Wednesday, November 2, 2011

கிண்டல் இனியும் தொடருமா?ஒருவர் பிரபலமாக இருந்து விட்டால் போதும். அவர் என்ன எழுதிக்கொடுத்தாலும் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருப்பதைபோலத் தோன்றுகிறது.பத்திரிகை ஆசிரியரும் அதில் வரும் செய்திகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை என்று நழுவி விடுகிறார். இதனால் சரிபார்க்கப்படாத செய்திகள் மக்களைச் சென்று அடைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் திருத்தம் வெளியிடப் பெறுவதில்லை. ஆன்மீகப் பத்திரிகைகளும் இதற்கு விதி விலக்கல்ல. கடைசிப் பக்கத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபல எழுத்தாளர்கள் மூலம் எழுதப்படும் கட்டுரைகளும் இதுபோன்ற தவறான செய்திகளை நகைச்சுவை என்று எண்ணிக்கொண்டு அள்ளி வீசுகின்றன. சில சமயம் அவற்றில் கேலியும் கிண்டலும் கூடத் தொனிக்கின்றன.சில மாதங்களுக்கு முன்னர் பிரமதேவனைத் தவறாகச் சித்தரித்து ஒரு ஆன்மீகப்(?) பத்திரிகை கடைசி பக்கத்தில் எழுதியிருந்ததைக் கண்டித்திருந்தோம். அக்கிண்டல் மீண்டும் வேறு ஒருவர் மூலம் முளைத்திருப்பது வேதனையை அளிக்கிறது. 

"பம்பரத்தை முழுங்கிய தந்தை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அண்மையில் ஒரு ஆன்மீக இதழில் கடைசி பக்கத்தில் எழுதியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பதற்காக ஒரு மாணவன் எழுந்து, " அப்படீன்னா கடவுள் இல்லைன்னு திருவள்ளுவர் ஒத்துக்கராரு. அப்படித்தானே ஐயா?" என்று கேட்டவுடன் அனைவரும் கை தட்டினார்களாம். அதற்கு விடையாகத் தமிழ்ப்பேராசிரியரான கட்டுரை ஆசிரியர், "எதையும் அரைகுறையாகப் புரிஞ்சுக்கக் கூடாது." என்று சொல்லிவிட்டுக், "கண்ணப்பநாயனாரைத் தெரியுமா?" என்று கேட்டாராம். அதற்க்கு ஒரு மாணவன், "அவர் வேட்டையாடிக்கொண்டு வந்த மான்கறியைத்தானே சிவபெருமான் சாப்பிட்டார்" என்றவுடன், மற்ற மாணவர்கள், சல்மான் கானுக்கு முன்னாடியே சிவபெருமான் மான் கறி சாப்பிட்டிருக்கிறாரா?" என்றார்களாம். அதற்க்கு இவர், " கண்ணப்பன் மான்கறி கொண்டு வந்து கொடுத்தார் என்பது சம்பவம்" என்று சொன்னதாகக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். 

இதன்மூலம், தெய்வ நம்பிக்கை வேரூன்ற வேண்டிய பருவத்தில், தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, கடவுளர்களைக் கிண்டலாக-- அதுவும் சினிமா நடிகருடன் ஒப்பிட்டு, ஏதோ பெரிதாக ஜோக் அடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் மிதக்கும் மாணவ மணிகளை அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மெச்சிக்கொள்ளட்டும். 

தமிழ் ஆசிரியராக இருந்தும் மாணவர்களை, "எதையும் குழப்பமாகவே தெரிஞ்சுக்கிறீங்களே." என்று சொல்லிவிட்டு தான் மட்டும் தவறாகப் புரிந்துகொண்டு பேசலாமா? கண்ணப்ப நாயனார் கொண்டு வந்தது மான் கறி அல்ல. பெரிய புராணத்தை மீண்டும் அவர் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். " வன் பெரும் பன்றி தன்னை எரிதனில் வதக்கி" என்று குறிப்பிடப்படுவதால் காட்டுப் பன்றி இறைச்சியையே கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆறு இரவுகள் இறைவனின் பக்கத்திலிருந்தே கண் துஞ்சாது அன்பு செலுத்தியமைக்கு ஈடு இணை எது? எனவேதான், "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்று திருவாசகமும் பேசுகிறது. மாணவர்களிடம் புராணத்தில் இருப்பதைத் தெளிவாக எடுத்துச்சொள்ளவேண்டும். அதைச்செய்யாமல், அதுதான் நடந்த சம்பவம் என்று இவர் சொல்லியிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். 

இதுபோன்ற கேலிகளையும் கிண்டல்களையும் பிற பத்திரிகைகளில் வைத்துக்கொள்ளட்டும். ஆன்மீகப் பத்திகைகளும் இதற்கு இடம் கொடுக்க வேண்டுமா? கடைசி பக்கம் , தரத்திலும் கடைசியாகப் போய் விடக்கூடாது. நிர்வாக ஆசிரியர்கள் கவனிப்பார்களா?   

4 comments:

 1. Remember reading the reference that he brought in " udumbu' as well

  http://www.varalaaru.com/default.asp?articleid=2

  rgds
  vj

  ReplyDelete
 2. What he brought/offered is immaterial. We have to look at the immeasurable love which has no equals at all times. Periapuranam always highlights this aspect. The issue before us is to indicate the failure of parents and teachers from the duty of educating the next generation and also the magazines that add fuel to the agony.It is upto the readers to condemn it. Are we doing it?

  ReplyDelete
 3. What you write is so true sir....it is our duty to educate the youngsters about devotion and great devotees and not make fun of them

  ReplyDelete
 4. Yes,it is regrettable to see that so called big people make fun of our religion and misinform the youngsters. thank you for your efforts.

  ReplyDelete