனம் வந்தடைந்த நாவரசர், அங்கிருந்த தண்ணீர்ப்பந்தல்  முதலியவற்றில் தனது பெயர் இருத்தல் கண்டு அங்கிருந்தோர் மூலம் அருகிலுள்ள திங்களூரில் இருந்த அப்பூதி அடிகள் என்ற அந்தணர் செய்யும் சிவதருமங்கள் அவை என அறிந்தார். அப்பூதியாரைக் காண வேண்டித் திங்களூரை அடைந்தார். வந்தவர்,  தான் அனுதினமும் வணங்கும் நாவரசர் என்று அறிந்தவுடன் தனது சுற்றத்தாருடன் அப்பர் பெருமானின்திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அப்பரும் அப்பூதியாரை  வணங்கி மகிழ்ந்தார் என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது. இப்படி ஒரு தெய்வீக நிகழ்ச்சியை எண்ணி எண்ணி நமது வேற்றுமைகளை உதறி  எறிந்து , ஈசன் கருணையை மட்டுமே நினைந்து மகிழ வேண்டும். அதை அறியாமல் முகநூலில் பின்னூட்டம் இட்டவர், அப்பர் பெருமான் அந்தணரது வலையில் வீழ்ந்தார் என்று நா கூசாமல் கூறுவாரா ? 

அவருக்கு ஒன்று மட்டும் கூறி அமைகிறோம். நமது சமயத்தில் உள்ள நல்லிணக்கம் தரும் நூல்களைக் கற்று உணருங்கள். வாய் வாழ்த்துவதற்காக மட்டும் இருக்கட்டும். தூற்றுவதற்காக அல்ல. 












Saturday, August 1, 2020

எது கற்பு ?

வலைத்தளப் படம் 
தமிழிலும், வடமொழியிலும்  பல சொற்கள் பல பொருள்கள் கொண்டனவாக இருப்பதை அறிஞர் உலகம்  அறியும். தமிழ்க்  கல்வியின் தரம் தாழ்ந்துவிட்ட இக் காலத்தில் மேலெழுந்தவாரியாகவே பொருள் கொள்பவர்கள் பலர் உளர். பாடத்  திட்டத்திற்கு அப்பால் இருக்கும்  அரிய பொக்கிஷங்களை அறியும் ஆர்வமற்ற மாணவர்களையே நமது கல்வித்துறை உருவாக்குகிறது.  பாடத்  திட்டக்  குழுவினரோ அரசின் கைப்பொம்மைகள் ஆகி விடுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற  மாணவர்களின் தமிழறிவை  நோக்கினால் பரிதாபப்பட வேண்டியுள்ளது.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ப்பாட நூல்கள் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் முன்னிறுத்திப்  பிழையறக் கற்கும் முறையைப் பின்பற்றிவந்ததை அத்தலைமுறையினர் நன்கு அறிவர். ஆனால் வல்லினம்,இடையினம் பற்றியே முழு அறிவு பெறாத மாணவர்கள்   தற்காலத்தில் பிழை மலிய எழுதுவதைப்  பார்க்கிறோம் . அக்காலத்தில் லகர- ளகரங்களைப் பிழை இல்லாமல் தெளிவாக உச்சரிக்கவும் ஆசிரியப்  பெருமக்கள் துணை செய்தனர். இப்போதோ மாணவர்கள் மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பவர்களும் பள்ளி என்பதைப் பல்லி என்பது போன்ற  பல சொற்களைக் கொலை செய்கின்றனர்.

 புலவர் பட்டம் பெறுவது என்பது கொடுக்கப்பட்ட நூலைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும் என்று ஆகி விட்டது.   அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல  நூல்களிலிருந்து எடுத்துக் கோர்த்துக் கட்டுரை வழங்கிவிட்டால் அது ஆய்வுக் கட்டுரை ஆகி விடும். முனைவர் பட்டமும் கிடைத்துவிடும். சில வெண்பாக்களை இயற்றிவிட்டால் அவரைப் புலவர் என்கிறார்கள். அதற்குப் படைப்பு என்ற சிறப்புப் பெயரும் தாராளமாகக் கொடுக்கப்படுகிறது. நல்லவேளையாக இப்போது தவறான பாடல்களைக் கண்டிக்க நக்கீரரோ , ஒட்டக்கூத்தரோ இல்லை ! இலக்கண மரபை மீறினால் என்ன ? கவிதை என்று சொல்லிவிட்டால் போகிறது என்ற துணிவும் வந்து விடுகிறது.

கல்வித்துறையில்  அரசியலும்  நாத்திகமும் புகுந்து விட்டபடியால் ஆட்சியாளர்களின் கொள்கைகள் பாடப் புத்தகத்தில் திணிக்கப்படுகிறன . அண்மையில் ஒரு மூத்த தமிழறிஞரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அதில் , முழுமையான தமிழறிவு பெறப் பக்தி இலக்கியப்  பயிற்சி ஒன்றே துணை செய்யும் என்று வலியுறுத்திக் கூறினார். ஏராளமான தமிழ் நூல்கள் பக்தி சார்ந்தவைகளே. ஆனால் அரைகுறைத் தமிழ் அறிவோடு பக்தி இலக்கியங்களைப்  பழிக்க முன்வருவோருக்கு எப்படிப் புரிய வைப்பது ? 

ஒரே சொல் பல பொருள்களைத் தருமாறு அமைந்திருப்பது பற்றி மேலே கூறினோம். எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் இடம்  கருதிப் புரிதலுக்காகச்  சிலவற்றையே இங்கு எடுத்துக் காட்டுகிறோம்:

பணம் என்ற சொல் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெயரைக் கேட்ட மாத்திரத்தில் வாயைப் பிளக்க வைக்கும் சக்தி உடைய சொல்லல்லவா அது ! அதற்குப் பாம்பு என்ற பொருளும் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? " கரும் பணக் கச்சைக் கடவுள் "  என்று சிவபெருமானைத் திருவாசகம் குறிப்பிடுமிடத்தில் அதற்கு, கரிய பாம்பைக் கச்சையில் இருத்திய கடவுள் என்பது பொருள். பணக்கட்டுக்களை இடுப்பை விட்டு எடுக்காத லோபிகளுக்கு இந்தப் பொருள் எங்கேயிருந்து உதிக்கும் ? நிலையில்லாத செல்வத்தைக் கொண்டாடுபவர்கள் அதுவே பாம்பின் விஷமாக அவர்களைக் கொல்லக் கூடியது என்ற மறை பொருளை எங்ஙனம் சிந்திந்திப்பார்கள் ? அதனை அடக்கி ஆளக்கூடியவன் இறைவன் ஒருவனே என்பது மற்றொரு மறைபொருள்.  வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனுக்கே அது சாத்தியம்.

பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழறிஞர் கூறியதையும் இங்குப் பகிர்கிறேன். திருவள்ளுவர் காலத்தில் கழகம் என்பதற்குச் சூதாடும் இடம் என்ற பொருள் இருந்தது என்றார் அவர். ஆனால் இப்போதோ பல துறைகளின் பெயர்களில் கழகமே இருக்கிறது. இவர்கள் பண்டை நூலறிவு உடையவர்களாக இருந்தால் இவ்வாறு பெயர் சூட்டத் தயங்குவர். எனவே காலச் சுழற்சியால் ஒரு சொல்லுக்கு வேறு பொருள் சொல்லப்பட்டு விடுகிறது என்பதை அறியலாம்.

கற்பு என்ற சொல் பெண்ணுக்கு உரியதாகக் கருதப்பட்ட போதிலும் ஆணுக்கு மட்டுமல்லாமல் தான் வழிபடும் ஒருவனே தேவன் என்று அசையாத உறுதியோடு நிற்பவனுக்கும் உரிய பொதுச் சொல் என்பதை அறியாதவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் போல் பேச வந்து விடுகிறார்கள். மாறாத சிந்தையைக் குறிப்பதாக இச் சொல் அமைகிறது. நமது எண்ணம் அடுத்தவருக்கும் இருக்கும்போது இருவரும் மாறாத கொள்கை உடையவர்கள் என்கிறோம். அதுவே கற்பு. கணவன் நினைப்பதையே தானும் கருதுதல் ஆதலால் அக் கற்பு , பெண்ணுக்கும் உரியதாகி விடுகிறது. தனது அடியார்களுக்கு அருள வேண்டும் என்று முருகப்பெருமான் எண்ணும் போது, அதில் சற்றும் மாறாத எண்ணம் உடையவள் வள்ளி நாயகி ஆதலால் அவளைக் கந்த புராணம், " மாறிலா வள்ளி வாழ்க " என்று போற்றும்.

இக் கற்பாவது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஒரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அதில் முழுவதும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் அதுவே கற்பாகிறது. மற்றொரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சித்தாந்தம் தவறெனச் சுட்டிக் காட்டி அவரது சித்தாந்தம் வெல்லப் படும்போது தோற்றவரின் சித்தாந்தமாகிய கற்பு அழிக்கப்பட்டோ நீக்கப் பட்டோ முடியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதைத் தான் திருஞானசம்பந்தரது ஆலவாய்ப் பதிகம் உணர்த்தியுள்ளது. அவ்வளவே. இதனை அறியாமல் வாதம் செய்ய வந்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் ஞானத் தமிழ் நூல்கள் பலவற்றை அடிப்படையிலிருந்து கற்றுத் தெளிய வேண்டும். குறைந்த பட்சமாக, திருமுறைகளே சைவக் கருவூலம் என்று சொல்லும் அடியார் பெருமக்களாவது, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து ஓத வேண்டும். 





Wednesday, July 22, 2020

சுப்ரமண்யனும் முருகனும் ஒன்றே

இறைவன் அநாதி என்பது போல உயிர்களும் அநாதி என்பது சித்தாந்தக் கொள்கை.அதேபோல ஆன்மீகம் தோன்றிய காலத்திலேயே நாத்திகமும் இருந்திருக்க வேண்டும். இறைவனது திருவுள்ளமும் ஒருவேளை அதுபோல இருக்கலாம்." நாத் தழும்பு ஏற நாத்திகம் பேசினர் " எனக் கூறும் மாணிக்கவாசகரே , உயிர்கள் பலவடிவெடுத்து உழன்ற பின்னர் வினை நீக்கம் வரும் காலத்தில் " தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி "  அவனருளால் தூய்மை செய்யப்படுவதை விளக்குகிறார். நமக்கு அதிகமாகத்  தெரிந்ததெல்லாம்  நாம் வாழும் காலத்தில் ஆன்மீகமும் நாத்திகமும் எப்படி உள்ளன என்று அறிய முடிந்ததே ஆகும்.

நாஸ்தி என்பதற்கு இல்லை என்று பொருள் சொல்வார்கள். இறைவன் இல்லவே இல்லை என்றும் அவன் கற்பிக்கப்பட்டவன் என்றும் வாதிடும் நாத்திகர்களை இன்றும் பார்க்கிறோம். சிலரோ நாத்திகத்தை வாய் விட்டுப் பேசாமல் ஆத்திகத்தையும் ஆதரிக்காமல் கடவுட் கொள்கையில் ஏதும் தெரியாமலும் காலத்தைக் கழிக்கிறார்கள். அவர்களும் ஒருவகையில் நாத்திகர்களே.

நம் தேசத்து ஆன்மீகத்திற்கும் பிற நாடுகளின் ஆன்மீகத்திற்கும் வேறுபாடு உண்டு.நம் நாட்டிலுள்ளோர் பிறரது நம்பிக்கையைப் புண்படுத்தாமல், பிறரது கொள்கையைப் பழிக்காமலும் இருப்பவர்கள். ஆனால் அயலவர்களோ நமது கொள்கையை ஏற்காததோடு அவர்களது கொள்கையைப் பிறருக்கும் புகுத்தி அவர்கள் பால் ஈர்ப்பதில் வல்லவர்கள். எந்தக் கொள்கையையும் அறியாதவர்கள் அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி அம்மாயையில் வீழ்ந்து விடுகிறார்கள். சமீப காலமாக அவர்களால் தரப்படும் அனுகூலங்களுக்கு ஆசைப்பட்டு நம் சமயத்தை ஏசவும் துவங்கி விட்டனர்.

சமூக வலைத்  தளங்கள் மூலம் ஆன்மீகமும் நாத்திகமும் பரப்பப்படுவதைப் பலரும் அறிவர். யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் அவற்றின் மூலம் பேசத்  தொடங்கி விடுகின்றனர்.நமது புராணங்களும் தோத்திர நூலகளும் பழிக்கப்படுகின்றன. ஒற்றுமையாக இதனை எதிர்த்துக் குரல் கொடுப்போர் மிகக் குறைவாக இருப்பதால் நாத்திகர் கை  ஓங்குகிறது. அனுகூலங்களால் ஆன்மிகர்களும் கவரப்பட்டு நமது தெய்வங்களைப் பழித்தும் மாறுபடுத்திப் பேசியும் வருகின்றனர்.

சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பேசியிருக்கிறார். எப்படித்தான் அவரது சிந்தையில் இப்படிப்பட்ட கருத்துக்கள் உதயமாகின்றதோ நாம் அறியோம். ஏதும் அறியாத நடு நிலையாளர்களுக்கு இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகவே தோன்றுகிறது. இல்லாவிட்டால் அவர் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க முடியுமா ? இக்கண்டுபிடிப்பு நாத்திகர்களுக்கு அல்வா கொடுத்த மாதிரி..

முதலில் அவர் இதைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டார் என்று பார்ப்போம். முருகன் தமிழ்க்  கடவுள் என்பதால் சுப்ரமணியன் என்ற பெயர் இருக்க நியாயமில்லையாம். பண்டைத் தமிழ் நூல்களில் அப்பெயர் காணப்பட வில்லையாம். பிற்காலத்தில் இவ் வடமொழிப் பெயர் புகுத்தப்பட்டதாம் ! நாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கம் கடல் சீற்றத்தால் அழிந்தபோது ஏராளமான தமிழ் நூல்கள் அழிந்ததாகவும். கவிராயர் பலரது வீடுகளிலிருந்து பழைய ஓலைச் சுவடிகள் ஆற்றில் எறியப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. அப்படியாயின் அவற்றில் சுப்ரமணியன் என்ற பெயர் இடம்பெற்ற நூல் மறைந்திருக்கலாம் அல்லவா ?

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்  நூல் ஒன்றில் சுப்ரமணியன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டினால்  இவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் சேந்தனார் என்பவர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது. திருவிடைக்கழி என்ற தலத்திலுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற பதிகம் அது. அதில்  வரும் ஒரு பாடலில் " சுப்பிரமணியன் " என்று முருகப் பெருமான் குறிப்பிடப்பெறுகிறார்.அதே பதிகத்தில்  வேறோர் பாடலில் " சுவாமி " என்ற வட மொழிப் பெயரும் காணப்படுகிறது. அமர சிம்மன் என்ற ஜைனன் வடமொழியிலியற்றிய அமர கோசம் என்ற அகராதியில் சுவாமி என்ற சொல்லுக்குப் பொருள் முருகக் கடவுளையே குறிப்பதாகக் காணப்படுகிறது. இதனால் சுவாமி என்றாலும் சுப்ரமணியன் என்றாலும் முருகனைக் குறிப்பதாகக் கூறும் இத் தமிழ் நூலைக் காட்டிலும் வேறு ஆதாரம் என்ன வேண்டும் ?

அதே பதிகத்தில் தூய தமிழ்ச் சொற்களாலும் கந்தப்பெருமான் காட்டப்படுகிறார். அவையாவன: " மலையான் மதலை " குமர வேள் ",  வள்ளி மணாளன் " " நங்கை யானைக்கும் குழகன் " , " வேலுலாம் தடக்கை வேந்தன்  " வேற்  செல்வன் ", " பன்னிரு நயனத்து அறுமுகத்து அமுது " , " கிரி தனைக் கீண்ட ஆண்டகை" , "தொகை மிகு நாமத்தவன் " " சூர் மார்பினைத் தடிந்தோன் " என்பவை அவற்றுள் சிலவாம்.

தமிழ் முருகன் என்று பிரித்தும் திரித்தும் கூறும் அச் சொற்பொழிவாளர் அம்முருகனது தாய் தந்தையர் யார் என விளக்குவாரா? சுப்ரமண்யனை வட நாட்டவராகக் கூறினால் அப்பெருமானின் பெற்றோர் சிவ பார்வதி ஆகி விடுவர். அப்படியானால் தமிழ் முருகனின் பெற்றோர் யார் ? அறிவீனத்தின் உச்சம் தொடப்படுகிறது. ஆனால் திருவிடைக்கழி முருகனது உறவினர் யார் என்று சேந்தனார் அடையாளம் காட்டும் அழகைப் பாருங்கள் : " புரம் பொடி படுத்த மலை வில்லி தன் புதல்வன் " ( திரிபுரம் எரி  செய்த அச்சிவனது குமாரன் ),     " மலை மகள் மதலை", " கங்கை தன்  சிறுவன் "  " மான் அமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை " ( கையில் மான் ஏந்திய சிவபிரானது பிள்ளை); " " இளம் பிறைச் செஞ்சடை அரன் மதலை" ( பிறைச்  சந்திரனை சிவந்த சடையில் ஏற்ற சிவபெருமானின் மகன்); " கணபதி பின் இளம் கிளை " ( கணபதிக்குப் பின் தோன்றியவன் ) ; என்ற சொற்களால் திருவிடைக்கழி முருகனும் திருக்கயிலாயத்து சுப்ரமண்யனும் ஒருவரே என்று சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி சேந்தனார் பாடி அருளியுள்ளார்.

இறைவன் எல்லா மொழியாலும் வணங்கப்படுபவன்.  " தாய் மொழியாகத் தூய் மொழி அமரர் கோ மகனை " என்ற சொற்றொடர் இதனைச் சுட்டிக் காட்டுகிறது. " தொகை மிகு நாமத்தவன் " என்பதால் அளப்பரிய ஆற்றல் உடைய ( " அசிந்த சக்தயே நம: என்றே  சுப்பிரமணிய ஸஹஸ்ரநாமம் துவங்குகிறது). பரம்பொருளை ஒரு குறுகிய வட்டத்தில் அடக்குவதா? இதுதான் சொற்பொழிவாளருக்கு அழகா ?

தமிழ் நாட்டில் இருப்பதுபோல வடநாட்டில் முருகன் வள்ளி தேவசேனை சமேதராக இல்லையாம் . அதனால் என்ன ? வடநாட்டில் பிள்ளையார் சித்தி புத்தி சமேதராக இருப்பதுபோல் தமிழகத்தில் இல்லையே ! அதனால்  தமிழ்ப் பிள்ளையார் வேறு வட நாட்டுப் பிள்ளையார் வேறு என்பாரா ? அங்கு முருகன் பிரம்மச்சரியக் கோலத்தில் வழிபடப் படுவதால் தேவிகளின் திருவுருவங்கள் அமைக்கப்படவில்லை.ஆறுமுகமும் மயிலும் கூடவே இருக்கும் மூர்த்தங்கள் பல அங்கும் உண்டு. . வடமொழி  அஷ்டோத்திரத்தில் தேவிமார் பெயர்கள் இல்லையே என்கிறார் . எதையும் யோசித்து விட்டுப் பேச வேண்டும். தமிழகக் கோயில்களில் செய்யப்படும் அர்ச்சனைகள் வட மொழியில் உள்ள புராணங்கள் வாயிலாக அமைந்தவை ஆதலால் அவ்வாறு உள்ளன என்பதில் வியப்பேதும் இல்லை. அதனால் தெய்வம் வேறாகி விடாது.

இவரது நோக்கம் தான் என்ன? சமயத்தைக் கிண்டலாகப் பேசுவதா? அல்லது வடக்கு தெற்கு என்று பிரிவினையை உண்டு பண்ணுவதா ? ஒரே பாலமாகத் திகழும் வட மொழியைக்  கோயில்களிலிருந்து விரட்டுவதா அல்லது கிரியைகளுக்கு மட்டுமே வட மொழியைப் பயன் படுத்திக்கொண்டு வாழ் நாள் முழுதும் தமிழைத் தவிரப் பிற மொழிகளை அறியாத ஏழை அந்தணர்களைக் கோயில்களிலிருந்து விரட்டுவதா ?  அவர்கள் செய்த பாவம் தான் என்ன ? நெஞ்சைத்  தொட்டுச் சொல்லட்டும்.

இவரை விடுங்கள். ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் மௌனிகளாக இருப்பது ஏன்?

" பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் " என்பது திருமுறை வாக்கு. எல்லோரையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.ஞாபகம் இருக்கட்டும். 





Sunday, July 12, 2020

பச்சைத் துரோகம்



ஆண்டுக்கணக்கில் மாத சம்பளம் ஆலய சிப்பந்திகளுக்கு வழங்கப்படாமல் உள்ள கிராமக்கோயில்கள் ஏராளம். மக்கள் வருகையாலும், உபயதார்களது உதவியாலும் மட்டுமே அர்ச்சகர்களின் வாழ்க்கை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கிடையில் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலச்  சித்தரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர்களும் இருக்கிறார்கள்.

உபயதாரர்கள் அளிக்கும் நன்கொடை மூலமே நடைபெறும் அன்னதானமும் , ஒரு கால பூஜை திட்டமும், ஏதோ அறநிலையத்துறையே செய்வது போன்ற தோற்றத்தை உண்டாக்கி விளம்பரம் செய்து வருகிறார்கள். ஒரு கால பூஜை துவங்க கிராமத்தினர் ஒரு லட்சம் வழங்கினால் அற  நிலையத்துறை தனது பங்கை அளிக்க முன் வரும். அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து சுமார் ரூ 750 அர்ச்சகருக்கு மாத சம்பளமும் , பூஜை சாமான்களும் கொடுக்க வேண்டும் என்பதே திட்டம். தற்போது அந்த சொற்பத்தொகையும் பல மாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர்களை நம்பி ஒரு லட்சம் வசூல் செய்து கொடுத்த கிராமத்தினருக்குச் செய்யும் துரோகம் இது.

இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகியும் மாத சம்பளம் தராமல் காலம் தாழ்த்தும் இந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாக்கி வைத்துள்ளதா ? வருமானம் வந்தால் தானே சம்பளம் வழங்க முடியும் என்றால், அவ்வாறு வருமானம் இல்லாத ( ? ) கோயில்களின் நிர்வாக (? ) அதிகாரிக்கு மட்டும் மாதம் தோறும் எதற்காக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதே கேள்வி. ஒருவேளை, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டால் தான் பதில் சொல்வார்களோ என்னவோ !

கோயிலுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது யாருடைய கவனக்குறைவு? எதுவும் செய்ய முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு? உண்டியல் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கா ? அறமற்ற செயல்களை செய்வதற்கா ? அந்த நிலங்களின் அருகே கூடச் செல்லாமல் கணக்கு எழுதும் கூட்டம் எதற்கு என்று பலரும் கேட்கிறார்கள். எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

நிலங்களிலிருந்து விளைந்து வராவிட்டால் வருமானம் இல்லை என்று  மூக்கால் அழுதார்கள். விளைந்து வந்த பிறகும் சம்பளம் கொடுக்காத அவலத்தை என்னவென்று சொல்வது? கடந்த தை மாதத்தில் அறுவடை ஆகி சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு வந்து சேர்ந்த நெல் நிர்வாக அதிகாரியின் அலட்சியத்தால் விற்கப்படாமல் மூட்டைகளாகக் கிடைக்கும் கோயில்கள் ஏராளம். விற்கப்போனால் கோயில் பெயரில் ஆதார் கார்டு கேட்கிறார்களாம். ஆதார் கார்டு தனி நபர் பெயரிலேயே கொடுக்கப்படும் போது, எவ்வாறு சுவாமி பெயரில் கொடுக்க முடியும் ? கொஞ்சமாவது யோசித்தார்களா ? புகார் அளித்தால் மதிப்பதே இல்லை. அலட்சியமும் ஆணவமும் மேலோங்குகிறது.

இந்து அறநிலையத் துறை என்பது ஆட்சித் துறை அன்று. நிர்வாகத் துறை என்பதை உணராமல் அதிகாரம் செலுத்துகிறார்கள். நிர்வாக அதிகாரி என்றால் அதிகாரம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்பதவியின்  பெயரை நிர்வாகி என்று மாற்றி அமைக்க வேண்டும். அதிகாரம் செய்ய இவர்கள் யார்? நிர்வாகம் செய்யவே திறமை அற்றவர்களை எவ்வாறு அதிகாரிகளென்பது ?

வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டியதே இவர்களது வேலையே தவிர அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வது அல்ல. நிர்வாகம் சரிவர நடைமுறையில் உள்ளதா என்பதைக் கண்காணிக்க அவருக்கு மேல் உள்ளவர் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சிப்பந்திகளை மிரட்டவோ, சம்பளம் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதோ இவர்களாகவே எடுத்துக் கொண்டுள்ள அதிகாரங்கள் .

நிர்வாகி என்பவர் தன்னிடம் வேலை பார்க்கும் நபர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை  அவர்கள் தவறுகள் செய்தாலும் ,  சுட்டிக் காட்டுவதிலும் ஒரு நாகரீகத்தைக் கையாள வேண்டும். அப்படிச் செயல்பட்டால் தவறு செய்தவரும் தனது தவறுக்கு வருந்தி மீண்டும் அத்தவறை ஒரு நாளும் செய்ய முன்வர மாட்டார்.

சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகின்றேன். சுமார் 45 ஆண்டுகள் முன் ஒரு கம்பெனியில் பரிசோதனைச் சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை 5 மணி இருக்கும். மத்தியான ஷிப்டில் இருந்தபோது ஒருகண்ணாடி  சிலிண்டரைத் தண்ணீரால் கழுவியபின்னர் அதிலிருந்த ஈரத்தை அகற்ற வேண்டி, அசிட்டோன் என்ற திரவத்தால் சற்றுக் கழுவி, உலர வைக்க வேண்டும். நானோ அசிடோனால் அந்த சிலிண்டருக்குத் தாராளமாக அபிஷேகம் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் எங்கள் துறையின் தலைவர் (HOD ) நின்றுகொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. இன்னொருவராக இருந்தால் என்னைக்  கடுமையாகத் திட்டியிருப்பார். சந்தேகமே இல்லை. ஆனால் அவரோ , ஆங்கிலத்தில், This is Acetone my dear friend ( இது அசிடோன் நண்பரே ) என்றார். அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்துவிட்டு என் பிழைக்கு வருந்தித் தலை குனிந்தேன். அன்றிலிருந்து கனவிலும் அத்தவறை மீண்டும் செய்ததே இல்லை. இதன் காரணம் அவர் தன்னை ஒருபோதும் அதிகாரி என்று நினைத்ததில்லை. அதிகாரம் செலுத்தியதும் இல்லை. இது போன்ற நற்பண்புகள் நமக்கு இல்லையே என்று இன்றும் நினைப்பது உண்டு.

கொரானாவால் உலகமே திண்டாடிக்கொண்டு இருக்கும்போது ஆலய சிப்பந்திகள் தங்கள் கடமை தவறாமல் பணி  ஆற்றுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முன்வராததோடு, பழி சுமத்தி அவர்களைப் பணி   நீக்கம் செய்வதையும், மிரட்டுவதையுமே  செய்துவருகிறார்கள் அதிகாரிகள். அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோஉள்ளூரில்  எவருமே இல்லாததால்  நிர்வாக அதிகாரி செய்வதே சட்டம் ஆகி விடுகிறது. ஓரிருவரைத் தவிர எவரும் நீதி மன்றத்தை நாடுவதில்லை. நாடாவிட்டாலும், குரல் கொடுப்பவர்களுக்குத் துணையாக ஓரிரு வார்த்தைகளாவது சொல்ல முன் வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. வெட்கக்  கேடு.

ஊர் நலனுக்காக ஆலய பூஜை செய்பவர்களுக்குத் துணையாக இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களை  நன்றி கெட்டவர்கள் என்றோ பச்சைத் துரோகம் செய்பவர்கள் என்று தானே கூற முடியும் ?