சிவபாதசேகரன்
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமாக இருக்கலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் அப்போது உற்சவம் நடந்து கொண்டு இருந்த நேரம். வீதி உலா சென்று வந்த உற்சவ மூர்த்திகள் கோயிலை அடைந்தபின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த நகைகளைக் கழற்றி விட்டுப் பத்திரமாக ஓர் அறையில் கோயில் பொறுப்பாளர் வைத்தபின் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு திருடன், அவர் அந்த இடத்தை விட்டு அகன்றபின் அந்த நகைகளைத் திருடிச் சென்று விட்டான். காவல் துறையால் உடனடியாக அவனைக் கைது செய்ய முடியவில்லை. மாயமாக மறைந்து விட்ட அவன் அந்நகைகளுள் சிலவற்றை உருக்கித் தன் மனைவிக்கு ஒரு ஆபரணம் செய்து கொடுத்தான் எஞ்சிய நகைகளை விற்று சைக்கிள் கடை வைத்தான் . பல சைக்கிள்களை எடுத்துச் சென்றவர்கள் திருப்பிக்கொண்டு வந்து தராததால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பிறகு அரிசி மண்டி வைத்தான். அதிலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி இருந்தது. மனைவியோ இவன் செய்து கொடுத்த ஆபரணத்தைக் கழுத்தில் போட்டுகொண்டால் பாம்பைப் போட்டுக் கொண்ட மாதிரி இருக்கிறது என்று பதறினாள். இதற்கிடையில் அவனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த கால கட்டத்தில் அவனது மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு இரண்டு கைகளிலும் மணிக் கட்டுக்களுக்குக் கீழ் விரல்களே இல்லை ! வாக்கு மூலம் தந்த திருடன் சொன்னதாவது: " சிவன் கோயில் நகையைத் திருடியதற்குத் தெய்வம் தந்த தண்டனை ஐயா இது. இதை விட, தெய்வம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும் ?" என்றான். இச் செய்தி அந்நாளில் தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் வந்தது. இந்தக் காலத்தில் கோயில்களில் நடைபெறும் திருட்டுக்களைப் பார்த்தால் எவ்வளவு பேர் இதுபோன்ற தண்டனை பெறுகிறார்களோ தெரியவில்லை.
முன்பெல்லாம் இல்லாதவன்தான் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவான். ஆனால் இப்போதோ பெரிய ( ?) மனிதர்களும் , பெரிய பதவியில் இருப்பவர்களும் கூடத் திருட ஆரம்பித்து விட்டார்கள். சுவாமியையே விற்றுக் காசு பார்க்குமளவுக்குத் துணிந்து விட்டார்கள். கோயில் நிலங்களைக் குத்தகை எடுத்தவர்கள் கோயிலுக்கு உரிய தொகையைத் தராததும், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுய நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் வாதிகள் பலரும் சிவத்துரோகத்திற்குத் துணை போக ஆரம்பித்து விட்டனர். ஆக்கிரமிப்பாளர்களால் கோயில்களும், குளங்களும் குறுகியும் காணாமல் போவதும் பற்றிய செய்திகள் இப்போது அடிக்கடி வெளியாகின்றன.
" பக்தர்களுக்கோ" எதைப் பற்றியும் கவலை இல்லை. தன் குடும்பம் நன்றாக இருந்தால் போதும். கோயில் எப்படிப் போனால் என்ன ? இன்னும் பலரோ, " சுவாமி பார்த்துப்பார் " என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவார்கள். சுவாமியையே கேவலமாகப் பேசும்போது கூட வாய் திறக்காத இவர்களா கோவில்களைப் பற்றிக் கவலைப் படப் போகிறார்கள் ? ஒருவேளை தப்பித் தவறி யாராவது குரல் கொடுத்தால் கூட அவர்களுக்குத் துணையாகக் குரல் தர மாட்டார்கள். அவ்வளவு சுயநலம் வேர் ஊன்றி விட்டது.
மக்களது அறியாமையும், சமயப் பிடிப்பு இல்லாமையும், ஒற்றுமை இல்லாததும் திருடர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. சட்டம் பற்றிய அறிவோ சிந்தனையோ அறவே இல்லாத மனிதர்களை சட்டம் இருப்பதாகக் கூறி ஏமாற்றுவது எளிதாகப் போய் விட்டது. இதில் ஆண் என்ன பெண் என்ன , எல்லோரும் திருடத் தொடங்கி விட்டார்கள். நீதி வழங்கப் பல்லாண்டுகள் ஆகும் என்ற தைரியத்தால் துணிவு அதிகமாகிறது. அப்படியே ஏதாவது தண்டனை வழங்கப்பட்டாலும் இருக்கவே இருக்கிறது மேல் கோர்ட்டுகளில் முறையீடு, வாய்தா இத்யாதிகள் இருக்கும்போது வாழ் நாளே அநேகமாக முடிந்து விடும். அதற்குப் பிறகு தண்டனை வந்தால் என்ன,வராவிட்டால் என்ன. எல்லாவற்றையும் தொலைத்து வீட்டுக் கோயில்கள் நிற்பது ஒன்றே மிஞ்சும். வேண்டப்பட்டவர்களோ,அந்நியர்களோ தவறிழைத்தால் ஒருநாளும் தண்டனை பெற மாட்டார்கள் என்பது எழுதப்படாத சட்டம்.
கோயில்கள் தனது வருவாயையும்,உரிமைகளையும் இழந்து நிற்பது ஒரு பக்கம். மரங்கள் முளைத்து அழியத் தொடங்கியும் அரசோ உள்ளூர் வாசிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பது அதனினும் கொடுமை! இந்நிலையைச் சுட்டிக் காட்டி ஒருசிலர் நீதி மன்றத்தை நாடியிருப்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது. இது ஒரு சிறிய ஆரம்பமே. இன்னும் மேற்கொள்ள வேண்டிய பணிகளோ ஏராளம். ஒரு நூற்றாண்டு காலத் தவறுகளையும் அலட்சியங்களையும் சரிப் படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல்வேறு எதிர்ப்புக்களைத் தாண்டி நீதி கிடைக்க வேண்டும். தன்னலம் கருதாத அன்பர்கள் பலர் இத் தெய்வீகப் பணிக்குத் தங்களால் முடிந்த அளவு துணை நிற்க வேண்டும். பெயரளவில் ஆத்திகர்களாக இருந்தால் மட்டும் போதாது.