Wednesday, August 12, 2020

என்று அகலும் இந்தத் துவேஷம் ?


 சமயப்பொறை, அழுக்காறு, அவா இன்மை, வெறுப்பின்மை ஆகியவற்றைக் காலம் காலமாகப் போதித்தும் கடைப்பிடித்தும் வரும் நாடு இது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். மிகக் கடினமான கால கட்டங்களைத் தாண்டி வந்தும் நமது அடிப்படைக் கொள்கைகள் மாறாததன் காரணம், இது முனிவர்களும் சித்தர்களும் வாழ்ந்த தெய்வீக பூமி என்பதாகும். இவ்வளவு இருந்தும் இதற்குச்  சோதனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பேராசையே இதற்கு முக்கிய காரணம் எனலாம். ஆகவேதான் மாணிக்கவாசகப் பெருமானும் , " பேராசையாம் இந்தப் பிண்டம் அற " எனப் பாடினார். பல்லாயிரம் கோடிகள் ஈட்டியவர்களுக்கும் அப்பேராசை விடுவதாக இல்லை. ஆட்சி பீடத்தில் இருந்தால் கோடிகள் கொட்டும் என்று ஆகிவிட்டது. அதற்காக எதையும் செய்யத்துணிந்து விட்டனர். 

தமது வேட்கைக்குத் தடையாக இருப்பவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களை ஏசுவது அன்றாடம் நடைபெறுகிறது. அது மட்டுமல்ல. எதிலும் ஈடுபடாமல் சிவனே என்று இருப்பவர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இத்தனைக்கும் அவர்களது ஆதரவு இல்லாமலும் தங்கள் நோக்கம் நிறைவேறும் என்று அறிந்தும் தூற்றுதல் தொடர்கிறது. அதைப் பார்த்துவிட்டு, அவர்கள் வழி நிற்போரும் துவேஷத்தை உமிழ்கிறார்கள். பிளவு ஏற்படுத்தத்  துடிக்கும் கழுகுகள் வேறு உன்னிப்பாகக் காத்திருக்கின்றன. " நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே " என்ற வாக்கை அவர்கள் உணரப்போவது எப்போது? 

சமயத்தின்  ஏற்றத்தைப் பற்றியே பதிவிடும் நாம் சர்ச்சைகளுக்குள் புக விரும்பாவிடினும் சிலவற்றைத் தெளிவு படுத்தும் கடமையை மட்டுமாவது செய்ய வேண்டும் எனது தோன்றுகிறது. அந்த வகையில் அவ்வப்போது நிகழும் விரும்பத்தகாதவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதில் தவறில்லை என்று கருதுகிறோம்.

சமூக வலைத்தளங்களை நல்ல பயன்களைத் தரும் வகையில் உபயோகிக் காமல்   ஒருவரை ஒருவர் பழிக்கும் வகையில் ஈடுபடும் சிலரது பதிவுகளால் பாதிப்புக்கள் அதிகம். சமய நூல்களை அதிகம் கற்காத பாமர மக்கள் அவற்றை உண்மை என்று நம்பித் தாமும் அச்செயல்களில் ஈடு படுகின்றனர். 

அண்மையில் ஒரு அன்பர், நம்  நாட்டில் நிலவும் துவேஷ எண்ணங்களைக் கண்டித்துச் , சிறப்பான வகையில் தனது முக நூல் பதிவு ஒன்றில்  குறிப்பிட்டிருந்தார்.நல்லெண்ணம்  கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டிய பதிவு அது. அதைப் படித்த ஒருவரோ, யாரும் எதிர்பாராத வகையில் மாற்றுக்  கருத்து என்ற பெயரில் துவேஷத்தை உமிழ்ந்திருந்தார். அந்தணர்கள் வலையில் அந்த அன்பர் வீழ்ந்து விட்டதாகப்  பின்னூட்டம் அளித்திருந்தது வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

சமயம் பற்றி எதுவுமே அறியாத நிலையில் வாய்க்கு வந்தபடி பேசுவதும் ஏசுவதும் தட்டிக் கேக்க எவருமே இல்லாததால் தொடர்கின்றன.சமய அறிவு உள்ளவர்களும் ஒதுங்குவதால் இவர்களது ஆட்டம் தொடர்கிறது. சமய நூல்களைக் கசடறக் கற்று விட்டுப்  பின்னூட்டம் இடுவதை விடுத்து, அபாண்டமாக எந்தப் பிரிவினரையும் இழித்துப் பேசுவது முறை ஆகாது. 

அறுபத்து மூவரில் ஒருவரான அப்பூதி அடிகள் நாயனார் ஓர் அந்தணர். அவர்   சிவபெருமானுக்கும் சிவனடியாருக்குத்  தொண்டு செய்வதொன்றையே  குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். திருவதிகையில் சிவபெருமானது அருளால் சூலை நோய் நீங்கப்பெற்ற திருநாவுக்கரசரைக்  குருநாதராக ஏற்று அவரைக் காண வேண்டும் என்ற பெரு விருப்போடு வாழ்ந்தார். தனது மக்களுக்கு மட்டுமல்லாது தான் செய்யும் சிவ தருமங்களுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்து வந்தார். 

திருத்தல யாத்திரையாக திருப்பழனம் வந்தடைந்த நாவரசர், அங்கிருந்த தண்ணீர்ப்பந்தல்  முதலியவற்றில் தனது பெயர் இருத்தல் கண்டு அங்கிருந்தோர் மூலம் அருகிலுள்ள திங்களூரில் இருந்த அப்பூதி அடிகள் என்ற அந்தணர் செய்யும் சிவதருமங்கள் அவை என அறிந்தார். அப்பூதியாரைக் காண வேண்டித் திங்களூரை அடைந்தார். வந்தவர்,  தான் அனுதினமும் வணங்கும் நாவரசர் என்று அறிந்தவுடன் தனது சுற்றத்தாருடன் அப்பர் பெருமானின்திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அப்பரும் அப்பூதியாரை  வணங்கி மகிழ்ந்தார் என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது. இப்படி ஒரு தெய்வீக நிகழ்ச்சியை எண்ணி எண்ணி நமது வேற்றுமைகளை உதறி  எறிந்து , ஈசன் கருணையை மட்டுமே நினைந்து மகிழ வேண்டும். அதை அறியாமல் முகநூலில் பின்னூட்டம் இட்டவர், அப்பர் பெருமான் அந்தணரது வலையில் வீழ்ந்தார் என்று நா கூசாமல் கூறுவாரா ? 

அவருக்கு ஒன்று மட்டும் கூறி அமைகிறோம். நமது சமயத்தில் உள்ள நல்லிணக்கம் தரும் நூல்களைக் கற்று உணருங்கள். வாய் வாழ்த்துவதற்காக மட்டும் இருக்கட்டும். தூற்றுவதற்காக அல்ல. 












2 comments: