Tuesday, February 12, 2013

நம்மைக் கவரும் முன்னோடிகள்


தேவாரம்,திருப்புகழ் பெற்ற தலங்களுள் சில தலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாத நிலையில் மிக்க முயற்சி எடுத்து அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததவர்கள் வரிசையில் வலையப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களும் ஒருவர். நமது வலைப்பதிவுக்கு  இவர் புதியவர் இல்லை. திருப்புகழ் பெற்ற ஞானமலை எது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து ஆன்மீக உலகம் அறிய வைத்த இவரது அரும்பணி பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
அருணகிரி நாத ஸ்வாமிகள் பாடிய த்ரியம்பகபுரம் எங்கு உள்ளது என்பது சரிவரத் தெரியாத நிலையில், ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் , அத்தலம் , சேங்காளிபுரத்திற்கும்,  கும்பகோணம் - திருவாரூர்  வழியிலுள்ள பெரும்பண்ணயூருக்கும் அண்மையில் உள்ளது என்று ஆதாரங்களுடன்  நிரூபித்திருக்கிறார் .  

"உரை ஒழிந்து " எனத் தொடங்கும் திருப்புகழில் " த்ரயம்பகபுர மருவிய கவுரி தந்த கந்த ; அறுமுக என இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல  பெருமாளே." என்று அருணகிரியாரால் பாடப்பெற்ற முருகனது திருவுருவம் தற்போது அங்கு காணப்படவில்லை. மயானக் கொல்லையில் உள்ள ஒரு பெயர்ப் பலகை "திரியம்பகபுரம்" என்ற ஊர்ப் பெயரை உறுதி செய்கிறது. எங்கு நோக்கினாலும் வயல்கள் உள்ள இந்த இடத்தில் தான் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் கோயிலைத் தேடியிருக்கிறார். வயல்களுக்கு நடுவில் சிவலிங்கம் மாத்திரம் காணப்பட்டுள்ளது. இவரே த்ரியம்பகேச்வரராக இருக்கக் கூடும்.

 சிவலிங்கங்களோ அல்லது பிற  மூர்த்திகளோ இதன் அருகில் காணப்படவில்லை. சற்றுத் தொலைவில் சாஸ்தா கோவில் ஒன்று இருக்கக் காண்கிறோம்.  சேங்காளிபுரத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு இந்த சாஸ்தா குலதெய்வமாக விளங்குகிறார். இவர் மீது அமைந்துள்ள ஸ்லோகங்களை ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஊர்ப் பெயர் த்ரயம்பகபுரம் என்றே வருகிறது.

அருணகிரியார் பாடிய தலம் இது என்ற முடிவுக்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் அங்கு தனித்துக் காட்சி அளிக்கும் சிவலிங்கப்பெருமானுக்குக் கோவில் எழுப்பி அதில் முருகப்பெருமானைப் பரிவார மூர்த்தியாக எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு  அன்பர்கள் ஆதரவு  மிகவும் தேவைப்படுகிறது.  இவ்வளவு தூரம் முயன்று நமக்கு முருகன் அருளைப் பெற வகை செய்யும் இவருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டாமா?

இவரைப்போலவே  மற்றொரு தொண்டரைப் பற்றியும் இங்கு சொல்லத் தோன்றுகிறது.இவர்  இளமையில் வறுமையில் வாடியவர். பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் சிவாலயங்களில் மடைப்பள்ளிகளில் பணியாற்றியவர். பின்னர், பி.காம். படித்துவிட்டு, வங்கிப் பணியில் சேர்ந்து,படிப் படியாக முன்னேறி உயர்ந்த பதவிகளை வகித்தவர். இத்தனையும் தான் பணி செய்த ஆலயத்தின் அம்பாளது அருள் என்று அடக்கமாகக் கூறிக் கொள்கிறார். அந்த ஆலயத்தின் திருப்பணிகளில் தீவிரமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

முன்னோடிகள் (Role Models)என்று யார் யாரையோ ஏற்றுக் கொள்கிறோம்.மேற்கண்ட அடியார்களைப் போன்று  நமக்கு நல்ல வழியைக்  காட்டிப் , பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் இறைபணியிலேயே நிற்பவர்களை ஏற்கத் தயங்குகிறோம். இளமையிலிருந்தே இறைபணி செய்வது பலன் அளிக்க வல்லது என்பதை நாமும் உணர வேண்டும்.  இந்தக் காலத்தில் ,பணிஓய்வு  பெற்றவர்கள் எப்படிக் காலத்தைக் கழிப்பது என்று தெரியாமல் வீண் வம்பிலும் ,கேளிக்கை போன்றவற்றிலும் ஆயுட்காலத்தை வீணாக்குகிறார்களே என்பதைக் காணும்போது  வருத்தப் பட வேண்டியிருக்கிறது
.
இந்த உலகத்தில் பிறந்து விட்டோம். ஏதாவது நல்ல காரியத்தை ஆயுள் முடிவதற்குள் செய்ய வேண்டாமா? அப்படிப்பட்ட எண்ணம் எல்லோருக்கும் தோன்றும்படி ஸ்ரீ பரமேச்வரனைப்  பிரார்த்திக்கிறோம்.

Friday, January 25, 2013

கோயில்கள் புத்துயிர் பெற....


கோயில்களில் உண்டியல் மற்றும் பிற காணிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது அவை முறைப்படி செலவழைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கை. கடந்த மூன்று மாதங்களில் முடிகாணிக்கை மூலமாக மட்டும் திருப்பதி கோயிலுக்கு   ரூ 29 கோடி வசூலாகியிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதேபோலத் திருத்தணி  , பழனி,மதுரை, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் மாதம் தோறும் பலலக்ஷங்களில் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக விசேஷ நாட்களிலும், ஐயப்பன் சீசனிலும் இத்தொகை பல மடங்கு அதிகரிக்கிறது. வாகனங்களை வெளியில் நிறுத்துவதற்கு ரூ 50 வசூலிக்கப் படுவதாக ஒரு பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சாதாரண நாட்களில், அதிலும், சொல்லும்படியாக தரிசனத்திற்கு வருவோர் இல்லாத காலங்களிளும்கூட  வாகன நிறுத்தக் கட்டணம் ரூ 10 முதல் ரூ 25 வரை  வசூலிக்கப்படுகிறது. இலவசக் காலணி  பாதுகாக்கும் இடத்திலும் கையை நீட்டுகிறார்கள். சிறப்புத் தரிசனக் கட்டணம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இவ்வாறு அதிக வருமானம் வரும் கோயில்களிலிருந்து மட்டும் மாதம் பல கோடிகளைத் தாண்டும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியத் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது. நித்திய பூஜைகளும், திருவிழாக்களும்  அன்பர்கள் ஆதரவிலேயே நடைபெற்றுவிடுகிறது. பிரபல ஆலயங்களின் திருப்பணி, கும்ப்பாபிஷேகம் ஆகியவற்றையும் பக்தர்களே செய்துவிடும் போது, ஆலய துப்புரவு,சிப்பந்திகளின் சம்பளம் போன்றவற்றுக்கு மட்டுமே இக்கோவில்களுக்கு செலவு ஆகிறது. இப்பெரிய கோயில்களின் உபகோயில்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுவது உண்மை தான். அவை சிறு கோயில்களாக இருந்தால் வழங்கப்படும் தொகை சொற்பமே. திருப்பணிக்கு ஆகும் செலவில் சுமார் கால்பங்கு கூடத் தரப்படுவதில்லை.
இனி இதற்குத் தீர்வுதான் என்ன? சிதம்பரம் கோயில் இதற்கு வழிகாட்டியாக விளங்கியது. அதுவும் தற்போது அறநிலையத் துறையின் மேற்பார்வையில் வந்து விட்டது. உண்டியல் இல்லாமலேயே, நடராஜப் பெருமானுக்கு அன்பர்கள் ஆதரவுடன் தினப்படி பூசையும்,எல்லா உற்சவங்களும் சிறப்பாக நடைபெற்று வந்தன. இப்போதோ உண்டியலைக் கொண்டுவந்து வருமானம் பார்க்கிறார்கள்!

சிந்தனைக்காக சில தீர்வுகள்:
* அறநிலையத்துறை கலைக்கப்பட்டு, நான்குபேர் கொண்ட ஒரு குழு மாநிலத்திலுள்ள எல்லாக் கோயில்களையும் கண்காணிக்க வேண்டும். இதில் ஒரு IAS அதிகாரியும், ஒரு மடாதிபதியும், ஒரு அனுபவம் மிக்கவரும் ஆன்மீகவாதியுமான தொழிலதிபரும், பிரபலமான இறைத் தொண்டர் ஒருவரும் இடம் பெற வேண்டும்.   இக்குழுவினது ஆட்சிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இதில் இடம்பெற்ற நபர்  சுழற்சி முறையில் மீண்டும் ஆறு ஆண்டுகள் கழித்தே வர முடியும். இக் குழு குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடி ஆலோசனைகளும்,தீர்ப்புகளும் வழங்கி, அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

* பிரபலமான கோயில்கள் சுமார் இருபதின் கீழ் மாநிலக் கோயில்களின் நிர்வாகம் கொண்டுவரப்படுவதுடன் அவை தன்னாட்சிக் கோயில்களாக அறிவிக்கப்பட வேண்டும். இதனால், கிளைக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் தலைமைக் கோயிலையே சாரும். இத்தலைமைக் கோயில்களின் வருமானம் அரசுக்குச் செலுத்தப்படாமல், அந்தத்  தலைமைக் கோயில்களின் வங்கிக்  கணக்கிலேயே இருக்க வேண்டும். இதிலிருந்தே, தலைமைக் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் செலவுகள் ஏற்கப்பட வேண்டும்.

* ஒவ்வொரு தலைமைக் கோயிலுக்கும் நியமிக்கப்படும் அதிகாரி, அரசியல் தொடர்பு இல்லாத , சமய நம்பிக்கை உள்ள நபராக இருக்க வேண்டும்.

* தலைமை அதிகாரி, அக்கோயிலின் உபகோவில்களை மாதம் ஒருமுறையாவது சென்று பார்வையிட வேண்டும்.

" ஒவ்வொரு தலைமைக் கோவிலின் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

* தரிசனக் கட்டணம் முற்றிலுமாக நீக்கப் படவேண்டும்.

* பிற காணிக்கைக்கான   கட்டணங்கள்  ஏழைகளும் ஏற்கும்படியாக இருக்க வேண்டும்.

* வண்டிகள் நிறுத்த ரூ 5 வசூலித்தால் போதுமானது. அதை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறிது உயர்த்துவது, உயர் மட்டக் குழுவின் பரிந்துரையைப் பொறுத்தது.

கீழ்க் கண்ட கோயில்களைத் தலைமைக் கோயில்களாக வருமான {அடிப்படையில்) அறிவிக்கலாம்:

திருத்தணி, சென்னை (கபாலீஸ்வரர் கோயில்), காஞ்சிபுரம்(வரதராஜர் கோயில்) , திருவண்ணாமலை, சமயபுரம், செட்டிகுளம்/கலியபெருமாள் கோயில், ஸ்ரீரங்கம்,சுவாமிமலை, மதுரை, பழனி, திருக்குற்றாலம்,திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற தலங்களின் ஆலயங்கள் இவ்வாறு அந்த அந்த மண்டலங்களுக்கான தலைமைக் கோயில்களாக அமையக்கூடும்.

இந்த அமைப்பால், நிலங்களிளிருந்தும், கோயில் வீடுகளிலிருந்தும் வர வேண்டிய வருமானம் முறைப்படுத்த வகை செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பை அந்தந்த மண்டலத் தலைமை அதிகாரிகளே ஏற்கவேண்டும்.

* தலைமைக் கோயில்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கை, தணிக்கை செய்யப்பட்டபின் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட வேண்டும்.

* சிப்பந்திகளின் சம்பளம் முறைப்படுத்தவும், கோயில்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்படி எழுந்த சிந்தனைகள் சிலவே. சமயச் சான்றோர்கள் மற்றும் தக்கோர்கள் இன்னும் எத்தனையோ பரிந்துரைகள் வழங்குவர். இவற்றை எல்லாம் அரசு தயங்காமல் ஏற்க முன்வந்தால் நமது ஆலயங்கள் மீண்டும் பொலிவு பெறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

Tuesday, January 15, 2013

பொங்கல் தினச் சிந்தனை


திரு நெல்வேலிக்கு  அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையன்  சொன்னான்: " நகரங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை விட கிராமங்களிலேயே அதன் உண்மையான அழகும் மகத்துவமும் தெரிய வரும்" என்றான். அநேகமாக எல்லோரும் இதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்! கிராமங்களில் மார்கழி முழுவதும் சிறு குடிசை வாசலிலும் அழகான கோலம் போட்டு அதன்  நடுவில் பசும்  சாணத்தில் ஒரு பரங்கிப்பூவையும் செருகி வைப்பார்கள்.               ( நகரத்திலோ,சாணத்தைக்  கையால் தொடுவார்களா என்ன? )  கொட்டும் பனியிலும் கூட விடியற்காலையில் கோலம் போடுவார்கள். நகரவாசிகளில் பலர் முதல் நாள் ராத்திரியிலேயே  கோலத்தைப் போட்டு விடுகிறார்கள். பலர்  அந்த வேலையையும்(?) வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உடற்பயிற்சி என்று காசு கொடுத்தாவது முதுகை வளைப்பதற்குப் பதிலாகக் கோலம் போடுவதற்குச் சற்று வளைக்கலாம்.

நிலைமை இப்படி இருக்கும்போது, பொங்கல் அன்று பெரிதாகக் கோலம்  போட்டு அதற்குக் காவியில் பார்டர் அடிப்பது என்ற வழக்கத்தைக் காண்பதும் நகரங்களில் குறைந்து வருகிறது. கோலம்  போடுவதும் விளக்கு ஏற்றுவதும் மங்கலமான காரியங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலுள்ள பெண்மணிகளும் உணர்ந்துவிட்டால் நல்லது.

கனுப் பொங்கல் அன்று விடியற்காலையில் மஞ்சள் இலைகளில் கனு வைப்பதும் உடன் பிறந்தோர் நலனுக்காகவே என்பதை அறிந்தால், இன்னும் உற்சாகத்துடன் அதைக் கொண்டாட முடியும். இதையெல்லாம் தாயார் தான் தன் பெண் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்படி இலையைப் போடுவது;எப்படிப் பரிமாறுவது என்றுகூட சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் மாடுகளுக்குக் கொம்புகளில் வர்ணம் அடித்து வண்டிகளில் பூட்டி, அவ்வண்டி வழியும் அளவுக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு, "பொங்கலோ பொங்கல்" என்று கோஷமிட்டுக் கொண்டு அம்மாடுகளை விரட்டி ஓட்டுவது என்று ஆகிவிட்டது. வணங்க வேண்டிய கால்நடைகளை இப்படி அடித்து ஆர்ப்பாட்டம் செய்வது முறையா என்று யோசிக்க வேண்டும். வீர விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு காளைகளை ஓட ஓட விரட்டுவதும் அதைப் பலர் அடக்க முற்படுவதும் ஜல்லிக் கட்டு என்ற பெயரில் நடைபெறுகிறது. மற்ற மிருகங்களிடமிருந்து  தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் கொம்பு வேண்டிப் பசு இனங்கள் , விழுப்புரத்துக்கு அருகில் உள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தில் சிவபெருமானை வழிபட்டன . இப்போது மனிதர்களும் அந்த இனத்திற்குக் கொடுமை செய்வதைப் பார்த்து அவை மீண்டும் அப்பெருமானிடமே முறையிடவேண்டும்.

ஆவூர்,பேரூர்,கரூர், பட்டீஸ்வரம் முதலிய ஊர்கள் பசுக்கள் பெருமானை வழிபட்ட தலங்கள்.பசு இனங்கள் இறைவனுக்கு அபிஷேகத்திற்காக அவன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஆன் ஐந்தையும் தருவதோடு மனிதகுலத்திற்கும் தாயாக இருக்கின்றன. திருவண்ணாமலை போன்ற பெரிய தலங்களில் மாட்டுப் பொங்கலன்று நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடை பெறுகின்றன. சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று காலையில் நந்தி கேச்வரருக்குச் செய்யப்பட அலங்காரத்தை இங்கு தரிசிக்கிரீர்கள். வயதான பெண்மணிகள் திருக் குளக் கரையில் கனு  வைத்தவுடன் அங்கு எழுந்தருளியுள்ள கற்பகாம்பிகைக்கு அபிஷேக - ஆராதனைகள் நடைபெறுகின்றன. உண்மையிலேயே அரிய காட்சிதான்!

சொல்லிக் கொடுக்க வேண்டிய நமது பண்பாடுகள் எவ்வளவோ இருக்க, நமது தொலைக் காட்சிகளோ, சினிமாவையே சுற்றிசுற்றி வருவது வருத்தத்திற்கு உரியது. பண்டிகை தினங்களிலாவது மக்கள் நல்ல சிந்தனையோடு இருக்க இவர்கள் விட மாட்டார்களா? இவர்களின் தூண்டில்களில் மீன்கள் போல் மக்கள் விழுவது காலத்தின் கொடுமையைக் காட்டுகிறது. பண்டிகை தினத்தை சந்தோஷமாகக் கொண்டாடுவது என்ற போர்வையில், கடற்கரைக்கும் , மிருகக் காட்சி சாலைக்கும் , சினிமா அரங்குகளுக்கும்  மக்கள் திசை திருப்பப் படுகின்றனர்.

பெற்றோர்களே! மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகள் நல்ல பிரஜைகளாக உருவாக வேண்டாமா? நாம் அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் முன் உதாரணமாகவும் இருக்க வேண்டாமா? ஒருக்கால் தவறான வழியில் அவர்கள் சென்றுவிட்டால் அவர்களைத் திருத்துவது சாத்தியமா? வாழ் நாள் முழுவதும் அவர்கள் துன்பப்படவேண்டியதுதானா? தேவைப் பட்டால் அவர்களது நலனுக்காவது நாம் சிறிதளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? அற்ப சுகங்களைக் களைந்து அவர்களது அறிவாற்றலை வளர்க்க வேண்டாமா? தூய பண்பாடுகள் அவர்களிடம் மலரச் செய்யும் பொறுப்பு நம்மிடம்  இருப்பதை மறப்பது நியாயமா; தர்மம் தானா?
 காலம் தான் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

Saturday, January 5, 2013

பெரியவர்கள் காட்டிய பாதை


ஆப்த நண்பர்  ஒருவர்  ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர்களைப் பற்றிய  ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். அது எதில் ,எப்பொழுது வெளியானது என்று தெரியவில்லை.எந்த வருஷம் நடந்த சம்பவம் என்றும் தெரியவில்லை. சுமார் அறுபது எழுபது வருஷங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம். அந்தக் காலத்தில், ஸ்ரீ பெரியவர்கள் பல்லக்கில் ஊர் ஊராக யாத்திரை செய்துகொண்டு இருந்தார்கள். அவர்களோடு மடத்துப் பூஜையும், யானை, ஒட்டகம் ஆகியவையும் கூட வரும். திரு நாட்டியத்தான்குடி என்ற சிவஸ்தலத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் மாவூர் ரோடு என்ற ஊருக்கு சுமார் ஏழெட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த நாட்டியத்தான்குடி என்ற கிராமம். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இந்த ஊர் சுவாமியின் மீது தேவாரம் பாடியிருக்கிறார். மேலும் இங்கு அறுபத்து மூன்று நாயன்மார்களில்  ஒருவரான கோட்புலி நாயனார்  அவதரித்துள்ளார். ஸ்வாமிக்காக வைத்திருந்த நெல்லைப் பஞ்ச காலத்தில் உபயோகப்படுத்திய தன் குடும்பத்தார்களைத்  தண்டிக்கத் தயங்காத இவரது வரலாறு பெரிய புராணத்தில் காணப்  படுகிறது.

ஸ்ரீ பெரியவர்கள் இந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மாசி மாத விடியற்காலை நேரம். சின்னஞ்சிறு கிராமங்கள் வழியாகப் பல்லக்கு போய்க்கொண்டு இருந்தது.நத்தம் என்ற ஊருக்கு அருகில் வந்தவுடன் பாதை இரண்டாகப் பிரிந்தது. நாட்டியத்தான்குடிக்கு இடது பக்கம் செல்லும் பாதையில் போக வேண்டிய அந்த வேளையில் , பல்லக்கிலிருந்த ஸ்வாமிகள், சைகை மூலம் வலது புறம் செல்லும் பாதையில் போகச் சொன்னார்கள். அது மணமங்கலத்திற்கு அல்லவா போகிறது? இருந்தாலும் பெரியவர்  சொன்ன பாதையிலேயே பயணம் தொடர்ந்தது.இருள் விலகுவதற்கு முன்னால் ஒரு கிராமத்தை அடைந்ததும் அங்கேயே நிற்கும்படியும் உத்தரவு ஆயிற்று.

கிராமவாசிகளுக்கோ ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்கவில்லை. மௌனம் அனுசரித்திருந்தபடியால் சைகையாகவே, இந்த ஊரில் சிவன் கோயில் இருக்கிறதா என்று பெரியவர் கேட்கவே, இல்லை என்றே பதில் வந்தது. கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பெரியவரது எண்ணம்.
நேரம் ஆக ஆக செய்தி பரவ ஆரம்பிக்கவே, அக்கம்பக்க கிராம மக்களும் தரிசனத்திற்கு வந்தார்கள். பூஜை முடிந்து பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்த சமயம். ஒரு முஸ்லிம் தம்பதிகள் பழங்களோடு வந்து பெரியவர்களை வணங்கினார்கள். அந்த முஸ்லிம் சொன்னார்: " நேற்று  என் வீட்டுக் கொல்லையைத் தோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு சிவ லிங்கமும் கோவில் தூண்களும் இருப்பதைக் கண்டோம். பழையகால ஆலயம் இடிந்து மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரிய வந்தது. சிவ சொத்து குல நாசம் என்பதால் குத்தகை நெல்லை முறைப் படி அளந்துவந்தோம். இருந்தாலும் சில சோதனைகள் வந்தன. இந்த மனைக்கட்டைக் கோவிலைத் திரும்பக் கட்டிக் கொள்வதற்காகக் கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஒரு பைசாவும் அதற்காகக் கொடுக்க வேண்டாம். என்னுடைய பங்காகத் திருப்பணிக்கு நூறு ரூபாய் அளிக்கிறேன்" என்று சொல்லி, அக்  காணிக்கையை அங்கேயே செலுத்தினார். அப்பொழுது பெரியவர், "நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்து விட்டீர்களா?" என்று ஒரு  ஸ்லேட்டில் எழுதிக் காட்டினார். அதைப் புரிந்து கொண்ட முஸ்லிம் அன்பர், " இன்னமும் மெக்கா - மதினாவுக்குப் போக வசதி இல்லாமல் இருக்கிறேன்" என்றார். கோவில் கட்ட நிலத்தையே அளித்தவருக்கு நீங்கள் பதிலுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்பதுபோல் பெரியவர்கள் அக்கிராம மக்களைப் பார்த்தார்கள். உடனே, எல்லோருமாக "அதற்கான முழு செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்" என்றார்கள். இதை கேட்ட பெரியவர்கள் முகத்தில் ஏற்பட்ட திருப்தியை நேரில் பார்த்தவர்களே அனுபவித்துச் சொல்லமுடியும். வந்த காரியம் ஒரு கோவிலை வெளி உலகத்திற்குக் கொண்டு வருவதற்காகவே என்பது அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது.  அதற்குப் பிறகு நாட்டியாத்தான்குடியை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

லக்ஷக் கணக்கிலும் கோடிக்  கணக்கிலும் செலவழித்துப் புதுக் கோயில்கள் கட்டுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. கிராமக் கோயில்கள் மண்ணோடு மண்ணாகப் போனாலும் கவலைப் படாத காலம் இது. பெரியவர்கள்  முக்காலும் தெரிந்தவர்கள் என்றும், மகான் என்றும் இருந்த இடத்தில் இருந்தே சொல்லிக் கொண்டும்  இருந்தால் போதாது. அவர்கள் நடந்து காட்டிய பாதையில் நாமும் பயணிக்க வேண்டும். அதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி. தூய பக்தியும் அதுவே. அன்று அவர்கள் மாற்றுப் பாதையைக் காட்டி ஒரு சிவாலயத்தைக் காட்டினார்கள். இன்றோ ஒரு ஆலயம் பூஜையின்றி இடிந்து கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகிறோம். "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து" என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடுவது நினைவுக்கு வருகிறது. உண்மையில் பார்த்தால் நாம் தான் அவ்வாறு நாடகம் ஆடுகிறோமோ என்று தோன்றுகிறது. பெரியவர்கள் தரிசித்தது போல் நாமும் கிராமக்கோயில்கள் பக்கம் போகிறோமா? இடிந்த கோவில்களின் திருப்பணிக்காகக் குண்டுமணி அளவாவது கொடுக்கிறோமா ? பூஜைகள் நடத்த நம்மாலான உதவியைச் செய்கிறோமா? பெரும்பாலோர்களது மனசாட்சி "இல்லை" என்று தான் சொல்லும். அப்படியிருந்தும் நாம் பெரியவர்களின் பக்தன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக நடந்து கொள்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ளவேண்டும். அது ஒன்றுதான் அவர்கள் பாதையில் நாமும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.

நிறைவாக ஒரு வார்த்தை. மத நல்லிணக்கம் என்று வாய் அளவில் மட்டும் நிறைய பேர் இப்போது பேசுவதைக் கேட்கும்போது மேற்கண்ட சம்பவத்தை ஏன் முன் உதாரணமாக மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடாது என்று தோன்றுகிறது. இது போன்ற சம்பவங்கள் பற்றி இளைய தலைமுறைக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமைதானே?

Sunday, December 30, 2012

கேட்பார் இல்லையா?


சிவபெருமானுடைய ஆலய பூஜைகள் பாதிக்கப்பட்டால் , நாட்டில் மழை குறைந்துவிடும் என்றும் , களவு அதிகரிக்கும் என்றும் திருமூலரின் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாட்டின் தற்போதைய நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. மழை குன்றியதால், வற்றாத காவிரியாறும் வற்றிப்போய்க் கிடக்கிறது. கோவில் சொத்துக்களில் கை வைக்கும் அளவுக்குக் களவு பெருகி விட்டது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைப்பிடியில் இருப்பதாகச்  செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டக்கூடும். பூஜைகள் தட்டுப்பட்டாலே ஆள்பவர்களுக்குத் தீங்கு வரும் என்று திருமந்திரத்தில் கூறப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்பூஜைகளை மீண்டும் பழையபடி துவங்கத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்போது, கோயில் நிலங்களே ஏப்பம் விடப்பட்ட நிலையில் , நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது வரவேற்க வேண்டியதுதான்.  ஐ ம்பது ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தான் புரியவில்லை.

இதற்கிடையில், இந்து அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவர், " வருமானத்தின் அடிப்படையில் கோயில்களைப் பிரிப்பதில்லை. அனைத்துக்  கோயில்களையும் ஒரேமாதிரி நிர்வகித்து வருகிறோம் " என்று கூறியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அப்படியானால் எல்லாக் கோயில்களிலும் ஒரேமாதிரி சம்பளம் வழங்கப்படுகிறதா? எத்தனையோ கோயில்களில் மாத சம்பளம் முன்னூறும் நானூறும் கொடுக்கப்படும்போது , அதிகாரிகளின் சம்பளம் மாத்திரம் ஏறாமலேயே இருக்கிறதா? பதவி உயர்வு தான் கொடுக்காமல் இருக்கப் படுகிறதா? மாதக் கணக்கில் சம்பள பாக்கி உள்ள கோயில்கள் எத்தனையோ இருப்பது தெரியாதா? ஆள் பற்றாக்குறை என்ற நொண்டி சாக்கை எத்தனை நாள் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?  உற்சவங்கள் நின்றுபோன ஆலயங்களில் அவை நின்றது நின்றது தான். மீண்டும் துவக்க உபயதாரர் முன்வந்தால், அர்ச்சகர் சொந்தப் பொறுப்பில் கையெழுத்துப் போட்டு உற்சவ மூர்த்திகளை காப்பகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து விட்டு, விழா முடிந்தவுடன் அவரே திரும்பக் கொண்டு காப்பகத்தில் வைக்கும் நிலை வேடிக்கையாக இல்லை? நிர்வாக அதிகாரி ஏன் பொறுப்பேற்கக் கூடாது? நிலைமை இவ்வாறு இருக்கும்போது  எவருமே பொறுப்பு ஏற்கத் தயங்குவார்கள்.

அறநிலையத்துறையால் ஆலயங்களுக்குப் தேவையான  பாதுகாப்பு வழங்கப் போதிய நிதி இல்லை என்பது நம்பும்படியாக இல்லை. நின்றால் கட்டணம்,உட்கார்ந்தால்  கட்டணம் என்று எதற்கு எடுத்தாலும் வசூலிக்கப் படும் சிறப்புக் கட்டணங்கள் எங்கே போகின்றன? அப்படி வசூலாகும் இடங்களோ அத்தனை விழாக்களையும் உபயதார்களைக் கொண்டே நடத்தி விடுகின்றன. ஆலயத் திருப்பணிகளுக்கு நிதி வழங்கப்படுவது தெரியாதா என்று கேட்கலாம். அதில் தான் எத்தனை சிக்கல்கள்; எத்தனை முறைகேடுகள். கட்டட ஒப்பந்ததாரர்களின் தரமற்ற வேலைகள். திருப்பணிகள் இப்படிச் செய்து சில ஆண்டுகளுக்குள் மேற்கூரை ஒழுகுவதையும், சுவர்களில் விரிசல்கள் காணப்  படுவதையும்தான் பார்க்கிறோமே! அனுமதிக்கப்பட்ட வேலைகள் முறையாக நடை பெறுகின்றனவா என்று எத்தனை நிர்வாக அதிகாரிகள் பார்வை இடுகின்றனர்?  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கும்பாபிஷேகப் பத்திரிகையில் பெயரும், கோவில் மரியாதையும் தான்.

"தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த கோயில்கள் இருக்க  வேண்டும் என்பது , ஒரு தரப்பு பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது" என்று ஒரு நிருபர் , தமிழ் செய்தித்தாள் ஒன்றில் எழுதியுள்ளார். சட்ட திட்டங்களை வேண்டுமானால் மாற்றிவிட்டு அவ்வாறு செய்யக் கூடும். இதனால் நிலைமை சீராகும் என்று கூற முடியுமா? தொல்லியல்  துறை யின் கண்காணிப்பிலுள்ள கோயில்களில் ஆறு கால பூஜை நடைபெறுகிறதா? அல்லது சிப்பந்திகளுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுகிறதா? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்யப்பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பெறுகிறதா? வாசலில் போர்டு போட்டுவிட்டு ஒரு காவலாளியை நியமிப்பார்கள். அவரும் சுய நினைவில் இருப்பவராக இருந்தால் அதிருஷ்டம். இப்படியிருக்கும்போது உற்சவங்கள் நடத்தப் பெறுமா என்ற கேள்விக்கே இடமில்லை. இருந்தாலும் , மக்களுக்கும், அரசுக்கும் கோயில்கள் பாழாவதை நினைவூட்டிய அப்பத்திரிகைக்கு நன்றி. சுட்டிக்காட்டுவதோடு நின்று விடாமல்,      " ஜெயித்துக் காட்டுவோம்" என்று கல்விப் பணி செய்வது போலக் "கோயில்கள் மீண்டும்         பொ லி யச் செய்வோம்" என்று செயல் படலாமே! அதனால் எத்தனையோ கோயில்கள் புனரமைக்கப் படும் அல்லவா?  முன்னுதாரணமாக இந்தப் பத்திரிகையே ஒரு வைப்பு நிதி ஏற்படுத்தினால் நூற்றுக்கணக்கான நல்லெண்ணம் படைத்தவர்கள் தாமும் தாராளமாக உதவ முன்வர மாட்டார்களா?  சுட்டிக்காட்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தீர்வு காண முயலுவோர் மிகச் சிலரே! அவர்களுள் பத்திரிக்கை உலகுக்கும் பிறருக்கும்  முன்னோடியாகத் திகழ்ந்து நற்பெயர் பெற இந்த அரிய சந்தர்பத்தை நழுவ விடலாமா? சிந்திக்க வேண்டுகிறோம்.      

Monday, November 26, 2012

நாதஸ்வரத்திற்கு ஆபத்தா??


கேரளத்துக் கோயில்களுக்குச்  சென்று வந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகக் கவனத்திற்கு வந்திருக்கும். பாரம்பர்யம் எவ்வாறு அங்கு காப்பாற்றப்படுகிறது என்பதே அது. ஆண்கள் சட்டை அணிந்து செல்ல மாட்டார்கள். கோயில் கருவறையில் மின் விளக்கே இருக்காது. நெய் தீபமே சுடர் விட்டு எரியும். சன்னதியில் வீண் வம்பு அடிப்பவர்களைப் பார்ப்பது மிகமிக அரிது. கோயில் சுத்தத்தின் இருப்பிடமாக இருக்கும். குருவாயூர் போன்ற பிரபலமான கோயில்களிலும் பிராகாரத்தில் லட்டு கடையோ, பிற கடைகளோ இருப்பதைக் காண முடியாது. எல்லாம் கோயிலுக்கு வெளியில் தான். தூணுக்குத் தூண் , உண்டியல்களையும் காணோம்! அவர்களால் இக் காலத்திலும் எப்படி இவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது என்று பார்த்தால், தெய்வத்தின் மீதும் , பாரம்பர்யத்தின் மீதும் அவர்கள் காட்டும் மதிப்பும் மரியாதையுமே காரணம் எனலாம்.

  தமிழகக் கோயில்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. நாளுக்கு நாள் மாற்றங்கள் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பூமி இது. கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டுப் போகும் போது இப்படித்தான் ஆகிவிடும். எதையும் மீறும் மனோபாவம் வந்துவிட்டால் கலாசாரமாவது ஒன்றாவது!

இங்கு சட்டை,கைலி, பேண்ட் என எதை வேண்டுமானாலும் அணிந்து கொண்டு ஆலயத்திற்குச் செல்லத் தடை ஏதும் இல்லை. கேட்டால் மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்று வாதம்  செய்வார்கள். தானே சாமிக்குத் தூபம், தீபம் முதலியன காட்டுவார்கள். நந்தியைக் கட்டிக்கொண்டு ரகசியம் பேசுவார்கள். பிராகாரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசுவதோ  கை வந்த கலை. பேசும் போது வெறும் வாயோடு பேசலாமா? தேவஸ்தான பிரசாதக்(?) கடைகள் தான் இருக்கின்றனவே, கொரித்துக் கொண்டே பேசுவதற்கு!

கோயில்களில் தானே நாம் மிகுந்த தமிழ் பற்று உடையவர்கள் என்று காட்டிக் கொள்ள முடியும்! வீட்டில் தேவார திருவாசக பாராயணம் செய்யாதவர்கள் கோயில்களில் சர்ச்சை  செய்வார்கள். பிற கோயில்களில் , மகா மண்டபத்தில் தேவாரம் ஒலிக்கப்படுவது போலத்  தில்லைக்  கோயிலிலும் ஒலித்தால் அதற்கு எதிர்ப்பு. சாமிக்குப் பக்கத்திலேயே சென்று பாடினால் என்ன என்று! இதெல்லாம் வேடிக்கையாகத் தோன்றவில்லை? தேவையற்ற காழ்ப்பு உணர்ச்சி வித்திடப்படுகிறது. கும்பாபிஷேகத்தைத் தமிழிலேயே, திருமுறைகளை ஓதிச் செய்தால் என்ன என்று சில பேர்கள் கிளம்பியிருக்கிறார்கள். திருமால் கோயில்களில் இதைத்  திவ்வியப் ப்ரபந்தம்  ஓதியபடியே செய்தால் என்ன என்று யாராவது கேட்கிறார்களா பாருங்கள்.

காலம் காலமாகப் போற்றப்பட்டுவந்த மேளம், நாதஸ்வரம் ஆகியவற்றிற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது. கோயில்களில் நடக்கும் வைபவங்களில் கேரளத்து செண்டா வாத்தியக் காரர்கள் வரவழைக்கப் படுகின்றனர். தமிழகக் கிராமக் கலையான மேளமும் நாதஸ்வரமும் ஓரம்  கட்டப் படுகின்றன. அவற்றை வளர்த்ததே கோயில்கள் தான் என்பதை மறுக்கமுடியாது. ஒரு காலத்தில் , ஸ்வாமி புறப்பாட்டின் போது, நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிப்பதைக் கேட்க இரவு முழுதும் வீதிகளில் சங்கீத ரசிகர்கள் இருந்தார்கள்.

இப்பொழுது இவ்வளவு சங்கீத சபாக்கள் இருந்தும், நாதஸ்வரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. தென்மாவட்டங்களில் திருமணங்களிலும் செண்டா வாத்தியம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாதஸ்வரம் வாசிப்பவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டி வந்து விடும். கேரள பூமியின் கலாசாரத்தை அவர்கள் காப்பாற்றுவதைப் போலத் தமிழகத்தின்  கலைகளைக் காப்பாற்ற வேண்டாமா?  பஞ்சமுக வாத்தியமும் பாரி நாயனமும் காட்சிப் பொருள்கள் ஆகி விட்டதைப் போல மேளமும் நாதஸ்வரமும் ஆகிவிடாமல் காப்பாற்றப் பட வேண்டும். யார் சொன்னால் எடுபடுமோ தெரியவில்லை. சொல்ல வேண்டியவர்கள் மௌனம் சாதித்துக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு பாரம்பர்யக் கலையும் நசித்துப்போய் விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
 

Thursday, November 22, 2012

சிவ முக்தி பெற்ற சீலர்


                                               சிவமுக்தி பெற்ற சீலர்  
          சிவபாதசேகரன், திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை.


 திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன  23-வது மஹா சந்நிதானம் அவர்கள் சிவப்பேறு அடைந்துவிட்டார்கள் என்ற செய்தி, ஆதீன அன்பர்களுக்கு மட்டுமல்ல; அனைத்துச் சைவ உலகிற்கும் அதிர்ச்சியைத் தந்து,ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. சுமார் நாற்பது ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்தபோது, இவர்கள் செய்த சிவதர்மங்கள் கணக்கில் அடங்கா. ஆதீனக் கோயில்கள் பல திருப்பணி செய்யப்பட்டு நித்தியபூஜைகள் செவ்வனே நடைபெறலாயின. குருமூர்த்தங்களும், சந்தனாச்சார்யார்களின் அவதாரத்தலங்களும் திருப்பணி செய்யப்பட்டன. நூல்கள் பல அச்சடிக்கப்பெற்றன. இலவச வெளியீடுகள் அன்பர்களுக்கு அளிக்கப்பட்டன. கோசாலைகள் பராமரிக்கப்பட்டன. தமிழ்ப்புலவர்களும்,ஒதுவாமூர்த்திகளும், சிவாசார்யர்களும் கௌரவிக்கப்பட்டனர். சுமார் 150 இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது. மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆதரவற்றோர்களுக்கும்,நலிந்தோர்களுக்கும் நித்திய அன்னதானம்   செய்யப்பட்டது. மடத்துகோயில்களுக்கு மட்டுமல்லாமல் அறநிலையத்துறையின் கோயில்களின் திருப் பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் உதவி அளிக்கப்பட்டது. 

திருவாதிரையான் திருவருட் சபையின் பணிகளைக் கண்டு மிக்க மகிழ்வோடு, ஆக்கமும், ஊக்கமும்  தந்தவர்கள் ஸ்ரீ சந்நிதானம் அவர்கள். சின்னப்பட்டத்தில் இருந்தபோதிலிருந்தே, இவ்வாறு நம்மைப் பணி செய்ய ஊக்குவித்தவர்கள் இவர்கள். மிகவும் பிற்பட்ட நிலையில் இருக்கும் கிராமக் கோயில்களின் சிவாச்சார்யர்களுக்கு நமது சபை உதவி வழங்கும்போது, தாமும் இருவருக்கு உதவி வழங்கிய கருணை மனம் படைத்தவர்கள் நமது குருமூர்த்திகள். கடந்த ஆடி- சுவாதியன்று ஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் சிவாகமத்தில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு ஆசி வழங்கியபோது, நமது சபை , ஆலய மடைப்  பள்ளிகளில் பணி புரிவோர்க்கு  உதவித்தொகை வழங்க முன்வந்தபோது, தாமும் இருவருக்கு, அதே நிகழ்ச்சியின் போது உதவி, நமக்கும் பொன்னாடை போர்த்தி, ஆசி வழங்கினார்கள். 


 திருத் தலையாலங்காடு ஸ்ரீ நர்த்தனபுரீச்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிகையை ஸ்ரீ மகா சந்நிதானத்தில்   சமர்ப்பித்தபோது, மிகவும் மகிழ்ந்தவர்களாக, கும்பாபிஷேக மருந்து முழுவதையும் அளிப்பதாகவும்,அதை இடிக்க ஆட்களையும் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். " வேறு ஏதாவது தேவைப்படுமா?" என்று அவர்கள் கேட்டபோது ,அடியேன்,இக் கோயிலுக்கு ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் விக்ரகம் இல்லாதது குறையாக இருக்கிறது. ஸ்வாமி இங்கு முயலகன் மீது நடமாடியதாகத் தல வரலாறு கூறுவதாலும், ஆதீன பூஜா மூர்த்தி ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதாலும், மடத்தின் சார்பாக, மூன்று அடி உயரமுள்ள ஆடல்வல்லானையும், சிவகாம சுந்தரியையும் உபயமாக அளித்து அருளுமாறு வேண்டினேன். சற்றும் தாமதிக்காமல் , அதற்கான ஏற்பாடுகள் செய்ய மடத்து சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டு அருளினார்கள் என்பதை மிக்க நன்றியுடன் கூறிக்கொள்ளக்  கடமைப் பட்டிருக்கிறேன். ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கு வருகை தந்ததோடு, மண்டலாபிஷேகத்தன்று, ஆதீன உபயமாக, ஆடல்வல்லான், சிவகாமவல்லி,காரைக்கால் அம்மை ஆகிய மூர்த்திகளை வழங்கியதோடு, ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ஆறு அபிஷேகங்களும் ஆதீன உபயமாக நடைபெறும் என்று அறிவித்தார்கள். தவிரவும், ஆலய சிவாச்சார்யாருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்குவதாகவும் கூறிய கருணைத்திறம்  போற்றுதற்கு உரியது.

திருவாவடுதுறை ஆதீனம் சுமார் அறுநூறு ஆண்டுகளாகச் செய்துவரும், குரு- க்ஷேத்ர பரிபாலனங்கள் இவர்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வளர்ச்சி பெற்று, மக்கள் சேவையும் கூடவே சேர் ந்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நிலையில், அக்குருமூர்த்திகள் நம்மிடையே வழிகாட்டும் ஆசானாக இனி இல்லை என்பது துக்கத்தை மேலிடச் செய்கிறது. இனி, 24 - வது குருமூர்த்திகளாகப் பட்டமேற்பவர்களும் இக்குருபரம்பரையின் புகழை மேலோங்கச் செய்யவும், சைவ நெறி தொடர்ந்து தழைத்து ஓங்கவும், ஞானமா நடராஜப் பெருமானது குஞ்சித மலரடிகளை வணங்கிப் போற்றுவோமாக.