உலகம் எதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ
அதன்படி நம்மை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. " உலகம் பழித்தது
ஒழித்து விடின்" என்றார் வள்ளுவர். பொதுக் காரியங்களில் ஈடுபடும்போது இன்னமும் கொஞ்சம் விழிப்போடு இருக்க
வேண்டியிருக்கிறது. எத்தனையோ கண்கள் நம்மைப் பலவகைப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு
பார்க்கின்றன என்பதை உணர வேண்டும். எனக்குப் பிடித்ததைச்
செய்வேன் என்ற கொள்கையைத் தளர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிலும் ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் அதற்குரிய நியமங்களுடன் விளங்குவதையே
மக்கள் விரும்புவர். இன்னும் சொல்லப்போனால், இறைவனைத் தீண்டி அன்றாடம் பூஜை செய்வோர்
பாரம்பர்யத்திலிருந்து சிறிது விலகினாலோ,அசிரத்தை
காட்டினாலோ பார்ப்பவர்கள் முகம் சுளிக்க நேரிடுகிறது.
எல்லோருக்கும் காலமாற்றத்தால் ஏற்படும் ஆசா பாசங்கள் எங்களுக்கும் ஏற்படுவது தவறா
என்று வாதிடுவதால் உபயோகம் எதுவும் இல்லை.
“ முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு
அடியேன்” என்று ஆதி சைவப் பெரு மக்களைத்
திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்திருக்கிறார் சுந்தரர். அவ்வாறு தொகை அடியார்
வரிசையில் வைத்துப் புகழப்படும் அளவுக்கு சிவபெருமானிடம் மாறாத அன்பு பூண்டவர்கள் ஆதி சைவர்கள்.
தினையளவும் ஆகம வழியிலிருந்து மாறாமல் நியமத்துடன் பூஜைகள் செய்யும்போதும் சில
சமயங்களில் தவறுகள் நேர வாய்ப்பு உண்டு என்பதால் சிவாகம வழி பூஜை முடிவில் ஆசீர்வாதம்
கூறும்போது மந்திர,தந்திர, கால, ,சிரத்தா,நியம லோபங்கள் (குற்றங்கள்) தற்செயலாக நிகழ்ந்து
விட்டால் அதற்குப் பெருமானிடம் மன்னிப்பு வேண்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது
அறிந்தே தவறு செய்யத் துணியலாமா?
கால நிலைமையால் நான்கு கால பூஜைகள்
நடைபெற்று வந்த ஆலயங்கள் பலவற்றில் ஒரு கால பூஜையே நடக்கக் காண்கிறோம். அந்த ஒரு
கால பூஜைக்கும் ஆபத்து வந்து விடும் சூழ்நிலை உருவாகிறது. இதற்கிடையில் பல
ஆலயங்கள் திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெறுவது ஆறுதலான விஷயமாக
இருந்தாலும் அவையும் நவீன மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றனவோ என்ற ஐயம்
ஏற்படுகிறது.
இந்நாட்களில்
சிவாசாரியப் பெருமக்களுக்கு ஓரளவு வருவாயைத் தருவது கும்பாபிஷேகங்களும் ஹோமங்களும்
மட்டுமே. கிராமக் கோயில்களில் பணி செய்பவர்கள் இவற்றையே பெரும்பாலும் நம்பி அன்றாட
வாழ்க்கையை நடத்துகின்றனர். அப்படி கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும்போது மேற்கண்ட
லோபங்கள் நடைபெறாமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த
வைபவத்தால் மூர்த்திகளின் சாந்நித்தியம் கூடுவதோடு, உலக நன்மையையும்
கோரப்படுகிறது. அது சித்திக்க வேண்டுமானால் பங்குகொள்பவர்களது சிரத்தையும்
நியமமும் முக்கியம் தானே?
சில ஊர்களில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற
சிவாசார்யார்களுக்கு உரிய சம்பாவனை கொடுக்கப்படாமலோ,காலம் தாழ்த்திக்
கொடுக்கப்பட்டோ அவர்களுக்கு மனவேதனையை அளிப்பது உண்மை தான்.பிரபலமான ஒரு கோயிலிலும்
காலம் தாழ்த்தி வழங்கப்பட்டதை ஒரு சிவாசாரியார் அண்மையில் முகநூலில் பதிவு
செய்திருக்கிறார். அதே ஆலயத்தில் அனேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள்
சிறப்பாக நடைபெறும்போது சில ஆசாரியர்கள் அங்கு வருகை தரும் முக்கிய புள்ளிகளோடு மொபைலில்
படம் எடுத்துக் கொள்வதைக் கண்டு ஓர் அன்பர் முகநூலில் மனம் வருந்திக்
குறிப்பிட்டிருக்கிறார். தங்களது கோயிலில் சிவராத்திரி பூஜை செய்த ஒருவர் மூலவரின்
பக்கத்தில் நின்று கொண்டு படம் எடுத்து முக நூலில் வெளியிட்டிருக்கிறார். இவற்றைக்
காணுபவர்கள் என்ன நினைப்பார்கள் என்று
எண்ணிப் பார்ப்பதோடு இந்த செய்கைகள் முறைதானா என்று தங்களுக்குள்ளே
கேட்டுப்பார்ப்பது நல்லது எனக் கருதுகிறோம். யாக சாலையில் ஜோதிப் பிழம்பாகப்
பெருமான் காட்சி அளிக்கும்போது அதனைக் கண்டு களித்து, வேத- ஆகம மந்திரங்களால் பெருமானைப்
போற்ற வேண்டிய கடமையிலிருந்து விலகுவதை
எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
இவ்வாறு சுட்டிக்காட்டுவது பலருக்குப்
பிடிக்காமல் இருக்கலாம். இவ்வாறு எழுதுவதை நாம் பல காலம் தவிர்த்து வந்த போதிலும்
சமூக வலைத்தளங்களில் பலரும் எடுத்துக் காட்டும் போது இனியாவது அப்படி நேராதபடி
திருத்திக் கொள்ள வேண்டும் என்பதால் எழுதும்படி ஆகி விட்டது. ஒரு சிலர் இவ்வாறு
செய்வதால் ஆதிசைவ குலம் முழுவதையும் ஒன்றாகவே மக்கள் எடை போடுவார்கள் என்பதால்
முன்னைக் காட்டிலும் அதிகக் கட்டுப்பாடு அவசியமாகிறது. யாக சாலை பூஜைகளின்போது மொபைலில்
பேசுவதையோ,படம் எடுப்பதையோ பங்குகொள்ளும் சிவாச்சாரியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எவ்வளவு பேர் இக்கருத்தை
ஏற்பார்கள் என்று தெரியவில்லை. ஏற்க மறுக்கும் பட்சத்தில் கும்பாபிஷேக யாக சாலைகளில்
ஒருபுறத்தில் போட்டோ ஷாப்பும், மற்றொரு
புறம் காப்பி பாரும் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். அதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்
கூடாது. சுவாமிதான் யாக சாலாப் பிரவேசம் செய்ய வேண்டும். மொபைல்போன் அல்ல!
I fully agree, dear Sekhar!
ReplyDeleteமனிதனுடைய மனம், எப்போது அமைதியாக இருக்கிறதோ, அப்போது தான் சுகம் ஏற்படும்...மொபைலில் பேசுவதைவிட...உங்கள் ஆலோசனைக்கு... மிகவும் நன்றி
ReplyDelete