சிவபெருமானுடைய ஆலய பூஜைகள் பாதிக்கப்பட்டால் , நாட்டில் மழை குறைந்துவிடும் என்றும் , களவு அதிகரிக்கும் என்றும் திருமூலரின் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாட்டின் தற்போதைய நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. மழை குன்றியதால், வற்றாத காவிரியாறும் வற்றிப்போய்க் கிடக்கிறது. கோவில் சொத்துக்களில் கை வைக்கும் அளவுக்குக் களவு பெருகி விட்டது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைப்பிடியில் இருப்பதாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டக்கூடும். பூஜைகள் தட்டுப்பட்டாலே ஆள்பவர்களுக்குத் தீங்கு வரும் என்று திருமந்திரத்தில் கூறப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்பூஜைகளை மீண்டும் பழையபடி துவங்கத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்போது, கோயில் நிலங்களே ஏப்பம் விடப்பட்ட நிலையில் , நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது வரவேற்க வேண்டியதுதான். ஐ ம்பது ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தான் புரியவில்லை.
இதற்கிடையில், இந்து அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவர், " வருமானத்தின் அடிப்படையில் கோயில்களைப் பிரிப்பதில்லை. அனைத்துக் கோயில்களையும் ஒரேமாதிரி நிர்வகித்து வருகிறோம் " என்று கூறியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அப்படியானால் எல்லாக் கோயில்களிலும் ஒரேமாதிரி சம்பளம் வழங்கப்படுகிறதா? எத்தனையோ கோயில்களில் மாத சம்பளம் முன்னூறும் நானூறும் கொடுக்கப்படும்போது , அதிகாரிகளின் சம்பளம் மாத்திரம் ஏறாமலேயே இருக்கிறதா? பதவி உயர்வு தான் கொடுக்காமல் இருக்கப் படுகிறதா? மாதக் கணக்கில் சம்பள பாக்கி உள்ள கோயில்கள் எத்தனையோ இருப்பது தெரியாதா? ஆள் பற்றாக்குறை என்ற நொண்டி சாக்கை எத்தனை நாள் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்? உற்சவங்கள் நின்றுபோன ஆலயங்களில் அவை நின்றது நின்றது தான். மீண்டும் துவக்க உபயதாரர் முன்வந்தால், அர்ச்சகர் சொந்தப் பொறுப்பில் கையெழுத்துப் போட்டு உற்சவ மூர்த்திகளை காப்பகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து விட்டு, விழா முடிந்தவுடன் அவரே திரும்பக் கொண்டு காப்பகத்தில் வைக்கும் நிலை வேடிக்கையாக இல்லை? நிர்வாக அதிகாரி ஏன் பொறுப்பேற்கக் கூடாது? நிலைமை இவ்வாறு இருக்கும்போது எவருமே பொறுப்பு ஏற்கத் தயங்குவார்கள்.
அறநிலையத்துறையால் ஆலயங்களுக்குப் தேவையான பாதுகாப்பு வழங்கப் போதிய நிதி இல்லை என்பது நம்பும்படியாக இல்லை. நின்றால் கட்டணம்,உட்கார்ந்தால் கட்டணம் என்று எதற்கு எடுத்தாலும் வசூலிக்கப் படும் சிறப்புக் கட்டணங்கள் எங்கே போகின்றன? அப்படி வசூலாகும் இடங்களோ அத்தனை விழாக்களையும் உபயதார்களைக் கொண்டே நடத்தி விடுகின்றன. ஆலயத் திருப்பணிகளுக்கு நிதி வழங்கப்படுவது தெரியாதா என்று கேட்கலாம். அதில் தான் எத்தனை சிக்கல்கள்; எத்தனை முறைகேடுகள். கட்டட ஒப்பந்ததாரர்களின் தரமற்ற வேலைகள். திருப்பணிகள் இப்படிச் செய்து சில ஆண்டுகளுக்குள் மேற்கூரை ஒழுகுவதையும், சுவர்களில் விரிசல்கள் காணப் படுவதையும்தான் பார்க்கிறோமே! அனுமதிக்கப்பட்ட வேலைகள் முறையாக நடை பெறுகின்றனவா என்று எத்தனை நிர்வாக அதிகாரிகள் பார்வை இடுகின்றனர்? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கும்பாபிஷேகப் பத்திரிகையில் பெயரும், கோவில் மரியாதையும் தான்.
"தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த கோயில்கள் இருக்க வேண்டும் என்பது , ஒரு தரப்பு பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது" என்று ஒரு நிருபர் , தமிழ் செய்தித்தாள் ஒன்றில் எழுதியுள்ளார். சட்ட திட்டங்களை வேண்டுமானால் மாற்றிவிட்டு அவ்வாறு செய்யக் கூடும். இதனால் நிலைமை சீராகும் என்று கூற முடியுமா? தொல்லியல் துறை யின் கண்காணிப்பிலுள்ள கோயில்களில் ஆறு கால பூஜை நடைபெறுகிறதா? அல்லது சிப்பந்திகளுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுகிறதா? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்யப்பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பெறுகிறதா? வாசலில் போர்டு போட்டுவிட்டு ஒரு காவலாளியை நியமிப்பார்கள். அவரும் சுய நினைவில் இருப்பவராக இருந்தால் அதிருஷ்டம். இப்படியிருக்கும்போது உற்சவங்கள் நடத்தப் பெறுமா என்ற கேள்விக்கே இடமில்லை. இருந்தாலும் , மக்களுக்கும், அரசுக்கும் கோயில்கள் பாழாவதை நினைவூட்டிய அப்பத்திரிகைக்கு நன்றி. சுட்டிக்காட்டுவதோடு நின்று விடாமல், " ஜெயித்துக் காட்டுவோம்" என்று கல்விப் பணி செய்வது போலக் "கோயில்கள் மீண்டும் பொ லி யச் செய்வோம்" என்று செயல் படலாமே! அதனால் எத்தனையோ கோயில்கள் புனரமைக்கப் படும் அல்லவா? முன்னுதாரணமாக இந்தப் பத்திரிகையே ஒரு வைப்பு நிதி ஏற்படுத்தினால் நூற்றுக்கணக்கான நல்லெண்ணம் படைத்தவர்கள் தாமும் தாராளமாக உதவ முன்வர மாட்டார்களா? சுட்டிக்காட்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தீர்வு காண முயலுவோர் மிகச் சிலரே! அவர்களுள் பத்திரிக்கை உலகுக்கும் பிறருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து நற்பெயர் பெற இந்த அரிய சந்தர்பத்தை நழுவ விடலாமா? சிந்திக்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment