Friday, December 23, 2016

பைத்தியம் யாருக்கு ?

இயற்பகை நாயனார் , திருச்சாய்க்காடு 
தெய்வ நிந்தனை என்பது இன்று நேற்று செய்யப்படுவதில்லை. புராண காலங்களிலிருந்தே அசுரர்களும் மனிதர்களும் செய்திருக்கிறார்கள். " நாத் தழும்பு ஏற நாத்திகம் பேசினர் " என்கிறார் மாணிக்க வாசகர். இந்தக்காலத்தில் அசுரர்கள் இல்லாததால் அவர்களது வேலையையும் சேர்த்து சில மனிதர்கள் செய்து வருகிறார்கள். நம்மால் செய்ய முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத எதையும் மற்றவர்கள் செய்தாலோ அல்லது செய்ததாகப் புராணங்கள் மூலமாகத் தெரிந்து கொண்டாலோ அவற்றை ஏற்க மறுப்பதோடு அவை புனையப்பட்டவை என்று   பகுத்தறிவு பேசத் தொடங்கி விடுகின்றனர்.  இத்தகைய நாத்திகக் குரல்களுக்கிடையில் ஆத்திகம் நன்றாகவே வளர்ந்து வருவதை அனைவரும் அறிவர். 

இந்தப் பகுத்தறிவுவாதிகள் சொல்வதை மட்டும் பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் வெறுப்பின் உச்சத்திற்கே போய் வாய்க்கு வந்தபடி ஏசியும், எழுதியும், வன்முறைகளில் ஈடுபட்டும் ஆத்திக அன்பர்களை நோக அடிக்கின்றனர். அவர்களை நீதித் துறையோ அல்லது அரசாங்கமோ கண்டிக்க முடியாத நிலை. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றும் எழுதலாம் என்றும் குறிக்கோள் கொண்டவர்களை எப்படித் திருத்த முடியும்? அவர்களது செயல்களை  எல்லாம் பொறுத்துக் கொண்டு , வாய் பொத்தி , மௌனியாகத்தான் இருக்க வேண்டி உள்ளது!  போதாக் குறைக்கு சமூகத் தளங்கள் மூலம் இதுபோன்ற கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன் பூம் புகாருக்கு அருகில் உள்ள சாயாவனத்தில் (திருச் சாய்க்காட்டில்) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான இயற்பகை நாயனாரது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது என்பதை ஒரு அன்பர், நாயனாரது வரலாற்றுச் சுருக்கத்தோடும், விழா பற்றிய படங்களுடனும்  முக நூலில் பதிவிட்டிருந்தார்.  அதற்கு ஆங்கிலத்தில் கருத்துத் தெரிவித்திருந்த ஒருவர் ( ன் விகுதி இவருக்குப் பொருத்தமாக இருக்குமோ?)  நாயனாரை " lunatic "  என்று குறிப்பிட்டிருந்ததோடு சேவை என்ற பெயரில் இப்படிச் செய்ததாகவும் ஏசியுள்ளார். 

உண்மையில் யார் பைத்தியம் என்று புரியவில்லை. சிவனடியார்களுக்கு எவை தேவையோ அவற்றை முழுவதும் வாரித் தந்த வள்ளலான நாயனாரா அல்லது வேறு யாராவதா?  யாசகமாக எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத அபூர்வ குணம் கொண்டவர் நாயனார் என்பதை உலகம் அறிவதற்காக சிவபெருமான் நடத்திய நாடகத்தின் தத்துவம் அறியாதவர்கள் இப்படித்தான் பேசுவர் போலும் ! 

செயற்கரிய செயல்களைச்  செய்த பெரியோர்களை உலகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடுகிறது.   " இல்லையே  என்னாத இயற்பகைக்கும் அடியேன் " என்று சுந்தரரால் போற்றப்பட்ட இயற்பகையாரது குருபூஜை இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் கொண்டாடப்படுகிறது. நம் போன்ற வீணர்களின் நினைவை,  நாம் மறைந்த பின்னர்  நம் சுற்றத்தார்களே மறக்க ஆரம்பிக்கும் நிலையில் , உலகம் போற்றும் உத்தமர்களைப பித்துப் பிடித்தவர்கள் என்று, எல்லாம் தெரிந்தவனைப் போலப் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது. 

நாயன்மார்கள் காலத்திற்கு முன்பும் பின்பும் பல அடியார்கள் தோன்றியிருந்த போதிலும் சுந்தரர் அருளிய தேவாரப் பதிகத்தில் வரும் அறு ப த்து மூன்று நாயன்மார்களையாவது நாம் நெஞ்சாரப் போற்றி வணங்க வேண்டும். அறுபத்து நான்காவது நாயனார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த இடம் வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை. வழங்கவும் கூடாது. எப்படிப்பட்டவர்கள் அவ்வாறு ஒருவரைப் புகழ்ந்தாலும் அது சிவாபராதம். 

சமூக வலைத் தளங்களில் கருத்துத் தெரிவிப்பதால் ஏற்படும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகமாகத் தெரிகிறது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அந்தப் பக்கம் என்ன வேலை? ஒருவேளை பிறர் மனதைப் புண்படுத்துவதே வேலையோ? இனியாவது பிறரைப் புண்படுத்தாமல், பண்படுத்த முயற்சி செய்வார்கள் என்று நம்புவோம். 

Tuesday, October 25, 2016

பூர்வீகக் கலாசார மறுமலர்ச்சி வேண்டுவோம்

முன்னோர்களின் கனவை இப்படிச் சிதைய விடலாமா ? 
பாட்டனாரும் முப்பாட்டனாரும் வசித்த ஊரைப் பூர்வீகமாகக் குறிப்பிட்டு  வந்த காலம் போய்  ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு ஊர் என்று ஆகி விட்டபடியால் எந்த ஊரைப் பூர்வீகமாகப் பிற்கால சந்ததிகள் குறிப்பிட முடியும்? கடந்த ஒரு நூறே ஆண்டுகளுக்குள்  ஏற்பட்ட மாற்றங்கள்  நமது பூர்வீகம், பரம்பரை,புராதனம்,பண்பாடு ,கலாசாரம் ஆகிய வார்த்தைகளுக்குச் சவால்களாக ஆகிவிட்டன. பணம்,நவீன வாழ்க்கை ஆடம்பரம் என்பவை தலை தூக்கி நிற்கும்போது இந்த மாற்றங்களை எப்படித் தவிர்க்க முடியும் என்று தெரிய வில்லை. ஒருவேளை அப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் பின்னோக்கிப் போவதாகப் பட்டம் கட்டி விடுகிறார்கள். பழைய பஞ்சாங்கம், பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டங்களும்  வந்து குவிகின்றன.  

இந்த அசுர வேகத்திற்குத் துணையாகப் புதுப் புதுத் தொழில்களால் கவரப்படும் இளைய சமுதாயம் எவ்வாறு நமது பழம் பெருமைகளை அறிய முடியும்? இவை எல்லாம் தவிர்க்க முடியாத மாற்றங்கள் என்கிறார்கள். ஒளி  மயமான எதிர் காலம் என்று கற்பனை செய்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம்.  இருண்ட காலத்தை நோக்கிப் பயணிக்கிறோம்  என்பதை  அறியாத அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? 

 ஊரை விட்டுப்  பெரும்பாலானோர்  நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்போது மிகச் சிலரே "எனது ஆயுள்  காலம் முடியும் வரை  பூர்வீக கிராமத்தை விட்டுப் போக மாட்டேன் " என்று உறுதியாய்  இருக்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர்  கிராமக் கோயில்களில் பல பரம்பரைகளாகப் பணி  செய்பவர்கள். உலகம் இவர்களை அங்கீகரிக்காதபோதும் இந்த உறுதியிலிருந்து அவர்கள் தளர்வதில்லை. அப்படியும் வறுமையின் விளிம்புக்கே சென்றவர்கள் அந்த உறுதியைக் கைவிடும் கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இதைத் தான் நாம் பல கிராமங்களில் பார்க்க முடிகிறது.  

கிராமத்தை விட்டு நகருக்குச் சென்றது போக இப்போது நாட்டை விட்டே செல்லத் தொடங்கிய நாளிலும் சிலர்  அங்கு இருந்து கொண்டே நமது பண்டைய கலாசாரத்தின் மீது காட்டும் ஈடுபாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது கோயில்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார்கள். எனவே, ஆலயத் திருப்பணியும் வெளியூர் மற்றும்  வெளி நாட்டு அன்பர்களாலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது. இதைப் பார்த்த பிறகாவது  கிராம மக்கள் தினமும் தங்கள் ஊர்க் கோவிலுக்கு வருகை தரமாட்டார்களா என்ற ஒன்றையே  இந்த நன் கொடையாளர்கள்  எதிர்பார்க்கிறார்கள். 

முற்றோதுதல், உழவாரப் பணிகள், கயிலாய வாத்தியம் இசைத்தல் போன்ற பல்வேறு பணிகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் பிரபலமான கோவில்களில் நடை பெறுகின்றன. பல சிவாலயங்கள் அமைந்துள்ள கிராமங்கள் வருவோர் இல்லாததோடு பிற மதத்தோர் பெரும்பான்மையாக வாழும் ஊர்களாகி  வருவது அனைவரும் அறிந்த செய்தி ஆகும். மேற்கண்ட பணிகளை நகரங்களில் செய்வதை விட இது போன்ற ஊர்களில் செய்யலாம் அல்லவா? நீடூர், சக்கரப்பள்ளி, இலம்பயங்கோட்டுர்,திருப்பாசூர் , தலையாலங்காடு,திருக் கோழம்பம்  போன்ற தலங்களில் அடியார்கள் இவற்றை மேற்கொள்ளலாம். இங்கெல்லாம் ஏதோ ஒரு நாள் தேவாரம் படித்த சிலர் போவதை விட , ஆலயப் பணி  செய்யும் அன்பர்கள் குழுக்களாக அடிக்கடிச் சென்றால் அவை மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு உண்டு.  தலைக்கு மேல் போன பிறகு அங்கலாய்ப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததோடு நமது கடமையும்  ஆகிப்  பிறருக்கு நல்வழி காட்டும். அதனால் அங்குள்ள சன்னதிகளிலும் தீபம் எரியும். அதைச் செய்யாத வரையில் எந்த வகையிலும் நமது புராதன ஆலயங்கள் நம் கண்ணுக்கு முன்னால்  அழிவதைத் தவிர்க்க முடியாது. கை நிறைய சம்பாதிக்கும் பூர்வீகக் குடி மக்களும் தொண்டர் குழாங்களும்  சிந்திப்பார்களா?   நமது பூர்வீகக்  கலாசாரம் பொலிவும் புனிதமும்பெறத் திருவருள் துணை நிற்பதாக. 

Tuesday, October 4, 2016

ஆகம விதி மீறல்கள்

இப்படியும் மொழியின் பெயரில் திணிக்கப்படும் மாற்றங்கள்.
மனிதன்  நுட்பமாகச்  சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவனை ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக நினைக்கிறோம். ஆய்தல் என்பதிலிருந்து ஆராய்தல் என்பதிலிருந்து வந்தது என்று கூடச் சொல்லலாம். ஆய்தல் என்பதற்குத் தேர்ந்து எடுத்தல் என்றும் பொருள் சொல்லலாம். நல்லது கெட்டதைப் பிரித்து எடுத்தல் என்றும் சொல்வதுண்டு. அவ்வாறு ஆய்ந்து எடுக்கும் அறிவை இறைவன் அனைத்து உயிர்களுக்கும்  அருட்கொடையாக வழங்கியுள்ளான். அதில் முக்கியமானது தனக்குத் தேவையான உணவை ஆய்ந்து எடுப்பது. தேவையற்றவற்றை அதிலிருந்து நீக்கி, உண்ணுவதை மனிதர்கள் மட்டுமல்ல. மிருகங்களும் பறவை இனங்களும்  பின்பற்றுகின்றன.

மனிதனோ தன்  வயிறு நிரம்பிவிட்டால் தன்னைச் சுற்றி உள்ளவற்றை ஆராயத் தொடங்குகிறான்.  இதற்கு ஆறாவது அறிவு என்று  பெயர் வைத்திருக்கிறார்கள். சிந்தனைகள் பலவிதம். ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் அவை இயங்குகின்றன. தனக்கு என்று ஒரு பாதையை வகுத்துக் கொள்ள ஆரம்பிப்பதோடு, காலம் காலமாக  வழி காட்டிய பாதைகளை  மாற்றிக் கொள்ளவும் தயாராகி வருவதைத்  தனி மனிதனது சுதந்திரம் என்று அழைப்பதைப்  பார்க்கிறோம். 

ஆன்மீகத்தையும் இந்தத் தனி மனித சுதந்திரம் விட்டு வைக்கவில்லை. இதைத்தான் திருஞான சம்பந்தர், " புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு " என்று குறிப்பிடுகிறார். நம்மை நல்ல கதிக்கு அழைத்துச் செல்வதற்கு இறைவன்  வேதங்களையும், ஆகமங்களையும், திருமுறைகளையும் தோற்றுவித்தான். அதிலும் ஆகம வழியில் இறைவனை வழிபடுவது தமிழகத்திற்கு உரிய தனிச் சிறப்பு. ஆகமம் இறைவனது வடிவேயாதலை மாணிக்க வாசகப் பெருமானும் , "  ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் " என்று பாடியருளினார். எனவே, ஆகமத்தைப் புறக்கணிப்பது என்பது சிவபெருமானையே புறக்கணிப்பதற்குச் சமம். ஆகமம் முத்தி நெறியை  அறிவிப்பது. அதனை ஒதுக்கினால் மூடர்களாகத்தான் ஆக ஏதுவாகிறது. " முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை" என்பது திருவாசகம்.  

ஆகமம் வடமொழியில் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காகச் சிலர் அதனைப் புறக்கணிப்பதோடு தமிழில் உள்ள திருமுறைகளைக் கொண்டே பூஜைகளையும் கும்பாபிஷேகங்களையும் நடத்துகிறார்கள். ஆகமத்தில் ஆலய பிரதிஷ்டை, விழாக்கள் நடத்தும் முறை, கும்பாபிஷேகம் நடத்துதல் போன்ற கிரியைகள் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் திருமுறைகளோ இறைவனைத் துதிப்பதற்கு உரிய தோத்திரங்களாகத் திகழ்கின்றன. இவ்விரண்டுமே நமக்கு முக்கியம்தான்.  ஒன்றிற்குப் பதிலாக ஒன்று என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் இவ்விரண்டையுமே இறைவன் விரும்பி ஏற்கிறான் என்பதைப்  புராணங்கள் மூலமும், அருள் நூல்கள் வாயிலாகவும் அறிகிறோம். தவறாக வழிகாட்டுபவர்களால் ஏற்பட்ட விபரீதப் போக்கு இது. எப்படி வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு என்றும் வாதிடுவர்.

கோயில் அமைப்புக்களிலும் தங்களுக்குப் பிடித்தவகையில்  சிலர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். உதாரணமாகச் சிவாலயங்களில் கிராம தேவதைகள்   மற்றும் குருமார்களின் சிலைகளை வைக்கிறார்கள். மற்றும் சிலர் அக்குருமார்களுக்குத் தனி ஆலயங்களே எழுப்புகிறார்கள். வேத மந்திரங்கள் கொண்டு அவற்றிற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இப்புதிய குருமார்கள் மீது காயத்திரி மந்திரம், சுப்ரபாதம், அஷ்டோத்திரம் போன்றவை  இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன. 

மக்களும் இவற்றால் கவரப்பட்டுத் தங்களது பரம்பரைகள் போற்றி வந்த தெய்வ வழிபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு  புதியதோர் வழிபாட்டை ஏற்கிறார்கள். துறவிகள் சிலரும் தங்கள் மடத்துக் கோட்பாடுகளை மதியாமல் இதுபோன்ற ஆலயங்களுக்குச் சென்று , தாங்களே தீபாராதனையும்,பூமி பூஜை முதலியவற்றையும் செய்கிறார்கள். கேட்டால் எல்லாவற்றிலும் சிவத்தைப் பார்க்கிறேன் என்று சமாதானம் சொல்வார்கள்.

மற்றும் சிலர் கயிலாய வாத்தியம் என்று பெயரிட்டு வாத்தியங்களை செவிப் பறை கிழியும் அளவுக்கு முழக்குகின்றனர். அவர்களைச் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் வேறு. அதில் சுய நினைவில்லாமல் சிலர் போடும் ஆட்டம் பாட்டம்,  முகத்தைச் சுளிக்கச் செய்கிறது. விழாக் காண வந்த மனோநிலை நம்மை அறியாமலேயே பறந்தோடி விடுகிறது. 

மேற்கண்ட மாற்றங்களுக்கு /  மாயைகளுக்கு இதுவரையில் வைணவ சமயம் ஆட்படவில்லை என்றே தெரிகிறது. திவ்வியப்பிரபந்தத்தைக் கொண்டு சம்ப்ரோக்ஷணம் செய்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? " மண்ணில் நல்ல வண்ணம் " பாடி சில சைவக் குழுக்கள் திருமணம் செய்வதைப்போல வைணவத்தில் பார்த்திருக்கிறோமா? கைலி  கட்டிய சுய நினைவில்லாத சுவாமி தூக்கிகளை வைணவம் அனுமதிக்காது. இவர்கள் கைலாய வாத்தியம் என்று முழக்குவதைப் போல் அவர்கள் வைகுண்ட வாத்தியம் என்று முழக்கமிடுவதில்லை. அந்த அளவுக்கு ஆகம நெறிகளைப் பின்பற்றுகிறார்கள். இப்படி இருக்கும்போது சைவத்தில் மட்டும்      ஏன் மாற்றம் ஏற்படுத்தத் துடிக்கிறார்கள்? அனுமதிகள் எப்படித்  தாராளமாக வழங்கப்படுகிறது? அப்படியே ஆகம மீறல்கள் நடைபெறும்போது  மடாதிபதிகள் ஏன் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிப்பதில்லை?  " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்றும், "  ஆகம சீலர்க்கோர்  அம்மானே " என்று திருமுறைகள்  கூறியும் அதற்காகவாவது பின்பற்றலாம் அல்லவா? 

சில மடங்களின்  கண்காணிப்பில் இருந்துவரும் ஆலயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பணி காணாது மரம் முளைத்தும் மேற்கூரை விரிசலோடு இருப்பதைக்  கண்டும், அம் மடாதிபதிகள் மௌனிகளாக இருப்பதைக் காணும்போது , இவர்கள் தமக்கு முந்தைய மடாதிபதிகள் காட்டிய வழியிலிருந்து மாறுகிறார்களோ என்ற ஐயம் உண்டாகிறது. இதனால் தானோ என்னவோ மக்களுக்கும் ஆகம விதி மீறுவதற்குத் தைரியம் வந்து விடுகிறது. வழி நடத்தி உய்விக்க வேண்டியவர்களே விலகி நிற்கும்போது மக்களை எப்படிக் குறை சொல்வது? 

Wednesday, August 24, 2016

ஆலயத் திருப்பணியும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பும்

மனுநீதி சோழர் காலத்தில் நீதி கேட்டு ஆராய்ச்சி மணி ஒலிக்கப்பட்டது போல, இந்நாளிலும் நீதி வழங்குமாறு உச்ச நீதி மன்றம் வரை சென்று நீதியின் கதவுகள் மக்களால் தட்டப்படுகின்றன. காலதாமதத்தையும் பொருட்படுத்தாமல் நீதியின் பேரில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அது காட்டுகிறது. அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் துறைகள் மீதும் வழக்குகள் தொடரப்படுகின்றன. கடந்த  பல ஆண்டுகளாகவே  இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இருந்துவரும் ஆலயங்களின் பராமரிப்பு மற்றும்  திருப்பணி குறித்துப் பரவலாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது சம்பந்தமாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது.  அறநிலையத்துறை நிர்வகிக்கும்  ஆலயங்களில் முன் அனுமதி பெற்றால்தால் திருப்பணி செய்யலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.முற்றிலும் இடிந்த கோயிலின் திருப்பணிக்கு மட்டும் இதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

உச்ச நீதி மன்ற அறிக்கையை முழுவதும் படித்தால் மட்டுமே அதன் நிலைப்பாடு தெளிவாகத் தெரிய வரும். அது வரையில் மேலெழுந்த வாரியாகப் படித்து விட்டு அனுமானத்தின் மூலம் நமக்குள் ஒரு அபிப்பிராயம் ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்ட சிந்தனையால் எழுந்ததே இப்பதிவு. 

உதாரணத்திற்கு அறநிலையத்துறையால் பல்லாண்டுகளாகக் கவனிக்கப்படாத / திரும்பிக்கூடப் பாக்கப்படாமல் அலட்சியப்படுத்தப் பட்ட ஒரு சிவாலயத்தின் இன்றைய நிலையை இங்குள்ள படங்களில் காண்கிறீர்கள். 

ஒருகாலத்தில் பிரமாண்டமாக விளங்கிய இவ்வாலயம் மரங்கள் ஊடுருவிப் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. சுற்றிலும் வயல் வெளிதான். எல்லாவற்றையும் பறி  கொடுத்து விட்டு ஓட்டுக் கொட்டகையில் மூர்த்திகள்  தகுந்த பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருக்கும் அவலத்தை அறநிலையத் துறைதான் கண்டு கொள்ள வில்லை என்றால் மற்றவர்களாவது இரங்கக் கூடாதா? கலை, கல்வெட்டு என்றெல்லாம் வானளாவப் பேசும் ஆர்வலர்கள் எங்கே போனார்கள்?  கருத்துக் கூறுவதோடு ஒதுங்கிக் கொள்ளும் இவர்கள் ஆலயத்தைப் புனரமைப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்?  கால ஆராய்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கடவுளிடம் ஈடுபாடு இல்லாமல் போவதால் ஏற்பட்ட  விளைவே இது. 

நடைமுறையில் பார்த்தால் , ஒரு கோயிலின் திருப்பணி துவங்கும் முன்பாக ஊரார் ஒரு குழு அமைத்துத்  திருப்பணிக்காக அக்கோயிலின் நிர்வாக அதிகாரியை அணுகுகின்றனர். அவரது ஒப்புதலின் படியே திருப்பணிகள் நன்கொடையாளர்கள் மற்றும் ஊராரின் உதவியுடன் துவக்கப் படுகின்றன. இத்திருப்பணியில் அறநிலையத்துறையின் பங்கு சுமார் இருபது சதவீதமே ! அந்த உதவியின் மூலம் சுற்றுச் சுவர் அமைத்தல், தரை சீரமைத்தல் போன்ற பணிகள் கோயிலில் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகத்திற்கு அறநிலையத்துறை உதவி செய்யாததால், திருப்பணிக் குழுவினர்   நன்கொடையாளர்கள் மூலம் அதனை நடத்துகின்றனர். 

நிலைமை இவ்வாறு இருக்கும்போது நீதி மன்றத்திற்குப் போவானேன் என்று சிலர் கேட்கலாம். திருப்பணி என்ற பெயரில் பழமை அடியோடு மாற்றப்படுகிறது என்ற புகார்கள் பல ஊர்களில் எழுப்பப்படுகின்றன. உண்மைதான். கல்வெட்டுக்களைக் கூட அவற்றின் அருமை தெரியாமல் அகற்றியும் அவற்றின் மீது வர்ணம் பூசியும் மாற்றி விடுகிறார்கள். புதிய சன்னதிகள் வசதி என்ற பெயரில் ஏற்படுத்தப்படுகின்றன. பிராகாரங்கள் கடை வீதிகள்  ஆகின்றன. ஐம்பது அறுபது ஆண்டுகளாகத் திருப்பணி செய்யாமல் இருந்து விட்டு, ஒருவழியாகத் திருப்பணி செய்யப்பெறும் ஆதீனக்  கோ யில்களிலும் இத்தகைய மாற்றத்தைக் காண்கிறோம். பிராகாரங்கள் சிமென்ட் மேற் கூரைகளால் மூடப்படுகின்றன. கருங்கல் தரைகள் அகற்றப்பட்டு  கிரானைட் கற்கள் பொருத்தப்படுகின்றன. மூலத்தானத்தில் டைல்ஸ் கற்கள் பொருத்தக் கூடாது என்று அறநிலையத்துறை அறிவித்திருந்தும் எவ்வளவு பேர் அதைப் பொருட் படுத்துகிறார்கள்?  ஆங்காங்கே கருங்கல் தூண்களும் சுவர்களும் துளையிடப்படுகின்றன. பண்டைய ஓவியங்கள் மறைக்கப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றன. 

அனுமதி வழங்கப்பட்டும் இத்தகைய விதி மீறுதல்கள் நடக்கக் காரணம் என்னவாக இருக்கும்? நமக்குத் தெரிந்த வரையில் , அனுமதி வழங்கிய நிர்வாக அதிகாரி திருப்பணி நடக்கும் போது பார்வை இடாமல் எல்லாம் முடிந்த பிறகு வருகை தருவதால் ஏற்படும் விபரீதம் என்றே கருதுகிறோம். இத்தகைய நிலை கிராமக் கோயில்களில் தொடர்கிறது. நேரமின்மையைக்  காரண மாகக் காட்டுவதை ஏற்க இயலாது. முடியாமல் போகும் பட்சத்தில் அனுமதி வழங்குவதன் நோக்கம் தான் என்ன ? 

இப்போது நீதி மன்றத் தீர்ப்புக்கு வருவோம். நிர்வாக அதிகாரி அனுமதி வழங்கி விட்டுத் திருப்பணிகளைக் கூடவே இருந்து கண்காணிக்காதது ஏன் என்ற கேள்வி உச்ச நீதி மன்றத்தில் எழுப்பப்பட்டதா என்று தெரியவில்லை. அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதால் அக்கேள்வி எழவில்லை என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கக் கூடும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. 

மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கப்பெறும் திருப்பணி ஒப்புதல், காலம் தாழ்த்தப்பட்டு வழங்க சாத்தியம் ஆகலாம். " நீங்கள்      தாராளமாகத் திருப்பணி செய்து கொள்ளுங்கள்   அறநிலையத் துறையின்  உதவித் தொகைக்கு மேல் நன்கொடையாளர்கள் மூலம் திருப்பணியை நிறைவேற்றிக்  கும்பாபிஷேகம் செய்து கொள்ளுங்கள்" என்று தற்போது ஒதுங்கும் நிர்வாக அதிகாரிகள் இனிமேல் நமக்கேன் வம்பு என்று, அனுமதி கேட்டு வந்த விண்ணப்பத்தை மேலதிகாரிகளுக்கு அனுப்பி விட்டுத் தனக்கு சம்பந்தமே இல்லாதது போல் இருந்து விடுவர். அனுமதி கிடைக்க மக்கள் அலைய வேண்டிய நிலை வரலாம். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் திருப்பணி - கும்பாபிஷேகம்  காணாமல் மரம் முளைத்துப் போன ஆலயங்கள் மேலும் இயற்கைச் சீற்றத்தால் சீரழிய வாய்ப்பு ஏற்பட்டு விடும். இவற்றை நீதி மன்றத்தின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. நமது புராதன ஆலயங்கள் எவ்வாறு புனரமைக்கப்படவேண்டும் என்றும் அதற்கான கால வரையறை எவ்வளவு இருக்கலாம் என்றும் திட்ட வட்டமாக அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று நம்புகிறோம். 

எனினும் நமது  ஆதங்கத்தை இறைவனது திருச் செவிகளுக்குக் கொண்டு சேர்ப்போம். அனைத்து உலகங்களுக்கும் மேலான நீதிபதியான மகேசனின் தீர்ப்பே இறுதியானதும் வணங்கத் தக்கதும் ஆகும்.   

Friday, July 22, 2016

என்னதான் வேண்டிக் கொள்வது?

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. இது நடைபெற்ற இடம் சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் ஆலயத்திலுள்ள ஆயிரம் கால் மண்டபம். அதிகாலை மூன்று மணிக்கு மேல் இருக்கும். மார்கழித்  திருவாதிரையை முன்னிட்டு மண்டப முகப்பில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அந்த இரவு நேரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வளவு பேரும் தரையில் உட்கார்ந்த வண்ணம் வைத்தகண் வாங்காமல் ஆடல் வல்லானது அபிஷேகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நமக்கு முன்னால் நான்கு வரிசைக்கு அப்பால் சிறிய சலசலப்பு கேட்டது. அதற்குக் காரணமானவர் ஒரு பெண்மணி. அவருக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் சற்று உயரமாக இருந்ததால் அப்பெண்ணால் அவர்களது தலைகளை மட்டுமே பார்க்க முடிந்தது. முன்னால் இருந்தவர்களும் ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் வேண்டும் என்றே நகராமல் , சுவாமி தரிசனம் செய்ய விடாமல் மறைக்கிறார்கள் என்று நினைத்த அப்பெண்ணுக்கு அவர்கள் மீது கோபம் பொங்கி எழுந்தது. என்ன சத்தம் போட்டாள் தெரியுமா? " நடராஜா, இவர்களையெல்லாம் அழித்துவிடு" என்று. சுற்றி இருந்தவர்களுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. மாறாகச்  சிரிப்புத்தான் வந்தது. இப்படியும் ஒரு பிரார்த்தனை செய்யமுடியுமா என்று எல்லோருக்கும்ஆச்சர்யம் ! 

வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தாராம். அவருக்கு ஒரு சிஷ்யன் கூடவே இருந்தானாம். சிஷ்யனும்  குருவைப்போல் நிறையப் படித்தவன்தான். தன்னையும் உலகம் குருவை வணங்குவதைப்போல மதிக்கவேண்டும் என்று எண்ணினானாம். நாளடைவில் அது குரு மீது பொறாமையாக ஆகிவிட்டது. கடவுளிடம்  சீக்கிரமே தனது குரு மறைந்து , தான் மடாதிபதி ஆகவேண்டும்  என்று வேண்டினானாம்! மேற்கூறிய பெண்ணுக்கும் இந்தக் கதையில் வரும் இளம் துறவிக்கும் சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இருந்ததோடல்லாமல் பிறர் அழிய வேண்டும் என்ற பிரார்த்தனை வேறு! 

இன்னும் சிலர் பேருக்காகவும் புகழுக்காகவும் பதவிக்காகவும் வேண்டிக் கொள்வதுண்டு. பணத்தாசை பிடித்தவர்கள் உறவினர்களைக்கூடத் தவிர்த்து விடுவர். சொத்துத்  தகராறினால் பிளவு பட்ட குடும்பங்கள் ஏராளம். பத்திரப் பதிவு மற்றும் நீதி மன்றங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்வதோடு, தங்களுக்கே சாதகமாக அமையவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்வார்கள்! 

வேடிக்கையான பிரார்த்தனைகளும் இல்லாமல் இல்லை. தங்களுக்குப்  பிடித்த விளையாட்டு வீரர் ஒருவர் வெற்றி பெறுவதற்கு வழிபாடுகளும் வேள்விகளும் நடத்துகிறார்கள். திரைப்பட ரசிகர்களோ படம் வெற்றி அடையப் பிரார்த்தனை செய்கிறார்கள்! உலகத்திலேயே புனிதமான தொழில் என்று கருதப்படும் மருத்துவத்தொழில் செய்பவர்களும் தங்கள் தொழில் வளமாக நடைபெற இறைவனை வேண்டுகிறார்கள். உலகம் முழுதும் நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்றால் இந்தத் தொழிலே இல்லாமல் போய் விடலாம் அல்லவா? 

இவ்வளவுக்கும் நடுவில் மனக்கவலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் பிரார்த்தனைகள் காலம் காலமாகத் தொடர்கிறது.  நோய் குணமாவதற்கும் , கால தாமதமான திருமணம் நடைபெறவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் , தேர்வில் வெற்றி பெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் நடத்தப்படும் பிரார்த்தனைகள் தொடருகின்றன. 

பிரார்த்தனை நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதாகக் கூடப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. கோயில்உண்டியல் நிரம்புகிறது. சில கிராமத்து மக்கள் கிடா வெட்டிக் காணிக்கை செலுத்துகின்றனர். 

மேற்கூறிய  எல்லாம் சரியா தவறா என்ற ஆராய்ச்சி இங்கு தேவையில்லை. இப்படி வகை வகையாகக் கோரிக்கைகள் வைக்கப்படும் முன்பு  அவை நியாயமானவைகளா,தருமத்திற்கு உட்பட்டவையா என்று சிந்திப்பது நல்லது. காணிக்கையால் கடவுளை விலைக்கு வாங்கி விட முடியாது. மாசற்ற, என்றும் நீங்காத அன்பு ஒன்றுக்கு மட்டுமே இறைவன் கட்டுப்பட்டவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை முடிவில் செய்யும் பிரார்த்தனை, நைவைத்தியம்  ஆகியவைகளும் அப்பழுக்கில்லாத காணிக்கைகளே. 

குடும்ப நலன் மட்டுமல்லாமல் உலகமே சுகமாக இருக்கச் செய்யப்படும் பிரார்த்தனையையும் , உண்பதன்  முன் மலர் இட்டு அர்ச்சித்துவிட்டு, உண்பனவும் உடுப்பனவும் தந்தவன் இறைவனே என்பதை உணர்ந்து அவனுக்கு நன்றியுடன் செய்யப்படும் நைவைத்தியத்தையும் விட எளிய - உயர்ந்த பிரார்த்தனை இருக்க முடியுமா? " எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லால் வேறொன்று அறியேன்" என்று தாயுமானவர் சொன்னதுபோல்  வேண்டிக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் பெற முயற்சிக்க  வேண்டும். அந்த மனோபாவத்தை நாம் பெற பரமேச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும்.    
    

Monday, June 20, 2016

கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டுமே

நமது கோயில்கள் வழிபாட்டுக்கு உரிய இடங்களாகவே மட்டும்  இருக்கவேண்டும். ஆனால் நாம் இன்று காண்பது என்ன ?  ஊர் வம்பு பேசவும் காற்று வாங்கும்  இடங்களாகவும் பலர்  அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மன அமைதியை நாடி வருபவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இந்த நிலை பெரும்பாலும் நகர்ப்புறக்  கோயில்களில் அதிகம். சில கோவில்களில் எழுதி  வைத்திருக்கிறார்கள் , " பரம்பொருளின் நாமத்தைத்தவிர வேறொன்றும்  ஆலயத்தில்  பேச  வேண்டாம் "  என்று.  கேட்டால் தானே?  நான் பேசுவதைக் கேட்க இவர்கள்  யார் என்பார்கள். சன்னதியை மறைத்துக் கொண்டு பிறரைத்  தரிசிக்க விடாமல்  செய்வார்கள். அண்மையில் நடைபெற்ற திருவாரூர் தேர் விழாவின் போது தேர் சக்கரத்தருகில்  எவரும்  நிற்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப ஒலிபெருக்கி  மூலம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு இருந்தார்கள். சக்கரத்திற்கு அருகில் நிற்பது ஆபத்து  என்று சொன்னாலும் கேட்காமல் அடம் பிடிப்பவர்களை என்ன  செய்வது ? கோயில் வழிபாட்டில் கூடவா ஒழுங்கீனத்தைக்  கையாள  வேண்டும் ? 

பல கோயில்களில்  படப்பிடிப்பு தாராளமாக நடத்தப்படுகிறது.  அப்படி நடக்கும்போது தரிசிக்க வருபவர்களை  உள்ளே நுழைய விடாமல்  படப்பிடிப்புக் குழுவினர் தடுக்கிறார்கள். அப்படித் தடுக்க இவர்களுக்கு ஏது அதிகாரம் என்று புரியவில்லை. சின்னத்திரைப் படப்பிடிப்பும் இதேபோல நடந்து வருகிறது. எதிர்ப்பவர்களைக் காணோம். அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு கோயில் பின்னணியில் கண்ட கண்ட நடனங்களைக் கொண்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சில நோட்டுக் கற்றைகளை வீசி  அனுமதி பெற்று விடுகின்றனர். இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்ன  என்றால் கோயிலுக்கு வந்தவர்கள்  படப்பிடிப்பை வேடிக்கை  பார்ப்பதுதான். 

அண்மையில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம்  கோவிலில் விக்கிரகங்கள் களவாடுவதை மையக்  கருத்தாகக் கொண்டு இருப்பதாக அறிகிறோம். இந்த  தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் சமூகப் பொறுப்பு என்ற ஒன்றே கிடையாதா? நாடு எக்கேடு கேட்டாலும் காசு சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்களா? இவர்களுக்கு சிந்திப்பதற்கு வேறு கதையே கிடைக்கவில்லையா? சதித் திட்டம் தீட்டுவதற்கு சின்னத்திரையில் கோயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களைக்  கேட்கிறோம். நீங்கள்  மாறப்போவதில்லை. சின்னஞ் சிறிய வயதினரைப் பாழ் செய்தது போதும். கோவிலில் களவாடக்  கற்றுக்  கொடுக்காதீர்கள். கோடியில் ஒருவன் அதைப் பார்த்து வீணாகப் போனாலும் நாடு  தாங்காது. நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள்.  

களவு போவது ஒரு பக்கம்  போதாததற்கு விக்கிரகத்தையே மாற்றும்  ஏற்பாடுகள் அற நிலையத்துறையால் செய்யப்படுகிறது. இதைக்  கண்டித்து அடியார்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.  அதோடு நிறுத்தக்கூடாது. கோயில்கள் வியாபாரக் கூடங்களாக மாறுவதையும், படப்பிடிப்பு நிலையங்களாக  ஆவதையும் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும். கேட்பதற்கு யாரும் இல்லாததால் தானே இவ்வாறு படம் எடுக்கத் துணிகிறார்கள்?  அடியார் பெருமக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே இதற்கு விடிவு காலம். 

Friday, June 3, 2016

இன்று நல்ல நாள்

" எல்லா நாட்களும் நல்ல நாட்களாக இருப்பதில்லை. அதேசமயத்தில் நல்லது ஒன்று கூட நடைபெறாத நாளே இருப்பதில்லை " என்ற ஒரு வாசகத்தை அண்மையில் படிக்க நேரிட்டது. அது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஏற்றது என்று அப்போது அவ்வளவாக விளங்கவில்லை. படித்த சில மணி நேரத்தில் வீட்டிற்குப் பசும்பால் கொடுப்பவர் ஒருவர் அடியேனிடம் வந்தார். அதுவரையில் ஒருவருக்கு ஒருவர் அளவளாமல் இருந்தும், அடியேனது கழுத்தில் இருந்த ருத்திராக்ஷத்தைப் பார்த்ததாலோ என்னவோ  அண்மையில் வந்து ஒரு கேள்வி கேட்டார். " ஐயா, ஒரு மாதம் முன்பு எனக்கு நான்கு முக ருத்திராக்ஷம் ஒன்று கிடைத்தது. அதை வீட்டில் உள்ள சிவன் படத்தருகில் வைத்திருந்தேன். என்னிடம் பதினொரு பசுக்கள் உள்ளன. நன்றாகப் போய்க் கொண்டிருந்த பால் வியாபாரம் திடீரென்று சரிவடையத் தொடங்கியது. அசைவம் சாப்பிடும் வீட்டில் ருத்திராக்ஷம் வைத்துக் கொண்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். அதை ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடலாமா? அல்லது தங்களிடமே வேண்டுமானாலும் கொடுத்து விடட்டுமா? " என்றார்.

அவரது பேச்சில் ஒரு வித பயம் கலந்திருப்பது தெரிந்தது. ருத்திராக்ஷம் போடுபவரிடம் அதைப் போட வேண்டாம் என்ற பதிலை எதிர் பார்க்கிறாரோ? ஒருவாறு அவரை சமாதானப் படுத்தத் துணிந்தோம். " நீங்கள் வாரம் ஒரு முறை அசைவம் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். அசைவ உணவும் அப்படி ஒன்றும் மலிவாகக் கிடைப்பதில்லை என்று தெரிகிறது. மேலும் மனிதக் கழிவுகளும் ரசாயனக் கழிவுகளும் கொட்டப்படும் கடலில் பிடிபட்ட மீன்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவைகளாக இருந்தால் அம்மீன்களை உட்கொள்பவர்களுக்குக் கொடிய வியாதிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்கள். எனவே எந்த மாற்றத்தையும் உடனே செய்துவிடுவது கஷ்டம்தான். படிப்படியாகத் தான்  மாறியாக வேண்டும். உங்களைப் பொறுத்தவரையில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். உங்களைப் பார்த்து வீட்டில் உள்ளவர்களும் மாறலாம். முழுவதும்  மாறியபின் அந்த ருத்திராக்ஷத்தைக் கயிற்றில் கட்டிக் கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். பால் வியாபாரம் மட்டுமல்ல. எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள். குடும்பமும் செழிக்க ஆரம்பித்து விடும். அந்த நல்ல செய்தியை ஒரு மாதத்தில் நீங்களே வந்து சொல்வீர்கள் என்று நம்புகிறேன் " என்று கூறி விடை கூறி அனுப்பி வைத்தோம்.
 
இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ருத்திராக்ஷம் போடுவதையோ  அல்லது அதை வேறிடத்தில் கொடுத்து விடுவதையோ , வியாபார முன்னேற்றத்தையோ மட்டும் நாம் இங்கு கவனிப்பதை விட ருத்திராக்ஷம் இருக்கும் இடத்தில் தூய்மையும் பக்தியும் இருக்க வேண்டும் என்று அவர் உணரத் தொடங்கி விட்டார் அல்லவா? அதைப் பாராட்டியே ஆக வேண்டும். அதைப் போட்டுக் கொள்வதை நாகரீகச் சின்னமாக நினைத்து ஆட்டம் பாட்டம் போடுவதும் கேலிக் கூத்தாக்குவதும் வாடிக்கை ஆகிப் போய் விட்ட இக்காலத்தில் இப்படியும் சிலர் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாளையும் நல்ல நாளாக ஆக்கிய அந்த அன்பருக்கும் மறைந்திருந்து நம்மை ஆட்டுவிக்கும் அந்த இறைவனுக்கும் எந்த வகையில் நன்றி செலுத்துவது?  

Saturday, May 28, 2016

இப்படியும் சிவதருமம் செய்யலாமே

தானம் என்பதும் ஒருவகையில் பார்த்தால் தவம்தான்.  தவம் செய்யாதவர்கள் தானத்தை செய்வதன் மூலம் தவம் செய்த பலனைப் பெறலாம் . அன்ன  தானம் உயர்ந்தது தான். ஆனால் எங்கே யாருக்கு அது செய்யப்படுகிறது என்பது அதை விட முக்கியம். பிரதோஷம் நடைபெறும் பல சிவாலயங்களில்  அண்டா அண்டாவாகப் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்வோர்  ஏழை எளியவர்களாகவோ  அல்லது தேசாந்திரிகளாகவோ இருந்தால் பரவாயில்லை. அண்டையிலுள்ள  வீடுகளிலிருந்து வருபவர்களும் கைகளை நீட்டுகிறார்கள். பிரசாதம் என்ற அளவில் கொடுத்தாலும் பரவாயில்லை. (அதுவும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.)வரிசையில் சென்று பெரிய தொன்னைகளில் சுண்டல்,சாத வகைகள் போன்றவை விநியோகிக்கப்படுகின்றன. அப்படி விநியோகம் செய்தால் தான் கூட்டம் வருகிறது என்ற வியாக்கியானம் வேறு !!

பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தது போக, பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்போடு செல்பவர்களுக்கு என்ன சொல்வது?  இவ்வளவு இருந்தும், பலர் அந்த நாட்களில் உபவாசம் மேற்கொள்வதை இன்றும் பார்க்கிறோம். எடுத்துச் சொல்பவர்கள் இல்லாமல் போய் விட்டதால் இப்படி ஆகி விட்டதா என்று தெரியவில்லை. பரமேசுவரன் ஆலகால நஞ்சை உண்டு அகில உலகங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றிய வேளை யில் நாம் அந்த கருணைக்குத் தலை வணங்க வேண்டியது போக வயிற்றுக்கு இரை தேடுவது கொடுமை !!

முற்காலத்தில் திருவிழாக்களைக் காண்பதற்காகப்  பக்கத்து ஊர்களிலிருந்தும் தொலைவிலிருந்தும் யாத்திரையாக வருபவர்கள் தங்க இடமும் உண்ண உணவும் பல சத்திரங்கள்  மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. உள்ளூரில் உள்ள ஏழை மக்களும் தங்களால் இயன்ற உபகாரமாகத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தந்தனர். இக்காலத்தில் அன்னதானம் செய்கிறோம் என்ரு நினைத்துக் கொண்டு , வயிறார உண்டு விட்டு வருபவர்களுக்குப்  பிரதோஷ நேரத்தில் அன்ன  தானம் செய்வதைத்  தவறு என்று எவரும் சொல்வதாகத் தெரியவில்லை.

ஏதோ செய்துவிட்டுப் போகட்டுமே, சிவதருமமாக  நினைத்துக் கொள்ளலாமே என்று சமாதானம் சொல்பவர்களும் உண்டு. கோயில் இடிந்து கிடந்து பூஜைகள் நின்று விட்டதைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறவர்களின் வெட்டிப் பேச்சுக்களில் இதுவும் ஒன்று. இவர்களில் எத்தனை பேர் சிவதருமமாகத் தங்கள் வீட்டு வைபவங்கள் நடைபெறும்போது பூஜையற்ற கோயில்களை எண்ணிப் பார்க்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் சொந்த கிராமத்துக் கோயில்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று பார்க்கிறார்கள்?  கோயில்களில் பணிபுரியும்  சிப்பந்திகளின் நலனைப் பற்றி சிந்தித்ததுண்டா?  அன்றாடம் செய்யும் ஊதாரிச் செலவுகளின் சிறு துளியையாவது அந்தப் பக்கம் திருப்பி விட்டிருப்பார்களா?

பொழுது விடிந்து பொழுது போனால் பணப் புழக்கத்தில் மூழ்கியிருக்கும் வியாபாரிகளாவது இதைப் பற்றி சிந்திக்கலாம். அண்மையில் ஒரு கல்யாண மண்டப மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த எண்ணத்தை வெளியிட்டோம். வழக்கமாக எல்லோரும் சொல்வது  போல் " என்ன  செய்வது? காலத்தின் கோலம் " என்ற பதிலே அவரிடமிருந்து வந்தது. அவரிடம் ஒரு யோசனை சொன்னோம். மண்டப வாடகையாகப் பல ஆயிரங்கள் கட்டணம் பெறும்போது கூட ஒரு ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயை சேர்த்து வாங்கிக் கொண்டால் அத்தொகையை ஆலய பராமரிப்புக்காக வைத்துக் கொள்ளலாம். அப்படிச் சொல்லிக் கேட்டால் யாரும் கொடுக்கப் போவதில்லை. ஆகவே இவ்வாறு மறைமுகமாகப் பெறப்படவேண்டியிருக்கிறது. மாதம் சராசரியாக ஒரு மண்டபத்தில் நான்கு திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு மாதமும் 2000 முதல் 4000 வரை இப்புனிதப் பணிக்காக சேர்ந்து ஆண்டு முடியும் போது பெரிய தொகையாகச் சேர்ந்து விடும். இதே போல் புடவை வியாபாரம் செய்பவர்கள் புடவை விலையோடு ஐம்பதோ அல்லது நூறோ சேர்த்து விற்றால் அந்த அதிகத் தொகையைக் கொண்டு பல ஆலயங்களையும் சிப்பந்திகளையும் காப்பற்றலாம். ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் இதுபோல் சிந்திக்கலாம்.

நிலவருமானமோ, அரசாங்க உதவியோ  இல்லாத நிலையில் இதுபோன்ற மாற்று வழிகள் மூலம் சிவதருமத்தை செய்ய முடியும். ஆம்! மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும். அந்த எண்ணத்தை  எல்லோரது மனதிலும் தோன்றும்படி அருளவேண்டும் என்று ஈசுவரனைப் பிரார்த்திப்போம். சிவகிருபை இருந்து விட்டால் நடக்காதது எது?

Saturday, May 7, 2016

தவத்திற்கு அழகு

தன்னுடைய சொந்த பந்தங்களைத் துறந்து விட்டுக் காவி உடை தரித்துவிட் ட எல்லோரையுமா உலகம் கொண்டாடுகிறது?  பஞ்சேந்திரியங்களை அடக்கித்  தவம் செய்பவர்களையே மக்கள் நாடுவர். ஆகவே, வெளியில் காவி உடையோடு  சமயச் சின்னங்களைத்  தரித்துக் கொண்டால் மட்டும் போதாது. காவி உடை மேல் பட்டாடைகளை அணிந்தும், வெற்று மார்புடனும்  மக்கள் மத்தியில்  வலம் வரும் துறவிகளைப் ( ? ) பற்றி என்ன  சொல்வது?  அவர்களது சீடர்களும் அதைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகிறார்கள். பிறருக்கு முன் உதாரணமாக இருந்து காட்டவேண்டி யவர்களே நெறி மாறி நடக்கும்போது  மற்றவர்களால் என்ன  செய்ய முடியும்.?

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மூர்த்தி நாயனார் என்பவர்  மதுரைப் பெருமானுக்கு சந்தனம் அளித்துவரும் நியமத்தோடு வாழந்தவர். அவருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காமல் சமணர்கள் செய்துவிடவே, தனது முழங்கையால் சந்தனக் கல்லில் கை நரம்பும் தோலும் கரையும்படி தேய்த்தார். அவரது பக்திக்கு இரங்கிய பரமேசுவரன் அவருக்கு மதுரையை ஆளுமாறு அருளினான். அரசரானபோதும் தனது சந்தனம் அளிக்கும் கைங்கரியத்திலிருந்து அவர் தவறவே இல்லை. அமைச்சர்களை நோக்கிய மூர்த்திநாயனார்," விபூதியே எனக்கு அபிஷேகப் பொருளாகவும், ருத்ராக்ஷமே ஆபரணமாகவும், ஜடாமுடியே கிரீடமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை ஆள்வேன்" என்றார். இந்த மூன்றாலும் ஆண்ட அவரை, சுந்தரர், " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும்  அடியேன் " என்று சிறப்பித்துப்  பாடியிருக்கிறார். . ஓரு அரசர் இவ்வாறு வாழ்ந்து காட்டியபோது, துறவிகள் , தாம் மேற்கொண்ட துறவறத்திற்கு இலக்கணமாக இருக்க வேண்டியது  எவ்வளவு  அவசியம் என்பதை  சொல்ல வேண்டியதில்லை. .வையகத்தை நல்ல வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசனுக்கும் ஆசானுக்கும் உண்டு. அதை மூர்த்தி நாயனார்  வரலாற்றில் சேக்கிழார் கோடிட்டுக் காட்டுகிறார்:

" வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே
 செய்யும் அபிடேகமும் ஆக; செழுங் கலன்கள்
ஐயன் அடையாளமுமாக; அணிந்து தாங்கும்
மொய்புன் சடை மாமுடியே முடி ஆவது என்றார்."  

உள்ளத்து அழுக்கை நீக்கி இருள் நீக்கி அருள் தர வல்ல குருநாதரை நாடினால் குருவருளால் சிவனருள் எளிதில் பெறலாம். " தவத்திற்கு அழகு  சிவத்தைப் பேணுதல்"  என்பதால் இங்கு பேணுதல் என்பதைத்  தவத்தால் பேணுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு தவம் செய்வதால் குருவினது ஆற்றல் பன்மடங்கு பெருகும். எனவே , " என்பும் உரியர் பிறக்கு" என்றார் வள்ளுவர்.

காஞ்சி பெரியவர்கள் , சேஷாத்ரி சுவாமிகள்,ரமண மகரிஷிகள் போன்றோர் அண்மைக் காலத்தில் வாழ்ந்து தவம் செய்து காட்டியவர்கள். " நாட்டில் மக்கள் நெறி தவறி  நடக்கிறார்கள் என்றால் நான் செய்த தவம் போதாது என்று அர்த்தம். . முதலில் நான் மேலும் தவம் செய்து உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வேன்" என்று ஒருமுறை காஞ்சி பெரியவர்கள் சொன்னார்கள்.  

தவத்திற்கும் நெறி உண்டு. அந்த நெறியைக் காட்டி மன இருளை மாய்க்க வல்லவரே சற்குரு. அவரையே, திருமூலர்,  "  குருட்டினை  நீக்கும் குரு"  என்கிறார். அதுவரையில் முகத்தில் கண் கொண்டு காணும்  மூடர்களாக இருந்தவர்களை அகத்தில் கண் கொண்டு காணச் செய்து ஆனந்த மயமாக்கும் சற்குரு நாதர் கிடைக்க  நாமும்  தவம் செய்திருக்க  வேண்டும்.   தாயுமானார் சொல்லியதுபோல, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று முறையாக யாத்திரை செய்யும் போது சற்குரு  வாய்ப்பதும் உண்டு. அருளாளர்களுக்கு  இறைவனே சற்குருநாதனாக  எழுந்தருளுகிறான். திருத் துறையூர் என்ற தலத்தை அடைந்து " தவ நெறி தந்தருள்" என்று வேண்டிய சுந்தரருக்கு அவ்விதமே பெருமான் அருளினான். அங்கு சுவாமிக்கு சிஷ்ட குருநாதர் என்ற பெயர் உண்டு. அதேபோன்று திருப்பெருந்துறையில்(ஆவுடையார் கோயிலில்) மாணிக்க வாசகருக்காகக்  குருந்தமரத்தடியில் ஞானாசிரியனாக அருளினான் சிவபெருமான் .

மலைப் பிரதேசங்களிலும் காடுகளிலும் அவதூதர்களாக இரவில் யார் கண்ணிலும் படாமல் சஞ்சரித்தும், தவம் செய்தும் பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அப்படியெல்லாம் இப்போது ஒருவேளை இல்லாமல் போனாலும் துறவறம் ஏற்றவர்கள் கால் நடையாகவே சென்று ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தங்கி, மக்களை நல்வழிப்படுத்தும் நெறியிலிருந்து மாறிவிட்டால் யார்தான் அவர்களைக் கரை ஏற்றுவார்கள்? நகர வாழ்க்கை வாழ்பவர்களையே சந்திப்பதும் அங்கே தங்குவதும் தவத்திற்கு இடையூறாகவே அமையும். தவத்திற்கு அழகான சிவத்தைப் பேணுவதிலும் சிரத்தை குறைய ஆரம்பித்து விடும். இருவேளை பூஜைகள் ஒரு வேளை  ஆகி விடும். அதர்மத்தில் மூழ்கியுள்ள மக்களைத் திருத்த வழி இல்லாமல் போய் விடும். நாளடைவில் துறவறத்தை ஏற்று மக்களை நன்நெறிப்படுத்துவோர்  எண்ணிக்கையும் குறைந்து விடுமோ என்ற அச்சமும் எழுகிறது. தவநெறி தந்தருளும் தயாபரனாகிய ஞான பரமேசுவரனே இதற்கும் வழி காட்ட வேண்டும்

Thursday, April 14, 2016

அற நிலையத் துறை விளக்கம் தரட்டும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றை முகநூலில் ஒரு அன்பர் வெளியிட்டிருந்தார்.   தெய்வங்களுக்கு அணிவிக்க  வழங்கப்படும் நகைகள் பல கோயில்களில் களவு போவதும்,போலியாக மாற்றி வைக்கப்படுவதும் நடைபெறுவது தொடர்கதை ஆகி விட்டது. அது மட்டுமல்ல. பல கோயில்களில் கல்லாலும் பஞ்ச லோகத்தாலும் ஆன  மூர்த்திகள்  களவாடப்பட்டுள்ளன. இப்படி நகைகளும் மூர்த்திகளும் எத்தனை களவாடப்பட்டுள்ளன என்றும் எத்தனை மீட்கப்பட்டுள்ளன என்றும் இச்சட்டத்தின் மூலமாகக் கேட்கப்பட்டதற்கு அறநிலையத்துறை தந்துள்ள விவரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  இவ்வளவு நடைபெற்றும் அற நிலையத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

26.7.2010  தேதியிட்ட கடிதத்தில் தந்துள்ள தகவலின்படி 1999 ம் ஆண்டு முதல்  ஜூலை 2010 இடைப்பட்ட காலத்தில் 215 கோயில்களில் நகைத் திருட்டு நடைபெற்றுள்ளது. அதில் 16 கோயில்களின் நகைகளே மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 175 கற்சிலைகள் காணாமல் போனதில் 30  மட்டும் மீட்கப்பட்டுள்ளன. களவாடப்பட்ட 415 பஞ்சலோக விக்கிரகங்களில் 25 மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 1999 ம் ஆண்டுக்கு முன்பும், 2010 ம் ஆண்டுக்குப் பிறகும் நாம் இழந்தது எத்தனையோ!!




மேற்கண்ட கடிதத்தின் பெறுநர் விவரம்  முகநூலில் மறைக்கப்பட்டிருக்கிறது. எப்படியானாலும் தரப்பட்ட தகவல் உண்மையானது என்று நம்புவோம்.
அறநிலையத்துறை அமைக்கப்பட்டதன் நோக்கமே ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குத்தான். களவாடவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. இந்தத் திருட்டுக்களுக்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? துறையின் அமைச்சரா, அல்லது,ஆணையரா, அல்லது இணை/துணை கமிஷனர்களா அல்லது குறைந்த பட்சம் நிர்வாக அதிகாரியா? திருட்டு நடைபெற்றால் ஒருவரும் தண்டிக்கப்படுவதில்லை. இடமாற்றம் கூடச் செய்யப்படுவதில்லை.        " இதெல்லாம் ஆலயங்களில் நடைபெறுவது சாதாரணம் அப்பா.." என்று கூடச் சொல்லிவிட்டு மௌனிகளாகி விடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது இந்த அரசுத் துறை தேவையற்றது என்று சட்ட சபையில் எவரும் குரல் எழுப்புவதில்லை.

பஞ்சலோக மூர்த்திகள் களவாடப்படுவதைத் தடுப்பதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை வேறு ஒரு பெரிய கோயிலுக்கு இட மாற்றம் செய்கிறார்கள். எந்தக் கோயிலுக்காக அம்மூர்த்திகள் மன்னர்களால் செய்து வைக்கப்பட்டதோ  அவை இப்போது அங்கு இல்லாமல் போய் விடுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்றால் அவற்றை உரிய கோயிலுக்குக் கொண்டு வர அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. அர்ச்சகரும் ஊராரும் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்து கையெழுத்து இட வேண்டியிருக்கிறது. அதற்கான முழுச் செலவையும் ஊராரே ஏற்க வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரிக்கு வேறு என்னதான் பொறுப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

 ஐம்பொன் மூர்த்திகளை இட மாற்றம் செய்து வீட்டுப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். கற்சிலைகள் பராமரிப்பின்றி அனாதையாக விடப்படுவதை ஏன் இவர்கள் கண்டு கொள்வதில்லை? சுற்றுச் சுவர் கூட அமைக்கப் படாமல் , உளுத்துப் போன கதவுகளே காவல் என்று இருக்கும் அவல நிலைக்கு யார் காரணம்?  சில ஊர்களில் அந்தக் கதவுகளுக்கும் வருகை தரும்  சேவார்த்திகளே பூட்டு  வாங்கித்தருகிறார்கள். மின்சார பல்பு பழுதுபட்டால் அதையும் அவர்களே வழங்குகிறார்கள்.  இதெல்லாம் யார் செய்ய வேண்டியது? நில வருவாயைத்தான் மீட்டுத் தர முடியவில்லை. பாதுகாப்பையாவது பலப் படுத்தக் கூடாதா?

இனி உடனடியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுற்றுச் சுவர் அமைத்தல், பலமான விக்கிரகப் பாதுகாப்பு அறை , பாதுகாப்பு அலாரம், முழுநேரக் காவலர்கள் , நகைப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.  இவற்றைச்  செய்யாமல் களவு பற்றிப் போலீசாரிடம் தகவல் தந்துவிட்டால் கடமை முடிந்து விடாது.  கடமை தவறும் அரசுத் துறையால்  ஆலயங்கள் இழந்தவை ஏராளம். எஞ்சியவற்றையாவது பாதுகாக்க வேண்டாமா?  

Sunday, April 10, 2016

யாக சாலைக்குள் மொபைல் போன் வேண்டாமே

உலகம் எதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ அதன்படி நம்மை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. " உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்றார் வள்ளுவர். பொதுக் காரியங்களில் ஈடுபடும்போது இன்னமும் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. எத்தனையோ கண்கள் நம்மைப் பலவகைப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு பார்க்கின்றன என்பதை உணர வேண்டும். எனக்குப் பிடித்ததைச் செய்வேன் என்ற கொள்கையைத் தளர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிலும் ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் அதற்குரிய நியமங்களுடன் விளங்குவதையே மக்கள் விரும்புவர். இன்னும் சொல்லப்போனால், இறைவனைத் தீண்டி அன்றாடம் பூஜை செய்வோர்  பாரம்பர்யத்திலிருந்து சிறிது விலகினாலோ,அசிரத்தை காட்டினாலோ பார்ப்பவர்கள் முகம் சுளிக்க நேரிடுகிறது. எல்லோருக்கும் காலமாற்றத்தால் ஏற்படும் ஆசா பாசங்கள் எங்களுக்கும் ஏற்படுவது தவறா என்று வாதிடுவதால் உபயோகம் எதுவும் இல்லை.

“ முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்” என்று ஆதி சைவப் பெரு  மக்களைத் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்திருக்கிறார் சுந்தரர். அவ்வாறு தொகை அடியார் வரிசையில் வைத்துப் புகழப்படும் அளவுக்கு சிவபெருமானிடம்  மாறாத அன்பு பூண்டவர்கள் ஆதி சைவர்கள். தினையளவும் ஆகம வழியிலிருந்து மாறாமல் நியமத்துடன் பூஜைகள் செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நேர வாய்ப்பு உண்டு என்பதால் சிவாகம வழி பூஜை முடிவில் ஆசீர்வாதம் கூறும்போது மந்திர,தந்திர, கால, ,சிரத்தா,நியம லோபங்கள் (குற்றங்கள்) தற்செயலாக நிகழ்ந்து விட்டால் அதற்குப் பெருமானிடம் மன்னிப்பு வேண்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது அறிந்தே தவறு செய்யத் துணியலாமா?

கால நிலைமையால் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வந்த ஆலயங்கள் பலவற்றில் ஒரு கால பூஜையே நடக்கக் காண்கிறோம். அந்த ஒரு கால பூஜைக்கும் ஆபத்து வந்து விடும் சூழ்நிலை உருவாகிறது. இதற்கிடையில் பல ஆலயங்கள் திருப்பணி செய்யப்பட்டுக்  கும்பாபிஷேகம் நடைபெறுவது ஆறுதலான விஷயமாக இருந்தாலும் அவையும் நவீன மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

 இந்நாட்களில் சிவாசாரியப் பெருமக்களுக்கு ஓரளவு வருவாயைத் தருவது கும்பாபிஷேகங்களும் ஹோமங்களும் மட்டுமே. கிராமக் கோயில்களில் பணி செய்பவர்கள் இவற்றையே பெரும்பாலும் நம்பி அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அப்படி கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும்போது மேற்கண்ட லோபங்கள் நடைபெறாமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த வைபவத்தால் மூர்த்திகளின் சாந்நித்தியம் கூடுவதோடு, உலக நன்மையையும் கோரப்படுகிறது. அது சித்திக்க வேண்டுமானால் பங்குகொள்பவர்களது சிரத்தையும் நியமமும் முக்கியம் தானே?

சில ஊர்களில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற சிவாசார்யார்களுக்கு உரிய சம்பாவனை கொடுக்கப்படாமலோ,காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டோ அவர்களுக்கு மனவேதனையை அளிப்பது உண்மை தான்.பிரபலமான ஒரு கோயிலிலும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டதை ஒரு சிவாசாரியார் அண்மையில் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அதே ஆலயத்தில் அனேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறும்போது சில ஆசாரியர்கள் அங்கு வருகை தரும் முக்கிய புள்ளிகளோடு மொபைலில் படம் எடுத்துக் கொள்வதைக் கண்டு ஓர் அன்பர் முகநூலில் மனம் வருந்திக் குறிப்பிட்டிருக்கிறார். தங்களது கோயிலில் சிவராத்திரி பூஜை செய்த ஒருவர் மூலவரின் பக்கத்தில் நின்று கொண்டு படம் எடுத்து முக நூலில் வெளியிட்டிருக்கிறார். இவற்றைக் காணுபவர்கள்  என்ன நினைப்பார்கள் என்று எண்ணிப் பார்ப்பதோடு இந்த செய்கைகள் முறைதானா என்று தங்களுக்குள்ளே கேட்டுப்பார்ப்பது நல்லது எனக் கருதுகிறோம். யாக சாலையில் ஜோதிப் பிழம்பாகப் பெருமான் காட்சி அளிக்கும்போது அதனைக் கண்டு களித்து, வேத- ஆகம மந்திரங்களால் பெருமானைப் போற்ற வேண்டிய  கடமையிலிருந்து விலகுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?


இவ்வாறு சுட்டிக்காட்டுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இவ்வாறு எழுதுவதை நாம்  பல காலம் தவிர்த்து வந்த போதிலும் சமூக வலைத்தளங்களில் பலரும் எடுத்துக் காட்டும் போது இனியாவது அப்படி நேராதபடி திருத்திக் கொள்ள வேண்டும் என்பதால் எழுதும்படி ஆகி விட்டது. ஒரு சிலர் இவ்வாறு செய்வதால் ஆதிசைவ குலம் முழுவதையும் ஒன்றாகவே மக்கள் எடை போடுவார்கள் என்பதால் முன்னைக் காட்டிலும் அதிகக் கட்டுப்பாடு அவசியமாகிறது. யாக சாலை பூஜைகளின்போது மொபைலில் பேசுவதையோ,படம் எடுப்பதையோ பங்குகொள்ளும் சிவாச்சாரியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எவ்வளவு பேர் இக்கருத்தை ஏற்பார்கள் என்று தெரியவில்லை. ஏற்க மறுக்கும் பட்சத்தில் கும்பாபிஷேக யாக சாலைகளில்  ஒருபுறத்தில் போட்டோ ஷாப்பும், மற்றொரு புறம் காப்பி பாரும் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். அதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சுவாமிதான் யாக சாலாப் பிரவேசம் செய்ய வேண்டும். மொபைல்போன் அல்ல!       

Friday, March 11, 2016

சுவாமி புறப்பாடு

" சுவாமி புறப்பாடு "என்பது ஆலயத்திலுள்ள  மூல மூர்த்திகள் உற்சவ மூர்த்திகளில்  ஆவாகனம் செய்யப்பட்டு வீதி உலாவாக எழுந்தருளுவதைக் குறிக்கும். அந்தந்த ஊரின் ஸ்தல புராணத்தில் குறிப்பிட்டபடி உற்சவங்கள் ,தீர்த்தவாரிகள் நடைபெறுகின்றன. எல்லா ஊர்களுக்கும் பொதுவான மார்கழித் திருவாதிரை, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம்  போன்ற விசேஷ நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கொடி ஏற்றத்திலிருந்து தீர்த்தவாரி வரையில் வாகனங்களில் புறப்பாடு செய்வதும் சிவாகம விதிகளை ஒட்டியே நடைபெறுகின்றன.  இவ்வாறு மூலவரே உற்சவராகத் திருவீதிக்குச் செல்வதால், சுவாமி மீண்டும் கோயிலுக்குத் திரும்பும்வரை மூலஸ்தானக் கதவுகளை மூடி வைப்பதும் வழக்கம். அவ்வாறு வலம் வரும் வீதிகள் புனிதமாகக் கருதப்பட்டு மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சுவாமியின் வருகையை எதிர் நோக்கிய காலங்களை முதியவர்கள் நன்கு அறிவர். கோயிலுக்குச் செல்ல முடியாத நிலையிலிருக்கும் வயோதிகர்களும், நோயாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும்  வீட்டு வாசலிலேயே இறைவனை வழிபட ஏதுவாகப் புறப்பாடுகள் அமைந்துள்ளன. " நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி " எனத் திருவாசகம் கூறுவதைக் காண்க.

ஆலயத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆலயத்திற்கு வந்து  சேரும் வரை  புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதை ஆலய சிப்பந்திகளும், நிர்வாகத்தினரும் சுவாமி தூக்குவோரும், இசைக் குழுவினரும்,பொது மக்களும் நினைவில் கொள்ளவேண்டுவது மிகவும் அவசியம்.  வெறும் விக்கிரகம் தானே என்ற அலட்சியம் ஒருபோதும் இருக்கக்கூடாது.

மூர்த்தியை அலங்காரம் செய்வதிலிருந்து இந்த எண்ணம் ஏற்பட வேண்டும். தேவை இல்லாமல் மூர்த்திக்குச் செயற்கையாகக்  கை - கால்கள் வைத்துக் கயிறுகளால் கட்டுவதும்,முகத்தில் மையால் கண் வரைந்து இயற்கை அழகைக் கெடுப்பதும் தவிர்க்க வேண்டிய செயல்கள்.,

வாகனத்தில் மூர்த்தியை ஏற்றி,மலர் அலங்காரம் செய்தபிறகு தரையோடு தர-தர என்று இழுப்பதை ஒருக் காலும் அனுமதிக்கக் கூடாது. வாகன தூக்கிகள்  சட்டை-லுங்கிகள் அணியாதவர்களாகவும் திருநீறு பூசியவர்களாகவும் இருத்தல் அவசியம். ஆங்காங்கே நிறுத்துவதற்குக் கட்டைகளைக் கையில்  ஏந்தி வருவதை விட, அக்கட்டைகளை வாரைகளோடு கட்டியிருந்தால் எதிர்பாராத விதமாக ஒரு  புறத்தில் சுவாமி சாயும்போது நிலத்தில்  விழுந்துவிடாமல் இருக்க இது உதவும்.

காவிரியைக் கடந்து பல்லக்கு மணல் சரிவில் ஏறுதல் 
தோள்களில் ஏற்றிக் கொண்ட பிறகு பல ஊர்களில் மூர்த்தியின்  நடனம் எனச் சொல்லிக் கொண்டு சுவாமி தூக்கிகள் வாரைகளை இறக்கியும் ஏற்றியும் ஆட்டுகிறார்கள். இப்படிச் செய்யும்போது ஒருபுறம் சுவாமியைத் தாங்கிக் கொள்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கீழே விழுந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.

சென்ற ஆண்டு சித்திரையில் சப்த ஸ்தானப் பல்லக்கு நிலத்தில் சுவாமியோடு விழுந்ததும், இந்த ஆண்டு மாசி மகத்தில் காரைக்கால் அருகிலுள்ள   ஓர் ஊர் சுவாமியையைத் தூக்கியவர்கள் தவற விட்டு நிலத்தில் விழும்படி செய்ததும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுவாமியை லேசாக அசைத்தாலே போதும். இவர்கள் குக்குட நடனமும் உன்மத்த நடனமும் ஆட ஏன் முயற்சிக்கிறார்கள்?  அவை ஈசன்  ஒருவனாலேயே ஆடப்பட வேண்டியவை. போதாக்குறைக்குப் பல ஊர்கள்  சுவாமி தூக்கிகள் சுய நிலையில் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

ஒரு காலத்தில் தோள்களிலே வாகனங்களுடன் மூர்த்திகள் தூக்கப்பட்டு வந்ததுபோக, இப்போது டயர் வண்டிகளிலும், ட்ராக்டர்களிலும் மூர்த்திகள் உலா வருகின்றனர். தூக்கும் ஆட்கள் போதிய அளவு இல்லாததும் முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. எது எப்படி இருந்தாலும்  விழாவின் புனிதம் கெடாமல் இருக்க இன்னும் கவனம் தேவைப் படுகிறது.  வளைக் கடைகளும், பலூன் வண்டிகளுமே விழா என்று ஆகி விடக் கூடாது. உற்சவம் என்பது கேளிக்கை அல்ல. நம்மை வீடுதோறும் நாடி வந்து அருள் செய்யவரும் தெய்வத்தைப் போற்றும் விழா என்பதை நாம் மறக்கவே கூடாது.  

Friday, March 4, 2016

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்

காயத்ரி தேவி- தஞ்சை ஓவியம் 
வேதத்தை எழுதாக் கிளவி என்று தமிழில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது பரம்பரை பரம்பரைகளாக ஏட்டில் எழுதாமல் குரு மூலமாகக் காதால் கேட்டுக் கற்கப்படுவதால் இவ்வாறு அதைக் குறிப்பிட்டு வந்தனர்.  கற்பவர்களும் கற்பிப்போர்களும் நிறைந்த அந்தக் காலத்தில் வேத சம்ரக்ஷணம் என்று தனியாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. வேதம் தான் எல்லோரையும் காப்பாற்றியதே தவிர வேதத்தை நாம் காப்பாற்றவேண்டிய தேவை இல்லாமல் இருந்தது. இக்காலச் சூழ்நிலையில் கற்பவர்கள் மிகவும் குறைந்து விட்ட படியால் வேதம் மறைந்து விடாமல் இருக்கப் பல வித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழுதாக் கிளவியாகத் திகழ்ந்த வேதம் எழுதப்பட்டு ( அதாவது நூல் வடிவில் அச்சிடப்பட்டு) வருவதும் அம்முயற்சிகளுள் ஒன்று.

வேதத்தை ஒரு பிரிவினர்  பல்லாண்டுகள் தக்க குருவிடம் பயின்று ,பிறர்க்கும் பயிற்றுவிக்க வேண்டியுள்ளதால் , வாழ் நாள் முழுவதும் வேத நெறிக்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முடிந்தது. இப்படி எளிய வாழ்க்கை வாழ்வதே போதும் என்ற நிலை அப்போது இருந்தது.

வேதத்தைப் பிறர் படிக்கும் படி அச்சிட்டு வெளியிடக் கூடாதா  என்று கேட்கத் துவங்கியபோது கற்பவர்களும் குறைவதால் வேறு வழி இல்லாமல் அச்சிடும்படி ஆகி விட்டது. அப்படித் தயங்கியதன் காரணம் நமக்குப் புரியாமல் இருந்தது. இப்போது புத்தக வடிவில் வெளி வந்ததோடு கேசட், சி .டி என்றெல்லாம்  ஆகிக்  குரு முகமாகக் கற்க வேண்டிய மந்திரங்கள் பகிங்கரமாக ஒலி  பெருக்கிகள் மூலம்  அலற விடப்படுகின்றன. எல்லாத் தேவதைகளின் மூல மந்திரங்களும், தியானங்களும் புத்தகங்களில் அச்சாகியுள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி இப்படி வியாபாரம் செய்கிறார்கள். காலிங் பெல்லை அழுத்தினால் காயத்திரி மந்திரம் ஒலிக்கிறது. அதில் என்ன  தப்பு என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

 என்ன தப்பு என்று இப்போது பார்ப்போம்.  அதனால் மந்திரங்களின் சக்தி வலு இழந்துவிடும் என்று நாம் சொல்லப்போவதில்லை. அப்படிச் சொன்னால் அவற்றை ஏற்றுக்கொள்ளாததோடு ஏளனம் செய்பவர்கள் இருக்கும் இக்காலத்தில் அது எடுபடாது என்று தெரியும். நாம் இங்கு சொல்லப்போவது வேறு. முகநூலில் பார்த்த செய்தி ஒன்றே இதற்குத் தக்க  பதிலாக அமையும் என்பதால் அதைப் பகிரலாம் என்று எண்ணுகிறோம்.

வேற்று மதத்தைச் சார்ந்த ஒரு டைரக்டர்  எடுத்த தமிழ் திரைப் படத்தில் காயத்திரி மந்திரம் கேலிக்கூத்தாக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தியே அது. இப்போது சொல்லுங்கள். மந்திரங்களைப் புத்தகமாகவும் எலெக்ட்ரானிக் வடிவிலும் வெளியிட்டதன் விளைவுதானே இது?  குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிப்பவர்கள் இவ்வளவு நடப்பதைக் கண்டும், " எதோ ஒருவன் தவறு செய்வதால் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லலாமா" என்று கேள்வி  எழுப்புவர். இது ஒரு குடம் பாலில் சிந்திய ஒரு துளி விஷம் அல்லவா?   ஒரு துளி தானே என்று கூறுவீர்களா என்று அவர்களைக் கேட்கிறோம். அந்த ஒரு துளிகூட  விழுந்துவிடக் கூடாது என்பதாலும் உலகம் காக்கப்படுவதற்கு வேதங்கள் குரு மூலமாகக் காக்கப் படவேண்டும் என்றும் தீர்க்க தரிசன நோக்குடன் நமது முன்னோர்கள் காட்டிய பாதையைக் குறை சொல்லலாமா?  அதை மீறியதன் விளைவை இப்போதாவது அறிந்து கொண்டு அவர்களது மகிமையை உணர்கிறோமா?     

Wednesday, March 2, 2016

கலைகளே காலக் கண்ணாடிகள்

கலைகள் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லனவற்றை எடுத்துக் கூறும் பொக்கிஷங்களாகத் திகழ வேண்டும்.  தீய எண்ணங்களுக்கு வித்திடுபவற்றையும் தற்காலத்தில் கலைகள் என்று  பெயரிடுகிறார்கள். அவற்றை உருவாக்குபவர்களைப்   பட்டமளித்துக் கௌரவிப்பது காலத்தின் கொடுமை. ஆலயங்களே பெரும்பாலும் கலைகளுக்கு ஊற்றுக் கால்களாகவும் அவற்றைத் தொடர்ந்து ஆதரிப்பனவாகவும் திகழ்ந்தன. தற்காலத்திலோ கலைச் செல்வங்கள் களவாடப்படுகின்றன. அவற்றின் பெருமை அறிந்து ஆதரிப்போர்  சிலரே!

ஆலயக்கலை  என்பது கட்டிடக் கலை மட்டுமல்ல. இசை, நாட்டியம், சிற்பம் போன்ற அருங் கலைகளின் காப்பகமாகவும் ஆலயங்கள் அமைந்துள்ளன. ஸ்தபதிகளில் தான் எத்தனை வகை! ஆலய நிர்மாணத்தை நன்கு அறிந்தவரே   ஆகம விதிப்படி ஆலயம் அமைக்க இயலும். ஒரு சன்னதி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எத்தனை அங்கங்கள் உண்டு என்பதை அவரே அறிவார்.

விமானங்கள் சதுரமாகவும்,உருண்டையாகவும்,கஜப் பிருஷ்டமாகவும், பல தளங்கள் கொண்டும் விளங்குவதைக் கண்டு வியக்கிறோம்.கருங்கற்களை  இயந்திர வசதிகள் இல்லாத காலத்தில் உயரத்திற்கு ஏற்றி விமானங்கள் அமைத்த ஸ்தபதிகளை எத்தனை பேர் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்?

தற்சமயம் ஒரு சிற்பம் செய்வதற்கே பல மாதம் பிடிக்கும்போது கோயில் முழுவதும் சிற்பக் களஞ்சியங்களைப் படைத்த அக்கரங்களைப் பாராட்ட வேண்டாமா? பாராட்டத் தவறுவதோடு அவர்கள் வியர்வை சிந்தப் படைத்த விமானங்களையும் கோபுரங்களையும் மரங்கள் ஆக்கிரமித்து அழியும் நிலையில் இருப்பதைக் கண்டும் மௌனிகளாகத் தானே இருக்கிறோம்?

ஒரு கல் எவ்வாறு தெய்வ உருப் பெறுகிறது , பிறகு  அவ்வுருவமானது  எவ்வாறு கோயிலில்  பிரதிஷ்டை செய்யப்பட்டு சாந்நித்தியம் பெறுகிறது என்பதை  ஆகமங்கள் அறிவிக்கின்றன.

பண்டைக்காலம் போல் தற்காலத்தில் சிற்பங்கள் செய்பவர்கள் குறைந்து விட்டாலும் அந்த வழி முறைகள் இன்னமும் பின்பற்றப்படுகின்றன.  கல்லிலும் ஆண் கல்,பெண் கல்,தேரை இல்லாக் கல் என்று உரிய கற்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவ்வாறு தேர்ந்தெடுத்த  கல்லை பூசித்த பிறகே அதனை வடிவமைக்கத் தொடங்குகிறார்கள். சிற்பக் கல்லூரிகளில் பயின்றவர்களும் இதில் அடங்குவர். கல்லிலோ மரத்திலோ உலோகத்திலோ உருவாக்கப்படும் ஒவ்வொரு மூர்த்திக்கும்  தியான சுலோகம் உண்டு. அவற்றை மனப்பாடமாகக் கூறும் ஸ்தபதியார்களைக்  கண்டதுண்டு.

சண்டிகேசுவரர் வரலாறு 
கடினமான வேலைப்பாடு கொண்ட சிற்ப வரிசைகளைக் காணும்போது மலைப்பாக இருக்கிறது.  பூத கண வரிசையும் யாளிகளின் வரிசையும் நம்மை அயர வைக்கின்றன. சில ஊர்களில் சுமார் நான்கு அங்குலங் கொண்ட வரிசையில் பல புராணச் செய்திகளை அருமையாகச் செதுக்கியுள்ளார்கள். பெரிய அளவில் அமைந்துள்ள துவார பாலகர்கள், தேவ கோஷ்டங்கள் , ஒரே கல்லாலான மாபெரும் தூண்கள் - அவற்றின் நான்கு புறமும் உள்ள சிற்பங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவற்றை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம் ? ஒரே நாளில் வேன்- பஸ் வைத்துக் கொண்டு பத்து பதினைந்து கோவில்கள் பார்ப்பதில்தானே நமது கவனம் இருக்கிறது!
                                                                                                                      ---கலைகள் வளரும்

Wednesday, February 3, 2016

தெய்வத் தமிழிசை பரவச் செய்வோம்

பாடல்கள் இசைக்கப்படும்போது அவை இசை ஆகின்றன. அவ்வாறு இசைத்தல் எல்லோருக்கும் எளிமையாக இருப்பதில்லையே!  அப்படிப்பார்த்தால் உலகில் எதுவும் ஆர்வத்துடனும் முறையான பயிற்சியுடனும் கற்றால் தான் சாத்தியம் ஆகிறது. இசையும் அப்படித்தான். குரல் வளையைப் பக்குவப்படுத்தும் பயிற்சியே அது. சிலர் பாடினால் அது தேனாக நம் செவியில் பாய்கிறது. இன்னும் சிலர்  பாடினால் நாராசமாக  இருக்கக் காண்கிறோம் நல்ல குரல் வளம் உள்ளவர்களைப் பார்த்தவுடன் இவர்கள் முற்பிறவியில் இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்திருப்பார்கள் என்கிறோம். எப்படி இருந்தாலும் நம்மால் முடிந்த குரலிலாவது இறைவன் மீது மகான்கள் அருளிய பாடல்களைப் பாட வேண்டும் . அப்படிப் பாடுபவர்களின் குடி முழுவதையும்  இறைவன் கைதூக்கி விடுவான்  என்கிறார் ஞானசம்பந்தர்.     " கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி " என்பது அவரது வாக்கு.

திருமுறைப் பாடல்களில் பண்ணோடு கூடியவற்றைப் பாரம்பர்யத்துடன் பாடுவதற்குப் பயிற்சி தரவல்ல பாட சாலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்படுவது வேதனைக்கு உரியது. அவற்றில் பயின்ற மாணாக்கர்களும் தற்காலத் தேவைக்கான வருமானம் ஈட்ட முடியாமல் போவதால்  மாணவர் சேர்க்கை குறைந்து பாடசாலையையே மூடிவிடும்படி வந்து விட்டது. இப்படி வேத பாடசாலைகளும் தேவார பாடசாலைகளும் கற்பார் குறைந்து மூடப்படுவதால் எதிர்காலத்தில் அவற்றைக் கற்பார்  இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சமும் எழுகிறது.இதற்காக நாம் ஏன்  கவலைப் பட வேண்டும் என்று நினைக்காமல்  கடுகளவாவது  முயன்று ,அவற்றை மறையாமல் காப்பாற்றி எதிர் காலத் தலைமுறைக்கு வழங்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

கற்பிக்கும்போது கற்பவர்கள் எளிமையாகக் கற்க வல்ல பாடல்களையே முதலில் கற்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சீக்கிரமே அவற்றில் ஆர்வம் குறைந்து கற்பதை நிறுத்தி விடுவர். ஒதுவா மூர்த்திகளும் ஆலய சன்னதிகளில் பாடும்போது மக்களுக்கு எளிமையில் புரிய வல்ல பாடல்களைப் பாடி அவர்களது கவனம் வேறு எங்கும் போகாமல் பார்த்துக் கொண்டால் அப்பாடல்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு வர வாய்ப்பு உண்டு. ஓரளவாவது குரல்வளம் உள்ளவர்களே ஒதுவார்களாக இருந்தால் மக்களுக்கு ஆர்வம் ஏற்படுவது இன்னும்  அதிகரிக்கும்.

வகுப்பின் ஒரு பகுதி 
இன்றைய சூழ்நிலையில் பாடசாலைகளையோ ஒதுவார்களையோ தேடிச் சென்று கற்றுக் கொள்ளும் நபர்கள் மிகவும் குறைந்து வருகிறார்கள். ஆகவே நாம் வசிக்கும் பகுதியில் பத்து பேராவது சேர்ந்து ஒருவர் மூலம் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? இதைத்தான் நமது அமைப்பு கும்பகோணத்தில் அண்மையில் துவக்கியுள்ளது. எதிர்பார்த்தற்கு மேலாக அன்பர்கள் கற்பதில் ஆர்வம் காட்டினர். பிரதிபலனையோ,புகழையோ விரும்பாமல் சிவார்ப்பணமாக செய்யப்படும் சிறிய சேவை இது. இதுபோலப் பல ஊர்களிலும் அன்பர்கள் முன்வரலாம்.

வகுப்பின் மற்றொரு பகுதி 
தொழில் நுட்பம் கூடி வரும் இக்காலத்தில் அதை நல்ல வழிகளில் பயன்படுத்துபவர்களையும் காண்கிறோம். தேவார இசை கற்பிக்கப்படும்போது அதைத் தங்களது கைபேசியில்  அன்பர்கள்  பதிவு செய்யும்போது   அவர்களது ஆர்வத்தைக் கண்டு நெகிழ்கிறோம். கற்கும் ஒரு மணி நேரத்தில் ஆர்வம் குறைந்ததாக ஒரு நொடி கூட இல்லை என்பது அவர்களது ஈடுபாட்டைக் காட்டுகிறது.

அண்மையில் ஒரு சமூக வலைப்பதிவுப் படத்தில்  வெளி நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழக ஒதுவார்கள் பாடும்போது அவர்கள் பாடும் அப்பாடல் பெரிய எழுத்துக்களில் அங்கு கூடியிருந்தவர்கள் பின்பற்ற வசதியாகத் திரையில் காட்டப்பட்டிருந்தது. இதுவும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று. மனத்தில் அப்பாடலைப் பதியவைக்கும் உத்தியாகக் கூடக் கொள்ளலாம்.

பெரியவர்கள் பலர் கற்க முன்வரும்போது தங்கள் இல்லத்திலுள்ள குழந்தைகளையும் கூட அழைத்து வர வேண்டும். அப்பிஞ்சு நெஞ்சங்களில் மிகச்சுலபமாகப் பாடல்கள் பதிந்து விடும். உடலுக்கு உறுதி அளிக்கும் வகுப்புக்களுக்கு அவர்களை அனுப்புவதோடு உயிருக்கு உறுதி தரும் இசை வகுப்புக்களுக்கும் அனுப்ப வேண்டியது நமது கடமை அல்லவா? அதனால் இசையும் பரவும் . தமிழும் பரவும்.  அதன் பயனாக தெய்வ பக்தியும் பரவும். அதனால்தான் திருஞான சம்பந்தரை சிறப்பிக்கும்போது சுந்தரர் , " நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் " என்றார். நாமும் அவர்கள் காட்டிய நல்வழியில் நின்று தெய்வத்தமிழ் மூலம் இறைவனைக் காண்போம். 

Tuesday, January 12, 2016

குருவும் சிவமும்

காஞ்சி காமகோடி பெரியவர்கள் மொழி,இனம்,மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு  விளங்கி அனைவராலும் வணங்கப்பட்டவர்கள். தாம் வாழ்ந்த ஒரு நூற்றாண்டில் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களை நல்வழிப் படுத்தியவர்கள். அவரது எளிமை அனைவரையும் கவர்ந்தது. எல்லோரிடத்தும் சமமாகக் கருணை பாலித்த தனிப் பெருமை வாய்ந்தவர்கள் என்று சமய நம்பிக்கை அற்றவர்களும் ஏற்கும் அளவிற்கு நடந்து காட்டியவர்கள். குக்கிராமங்களுக்கும் நடந்தே சென்று எந்த வசதியும் இல்லாத அங்கு பல நாட்கள் தங்கிய பெருமையும் அவர்களைச் சாரும். அதே நேரத்தில் தனது நியமத்திலிருந்து கடுகளவும் தவறியதில்லை  மடத்தின் உயர்ந்த பாரம்பர்யத்தைக் காப்பதில் மிக்க அக்கறை காட்டியபடியால் குறுக்கு வழிகளையோ,மாற்று வழிகளையோ மக்களுக்கு ஒருபோதும் உபதேசித்தது கிடையாது. எனவே ஆதிசங்கரருக்குப் பின் வந்த ஆசார்யர்களில் இவருக்கும் சிறப்பிடம் உண்டு.

காஞ்சி மகான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்றும் பல தடவைகள் அவரை தரிசனம் செய்தோம் என்றும் அப்போது பெற்ற அனுபவங்கள் பற்றியும் நம்மில் அநேகர் பகிர்ந்து கொள்வது உண்டு. பெரியவர்கள் ஸித்தி ஆனாலும் இன்னும் நம்மிடையே கருணை பாலித்து வருவதாகப் பலர் மனம் நெகிழ்ந்து கூறுவதைக் கேட்கிறோம்.

காமகோடி பீடத்தில் ஆசார்யர்களாகத் திகழ்ந்த பலரது அதிஷ்டானங்கள் பல ஊர்களில் உள்ளன. கும்பகோணம்,கலவை,இளையாத்தங்குடி போன்ற இடங்களில் உள்ள அதிஷ்டானங்களுக்குப் பல முறை சென்று தங்கி குரு பக்தியின் முக்கியத்தைக் காட்டியதோடு, வடவம்பலம் என்ற ஊரில் ஒரு ஆச்சார்யரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தியும் பெரியவர்கள் காட்டி அருளினார்கள்.

குருவே சிவத்தைக் காட்டுபவர். ஆகவே குரு மூலமாக மந்திரோபதேசம் செய்துகொள்வது நமது தேசத்தில் பன்னெடுங் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உபதேசம் செய்த குருவை தியானித்த பிறகு மூல மந்திர ஜபம் செய்வது வழக்கம். இதன் மூலம் மூல மந்திரத்திற்குரிய தேவதையின் அருள் சுலபமாகக் கிடைத்து விடுகிறது. ஆகவே நம்மைத் தெய்வத்திடம் எளிதில் கொண்டு செல்லும் ஏணியாக குரு விளங்குவதால் அவரை முதலில் வணங்க வேண்டும் என்ற கருத்தில் மாதா,பிதாவுக்கு அடுத்தபடியாகக் குருவைக் குறிப்பிட்டார்கள் நமது முன்னோர்கள்.

இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். நம்மை இறைவனிடம் இணைக்கும் பாலமாகக் கருதி குருவை வணங்க வேண்டும் என்ற மையக் கருத்தை மறந்து விடக் கூடாது. அதனால்தான் தவ வலிமை மிக்க முனிவர்களும் பிற மகான்களும் சித்தர்களும் தங்களால் எதை வேண்டுமானாலும்  செய்ய முடிந்த போதிலும் தாங்களே கடவுள் என்றும் தங்களையே வழிபட வேண்டும் எனும் ஒருபோதும் கூறியதில்லை. அப்படிக் கூறியவர்கள் வீழ்ச்சி அடைந்தார்கள் என்று புராணங்கள் வாயிலாக அறிகிறோம். காஞ்சி மகானிடம் தங்களது குறைகளைக் கூறுபவர்களுக்குப் பெரியவர் தந்த ஆறுதல் , " இன்று பூஜையில் சந்திரமௌலீசுவரரிடம் சொல்லி விடுகிறேன், கவலைப் படாதே " என்பதுதான்.  முக்தி வரம் வேண்டி வந்த செட்டியார் தம்பதிகளைத் திருவாலங் காட்டிற்குச் சென்று அங்கு காரைக்கால் அம்மைக்கு முக்தி வழங்கிய இரத்தின சபாபதியிடம் அனுப்பி வைத்தவர் நம் பெரியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

தேவாரம் பாடிய ஞானசம்பந்தரும் தான் பாடியவை அனைத்தும் சிவ வாக்கே என்பதை " எனது உரை தனது உரையாக" எனப்பாடுகிறார். " எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே ' எனப்பாடியவர் அவர் . நாம் அவரை சமயாசாரியாராகக் கொண்டாடினாலும் அவர் நமக்கு சிவநெறியே பவத்தை நீக்கும் வழி எனக் காட்டினார்.

குருவினிடத்தில் உள்ள அதீதமான பக்தி சில சமயங்களில் பல வகையாக வெளிப்படுகிறது. சிலர் குருவுக்குத் தாங்கள் வசிக்கும் பகுதியில் மணி மண்டபம் கட்டுகிறார்கள். இன்னும் சிலர் அவரை தெய்வத்திற்கு சமமான நிலையில் வைத்து வழிபடுகிறார்கள். சமய நூல்களில் தெய்வத்தின் மீது பாடப் பெற்ற பகுதிகளைச் சற்று மாற்றி குருவின் மீது அமைத்து விடுகிறார்கள். "தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற திருவாசக வரிகள், " தென்னாடுடைய பெரியவா போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி " என்று மாற்றப்படுகின்றன. பெரியவர் படுத்த நிலையில் உள்ள படத்தை சுருட்டுப் பள்ளி சுவாமியின் படத்தோடு வெளியிட்டு பெரியவரே சிவன் என்ற வாசகங்கள் எழுதப்படுகின்றன.

அண்மையியில் ஒரு நண்பர் அனுப்பிய படத்தில் காமாக்ஷியின் முன்புள்ள ஸ்ரீ  சக்கரத்தின் மீது பெரியவர்  அமர்ந்திருப்பதுபோல்  வரையப்பட்டிருந்தது. அனுப்பியவரோ நம்மைப் போலப் பெரியவரிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். அவரது ஒரே ஆதங்கம், இப்படி தெய்வத்தின் இடத்தில் குருவை வைத்து தெய்வ வழிபாட்டை மாற்றுவதோடு காஞ்சி மடத்தின் புகழை மங்கச் செய்கிறார்களே என்பதுதான் . சிலருக்கு இக்கருத்து ஏற்க முடியாமல் இருக்கலாம். இருந்தாலும் அவரது கேள்விக்குத் தக்க விடையைத் தேடும் முயற்சி செய்யாமல் குரு ஆராதனையையும் தெய்வ வழிபாட்டையும் இரு கண்களாகக் கொண்டு பக்தி செலுத்தலாம் அல்லவா?  இரு வழிபாடுகளும் முக்கியமானவை என்றாலும் நிறைவாக தெய்வத்திடமே நம்மைச்  செலுத்துபவை. ஆகவே ஒன்றின் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்ப வேண்டிய அவசியமே இல்லை

Monday, January 11, 2016

திருச்சோற்றுத்துறை வழிகாட்டுகிறது

திருச்சோற்றுத்துறை சிவாலயம் 
தற்காலத்தில்  பெற்றோர்களுக்குத் தங்களது குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாவதைப் பார்க்கிறோம். முதலில் நன்றாகப் படிக்க வேண்டுமே என்ற கவலை. அடுத்தபடியாக மேற் படிப்பு மற்றும் வேலை பற்றிய கவலை . இவை எல்லாவற்றையும் விட அவர்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டுமே என்ற பெருங் கவலை. பெற்றோர் பேச்சை  மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் படுவதோடு, எங்களது எதிர் காலத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்வோம் என்று முகத்தில் அடித்தால் போல் பிள்ளைகள் சொல்லும்போது என்ன  செய்ய முடியும்?  வளர்த்த விதம் சரியில்லை என்று பார்ப்பவர்கள்  முகம் சுளிக்கத்தான் செய்கிறார்கள்.

வளர்க்கும் விதம் என்றால் எதைச் சுட்டிக் காட்டுவது? கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதையா? ஊர் சுற்றினாலும் பார்க்காதது போல் இருந்து விடுவதையா? எப்படி உடை உடுத்தினாலும் வாயைத் திறக்காமல் மௌனம் சாதிப்பதையா? தொலைக் காட்சியே கதி என்று கிடப்பதையா? அதட்டிக் கேட்டால் நிலைமை விபரீதம் ஆகி விடும் என்று பயந்து ஒதுங்குவதையா?  அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்துக் குட்டிச்சுவர் ஆக்குவதையா?
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? அது தான் இளமையில் குழந்தைகளை நல்வழிப் படுத்தத் தவறுவது. அப்படிச் செய்திருந்தால் தீய வழிக்குச் செல்லுவதற்கு சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம். அதனால் தான் நமது முன்னோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் ஒழுக்கத்தைப் போதித்தார்கள். பள்ளிகளிலும் நீதிக் கதைகளைச் சொல்லி வந்தார்கள்.  நீதி நூல்கள் பல பாட திட்டத்தில் இருந்தன. இதிகாசக் கதைகளைச்  சொல்லுவதால் " கெடுவான் கேடு நினைப்பான்" என்பது மனதில் ஆழமாகப் பதிந்தது.  ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. நினைக்கவே கொடூரமான குற்றங்களைக் குழந்தைகள் செய்வதாகப் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.

இறை நம்பிக்கையும் பக்தியும் குழந்தைகளது சிறு வயதில் விதைக்கப்படும்போது அதுவே பிற்காலத்தில் நல்  ஒழுக்கமாகிய பயிர் வளர ஏதுவாகிறது. வாழ்க்கையில் முன்னேறப் படிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயத்தில் அது ஒழுக்கத்தைத் தராவிட்டால் அக்கல்வியால் என்ன  பயன்? இறைவனது தாள்  தொழாமல் கல்வி கற்று என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர்.

பூமாலை புனைந்து புகழ்ந்துபாடும் சிறுமியர் 
விதிவிலக்காக இன்றைய சூழ் நிலையிலும் குழந்தைகள் நல்ல நெறியில் வளர்க்கப் படுவதைக்  காணும் போது நமது பாரம்பர்யம் முற்றிலும்  அழிந்துவிடாமல்  சில இடங்களில் பாதுகாக்கப் படுவது பாராட்டுக்குரிய விஷயம். திருவையாற்றுக்கு அருகில் உள்ள திருச் சோற்றுத்துறை என்ற சிறிய கிராமத்துக் குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அங்கு உள்ள   ஓதன வநேசுவர சுவாமி ஆலயம் பிரசித்தி பெற்றது. தேவாரப் பதிகங்கள் பெற்றது. திருவையாற்றின் சப்த ஸ்தானங்களில் ஒன்றானதால் ஆண்டுக்கொருமுறை திருவையாற்றிலிருந்து ஐயாரப்பறது பல்லக்கு இங்கு எழுந்தருளுவது வழக்கம். இக்கோயிலில் சிறுவர்களும் சிறுமியர்களும் வழிபாட்டு முறைகளைத் தெளிவாகக் கற்கிறார்கள். நீறு அணிந்த நெற்றி, ருத்திராக்ஷம் அணிந்த கழுத்துடன்  வருகை தருகிறார்கள். திருமுறைப் பாடல்களைக் கற்கிறார்கள்.

மார்கழியில் விடியற்காலை ஐந்து மணிக்குத் திருவெம்பாவை-திருப்பள்ளிஎழுச்சிப் பாடல்களைப் பாடியவாறே திரு வீதிகளை வலமாக வந்து ஆலயத்தை அடைந்து வழிபாடு செய்கிறார்கள். அது மட்டுமல்ல. நந்தவனப் பூக்களைக் கொய்து மாலைகளாகக் கட்டிக் கோயிலுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.   பின்னர் இல்லம் திரும்பித் தங்கள்  பாடங்களைப் படித்து விட்டுப் பள்ளிக் கூடம் சென்று வருகிறார்கள். மற்ற ஊர்களுக்கும் வழிகாட்டிகளாக விளங்குகிறார்கள். இவர்களைப் பார்த்தாவது நாகரீக வாழ்க்கை வாழும் மற்றவர்கள் திருந்த வேண்டும். பள்ளிக்குப் புறப்படப் பத்து நிமிஷங்களே இருக்கும் வரையிலும் தூங்கும் குழந்தைகளைப் பார்த்தும் " இன்னும் கொஞ்சம் தூங்கட்டுமே" என்று செல்லம் கொடுப்பவர்கள்  இக்குழந்தைகளைப் பார்த்துவிட்டுத் தங்கள் செயலுக்கு வெட்கப்பட வேண்டும். நம் கோயில், நம் கிராமம் என்று வளர்ந்தால், அதுவே பிற்காலத்தில் நமது கலாசாரத்தைத் தாங்கும் தூணாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். `நாட்டு முன்னேற்றமும் அதில் அடங்கி விடும்.