வலைத்தளப் படம் |
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ப்பாட நூல்கள் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் முன்னிறுத்திப் பிழையறக் கற்கும் முறையைப் பின்பற்றிவந்ததை அத்தலைமுறையினர் நன்கு அறிவர். ஆனால் வல்லினம்,இடையினம் பற்றியே முழு அறிவு பெறாத மாணவர்கள் தற்காலத்தில் பிழை மலிய எழுதுவதைப் பார்க்கிறோம் . அக்காலத்தில் லகர- ளகரங்களைப் பிழை இல்லாமல் தெளிவாக உச்சரிக்கவும் ஆசிரியப் பெருமக்கள் துணை செய்தனர். இப்போதோ மாணவர்கள் மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பவர்களும் பள்ளி என்பதைப் பல்லி என்பது போன்ற பல சொற்களைக் கொலை செய்கின்றனர்.
புலவர் பட்டம் பெறுவது என்பது கொடுக்கப்பட்ட நூலைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும் என்று ஆகி விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல நூல்களிலிருந்து எடுத்துக் கோர்த்துக் கட்டுரை வழங்கிவிட்டால் அது ஆய்வுக் கட்டுரை ஆகி விடும். முனைவர் பட்டமும் கிடைத்துவிடும். சில வெண்பாக்களை இயற்றிவிட்டால் அவரைப் புலவர் என்கிறார்கள். அதற்குப் படைப்பு என்ற சிறப்புப் பெயரும் தாராளமாகக் கொடுக்கப்படுகிறது. நல்லவேளையாக இப்போது தவறான பாடல்களைக் கண்டிக்க நக்கீரரோ , ஒட்டக்கூத்தரோ இல்லை ! இலக்கண மரபை மீறினால் என்ன ? கவிதை என்று சொல்லிவிட்டால் போகிறது என்ற துணிவும் வந்து விடுகிறது.
கல்வித்துறையில் அரசியலும் நாத்திகமும் புகுந்து விட்டபடியால் ஆட்சியாளர்களின் கொள்கைகள் பாடப் புத்தகத்தில் திணிக்கப்படுகிறன . அண்மையில் ஒரு மூத்த தமிழறிஞரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அதில் , முழுமையான தமிழறிவு பெறப் பக்தி இலக்கியப் பயிற்சி ஒன்றே துணை செய்யும் என்று வலியுறுத்திக் கூறினார். ஏராளமான தமிழ் நூல்கள் பக்தி சார்ந்தவைகளே. ஆனால் அரைகுறைத் தமிழ் அறிவோடு பக்தி இலக்கியங்களைப் பழிக்க முன்வருவோருக்கு எப்படிப் புரிய வைப்பது ?
ஒரே சொல் பல பொருள்களைத் தருமாறு அமைந்திருப்பது பற்றி மேலே கூறினோம். எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் இடம் கருதிப் புரிதலுக்காகச் சிலவற்றையே இங்கு எடுத்துக் காட்டுகிறோம்:
பணம் என்ற சொல் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெயரைக் கேட்ட மாத்திரத்தில் வாயைப் பிளக்க வைக்கும் சக்தி உடைய சொல்லல்லவா அது ! அதற்குப் பாம்பு என்ற பொருளும் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? " கரும் பணக் கச்சைக் கடவுள் " என்று சிவபெருமானைத் திருவாசகம் குறிப்பிடுமிடத்தில் அதற்கு, கரிய பாம்பைக் கச்சையில் இருத்திய கடவுள் என்பது பொருள். பணக்கட்டுக்களை இடுப்பை விட்டு எடுக்காத லோபிகளுக்கு இந்தப் பொருள் எங்கேயிருந்து உதிக்கும் ? நிலையில்லாத செல்வத்தைக் கொண்டாடுபவர்கள் அதுவே பாம்பின் விஷமாக அவர்களைக் கொல்லக் கூடியது என்ற மறை பொருளை எங்ஙனம் சிந்திந்திப்பார்கள் ? அதனை அடக்கி ஆளக்கூடியவன் இறைவன் ஒருவனே என்பது மற்றொரு மறைபொருள். வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனுக்கே அது சாத்தியம்.
பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழறிஞர் கூறியதையும் இங்குப் பகிர்கிறேன். திருவள்ளுவர் காலத்தில் கழகம் என்பதற்குச் சூதாடும் இடம் என்ற பொருள் இருந்தது என்றார் அவர். ஆனால் இப்போதோ பல துறைகளின் பெயர்களில் கழகமே இருக்கிறது. இவர்கள் பண்டை நூலறிவு உடையவர்களாக இருந்தால் இவ்வாறு பெயர் சூட்டத் தயங்குவர். எனவே காலச் சுழற்சியால் ஒரு சொல்லுக்கு வேறு பொருள் சொல்லப்பட்டு விடுகிறது என்பதை அறியலாம்.
கற்பு என்ற சொல் பெண்ணுக்கு உரியதாகக் கருதப்பட்ட போதிலும் ஆணுக்கு மட்டுமல்லாமல் தான் வழிபடும் ஒருவனே தேவன் என்று அசையாத உறுதியோடு நிற்பவனுக்கும் உரிய பொதுச் சொல் என்பதை அறியாதவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் போல் பேச வந்து விடுகிறார்கள். மாறாத சிந்தையைக் குறிப்பதாக இச் சொல் அமைகிறது. நமது எண்ணம் அடுத்தவருக்கும் இருக்கும்போது இருவரும் மாறாத கொள்கை உடையவர்கள் என்கிறோம். அதுவே கற்பு. கணவன் நினைப்பதையே தானும் கருதுதல் ஆதலால் அக் கற்பு , பெண்ணுக்கும் உரியதாகி விடுகிறது. தனது அடியார்களுக்கு அருள வேண்டும் என்று முருகப்பெருமான் எண்ணும் போது, அதில் சற்றும் மாறாத எண்ணம் உடையவள் வள்ளி நாயகி ஆதலால் அவளைக் கந்த புராணம், " மாறிலா வள்ளி வாழ்க " என்று போற்றும்.
இக் கற்பாவது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஒரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அதில் முழுவதும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் அதுவே கற்பாகிறது. மற்றொரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சித்தாந்தம் தவறெனச் சுட்டிக் காட்டி அவரது சித்தாந்தம் வெல்லப் படும்போது தோற்றவரின் சித்தாந்தமாகிய கற்பு அழிக்கப்பட்டோ நீக்கப் பட்டோ முடியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதைத் தான் திருஞானசம்பந்தரது ஆலவாய்ப் பதிகம் உணர்த்தியுள்ளது. அவ்வளவே. இதனை அறியாமல் வாதம் செய்ய வந்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் ஞானத் தமிழ் நூல்கள் பலவற்றை அடிப்படையிலிருந்து கற்றுத் தெளிய வேண்டும். குறைந்த பட்சமாக, திருமுறைகளே சைவக் கருவூலம் என்று சொல்லும் அடியார் பெருமக்களாவது, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து ஓத வேண்டும்.
அரைகுறை அறிவு ஆபத்தானது...thank you for your information.
ReplyDelete