திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் மாவூர் ரோடு என்ற ஊருக்கு சுமார் ஏழெட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த நாட்டியத்தான்குடி என்ற கிராமம். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இந்த ஊர் சுவாமியின் மீது தேவாரம் பாடியிருக்கிறார். மேலும் இங்கு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கோட்புலி நாயனார் அவதரித்துள்ளார். ஸ்வாமிக்காக வைத்திருந்த நெல்லைப் பஞ்ச காலத்தில் உபயோகப்படுத்திய தன் குடும்பத்தார்களைத் தண்டிக்கத் தயங்காத இவரது வரலாறு பெரிய புராணத்தில் காணப் படுகிறது.
ஸ்ரீ பெரியவர்கள் இந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மாசி மாத விடியற்காலை நேரம். சின்னஞ்சிறு கிராமங்கள் வழியாகப் பல்லக்கு போய்க்கொண்டு இருந்தது.நத்தம் என்ற ஊருக்கு அருகில் வந்தவுடன் பாதை இரண்டாகப் பிரிந்தது. நாட்டியத்தான்குடிக்கு இடது பக்கம் செல்லும் பாதையில் போக வேண்டிய அந்த வேளையில் , பல்லக்கிலிருந்த ஸ்வாமிகள், சைகை மூலம் வலது புறம் செல்லும் பாதையில் போகச் சொன்னார்கள். அது மணமங்கலத்திற்கு அல்லவா போகிறது? இருந்தாலும் பெரியவர் சொன்ன பாதையிலேயே பயணம் தொடர்ந்தது.இருள் விலகுவதற்கு முன்னால் ஒரு கிராமத்தை அடைந்ததும் அங்கேயே நிற்கும்படியும் உத்தரவு ஆயிற்று.
கிராமவாசிகளுக்கோ ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்கவில்லை. மௌனம் அனுசரித்திருந்தபடியால் சைகையாகவே, இந்த ஊரில் சிவன் கோயில் இருக்கிறதா என்று பெரியவர் கேட்கவே, இல்லை என்றே பதில் வந்தது. கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பெரியவரது எண்ணம்.
நேரம் ஆக ஆக செய்தி பரவ ஆரம்பிக்கவே, அக்கம்பக்க கிராம மக்களும் தரிசனத்திற்கு வந்தார்கள். பூஜை முடிந்து பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்த சமயம். ஒரு முஸ்லிம் தம்பதிகள் பழங்களோடு வந்து பெரியவர்களை வணங்கினார்கள். அந்த முஸ்லிம் சொன்னார்: " நேற்று என் வீட்டுக் கொல்லையைத் தோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு சிவ லிங்கமும் கோவில் தூண்களும் இருப்பதைக் கண்டோம். பழையகால ஆலயம் இடிந்து மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரிய வந்தது. சிவ சொத்து குல நாசம் என்பதால் குத்தகை நெல்லை முறைப் படி அளந்துவந்தோம். இருந்தாலும் சில சோதனைகள் வந்தன. இந்த மனைக்கட்டைக் கோவிலைத் திரும்பக் கட்டிக் கொள்வதற்காகக் கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஒரு பைசாவும் அதற்காகக் கொடுக்க வேண்டாம். என்னுடைய பங்காகத் திருப்பணிக்கு நூறு ரூபாய் அளிக்கிறேன்" என்று சொல்லி, அக் காணிக்கையை அங்கேயே செலுத்தினார். அப்பொழுது பெரியவர், "நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்து விட்டீர்களா?" என்று ஒரு ஸ்லேட்டில் எழுதிக் காட்டினார். அதைப் புரிந்து கொண்ட முஸ்லிம் அன்பர், " இன்னமும் மெக்கா - மதினாவுக்குப் போக வசதி இல்லாமல் இருக்கிறேன்" என்றார். கோவில் கட்ட நிலத்தையே அளித்தவருக்கு நீங்கள் பதிலுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்பதுபோல் பெரியவர்கள் அக்கிராம மக்களைப் பார்த்தார்கள். உடனே, எல்லோருமாக "அதற்கான முழு செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்" என்றார்கள். இதை கேட்ட பெரியவர்கள் முகத்தில் ஏற்பட்ட திருப்தியை நேரில் பார்த்தவர்களே அனுபவித்துச் சொல்லமுடியும். வந்த காரியம் ஒரு கோவிலை வெளி உலகத்திற்குக் கொண்டு வருவதற்காகவே என்பது அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது. அதற்குப் பிறகு நாட்டியாத்தான்குடியை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.
லக்ஷக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் செலவழித்துப் புதுக் கோயில்கள் கட்டுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. கிராமக் கோயில்கள் மண்ணோடு மண்ணாகப் போனாலும் கவலைப் படாத காலம் இது. பெரியவர்கள் முக்காலும் தெரிந்தவர்கள் என்றும், மகான் என்றும் இருந்த இடத்தில் இருந்தே சொல்லிக் கொண்டும் இருந்தால் போதாது. அவர்கள் நடந்து காட்டிய பாதையில் நாமும் பயணிக்க வேண்டும். அதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி. தூய பக்தியும் அதுவே. அன்று அவர்கள் மாற்றுப் பாதையைக் காட்டி ஒரு சிவாலயத்தைக் காட்டினார்கள். இன்றோ ஒரு ஆலயம் பூஜையின்றி இடிந்து கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகிறோம். "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து" என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடுவது நினைவுக்கு வருகிறது. உண்மையில் பார்த்தால் நாம் தான் அவ்வாறு நாடகம் ஆடுகிறோமோ என்று தோன்றுகிறது. பெரியவர்கள் தரிசித்தது போல் நாமும் கிராமக்கோயில்கள் பக்கம் போகிறோமா? இடிந்த கோவில்களின் திருப்பணிக்காகக் குண்டுமணி அளவாவது கொடுக்கிறோமா ? பூஜைகள் நடத்த நம்மாலான உதவியைச் செய்கிறோமா? பெரும்பாலோர்களது மனசாட்சி "இல்லை" என்று தான் சொல்லும். அப்படியிருந்தும் நாம் பெரியவர்களின் பக்தன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக நடந்து கொள்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ளவேண்டும். அது ஒன்றுதான் அவர்கள் பாதையில் நாமும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.
நிறைவாக ஒரு வார்த்தை. மத நல்லிணக்கம் என்று வாய் அளவில் மட்டும் நிறைய பேர் இப்போது பேசுவதைக் கேட்கும்போது மேற்கண்ட சம்பவத்தை ஏன் முன் உதாரணமாக மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடாது என்று தோன்றுகிறது. இது போன்ற சம்பவங்கள் பற்றி இளைய தலைமுறைக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமைதானே?
நல்ல கட்டுரை.
ReplyDeleteஇப்போது மணமங்கலத்தில் சிறப்புறச் சிவாலயம் அமைக்கப்பட்டுவிட்டதா?
நமச்சிவாய
கணேஷ்