Thursday, August 11, 2011

அன்ன தானமும் ஆலய பூஜையும்"தானங்களில் சிறந்தது அன்ன தானம்" என்றும் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் சொல்வதால் அன்ன தானத்தின் உயர்வு தெரிய வரும். திருவிழா நாட்களில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக பழங்காலத்திலிருந்தே அன்னதான சத்திரங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன. சில ஆலயங்களில் தரிசனத்திற்காக வரும் தேசாந்திரிகளுக்காக அன்ன தானக் கட்டளைகள் அமைக்கப்பட்டன. வசதிகள் அற்ற சிறு கிராமங்களில் உள்ள கோயில்களைக் காண வரும் பக்தர்களுக்கு இந்த அமைப்பு பெரிதும் பயன் பட்டது. இப்பொழுது அரசாங்கமே, பல கோயில்களில் அன்னதானம் செய்ய முன்வந்திருப்பது பாராட்டுதற்குரியது. அதே சமயம், ஆலயங்களில் செய்வதற்கும் ,சமுதாய கூடங்களில் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயல் படுவது நல்லது. சமூகக் கூடங்களில் மதிய உணவு அளிப்பது போல அல்லாமல்,கோயில்களில் உணவளிப்பதன் முன் கூட்டு வழிபாடு செய்யப்படவேண்டும். இறைவனது பிரசாதமாக உணவு அளிக்கப் படுகிறது என்று உண்ண வருபவர் அனைவரும் உணரச்செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஐம்பது பேருக்கு உணவு அளிப்பதானால் , ஒரு கோயிலுக்கு, ஒரு ஆண்டுக்குக் குறைந்த பட்சம் மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.கோயில்களில் அன்னதானம் செய்ய வரும் அரசாங்கம், கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர் நலனையும் கவனத்தில் கொள்வது நல்லது. பல கோயில்களில் மாத சம்பளமாக (ஒரு கால பூஜை செய்வதற்கு) இருநூறு ரூபாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. பல இடங்களில் அதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.இதை வைத்துக் கொண்டு எப்படிக் குடும்பத்தை நடத்துவார்கள் என்று சிந்திக்க வேண்டும். இதனால் வருமானத்தைத் தேடி நகரங்களுக்குக் குடியேறும் நிர்பந்தம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் ஆன பல கிராமக் கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.

திருவாரூர் அருகில் உள்ள திருநாட்டியத்தான்குடி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்திற்கு அண்மையில் சென்றிருந்தோம்.புராணச் சிறப்புமிக்க இச்சோழர் காலக் கோயிலை நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் பல ஆண்டுகளுக்குமுன்னர் திருப்பணி செய்திருக்கிறார்கள். சமீபத்தில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. புதுப் பொலிவுடன் திகழும் இக் கோயில் பூட்டப்பட்டிருந்தது. மெய்க்காவலர் உதவியதால் ஆலய தரிசனம் செய்தோம்.நித்திய பூஜை நடைபெறுவதில்லை என்று அப்போது தான் தெரிய வந்தது. இரண்டு ஆண்டுகளாக விசேஷ நாட்களில் மட்டும் பூஜை நடை பெறுவதாக உள்ளூர் வாசி ஒருவர் கூறினார். கோயிலின் நிர்வாக அதிகாரியோ அல்லது கிராம மக்களோ முயன்றிருந்தால் ஒரு அர்ச்சகரை ஏற்பாடு செய்திருக்க முடியும். நிர்வாகமோ, மக்களோ அவரது சம்பளத்திற்கு ஏற்பாடு செய்ய முன்வராததால் இந்நிலை நீடிக்கிறது.இத்தலத்து இறைவர் மாணிக்க வண்ணர் என்று சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறார். ராஜேந்திர சோழனும் அவனது தம்பியும் தங்கள் தந்தை விட்டுச்சென்ற ரத்தினங்களைப் பிரித்துக்கொள்ள முற்பட்ட பொது, இத்தல இறைவர் இரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றிப் பிரித்துத் தந்ததாகவும், அதனால் மகிழ்ந்த சகோதரர்கள் இறைவனுக்கும் இறைவிக்கும் இரத்தின ஆபரணங்கள் அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனால் சுவாமிக்கு ரத்னபுரீச்வரர் என்று பெயர் ஏற்பட்டது. யானை ஒன்று இங்கு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபாட்டு முக்தி அடைந்ததாகப் புராணத்தால் அறியலாம்.

சுந்தரர் இங்கு வந்தபோது கோயிலில் இறைவரைக் காணாது திகைத்தபோது, விநாயகப் பெருமான் , பக்கத்தில் உள்ள வயலில் அம்பிகையுடன், சுவாமி நாற்று நட்டுக் கொண்டிருப்பதைத் தனது திருக் கரத்தால் சுட்டிக் காட்டினாராம். கைகாட்டிய விநாயகர் சன்னதி கோயிலுக்கு எதிரில் உள்ளது.

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான கோட்புலி நாயனார் அவதரித்த பதி இது. சிவத்தல யாத்திரையாக இங்கு வந்த சுந்தர மூர்த்தி நாயனாரை வரவேற்றுப் போற்றிய கோட்புலியார், தனது மகள்களான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரருக்கு மணம் முடிக்க முன்வந்தபோது, அதை மறுத்த சுந்தரர், அவ்விருவரையும் தன் மகள்களாக ஏற்றதோடு, தனது பதிகங்களில் தன்னைச் "சிங்கடி அப்பன் " என்றும் "வனப்பகை அப்பன்" என்றும் குறிப்பிடலானார்.


சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்த கோட்புலி நாயனார் ஒரு சமயம் போர் முனைக்குச் சென்றிருந்தபோது கடும் பஞ்சம் ஏற்படவே, அவரது குடும்பத்தார்கள், அன்னதானத்திற்காக வைத்திருந்த நெல்லை உபயோகப் படுத்தினர். ஊருக்குத் திரும்பியதும் இதனை அறிந்த நாயனார், அவர்களை சிவத்ரோகம் செய்தவர்களாகக் கருதித் தனது உடைவாளால் வெட்டி வீழ்த்தினார்.எஞ்சியிருந்த குழந்தையும் அப்பாவச்செயலைச் செய்த தன் அன்னையின் பாலை அருந்தியிருப்பதால் அதனையும் வெட்ட முற்பட்டார். அச்சமயம், ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் காட்சி அளித்த இறைவன் அனைவரையும் உயிர்ப்பித்து, இறுதியில் சிவமுக்தியும் அருளினான் என்று பெரிய புராணம் கூறுகிறது.


இத்தனை பெருமைகளை உடைய இக்கோயிலில் பூஜைகள் நடைபெறாதது நமது துரதிருஷ்டமே..அன்னதானம் செய்து காட்டிய கோட்புலி நாயனார் போற்றிய சிவாலயத்தில் பூஜைகள் நின்று போகலாமா?. அறநிலையத்துறையும் ஆன்மிகப்பெருமக்களும் சிந்திக்க வேண்டும். ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து அன்னதானம் செய்ய முன்வரும் அரசாங்கம் இதுபோன்ற கிராமக் கோயில்களில் உரிய சம்பளத்துடன் அர்ச்சகர்களை நியமிக்க முன்வராதது ஏன் என்று புரியவில்லை.

No comments:

Post a Comment