Friday, November 25, 2011

தெரிந்த புராணமும் திரிக்கப்படும் "கதைகளும்"

இப்பொழுதெல்லாம் பிரபலங்கள் எழுதும் ஆன்மீகக் கட்டுரைகள் பிழை இல்லாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கடைசிபக்கத்தை எப்படியோ நிரப்பி விடுகிறார்கள். அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வதும் இல்லை. அண்மையில் ஒரு ஆன்மீக இதழின் கடைசிப் பக்கத்தில் ஒரு பட்டி மன்றப் பேச்சாளர், "நந்தி மாதிரி குறுக்கே நிக்காதீங்க" என்ற தலைப்பில் தனக்குத் தோன்றிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்!

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நந்தனாருக்காக நந்தி விலகியதைப் பற்றித்தான். புராணத்தைக் கவனமாகப் படிக்க வேண்டும். "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்ற கோபாலக்ருஷ்ண பாரதியின் பாடலைக் கேட்டுவிட்டு, நந்தியை சிவபெருமான் விலகச் சொன்னார் என்று மட்டும் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. இது நடந்த இடம் தில்லை என்று எழுதியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். ஆனால் திருப்புன்கூர் சிவலோகநாதர் சன்னதியின் முன்னால் இருக்கும் பிரம்மாண்டமான நந்தியே விலகியது என்பதை," புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளி.." என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

இக்காலத்தில் குறுக்கே மறைத்துக் கொண்டு நின்றால், "நந்தி மாதிரி" மறைப்பதாகத் தவறாகக் கூறி வருகிறார்கள். சிவாலயங்களிலாவது நந்திக்குப் பின்னால் நின்றால் கொம்புகளுக்கு நடுவழியாகப் பெருமானை தரிசிப்பார்கள். பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு முன்னால் கைகூப்பி நிற்கும் கருடாழ்வாரைச் சுற்றி சன்னதியே கட்டியிருப்பதைப் பார்க்கலாம். இப்படி இருந்தும், "கருடன் மாதிரி குறுக்கே மறைப்பதாகக் " கூறுகிறார்களா என்ன?


சரி! இனி அவர் எழுதியுள்ள பட்டீஸ்வரம் கதைக்கு வருவோம். சம்பந்தர் சிவிகையில் வருவதைக் காண "எம்பெருமாட்டி ஆசைப்பட்டாளாம்." அத்தலத்தில் இறைவன் முன்பிருக்கும் நந்திகள் சற்று விலகி இருப்பதை இன்றும் காணலாம். இதோடு விட்டால் பரவாய் இல்லை. நந்தியைத் தள்ளிவைத்து பிரதிஷ்டை பண்ணியிருக்காங்களா" என்று ஒரு அறிவு ஜீவி கேட்டதாக வேறு எழுதியிருக்கிறார். அவர் கேட்டதாகவே இருக்கட்டும். அக்கேள்வி உலகம் முழுவதுக்கும் தெரிந்துதான் ஆக வேண்டுமா? இதெல்லாம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். " நம்பிக்கை --- அதானே எல்லாம்?" என்று ஒரு நகைக்கடை விளம்பரம் செய்வதையுமா இவர் டீ.வீ யில் பார்க்கவில்லை?


"தெரிந்த புராணம் ... தெரியாத கதை" என்ற தலைப்பில் அதே ஆன்மீக இதழின் வேறு ஒரு பக்கத்தில் , தனது பெயரின் முன் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு ஒருவர் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. பைரவரையும் பிக்ஷாடனரையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இருக்கிறார். " பரமேஸ்வரனே பாவம் செய்த கதை" என்று வேறு எழுதியிருப்பது கண்டனத்துக்கு உரியது. முதலில் இவருக்குத் தெரியாத/ படித்திராத புராணத்தைக் கூறுவோம். பதினெட்டுப் புராணங்களை நமக்குத்தந்த வியாச பகவான், அவற்றுள் ஒன்றான ஸ்காந்த மஹாபுராணத்தில் சங்கர சம்ஹிதையில் சிவரஹஸ்ய கண்டம்,தக்ஷ காண்டத்தில், சிவாம்சமான பைரவ மூர்த்தி, பிரமனின் ஐந்தாவது தலையைக் கொய்து அவனது அகந்தையை அகற்றி, அவனது கபாலத்தில் விஷ்ணு தனது நெற்றியைப் பிளந்து, ரத்தத்தால் நிரப்ப முற்பட்டபோது மூர்ச்சை ஆகவே, மாங்கல்யப் பிச்சை கேட்ட மஹாலக்ஷ்மிக்கு இரங்கி விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் கூறியிருக்கிறார். சிவனுக்குப் பிரமகத்தி தோஷம் வந்ததாகக் கூறவில்லை.


பிக்ஷாடன மூர்த்தம் என்பது தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்குவதற்காகக் கொண்ட கோலம். இதற்கும் பைரவ மூர்த்தத்திற்கும் என்ன தொடர்பு?? எந்த தெய்வத்தையும் இழிவு படுத்தாமல் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும். இன்ன இன்ன கோத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய ஆலயங்கள் என்றும், இன்ன ராசி மற்றும் இன்ன நக்ஷத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் என்றெல்லாம் எது வேண்டுமானாலும் எழுதட்டும். அப்படியாவது சிலர் அக்கோயில்களுக்குப் போகிறார்களே என்று சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது.


ஆன்மீக உலகில் மலைகள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது யாரும் இல்லை. எனவே அவரவர்கள் பிரபலங்களாகிவிட்டால் போதும்.பிறகு ஆன்மிகம் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பிரசுரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் தான் தயாராக இருக்கிறார்களே?

Wednesday, November 2, 2011

கிண்டல் இனியும் தொடருமா?



ஒருவர் பிரபலமாக இருந்து விட்டால் போதும். அவர் என்ன எழுதிக்கொடுத்தாலும் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருப்பதைபோலத் தோன்றுகிறது.பத்திரிகை ஆசிரியரும் அதில் வரும் செய்திகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை என்று நழுவி விடுகிறார். இதனால் சரிபார்க்கப்படாத செய்திகள் மக்களைச் சென்று அடைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் திருத்தம் வெளியிடப் பெறுவதில்லை. ஆன்மீகப் பத்திரிகைகளும் இதற்கு விதி விலக்கல்ல. கடைசிப் பக்கத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபல எழுத்தாளர்கள் மூலம் எழுதப்படும் கட்டுரைகளும் இதுபோன்ற தவறான செய்திகளை நகைச்சுவை என்று எண்ணிக்கொண்டு அள்ளி வீசுகின்றன. சில சமயம் அவற்றில் கேலியும் கிண்டலும் கூடத் தொனிக்கின்றன.சில மாதங்களுக்கு முன்னர் பிரமதேவனைத் தவறாகச் சித்தரித்து ஒரு ஆன்மீகப்(?) பத்திரிகை கடைசி பக்கத்தில் எழுதியிருந்ததைக் கண்டித்திருந்தோம். அக்கிண்டல் மீண்டும் வேறு ஒருவர் மூலம் முளைத்திருப்பது வேதனையை அளிக்கிறது. 

"பம்பரத்தை முழுங்கிய தந்தை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அண்மையில் ஒரு ஆன்மீக இதழில் கடைசி பக்கத்தில் எழுதியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பதற்காக ஒரு மாணவன் எழுந்து, " அப்படீன்னா கடவுள் இல்லைன்னு திருவள்ளுவர் ஒத்துக்கராரு. அப்படித்தானே ஐயா?" என்று கேட்டவுடன் அனைவரும் கை தட்டினார்களாம். அதற்கு விடையாகத் தமிழ்ப்பேராசிரியரான கட்டுரை ஆசிரியர், "எதையும் அரைகுறையாகப் புரிஞ்சுக்கக் கூடாது." என்று சொல்லிவிட்டுக், "கண்ணப்பநாயனாரைத் தெரியுமா?" என்று கேட்டாராம். அதற்க்கு ஒரு மாணவன், "அவர் வேட்டையாடிக்கொண்டு வந்த மான்கறியைத்தானே சிவபெருமான் சாப்பிட்டார்" என்றவுடன், மற்ற மாணவர்கள், சல்மான் கானுக்கு முன்னாடியே சிவபெருமான் மான் கறி சாப்பிட்டிருக்கிறாரா?" என்றார்களாம். அதற்க்கு இவர், " கண்ணப்பன் மான்கறி கொண்டு வந்து கொடுத்தார் என்பது சம்பவம்" என்று சொன்னதாகக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். 

இதன்மூலம், தெய்வ நம்பிக்கை வேரூன்ற வேண்டிய பருவத்தில், தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, கடவுளர்களைக் கிண்டலாக-- அதுவும் சினிமா நடிகருடன் ஒப்பிட்டு, ஏதோ பெரிதாக ஜோக் அடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் மிதக்கும் மாணவ மணிகளை அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மெச்சிக்கொள்ளட்டும். 

தமிழ் ஆசிரியராக இருந்தும் மாணவர்களை, "எதையும் குழப்பமாகவே தெரிஞ்சுக்கிறீங்களே." என்று சொல்லிவிட்டு தான் மட்டும் தவறாகப் புரிந்துகொண்டு பேசலாமா? கண்ணப்ப நாயனார் கொண்டு வந்தது மான் கறி அல்ல. பெரிய புராணத்தை மீண்டும் அவர் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். " வன் பெரும் பன்றி தன்னை எரிதனில் வதக்கி" என்று குறிப்பிடப்படுவதால் காட்டுப் பன்றி இறைச்சியையே கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆறு இரவுகள் இறைவனின் பக்கத்திலிருந்தே கண் துஞ்சாது அன்பு செலுத்தியமைக்கு ஈடு இணை எது? எனவேதான், "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்று திருவாசகமும் பேசுகிறது. மாணவர்களிடம் புராணத்தில் இருப்பதைத் தெளிவாக எடுத்துச்சொள்ளவேண்டும். அதைச்செய்யாமல், அதுதான் நடந்த சம்பவம் என்று இவர் சொல்லியிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். 

இதுபோன்ற கேலிகளையும் கிண்டல்களையும் பிற பத்திரிகைகளில் வைத்துக்கொள்ளட்டும். ஆன்மீகப் பத்திகைகளும் இதற்கு இடம் கொடுக்க வேண்டுமா? கடைசி பக்கம் , தரத்திலும் கடைசியாகப் போய் விடக்கூடாது. நிர்வாக ஆசிரியர்கள் கவனிப்பார்களா?   

Tuesday, October 25, 2011

நல்ல பண்புகள்


தீபாவளி என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருபவை புதிய ஆடைகளும், பட்சணங்களும், பட்டாசுகளுமே தான்.
சிலருக்கு நரகாசுரன் கதையும் நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கு டீ.வி.யில் காட்டப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைக்கு வரும் படங்களும் கூட ஞாபகம் வரும். ஆனால் நமக்கு நினைவுக்கு வராத எவ்வளவோ இருக்கும்போது அவற்றையும் சிறிது சிந்திக்க வேண்டியிருக்கிறது.


தீபாவளி வந்துவிட்டதே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்கள்.

எல்லாம் இருந்தும் நோய்வாய்ப்பட்டு அன்றைய தினம் ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள்.

குடும்பத்தவர் காலம் சென்றதால், ஓராண்டு பண்டிகை கொண்டாடாமல் இருப்பவர்கள்.

குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்டோர்.

குடும்பத்தைப் பிரிந்து அயல் நாட்டில் தனியே வசித்து வேலை செய்பவர்கள்.

உற்றார் உறவினர் இருந்தும் பாசம் என்பதையே அனுபவிக்காதவர்கள்.

வசதிபடைத்த வீட்டுப் பையன்கள் முகத்தையே பாவமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் வெடித்துச் சிதறிக் கிடந்த வெடிகளைப் பொறுக்கிக்கொண்டுபோய் தானும் வெடிக்க ஆசைப் படும் ஏழைச் சிறுவர்கள்.

போரில் சிறைக்கைதிகளாகப் பிடிபட்டு அயல்நாட்டுச் சிறைகளில் இருக்கும் நமது ஜவான்கள்.


இப்படிப் பலதரப்பட்ட மக்கள் தீபாவளியை இன்பமாகக் கொண்டாடமுடியாமல் துன்பப்படுகிறார்கள்.
இவர்களைப் பற்றி எண்ணுவதாலும். ப்ரார்த்திப்பதாலும் அத்துன்பச்சுமை உடனே குறையப் போவதில்லை என்றாலும், நமக்கு இரக்க குணம் ஏற்பட வகை செய்கிறது அல்லவா? இந்த குணம் இல்லாததால் தான்
தற்காலத்தில் சுயநலம் ஓங்குகிறது. இல்லாதவனுக்கு இரக்கப்படுவதும் அவனுக்கு உதவுவதும் இருப்பவனது கடமை. இல்லாதவர்கள் பலராக இருப்பதன் காரணம் முற்பிறவியில் அவர்கள் நல்வினைகளைச் செய்யாததால்தான் என்கிறார் திருவள்ளுவரும்.

நமக்கு நல்ல குணங்கள் வர வேண்டும் என்று ஈச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும். " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே." என்று அப்பர் தேவாரம் சொல்கிறது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று திருமூலர் பாடியருளியதுபோல், நாமும் சிந்திப்போமானால் நமது எண்ணங்கள் உயர்ந்தவை ஆகும்.

ஜனங்களின் நல்ல குணங்கள் போய்விடக்கூடாதே என்று கவலைப் படும் விதமாக 1949 ம் வருடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்கள் ஆற்றிய உரையை 19.5.2004 தேதியிட்ட "துக்ளக்" இதழ் வெளியிட்டிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது:


" பொது ஜனங்களுக்கு நற்குணங்கள் அதிகரிக்கவோ, அவர்கள் தர்ம மார்க்கமான புண்ய மார்கத்தில் போய் ஈசன் அருளை அடையவோ ஜனநாயகம் உதவுகிறதா அல்லது ஜனங்களைக் கெடுத்து சிலருடைய நலனை மட்டும் பேணுவதற்கு சகாயம் செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். "Of the people,by the people,for the people" என்றெல்லாம் என்னென்னவோ
சொல்கிறார்களே, அதெல்லாம், விஷயம் தெரியாத மக்களால், விஷயம் தெரியாத (ஆனால் சுய நலம் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த சர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்று கூடப் பயப்படும்படி இருக்கிறது. உத்திர மேரூர் சாசனத்தில் உள்ள எல்லா clause க்கும் ஷரத்துக்களுக்கும் அடிப்படை , வேட்பாளருக்கு அர்த்த சுத்தியும்,ஆத்மசுத்தியும் இருக்க வேண்டும் என்பதே.  தற்போது குற்றவாளி என்று நிரூபணம் ஆனவரைத்தவிர எவரும் வேட்பாளராக நிற்க முடியும். இப்போது நடக்கிற மறைமுகக் குற்றங்களுக்கோ எல்லை இல்லை.பெரிய தப்புகள்கூட, சாமர்த்தியமாகப் பண்ணிவிட்டு சாட்சியம் போதவில்லை என்று தப்பிவிட முடிகிறது.
பிரஜைகள் அத்தனை பேரின் அர்த்த,ஆத்ம சுத்திகள் கெட்டுப்போக வழி செய்து கொடுக்கும்படியாக இப்போது தேர்தல் முறை செய்யப்பட்டிருக்கிறதே  என்பதை நினைத்தால் மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. வெகுகால வெள்ளைக்கார ஆட்சிக்குப் பிறகு, இப்போது சுதந்திரம் கிடைத்திருக்கும்போது, எல்லோரும்
நிதானம் இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல்,விவஸ்தை இல்லாமல் கிளம்புவதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை காட்டுவதற்காக தர்மத்தில் சிறுமை அடைந்துவிட்டால் நம்முடைய ஜனநாயக வேஷம், பிராணன் போன உடம்புக்கு அலங்காரம் செய்கின்ற மாதிரி தான். நான் பாலிடிக்ஸ் பேசப்படாதுதான். ஆனால் பாலிடிக்ஸ் தர்மத்திலே வந்து முட்டி மோதி, நம்முடைய ஜனங்களின் நல்ல பண்புகளை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற நிலை ஏற்படும்போது, தர்ம பீடங்களாகவே மடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதால்,எப்படி வாயை மூடிக்கொண்டிருப்பது? "

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ பெரியவர்கள் கவலை தெரிவித்தார்கள். அதுவோ சுயநலத்தின் ஆரம்பகாலம். இப்போதோ அது வேரூடிக் கிடக்கிறது. உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல்ல பண்புகளை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். தீபாவளி கொண்டாடும் நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் இதை சிந்திக்க வேண்டும்.

பிறர் நலம் பற்றி அக்கறை கொண்டால் தேசநலம் ஏற்பட்டு விடும். அப்படிப்பட்ட ஞானத்தை, ஞான பரமேச்வரனாகிய தக்ஷிணாமூர்த்தி நமக்கெல்லாம் அருள வேண்டும்.

                       "வையகமும் துயர் தீர்கவே." --- சம்பந்தர் தேவாரம்.

Friday, October 21, 2011

தீபாவளி சிந்தனை

"சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே" என்று பரமேச்வரனைத் துதிக்கிறது திருவாசகம். பிரதி மாதமும் அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியன்று மாத சிவராத்திரியாக அப்பெருமானை ஆராதிக்கிறோம். தீபாவளி அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியும் அவனை ஆராதிப்பதறகாகவே ஏற்பட்டது. மாசியில் வருவது மகாசிவராத்திரியாக மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் கார்த்திகை தீபத்தன்று வீடுகளில்
தீபம் ஏற்றி வழிபடுவதைபோல வடநாட்டில் தீபாவளியன்று மக்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக்குகிறார்கள். சோதியுள் சோதியாக ஈச்வரன் இருப்பதாகத் திருவிசைப்பாவில் வருகிறது. அது யாரோ ஏற்றிவைத்த ஜோதி அல்ல. ஸ்வயம் ஜோதி.அவனே ஸ்வயம் பிரகாசன். அது இருளை அகற்றும் சாதாரண விளக்கு அல்ல.கோவிலில்
விளக்கு ஏற்றினால் ஞானம் பெறலாம் என்று அப்பர் சுவாமிகள் சொன்னார் அல்லவா? ஆகவே, இந்த விளக்கு நமது மனத்தில் உள்ள அஞ்ஞானமாகிய இருட்டை நீக்கும் ஞான விளக்கு. ஞானம் கிடைத்துவிட்டால் நல்ல அறிவும் பெற்றுவிடுவது சுலபமாக
ஆகி விடுகிறது. "அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே:" என்று மாணிக்கவாசகரும் பாடினார்.

தீபாவளியைக் கொண்டாடும் சமயத்தில் நாம் ஜோதிஸ்வரூபனாக இருக்கும் ஈச்வரனைத் தியானிக்க வேண்டும். அன்றைய தினம் சிவாலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இயன்றவர்கள் சுவாமிக்குப் புது வஸ்த்திரம் வாங்கித்தந்து சமர்ப்பிக்கலாம்.
நமக்குப் புதுத் துணிமணிகள் வாங்கும் வசதி தந்த தெய்வத்துக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா? அதிலும் முக்கியமாக ஒரு கால பூஜையோ அல்லது அதுகூட இல்லாமலோ கவனிப்பார் அற்று இருக்கும் பழங்காலக் கிராமக் கோயில்களுக்கு
இதைச் செய்யலாம். சிறந்த சிவபுண்ணியமும் கூட. அன்றைய தினம் எந்த கிராமக் கோயிலும் மூடியிருக்கக் கூடாது. இதுவே சுவாமியிடம் அன்றைய தினம் நாம் செய்யும் பிரார்த்தனை.

இன்னொரு முக்கியமான சிந்தனையையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது..நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம், தற்காலத்தில் விலைவாசிகள் விஷம் போல ஏறுவதால் குடும்பம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது. ஆள் கூலியும் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேல் நானூற்று ஐம்பது வரை ஆகிறது. நிலைமை இப்படி இருக்க, கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களுக்கு மாதம் முன்னூறு ரூபாய் சம்பளமே தரப் படுவதை, அரசாங்கமோ,பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. வெளியூர்க்காரர்கள் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்து கொடுத்தபின்பும் ஊர்மக்கள் ஒன்று கூடி அர்ச்சகருக்கு ஐயாயிரம் ரூபாயாவது மாத வருமானம் கிடைக்க வழிசெய்யலாம் அல்லவா? சில ஊர்களில் மண்டலாபிஷேகம் செய்யக்கூட
உள்ளூர்வாசிகள் முன்வருவதில்லை. இச்செய்கைகள் மூலம் மனம் நொந்துபோய் ஊரை விட்டே வெளியேறி வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூர் செல்லும் அர்ச்சகர்களுக்கு யார் ஆதரவு தரப் போகிறார்களோ தெரியவில்லை. பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் பூஜைக்கு அர்ச்சகர் இல்லாத அவல நிலை உருவாகிறது. ஒரு கிராமத்தில் நூறு வீடுகள் இருந்தால், மாதம் ஒரு வீட்டுக்கு நூறு ரூபாய் தந்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். அதில் பாதியை அர்ச்சகருக்கு சம்பளமாகவும்,மீதியை வங்கியில் சேமித்து, கோயிலை நிர்வகிப்பதற்கும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கேபிள் டீவி க்கு மாதம் அலட்சியமாக நூறு ருபாய் தருபவர்கள் இந்த சிவ தர்மத்தையும் செய்தால், அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்கும், கோவிலையே நம்பியிருக்கும் குடும்பத்தையும் காப்பாற்றலாம். கோவிலும் பூஜைகள் நின்று பூட்டப்படுவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல மனம் கொண்ட ஒருவராவது முன்வந்து கிராமவாசிகளுக்குப் புரியும்படியாக எடுத்துச் சொல்லி கோவில்களில் விளக்கேற்றலாம் தானே? சிவனருளே இதற்குத் துணைசெய்யவேண்டும்.

Tuesday, October 4, 2011

தலையாலங்காட்டில் தலையாய திருப்பணி




சிவாலயங்களில் திருக்குளத்தையும் நந்தவனத்தையும் பராமரிப்பது குறித்து எழுதியிருந்தோம். இதை உடனடியாகச் செயல்படுத்துவதே ,பிறருக்கும் இதில் ஆர்வம் ஏற்பட உதவியாக இருக்கும் என்று எண்ணியபடியால் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள தலையாலங்காடு என்ற தலத்தில் முதலாவதாகத் துவங்கத் திருவருள் கூட்டியது. இக் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கிச் சில ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாமல் மெதுவாக நடைபெற்று வருகின்றன. நாமும் நம்மால் இயன்ற அளவில் இச்சிவ புண்ணியத்தில் பங்கேற்க வேண்டும். நமது சந்ததிகளும் இதைப் பின்பற்றவும் நற்கதி பெறவும் கிடைக்கும் அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது.


பல ஆண்டுகளுக்கு முன்பு , அருகில் உள்ள செம்பங்குடிக்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடிப் பெரியவர்கள் தினமும் விடியற்காலை ஐந்து மணிக்கு இக் கோயிலுக்கு வந்து எதிரில் உள்ள சங்க தீர்த்தத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, ஸ்ரீ நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வருவார்களாம்.இப்படியாக ஒரு மண்டல காலம் தினசரி தரிசனத்திற்கு வந்ததாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபோல் நாமும் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்பதைத், தானே அனுசரித்துக் காட்டினார்களோ என்று தோன்றியது. எனவே நாம் அங்கு தரிசனத்திற்காகப் போகும்போது பதினொரு பிரதக்ஷிணம் செய்யும்படி எண்ணம ஏற்பட்டதால் அவ்விதமே நம்மை செய்வித்ததும் அவன் அருள் தான்.


அதேபோல நந்தவனப் பணியையும் துவங்கத் திருவருள் கூட்டியது. நித்திய பூஜைக்குத் தேவையான அரளி, பாரிஜாதம் (பவழ மல்லிகை) , செம்பருத்தி போன்ற மலர்ச் செடிகளின் கன்றுகளையும், வில்வம், வன்னி போன்ற மரக் கன்றுகளையும் வாங்கிவந்தோம். அவற்றை நடுவதற்கு முன் வெளி பிராகாரத்தில் செடிகளும் புதர்களும் அகற்றப்பட்டன. செடிகளுக்கு தினந்தோறும் நீர் ஊற்றி வளர்ப்பதற்காக நூறு அடி நீளமான ஹோஸ் வாங்கித்தரப்பட்டது. ஆடு மாடு முதலியவற்றால் செடிகள் அழியாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப் படும். மழைக் காலம் துவங்க இருப்பதால் செடிகளும் கடும் வெய்யில இல்லாததால் நன்கு வளர எதுவாக இருக்கும்.


கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான வியாதிகளால் அவதிப் படுவோர் பலர் இதில் ஸ்நானம் செய்து நோய் நீங்கப் பெறுகிறார்கள் என்பது அனுபவத்தால் காணும் உண்மை. குளத்தில் அல்லி மலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. படித்துறை சில இடங்களில் செப்பனிட வேண்டியுள்ளது. தூய்மைசெய்யும் பணி ஓரிரு தினங்களில் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற அன்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. வரும் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதானால் இப்பணிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படவேண்டும். குளத்தங்கரை விநாயகர், கோஷ்ட துர்க்கை, திருஞான சம்பந்தர் சுப்பிரமணியர்,கஜலக்ஷ்மி, ஆகிய மூர்த்திகள் நூதனமாகச் செய்யப்பட்டுப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். சுவாமி அம்பாள சன்னதிகளின் முன்பு தளவரிசை செய்ய வேண்டியிருக்கிறது. இத்தலத்து விசேஷ மூர்த்தியான அனுக்ரஹ சனி பகவான் சன்னதியைப் புனரமைக்க வேண்டும். மடப்பள்ளி மேற்கூரை பழுதடைந்துள்ளது. ஸ்தல வ்ருக்ஷ மேடை, சுவாமிக்குப் பின்னால் திருமாளிகைப்பத்தி மேடை ஆகியவை அமைக்கப் படவேண்டும். கோவிலின் உட்பகுதியில் மின்சார இணைப்பு மிகவும் பழுதாகியுள்ளது. இதை முற்றிலும் புதுப்பிக்கவேண்டும்.


அப்பர் சுவாமிகளின் தேவாரப் பதிகம் பெற்ற இப்புராதனமான கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. புதிய கோயில்கள் கட்டுவதில் ஆர்வம காட்டுபவர்கள் இதுபோன்ற ஆலயங்களின் திருப்பணிக்கும் உதவலாமே. சிவனருள் அதுபோன்ற சிந்தனையை வழங்குமாறு பிரார்த்திப்பதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்? இதன் மூலம் கிராமங்களில் எஞ்சியிருக்கும் மக்களுக்கு ஆலய மகிமை தெரிய வருவதோடு, பராமரிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்பட வகை செய்யும். இப்போது நடந்துவரும் ஓரிரு கால பூஜைகளும் அறவே நின்றுவிடாதபடி காப்பாற்றப்படவேண்டும். புராதன ஆலயத் திருப்பணிக்காகப் பலரும் தம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.


தலையாலங்காடு ஆலய அமைப்பு மற்றும் தல புராணம் பற்றிய விரிவான தகவல்கள், நமது மற்றொரு பதிவான, "சிவார்ப்பணம்.ப்ளாக்ஸ்பாட்.காம் " என்ற முகவரியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை அறிய விரும்புவோர், 9443500235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, September 11, 2011

திருக்குளமும் நந்தவனமும்



ஸ்ரீ பரமேச்வரன், பலவகைப்பட்ட நீர் நிலைகளின் வடிவங்களாகவே இருப்பதாக ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. சிறு வாய்க்கால் நீராகவும், மலையிலிருந்து விழும் அருவியாகவும், மடுக்களில் உள்ள நீராகவும் ஓடை நீராகவும், நதியாகவும், சிறு குட்டைகளில் உள்ள நீராகவும் ,கிணறுகளில் உள்ள நீராகவும், மழை நீராகவும், பிரளய நீராகவும் இருப்பதாக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவ்வளவு விரிவாகக் கூறப்பட்டிருப்பதைப் பார்த்தாவது, ஜலத்தைக் கண்டவுடன் சிவஸ்வரூபம் என்ற எண்ணம நமக்கு வரவேண்டும். பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றான திருவானைக்காவை, "செழு நீர்த் திரளைச் சென்று ஆடினேனே" என்றும், "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்" என்று திருவாலங்காட்டையும் அப்பர் பெருமான் பாடியிருக்கிறார். நீர் மற்றும் நதிகளின் பெயரோடு சேர்ந்து, "ஜலகண்டேஸ்வரர்" என்றும் "கங்கா ஜடேஸ்வரர்" என்றும் சுவாமி பெயர்கள் வழங்கப்படுகின்றன. பல ஊர்களின் ஸ்தல புராணங்களில், தீர்த்தப் படலம் என்று தனியாக ஒரு படலமே பாடியிருக்கிறார்கள். திருவிடை மருதூர் காருண்யம்ருத தீர்த்தமும், மதுரையின் பொற்றாமரையும், ஸ்ரீ வாஞ்சியத்தின் குப்த கங்கையும், வேதாரண்யம் மணிகர்ணிகையும், திருவெண்காட்டு முக்குளமும், சிதம்பரம் சிவகங்கையும், திருவாரூர் கமலாலயமும், வைத்தீஸ்வரன் கோயில் சித்தாமிர்தத் தீர்த்தமும் சில உதாரணங்களாக இங்கு எடுத்துக் காட்டலாம். ராமேச்வரத்தில் தீர்த்தமாடுதல் பிரசித்தமாகக் காணப்படுகிறது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் பெருமையை அறியாதார் இலர்.


சில ஊர்களில், அருகில் உள்ள நதிகளில் தீர்த்தவாரியும் , அதற்காகவே அமைக்கப் பட்ட ஸ்நான கட்டங்களும் உள்ளன. காவிரிக் கரையில் உள்ள மாயூரம், திருவையாறு, கும்பகோணம்,கொடுமுடி,பவானி, திருப்பராய்த்துறை போன்ற தலங்கள் இவ்வகையில் அடங்கும்.



இத்தனை பெருமை வாய்ந்த தீர்த்தங்களையும், நதிகளையும் நாம் நன்கு பராமரிப்பதில்லை. திருக்குளங்கள் பாசி பிடித்தும்,குப்பைகளோடும் காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் கோயிலுக்கு வெளியில் உள்ள திருக்குளங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. அவற்றை அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும். இன்னும் பல இடங்களில் குளங்கள் வறண்டும் , செடிகள் முளைத்தும் பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. ஆலயத் திருப்பணி செய்பவர்களும் நிதிப் பற்றாக்குறை காரணமாகக் குளங்களைத் தூய்மைப் படுத்த முடிவதில்லை. கிராம சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் வாயிலாக இக் குளங்கள் தூர்வாரப்பெற்றுக் காப்பாற்றப்படவேண்டும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி உண்டு. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். செய்வார்களா??


"வ்ருக்ஷேப்ய:" என்று ஸ்ரீ ருத்ரம், மரங்களின் வடிவாகவே சுவாமி இருப்பதாகப் போற்றுகிறது. மரமாகவும் செடியாகவும் கொடியாகவும் மரக் கிளைகளாகவும், உலர்ந்த கட்டையாகவும் அதில் ஈச்வரன் குறிப்பிடப்படுகிறான். வில்வவனேச்வரர்,வடாரண்யேச்வரர், தர்பாரண்யேச்வரர், ஏகாம்பரேச்வரர் முதலிய நாமங்கள் விருக்ஷங்களோடு தொடர்பு உடையவை. மற்ற ஊர்களில் குறைந்தது வில்வ வ்ருக்ஷமாவது பிராகாரத்தில் வளர்க்கப்படவேண்டும். திருப்பணி செய்வோர் ,நந்தவன அபிவிருத்திக்குக் கூடுதல் கவனம் செலுத்துதல் நல்லது. பல இடங்களில் இலவசமாகவே மரக் கன்றுகளைத் தருகிறார்கள். நாம் அவற்றைப் பயன் படுத்திக்கொள்வதில்லை. கேட்டால், "யார் தினம் தண்ணீர் ஊற்றுவது? " என்கிறார்கள். எனவே, கிராமக் கோயில்களில் சுவாமிக்கு சார்த்துவதற்கு பூக்களோ மாலைகளோ இருப்பதில்லை. ஒருக்கால் நந்தவனத்தில் பூக்கள் இருந்தாலும் அவற்றை பூஜா காலத்தில் பறித்துத் தருவார் இல்லை!! முருக நாயனார் கதையையும், செருத்துணை நாயனார் கதையையும் எறிபத்த நாயனார் கதையையும் இருந்த இடத்திலிருந்தே குருபூஜைக்காகப் பாராயணம் செய்வதைவிட, அன்றைய தினமாவது ஒரு கோயிலுக்குச் சென்று புஷ்ப கைங்கர்யம் செய்யலாமே. அதுதான் உண்மையான குருபூஜையும் கூட. நந்தவனங்களும் குளங்களும் அழிவதைப் பார்த்துக்கொண்டே , "காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்று இருந்த இடத்திலேயே தேவாரம் பாடிக்கொண்டு இருப்பதைவிட, சம்பந்தரின் உபதேசத்தை ஏற்று செயல் படுத்துவதே சிறந்த சிவபுண்ணியம் ஆகும்.


சிவனருளால் ஏற்பட்ட இந்த சிந்தனையைத் தலைமேற்கொண்டு நம்மால் இயன்ற அளவில் நந்தவனப் பணியும் திருக்குளப் பணியும் செய்ய நமது சபை தீர்மானித்துள்ளது. இதற்கான செயல் திட்டங்கள், அணுகு முறைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் அடியார்களின் ஈடுபாடும் நம்மை முன்னின்று நடத்தும் சிவனருளும் இப்பணிக்கும் உறுதுணையாக இருக்கும். "முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?"

Thursday, August 11, 2011

அன்ன தானமும் ஆலய பூஜையும்



"தானங்களில் சிறந்தது அன்ன தானம்" என்றும் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் சொல்வதால் அன்ன தானத்தின் உயர்வு தெரிய வரும். திருவிழா நாட்களில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக பழங்காலத்திலிருந்தே அன்னதான சத்திரங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன. சில ஆலயங்களில் தரிசனத்திற்காக வரும் தேசாந்திரிகளுக்காக அன்ன தானக் கட்டளைகள் அமைக்கப்பட்டன. வசதிகள் அற்ற சிறு கிராமங்களில் உள்ள கோயில்களைக் காண வரும் பக்தர்களுக்கு இந்த அமைப்பு பெரிதும் பயன் பட்டது. இப்பொழுது அரசாங்கமே, பல கோயில்களில் அன்னதானம் செய்ய முன்வந்திருப்பது பாராட்டுதற்குரியது. அதே சமயம், ஆலயங்களில் செய்வதற்கும் ,சமுதாய கூடங்களில் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயல் படுவது நல்லது. சமூகக் கூடங்களில் மதிய உணவு அளிப்பது போல அல்லாமல்,கோயில்களில் உணவளிப்பதன் முன் கூட்டு வழிபாடு செய்யப்படவேண்டும். இறைவனது பிரசாதமாக உணவு அளிக்கப் படுகிறது என்று உண்ண வருபவர் அனைவரும் உணரச்செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஐம்பது பேருக்கு உணவு அளிப்பதானால் , ஒரு கோயிலுக்கு, ஒரு ஆண்டுக்குக் குறைந்த பட்சம் மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



கோயில்களில் அன்னதானம் செய்ய வரும் அரசாங்கம், கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர் நலனையும் கவனத்தில் கொள்வது நல்லது. பல கோயில்களில் மாத சம்பளமாக (ஒரு கால பூஜை செய்வதற்கு) இருநூறு ரூபாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. பல இடங்களில் அதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.இதை வைத்துக் கொண்டு எப்படிக் குடும்பத்தை நடத்துவார்கள் என்று சிந்திக்க வேண்டும். இதனால் வருமானத்தைத் தேடி நகரங்களுக்குக் குடியேறும் நிர்பந்தம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் ஆன பல கிராமக் கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.





திருவாரூர் அருகில் உள்ள திருநாட்டியத்தான்குடி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்திற்கு அண்மையில் சென்றிருந்தோம்.புராணச் சிறப்புமிக்க இச்சோழர் காலக் கோயிலை நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் பல ஆண்டுகளுக்குமுன்னர் திருப்பணி செய்திருக்கிறார்கள். சமீபத்தில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. புதுப் பொலிவுடன் திகழும் இக் கோயில் பூட்டப்பட்டிருந்தது. மெய்க்காவலர் உதவியதால் ஆலய தரிசனம் செய்தோம்.நித்திய பூஜை நடைபெறுவதில்லை என்று அப்போது தான் தெரிய வந்தது. இரண்டு ஆண்டுகளாக விசேஷ நாட்களில் மட்டும் பூஜை நடை பெறுவதாக உள்ளூர் வாசி ஒருவர் கூறினார். கோயிலின் நிர்வாக அதிகாரியோ அல்லது கிராம மக்களோ முயன்றிருந்தால் ஒரு அர்ச்சகரை ஏற்பாடு செய்திருக்க முடியும். நிர்வாகமோ, மக்களோ அவரது சம்பளத்திற்கு ஏற்பாடு செய்ய முன்வராததால் இந்நிலை நீடிக்கிறது.



இத்தலத்து இறைவர் மாணிக்க வண்ணர் என்று சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறார். ராஜேந்திர சோழனும் அவனது தம்பியும் தங்கள் தந்தை விட்டுச்சென்ற ரத்தினங்களைப் பிரித்துக்கொள்ள முற்பட்ட பொது, இத்தல இறைவர் இரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றிப் பிரித்துத் தந்ததாகவும், அதனால் மகிழ்ந்த சகோதரர்கள் இறைவனுக்கும் இறைவிக்கும் இரத்தின ஆபரணங்கள் அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனால் சுவாமிக்கு ரத்னபுரீச்வரர் என்று பெயர் ஏற்பட்டது. யானை ஒன்று இங்கு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபாட்டு முக்தி அடைந்ததாகப் புராணத்தால் அறியலாம்.





சுந்தரர் இங்கு வந்தபோது கோயிலில் இறைவரைக் காணாது திகைத்தபோது, விநாயகப் பெருமான் , பக்கத்தில் உள்ள வயலில் அம்பிகையுடன், சுவாமி நாற்று நட்டுக் கொண்டிருப்பதைத் தனது திருக் கரத்தால் சுட்டிக் காட்டினாராம். கைகாட்டிய விநாயகர் சன்னதி கோயிலுக்கு எதிரில் உள்ளது.





அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான கோட்புலி நாயனார் அவதரித்த பதி இது. சிவத்தல யாத்திரையாக இங்கு வந்த சுந்தர மூர்த்தி நாயனாரை வரவேற்றுப் போற்றிய கோட்புலியார், தனது மகள்களான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரருக்கு மணம் முடிக்க முன்வந்தபோது, அதை மறுத்த சுந்தரர், அவ்விருவரையும் தன் மகள்களாக ஏற்றதோடு, தனது பதிகங்களில் தன்னைச் "சிங்கடி அப்பன் " என்றும் "வனப்பகை அப்பன்" என்றும் குறிப்பிடலானார்.


சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்த கோட்புலி நாயனார் ஒரு சமயம் போர் முனைக்குச் சென்றிருந்தபோது கடும் பஞ்சம் ஏற்படவே, அவரது குடும்பத்தார்கள், அன்னதானத்திற்காக வைத்திருந்த நெல்லை உபயோகப் படுத்தினர். ஊருக்குத் திரும்பியதும் இதனை அறிந்த நாயனார், அவர்களை சிவத்ரோகம் செய்தவர்களாகக் கருதித் தனது உடைவாளால் வெட்டி வீழ்த்தினார்.எஞ்சியிருந்த குழந்தையும் அப்பாவச்செயலைச் செய்த தன் அன்னையின் பாலை அருந்தியிருப்பதால் அதனையும் வெட்ட முற்பட்டார். அச்சமயம், ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் காட்சி அளித்த இறைவன் அனைவரையும் உயிர்ப்பித்து, இறுதியில் சிவமுக்தியும் அருளினான் என்று பெரிய புராணம் கூறுகிறது.


இத்தனை பெருமைகளை உடைய இக்கோயிலில் பூஜைகள் நடைபெறாதது நமது துரதிருஷ்டமே..அன்னதானம் செய்து காட்டிய கோட்புலி நாயனார் போற்றிய சிவாலயத்தில் பூஜைகள் நின்று போகலாமா?. அறநிலையத்துறையும் ஆன்மிகப்பெருமக்களும் சிந்திக்க வேண்டும். ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து அன்னதானம் செய்ய முன்வரும் அரசாங்கம் இதுபோன்ற கிராமக் கோயில்களில் உரிய சம்பளத்துடன் அர்ச்சகர்களை நியமிக்க முன்வராதது ஏன் என்று புரியவில்லை.