Tuesday, January 15, 2013

பொங்கல் தினச் சிந்தனை


திரு நெல்வேலிக்கு  அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையன்  சொன்னான்: " நகரங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை விட கிராமங்களிலேயே அதன் உண்மையான அழகும் மகத்துவமும் தெரிய வரும்" என்றான். அநேகமாக எல்லோரும் இதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்! கிராமங்களில் மார்கழி முழுவதும் சிறு குடிசை வாசலிலும் அழகான கோலம் போட்டு அதன்  நடுவில் பசும்  சாணத்தில் ஒரு பரங்கிப்பூவையும் செருகி வைப்பார்கள்.               ( நகரத்திலோ,சாணத்தைக்  கையால் தொடுவார்களா என்ன? )  கொட்டும் பனியிலும் கூட விடியற்காலையில் கோலம் போடுவார்கள். நகரவாசிகளில் பலர் முதல் நாள் ராத்திரியிலேயே  கோலத்தைப் போட்டு விடுகிறார்கள். பலர்  அந்த வேலையையும்(?) வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உடற்பயிற்சி என்று காசு கொடுத்தாவது முதுகை வளைப்பதற்குப் பதிலாகக் கோலம் போடுவதற்குச் சற்று வளைக்கலாம்.

நிலைமை இப்படி இருக்கும்போது, பொங்கல் அன்று பெரிதாகக் கோலம்  போட்டு அதற்குக் காவியில் பார்டர் அடிப்பது என்ற வழக்கத்தைக் காண்பதும் நகரங்களில் குறைந்து வருகிறது. கோலம்  போடுவதும் விளக்கு ஏற்றுவதும் மங்கலமான காரியங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலுள்ள பெண்மணிகளும் உணர்ந்துவிட்டால் நல்லது.

கனுப் பொங்கல் அன்று விடியற்காலையில் மஞ்சள் இலைகளில் கனு வைப்பதும் உடன் பிறந்தோர் நலனுக்காகவே என்பதை அறிந்தால், இன்னும் உற்சாகத்துடன் அதைக் கொண்டாட முடியும். இதையெல்லாம் தாயார் தான் தன் பெண் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்படி இலையைப் போடுவது;எப்படிப் பரிமாறுவது என்றுகூட சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் மாடுகளுக்குக் கொம்புகளில் வர்ணம் அடித்து வண்டிகளில் பூட்டி, அவ்வண்டி வழியும் அளவுக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு, "பொங்கலோ பொங்கல்" என்று கோஷமிட்டுக் கொண்டு அம்மாடுகளை விரட்டி ஓட்டுவது என்று ஆகிவிட்டது. வணங்க வேண்டிய கால்நடைகளை இப்படி அடித்து ஆர்ப்பாட்டம் செய்வது முறையா என்று யோசிக்க வேண்டும். வீர விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு காளைகளை ஓட ஓட விரட்டுவதும் அதைப் பலர் அடக்க முற்படுவதும் ஜல்லிக் கட்டு என்ற பெயரில் நடைபெறுகிறது. மற்ற மிருகங்களிடமிருந்து  தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் கொம்பு வேண்டிப் பசு இனங்கள் , விழுப்புரத்துக்கு அருகில் உள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தில் சிவபெருமானை வழிபட்டன . இப்போது மனிதர்களும் அந்த இனத்திற்குக் கொடுமை செய்வதைப் பார்த்து அவை மீண்டும் அப்பெருமானிடமே முறையிடவேண்டும்.

ஆவூர்,பேரூர்,கரூர், பட்டீஸ்வரம் முதலிய ஊர்கள் பசுக்கள் பெருமானை வழிபட்ட தலங்கள்.பசு இனங்கள் இறைவனுக்கு அபிஷேகத்திற்காக அவன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஆன் ஐந்தையும் தருவதோடு மனிதகுலத்திற்கும் தாயாக இருக்கின்றன. திருவண்ணாமலை போன்ற பெரிய தலங்களில் மாட்டுப் பொங்கலன்று நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடை பெறுகின்றன. சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று காலையில் நந்தி கேச்வரருக்குச் செய்யப்பட அலங்காரத்தை இங்கு தரிசிக்கிரீர்கள். வயதான பெண்மணிகள் திருக் குளக் கரையில் கனு  வைத்தவுடன் அங்கு எழுந்தருளியுள்ள கற்பகாம்பிகைக்கு அபிஷேக - ஆராதனைகள் நடைபெறுகின்றன. உண்மையிலேயே அரிய காட்சிதான்!

சொல்லிக் கொடுக்க வேண்டிய நமது பண்பாடுகள் எவ்வளவோ இருக்க, நமது தொலைக் காட்சிகளோ, சினிமாவையே சுற்றிசுற்றி வருவது வருத்தத்திற்கு உரியது. பண்டிகை தினங்களிலாவது மக்கள் நல்ல சிந்தனையோடு இருக்க இவர்கள் விட மாட்டார்களா? இவர்களின் தூண்டில்களில் மீன்கள் போல் மக்கள் விழுவது காலத்தின் கொடுமையைக் காட்டுகிறது. பண்டிகை தினத்தை சந்தோஷமாகக் கொண்டாடுவது என்ற போர்வையில், கடற்கரைக்கும் , மிருகக் காட்சி சாலைக்கும் , சினிமா அரங்குகளுக்கும்  மக்கள் திசை திருப்பப் படுகின்றனர்.

பெற்றோர்களே! மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகள் நல்ல பிரஜைகளாக உருவாக வேண்டாமா? நாம் அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் முன் உதாரணமாகவும் இருக்க வேண்டாமா? ஒருக்கால் தவறான வழியில் அவர்கள் சென்றுவிட்டால் அவர்களைத் திருத்துவது சாத்தியமா? வாழ் நாள் முழுவதும் அவர்கள் துன்பப்படவேண்டியதுதானா? தேவைப் பட்டால் அவர்களது நலனுக்காவது நாம் சிறிதளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? அற்ப சுகங்களைக் களைந்து அவர்களது அறிவாற்றலை வளர்க்க வேண்டாமா? தூய பண்பாடுகள் அவர்களிடம் மலரச் செய்யும் பொறுப்பு நம்மிடம்  இருப்பதை மறப்பது நியாயமா; தர்மம் தானா?
 காலம் தான் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment