Thursday, October 28, 2021

போலி பக்தர்களா நாம் ?

 


திருவாரூர்த் தேரழகு மட்டுமல்ல, திருக்குளமும் அழகுதான். பூங்கோயில் எனப்படும் தியாகராஜப் பெருமானது கோயில் அழகோ வருணிக்க இயலாது. “ கோயில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி” என்றபடியால் இவை மூன்றின் விஸ்தீரணம் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் புனிதத் தீர்த்தமான கமலாலயம் என்பது பழம் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் உடையது.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலர் வரலாற்றோடு இணைந்தது இத்தலம்.  தண்டியடிகள் நாயனார் இத்திருக் குளத்தைத் தூர் வாரும் திருத்தொண்டு செய்தவர். கண் பார்வை இழந்தவராதலால் கரையில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதைப் பற்றியவராகக் குளத்தில் இறங்கி அங்கிருந்த கற்கள் போன்றவற்றைக் கரைக்குக் கொண்டு சேர்த்து சுத்தம் செய்யும் ஒப்பற்ற தொண்டு செய்த இவரது பணிக்கு இடையூறு விளைவித்த சமணர்கள் அவர் பிணித்திருந்த கயிற்றை அப்புறப் படுத்தவே, மனம் நொந்த நாயனார் கோயிலுக்குச் சென்று தியாகேசப் பெருமானிடம் முறையிட, “ அன்பனே, நாளை நீ கண் பெற்று, உன்னை நகை செய்தவர்கள் கண் இழப்பதைக் காண்பாய்” என்று  பெருமானது அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படியே மறுநாள் தண்டியடிகள் நாயனார் கண்பார்வை பெற்றுப் பெருமானைக் கண் குளிர தரிசித்தார். எள்ளி நகையாடிய சமணர்கள் கண்ணிழந்தனர் என்பது பெரிய புராணம் கூறும் வரலாறு.

திருவாரூருக்கு அண்மையிலுள்ள திருநெய்ப்பேர் என்ற ஊரில் வாழ்ந்த நமிநந்தி அடிகள் நாயனார் நாள்தோறும் திருவாரூருக்குச் சென்று பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழி பட்டு வந்தார். ஒரு நாள் நெய் கிடைக்காமல் போகவே, அருகிலிருந்த வீடுகளில் நெய் வேண்டிக் கேட்டபோது அங்கிருந்த சமணர்கள் அவரை நகையாடவே, வருத்தத்துடன் ஆலயத்திற்குச் சென்று பெருமானிடம் முறையிட்டபோது, அசரீரி வாக்கு,” அஞ்சற்க, எதிரில் உள்ள கமலாலயத் திருக்குளத்து நீரைக் கொண்டு வந்து விளக்கை ஏற்றுக” என்று ஒலித்தது. அதன்படி நாயனார் நீரால் விளக்கெரித்ததை நாடு அறியும்.

திருவாரூரில் வசித்து வந்த சுந்தர மூர்த்தி நாயனார், விருத்தாசலம் எனப்படும் திரு முதுகுன்றத்து இறைவர் அருளிய பன்னீராயிரம் பொன்னைப்  பெருமானது கட்டளைப்படி மணிமுத்தா நதியில் இட்டு விட்டு ஆரூர் வந்தபோது , கமலாலயக் குளத்தில் அதை எடுத்துக் கொள்க என்ற இறை வாக்கின் படி, குளத்தில் இறங்கிப் பொன்னைத் தேடும்போது முதலில் அகப்படாது போகவே, முதுகுன்றத்து ஈசர் மீது சுந்தரர் பதிகம் பாடியவுடன் பொன்னானது குளத்திலிருந்து வெளிப்பட்டு சுந்தரரை வந்தடைந்தது. இத்தகைய அதிசயம் நடந்த திருக்குளமும் இதுவேயாகும்.  

தமிழகத்தில் பிறந்தும் பலருக்கு இவ்வரலாறுகள் சொல்லித் தரப் படுவதில்லை. ஆகவேதான் நினைவூட்ட வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். பல வரலாறுகள் மறைக்கப்படும் இக்காலத்தில் இதுபோன்றவையும் மறைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் இவ்வாறு கூறவேண்டியுள்ளது. முந்தைய முதல்வர் நீந்தியது இதற்குப் பெருமை சேர்க்கும் என்று எண்ணத்தாலோ என்னவோ ஒரு  அமைச்சர் அக்கருத்தைக் கூறியதாகவும் மேலும் இந்நகரை சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும் தெரிவித்ததாகச் செய்திகள் வருகின்றன. இது உண்மையான செய்தியாக இருந்தால் நாம் நமது கருத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ள சிறிது வாய்ப்பு உண்டு. அதனை விடுத்து, அக்கருத்துக்குக் கண்டனம் தெரிவிப்பதோ, தனிப் பட்ட மனிதரை விமரிசிப்பதோ நன்றல்ல.

ஆலயங்களை சுய லாபத்திற்கோ அரசியலுக்காகவோ பயன்படுத்துவதை அனைவரும் கை விட வேண்டும். கோயில்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தவை. புனிதத்துவம் வாய்ந்தவை. சிவபெருமானுக்கு “ நம்புவார்க்கு அன்பர்” என்றும் “ சார்ந்தாரைக் காத்த பெருமான்” என்றும் நாமங்கள் இவற்றின் காரணமாகவே விளங்குவதைக் காணலாம். சிவ பெருமானைத் தம் உயிரைக் காட்டிலும் மேலானதாகக் கருதுவோர் அன்றும், இன்றும் என்றும் உளர். “ கோழம்பம் மேய ஏன் உயிரை நினைந்து உள்ளம் உருகுமே” என்பது அப்பர் தேவாரம்.

நமது கருத்தை வெளிப்படுத்தும் போது பிறர் மனம் புண்படாத அளவில்  வரையறைக்கு மிகாமல் சொல்ல வேண்டியது இன்றியமையாதது. நமது மனத்தைப் பிறரது சொற்கள் காயப் படுத்தி இருந்தால் அதற்குத் தக்க விளக்கம் தருவது நமது கடமையும் உரிமையும் ஆகும். இதற்குப் பெயர் பதிலடி, சாட்டையடி ,கண்டனம், எதிர்ப்பு என்றெல்லாம் பெயர் வைத்து இரு தரப்பினரையும் உசுப்பேற்றி விடுகிறார்கள். விளக்கம் என்பதை ஒருபோதும் சர்ச்சை ஆக்கி விடக் கூடாது. இனியவை கூறல் என்று வள்ளுவர் உபதேசித்ததை மறக்கக் கூடாது.

தல  யாத்திரை வேறு, சுற்றுலா என்பது வேறு. காசி, மதுரை , இராமேசுவரம் ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்வதை எவ்வாறு சுற்றுலா எனக் கூற முடியும்? நீர்வீழ்ச்சிகள், மலைகள், காடுகள், கடற் பயணம் ஆகியவற்றைக் காணச் செல்வதை  வேண்டுமானால் சுற்றுலா எனலாம். சுருங்கச் சொன்னால் , ஊர் சுற்றுவதுதான் சுற்றுலா. ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது என்று ஆகி அதுவே கேளிக்கை உலாவாக ஆகி விடுகிறது. எனவே திருவாரூரை சுற்றுலாத் தலமாக்குவது என்பது தவறான புரிதலினால்  எழுவதாகும்.  ஆங்கிலத்திலுள்ள Tour, Picnic, Pilgrimage ஆகியவை ஒரே பொருளையா தருகின்றன ?

ஆன்மீக அன்பர்களாகட்டும், தமிழறிஞர்கள் ஆகட்டும், இத்தகைய தவறான புரிதல்களைத் தவிர்க்க முன்வரவேண்டும். இதற்குப் பெயர் எதிர்ப்போ அல்லது கண்டனமோ அல்ல. தமிழ்ச் சொற்களை  அனைவரும் அறியுமாறு  செம்மைப் படுத்தும் முயற்சி என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனால் தவறாகப் பொருள் உரைத்தவர் வருத்தம் தெரிவிப்பதோ மன்னிப்பு கேட்பதோ சுய கெளரவம் காரணமாக நடைபெறப் போவதில்லை. நமது நோக்கம் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடுகிறது. திருத்திக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

ஆன்மீகப் போர்வையில் இருக்கும் அன்பர்கள் வெளி வேஷம் போடுவதை முதலில் நிறுத்தி விட்டு இறைவன் மீது உண்மையிலேயே பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். இதனால் சிவாபராதம் செய்தவர்களைத் தண்டித்த சத்தி நாயனராகவோ, செருத்துணை நாயனாரகவோ, கழற்சிங்க நாயனாராகவோ, ஆகச் சொல்லவில்லை.  ஒருபோதும் ஆக முடியாது. அதற்காக, இறைவனே பார்த்துக் கொள்வார் என்று மௌனிகளாக இருக்காமல் நாகரீகமான முறையில் நமது  கருத்தைத் தெரிவிக்கத் தயங்கக் கூடாது. இதுவே உண்மையான கருத்து சுதந்திரமும் ஆகும். ஆனால் நடப்பது என்ன ? மடாதிபதிகள் உட்பட எவரும் சமயத்தையோ சமயக் கருத்துக்களையோ சம்பிரதாயங்களையோ பாதுகாக்கப் போதிய அளவில்  முன் வருவதில்லை என்பது நிதரிசனமான உண்மை. தவ வலிமை உடையவர்களையும் காணோம். தெய்வமே பார்த்துக் கொள்ளட்டும் என்றால், பக்தர்கள் என்ற போலிப் போர்வையில் பதுங்கியும் உறங்கியும் கிடக்கும் நாம் என்னதான் செய்யப் போகிறோம்?      

Saturday, October 9, 2021

ஆலயங்கள் இப்படிப் பூட்டிக் கிடக்கலாமா ?

 


மாதக் கணக்கில் ஆலயங்கள் பூட்டிக் கிடப்பதைக் கண்டு மனம் வருந்தாத ஆத்தீகரே இல்லை எனலாம். இதனால் ஆகம விதி  முறைகள் மீறப்படுவதாகப் பலர் குரலெழுப்பி வருவதையும் காண்கிறோம். இதனை எதிர்த்துச் சிலர் நீதி மன்றப் படிகளில் ஏறவும் துவங்கியுள்ளனர். நீதி கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆவதைக் காணும்போது , உடனடியாக இதற்கு தீர்வு இல்லையோ என்ற ஐயமும் எழுகின்றது. எனினும் நீதி மன்றத்தில் விவாதம் நடை பெற இருக்கையில் இது பற்றிப் பேசுவதும் முறை ஆகாது. அப்படியானால் இதே நிலை நீடிக்க வேண்டியது தானா என்ற கவலையும் கூடவே எழுகிறது. 

வாரத்தில் எல்லா நாட்களும் கோயில்கள் தரிசனத்திற்காகத் திறந்து விடாத நிலை இப்போது சற்று மாறி, வெள்ளி,சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் அனுமதி இல்லை என்று ஆகி இருக்கிறது. விசேஷ நாட்கள் தவிர,  கிராமக் கோயில்களுக்கு வருகை தருவோர் மிகக் குறைவே. உள்ளூர் வாசிகள் ஒரே நேரத்தில் வராமல் தங்களுக்கு முடிந்தபோது காலையிலோ அல்லது மாலையிலோ வருகிறார்கள். விசேஷ நாட்களிலும் அதிகபட்சமாக இருபது பேர் கூட வராத கிராமங்கள் உண்டு. மிகப்பெரிய ஆலயமாக இருந்தாலும் இதே நிலை தான்! பிரார்த்தனை தலங்களுக்கும் மற்றும் நகரங்களில் உள்ள கோயில்களுக்கும் மட்டுமே வருவோர் எண்ணிக்கை அதிகம். இப்படி இருக்கும்போது அனைத்துக் கோயில்களையும் மூடுவதன் அவசியம் புலப்படவில்லை.

பக்தர்கள் அதிக அளவில் கோயில்களில் கூடினால்  கோவிட் நோய் எளிதில் பரவ ஏதுவாகும் என்று மக்கள் நலத்தில் அக்கறை காட்டும் அரசு பிற சமயக் கோயில்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்காமலும், திரை அரங்குகள் , மால்கள், மதுக் கடைகள் ஆகியவற்றை மட்டும் திறந்திருக்கவும்  அனுமதி தருவது ஏன் என்று கேட்கிறார்கள். அதே போல் ஒரு பேருந்து முழுதும் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்த போதிலும் நெருக்கமாக அமர்ந்தும், நின்றும் பயணிப்பவர்களுக்கு அந்நோய்  பரவாதா என்றும் வினா எழுகிறது.  

தகுந்த இடை வெளி விட்டு நின்று நிற்பது, முகக் கவசம் அணிந்து வருகை தருவது, கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் போட்டுக் கொண்டவர்களை அனுமதிப்பது போன்ற தற்காப்பு முறைகளைப் பக்தர்களுக்கு வலியுறுத்திக் கோயில்களைத் திறந்து வைப்பதே நியாயமானது. பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும் அனுமதி தருவது மக்களிடையே அதிருப்தியையே தரும். இவ்வாண்டு முடிவு வரை மிக்க கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டும் என்பதில் எவ்விதக் கருத்து வேறு பாடும் இல்லை. அதை முறைப்படுத்துவதும் செயல் படுத்துவதும் அரசின் கடமை. மக்களுக்காகவே ஏற்படுத்தப்படும் ஜனநாயக ஆட்சி முறை மக்களின் தேவைகளைச்  செவி மடுத்து, அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு உரிய வகையில் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண்பதே முறை ஆகும். அதை விடுத்து அதிகாரம் மூலம் ஆள்வது என்பது ஜனநாயகம் தந்துள்ள சுதந்திரத்திற்கே பங்கம் விளைவிப்பதாகும். சட்டம் மக்களுக்கும் அரசுக்கும் தந்துள்ள முறைகளைக் கடைப் பிடித்தால் தவறுகள் நேர வாய்ப்பே இல்லை.

கோயில்கள் திறந்திருக்க வேண்டிய நேரத்தில் மூடப் பட்டிருந்தால் அவற்றைச் சுற்றிலும் உள்ள வீதிகளில் அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று பொருள். மரணித்தவரின் பூத உடலை அகற்றும் வரை கோயில்கள் திறக்கப் படுவதில்லை. இறையருளால் எவருக்கும் இதுபோல நேராத போது கோயில்களை மூடுவது அபசகுனமாகத் தோன்றவில்லையா? ஒரே நேரத்தில் பலரை அனுமதிக்காமல் பாதுகாப்புக்குக் குந்தகம் நேராதபடி தரிசனத்திற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்னை ? உள்ளே சென்று தரிசித்தவர்கள் வெளியேறிய பின்னர் அடுத்த ஐந்து அல்லது பத்து நபர்களை உள்ளே செல்ல அனுமதிப்பது எவ்வாறு தவறாகும்? இதற்கும் அனுமதி இல்லை என்றால் வேறு ஏதோ உள்  நோக்கம் இருக்கிறது என்றுதான் மக்கள் சந்தேகப் படுவார்கள்.

ஒன்று மட்டும் நிச்சயமாகவும் பெருமையாகவும் சொல்லலாம். நமது பக்தகோடிகள் ஒழுங்கீனமாக எக்காரணம் கொண்டும் நடப்பதில்லை. கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. சாலை மறியல் செய்வதில்லை. உண்ணாவிரதப் போராட்டங்களில் இறங்குவதில்லை. ஆன்மீகத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. இப்படிப் பட்டவர்களை அரசாங்கம் அரவணைத்து ஆவன செய்ய வேண்டும். முறையற்ற செயல்களில் இறங்குவதற்கு எவரும் தயங்குவதன் காரணம் இறைவன் ஒருவனிடமே முறையிட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை தான். ஆகவே, மடாதிபதிகள் இவ்விவகாரத்தில் மௌனம் சாதித்துள்ள போதும் இறைவன் ஒருவனையே துணை என்று இன்னமும் நம்புகிறார்கள். வேதாரணியத்தில் மூடப் பட்டிருந்த கதவுகளைத் அருளாளர்கள் வேண்டியவுடன் திறப்பித்த இறைவன் இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்தும் தோன்றாத் துணையாக இருந்து காத்தருளுவான். நமது குறைகள் நிச்சயமாக அவனது திருச் செவிகளைச் சென்றடையும்.    

Thursday, May 27, 2021

மரத்துப்போன உணர்ச்சிகள்

 


காலத்தின் ஆற்றல் யார்க்கும் அளப்பரியது. ஒருவனை ஆயிரத்தில் ஒருவனாக்கவும் அலங்கோலமாக்கவும் வல்லது. அந்த வலிய  அலையில் எதிர் நீச்சல் இட  வல்லவர் மிகச் சிலரே. எத்தகையோரையும் அடிபணியச் செய்யும் காலத்தின் கோலத்தைக் கண்டு அஞ்சுவதைத் தவிர எதுவும் செய்ய இயலாது. எனவேதான் சுயநலம்,சூது, பொறாமை ஆகிய குணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கக் காண்கிறோம். எளியோரை வலியோர் இகழ்வதையும் விரட்டுவதையும் காண நேரிடுகிறது. மனமுடைந்துபோன எளியோர்கள் தெய்வத்திடம் முறையிடுவதைத் தவிர என்ன செய்ய முடியும் ?

நமது இதிகாச புராணங்கள் இதுபோன்ற காலக் கொடுமைகளை விவரமாகக் கூறியிருந்த போதிலும் நமது கண் எதிரே அவலங்கள் அரங்கேறும்போது நெஞ்சம் பதறுகிறது. அதை ஏற்கும் பக்குவம் இல்லாததால் இறைவன் ஒருவனே சரணம் என்ற ஞானம் சிலருக்குப் பிறக்கிறது. சோதனைக் காலத்தின் பலனே இது தான். அல்லல்களைக் காட்டி ஞானத்தை உணர்த்தும் காலம் நெருங்கி விட்டது போலத் தோன்றுகிறது. அவ்வாறு சிந்திக்காதவர்கள் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோமோ என்ற அச்சம் மேலிட்டவர்களாக இருந்தும், தீய பழக்க வழக்கங்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் காலத்தின் கோலமே.

ஆன்மிகம் பேசுவோர் மீதும் இதன் நிழல் விழாமல் இல்லை. தாம் வணங்கும் கடவுளிடம் எத்தகைய ஈடுபாடு உடையவர்கள் என்பதை அவர்களே கேட்டுக் கொள்வது நல்லது. கோயில்களில் முறைகேடுகள் இருந்தால் என்ன, கோயிலே மரம் முளைத்து இடியும் அபாய நிலையில் இருந்தால் தான் என்ன, மூர்த்திகளே களவு போனால் என்ன, வழியில் போகிறவர்கள் நாம் வணங்கும் கடவுளையோ நமது தாய் மொழியையோ, இனத்தையோ, பெண்மையையோ, தேசத்தையோ இழித்தும் பழித்தும் பேசினால் என்ன , நாம் நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்போம் என்ற சுயநலவாதிகள் பெருகியுள்ளதும் கால தேவனின் விளையாட்டோ?

முன்பெல்லாம் சமய ஞானம் மிக்க பெரியோர்கள் அரைகுறை ஆன்மீகவாதிகள் செய்யும் தவறுகளைத் திருத்தி வந்தனர். அதற்குத் தக்கவாறு தமது நூலறிவையும், பக்தியையும் வளர்த்துக் கொண்ட பின்னரே பிறரைத் திருத்த முற்பட்டனர். மக்களின் சமய அறிவும் அதன் பால் உள்ள ஈர்ப்பும் பூஜ்ஜியம் ஆகி விட்ட நிலையில், நுனிப் புல் மேய்ந்தவர்கள் எல்லாம் சமயக் காவலர்கள் என்று சுற்றித் திரிவது பரிதாபம். சமயத்தைத் தாங்கி நின்ற பெரிய தூண்கள் சாய்ந்து விட்டதால் சுயநல வாதிகளின் கை ஓங்குகிறது. சமயத்தையே திருத்த முற்படுவோர் சிலர். எப்படிப் போனால் என்ன என்று மௌனிகளாக இருப்போர் பலர்.

மரபுகளை மீறச் சற்றும் தயங்காதபோது எதையும் செய்யத் துணிவு பிறக்கிறது. ஒரு காலத்தில் சமய நூல்களுக்கு உரை எழுதுவதற்கே தயங்கி, அதனை மேற்கொள்ளாமல் விடுத்த சான்றோர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். சைவ சமயத்திற்கு அரண் போல இருந்து பணி செய்தவர்களே செய்யாததைத் தற்காலத்தில் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது. முப்பது முறை பன்னிருதிருமுறைகளை ஓதிய பின்னரே அகத்தியர் தேவாரத் திரட்டுக்கு உரை எழுத ஒருவாறு முன்வந்தார் கயப் பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள். ஆனால் இப்போதோ யார் வேண்டுமானாலும் தமக்குத் தோன்றியபடி உரை எழுதலாம். கேட்பதற்கு யாருமில்லை.

கயப்பாக்கம் சோமசுந்தரம் செட்டியார் அவர்களின் சிறிய தந்தையாரே கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள். அவரிடம் கற்றறிந்த சமய மரபுகளைத் தாம் பின்பற்றியதோடு பிறரையும் அவற்றிலிருந்து வழுவாதபடி குரல் எழுப்பியவர்கள் சிவத்திரு சோமசுந்தரம் செட்டியார் அவர்கள். நால்வர்துதியாக, “ பூழியர் கோன் வெப்பொழித்த” என்ற பாடலைப் பாடாமல் பிற்காலத்து எழுந்த நால்வர் துதிகளை எவரேனும் தனக்கு முன்பு பாடினால் உடனடியாகத் திருத்தியவர் நமது செட்டியார் அவர்கள். அறுபத்து மூவரில் பேதம் கற்பிப்பவர்கள் நரகத்திற்கே போவார்கள் என்று ஆணித்தனமாக அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். பெரிய புராணத்தை முறையாகக் கற்றால் பேதம் நீங்கப் பெறுவர் என்பது அவரது திடமான கருத்து. இறைவனையும் அடியார்களையும் இழித்துப் பேசும் இக்காலத்தில் அவரைப் போன்ற பெரியோர்கள் இல்லாததால்  வெற்றிடம் உருவாகி உள்ளது.

 சைவர்களுக்கு உயிர் நூலாகக் கருதப் படும் திருமுறைகளின் பெயர்களை மாற்றவும் தயங்காத உள்நோக்கம் கொண்டவர்களைக் கேட்க யாரும் முன்வருவதில்லை. ஒருக்கால் யாராவது முன்வந்தாலும் அவர்களுக்குத் துணை நிற்போர் எவரும் இல்லை. அட்டூழியங்கள் அவரவர் எண்ணப்படி முற்றுப் பெற்று விடுகின்றன. பல நூற்றாண்டுகளாகப் பெரியோர்கள் மூவர் அருளிய திருப்பதிகங்களைத் தேவாரம் என்றே அழைத்து வந்தனர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோரும் சைவ ஆதீனங்களும் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தும், சமீப காலமாகப் பிடிவாதக் காரர்களின் அட்டகாசத்தால் அப்பர் பாடல் மட்டும் தேவாரம் என்றும்  சம்பந்தர் பனுவல்கள் திருக் கடைக் காப்பு என்றும் சுந்தரர் பதிகங்கள் திருப்பாட்டு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதே தலைப்புகளில் புத்தகங்களில் வெளியிடப்படுகிறது. சில ஒதுவா மூர்த்திகளும் இவர்களைப் பின்பற்றுகின்றனர். மூவர் பதிகங்களுமே சிவ வாக்கு என்பதை அறியாதோர் செய்யும் பெரும் பிழை இது. இதற்கு மறுப்பு எழுதப் புகின் மிக விரிவாக அமையும் என்பதால் இத்துடன் அமையலாம். சித்தாந்தம் கற்ற ஒருசிலர் இச்செயலுக்குத் துணை போகிறார்கள். எனவேதான் இதற்கு உள்நோக்கமும் சுயநலமும் இருக்குமோ என்று  சந்தேகம் வருகிறது.

மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேன்? முற்றோதுதல் செய்தேன் என்று கூறிக் கொண்டும் சிவத் தொண்டு செய்கிறேன் என்று கூறிக் கொண்டும், சமயம் இவ்வாறு பிளவு படுவதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாமல் இருப்பது வருந்தத் தக்கது. வேண்டுமானால் பாருங்களேன். இவ்வளவு எழுதியும் ஆமோதிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று. இனி வரும் தலைமுறைகளில் இதுபோன்ற அதிரடி/ அடாவடி மாற்றங்கள் எத்தனை நிகழப் போகின்றனவோ யாமறியோம்.

இத்தனைக்கும் மூல காரணம் உண்மையான சமய உணர்வு இல்லாததே. இறைவனையோ, அடியார்களையோ, சமய நூல்களையோ, சமய மரபுகளையோ பழித்தும், மாற்றியும் சுய நலம் தேடுபவர்களும், அவற்றைக் கண்டும் காணாதது போல இருக்கும் போலித் தொண்டர்களும் நிறைந்த உலகம் இது. காலத்தின் கொடுமை என்றே கூற வேண்டும். உள்ளம் பதைக்காத , உணர்ச்சியற்றவர்களைத் தொண்டர்கள் என்று எவ்வாறு ஏற்பது? எறிபத்த நாயனார் பற்றியும் சத்தி நாயனார் பற்றியும் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதி ஏது?   

 

Monday, March 15, 2021

காலம் பொன் போன்றது

காலம் பொன் போன்றது என்பார்கள். பொன் போன்றவற்றுக்குக் காலத்தைச் செலவிடும் நோக்கத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல வலைப் பதிவுகள் எழுதி வருகிறோம். அவற்றுக்கு எவ்வளவு தூரம் வரவேற்பு இருக்கிறதோ தெரியவில்லை. ஒரு நண்பர் மிகுந்த ஆதங்கத்துடன் கேட்டார் ; “ இப்படி எதற்காக எழுதுகிறீர்கள்? முதலாவதாக அவற்றைப் படிப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் இதனைத் தொடருகிறார்கள்? எழுதுவதால் ஏதாவது பயன் விளையும் என்று நினைக்கிறீர்களா?  படித்தவர்களில் எத்தனை பேர் தங்கள் கருத்துக்களை அதே வலைப் பதிவில் பதிவு செய்திருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்தவரை ஒரு சிலரே! ஒருக்கால் அவர்களுக்குத் தாங்கள் எழுதுவது பிடிக்கவில்லையோ என்னவோ? தங்களது நேரம் வீணாகிறது என்றுகூட நினைக்கலாம் அல்லவா?  உங்களுக்குப் பிடித்ததெல்லாம் அவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா? அப்படியானால் இது வீண் முயற்சி என்றே நினைக்கிறேன்”  என்று மூச்சு விடாமல் கொட்டித் தீர்த்து விட்டார் அந்த மனிதர்.  

நண்பர் நம்  மீது வைத்துள்ள அக்கறையால் உரிமையோடு இவ்விதம் கேட்டது மிகவும் பிடித்திருந்தது. சற்று நேர யோசனைக்குப் பின் பதில் சொல்லத் தொடங்கினேன்: “ நீங்கள் கூறியது அத்தனையும் உண்மைதான். என்ன செய்வது! பல முறை எழுதுவதை நிறுத்தி விடலாம் என்று நினைத்தபோது சிலரது நிர்ப்பந்தத்தின் பேரில் தொடர்ந்து எழதலானேன். நாம் எழுதுவதைப் பிறர் பாராட்ட வேண்டும் என்று ஒருக்காலும் நினைத்ததில்லை. ஐம்பது பேருக்கு வலைப்பதிவை அனுப்பினால் அநேகர் அதைப் படிக்காமல் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நாம் அவர்களைத் தொந்தரவு செய்கிறோமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. இத்தனைக்கும் , படிக்கத் தேவையான நேரம் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மிகக்கூடாது என்ற எண்ணத்துடன் வளவள என்று எழுதுவதைத் தவிர்ப்பதைப்  பல ஆண்டுகளாகக் கடைப் பிடித்து வருகிறோம். ஒருசில பதிவுகள் மட்டுமே தொடர்ச்சி காரணமாக நீண்டுவிட வாய்ப்பு உண்டு.” என்றேன் நான்.

உடனே அடுத்த கேள்வி கேட்டார் நண்பர் “ எத்தனையோ சமூக வலைத் தளங்கள் இருந்தும் படிப்பவர்கள் இல்லை என்று கூறுவதை நம்ப முடிவதில்லை. கலை, அரசியல் தொடர்பாக எழுதுபவர்களுக்கு ஆயிரக்கணக்கில் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் அதுபோல் தொடர்பு கொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன்” என்றார்.  இது ஒரு முக்கியமான கேள்வி. நாம் எழுதுவது முற்றிலும் சமயம் பற்றியது. இதில் கவர்ச்சிக்கோ அல்லது வாக்குவாதத்திற்கோ இடம் ஏது ? பிறரைக் குறை கூறுவதோ அவர்களைத் திருத்துவதோ நமது நோக்கமும் அன்று. உள்ளதை உள்ளபடி கூறுவதால் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்று எதிர் நோக்குவது ஒன்றே நம்முடைய நோக்கம். பிறரைத் திருத்தவோ மாற்றுக் கருத்து வழங்கவோ நாம் யார் ?

நாமாகவும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல மாட்டோம் . அவ்வாறு சொல்பவர்களையும் ஊக்குவிக்க மாட்டோம். நாம் இதில் கருத்து வழங்குவதாலோ தலை இடுவதாலோ என்ன ஆகப் போகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் போலத் தோன்றுகிறது. சர்ச்சைக்குரிய விஷயமாகத் தோன்றினால் அதிலிருந்து ஒதுங்கி விடுவது நமக்குக் கைவந்த கலை ஆயிற்றே ! அதனால் தான் எந்த ஸ்தாபனத்தையோ, தனி நபரையோ குறிப்பிட்டுச் சர்ச்சைக்கு ஆளாகாமல் எழுதுவது என்று இருக்கிறோம். மேலோடு பார்த்தால் சர்ச்சை போலத் தோன்றி விட்டாலேயே யாரும் கருத்துக் கூற முன் வருவதில்லை. இதுவும் நமது அனுபவம். எப்படியோ, நம்மைப் பாதிக்காமல் இருந்தால் சரி என்ற மனோபாவமே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்                “ கொடுத்து அறியாதவர்கள்” என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.  ஓரிருவர் மெயில் மூலம் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நமது  நன்றி. ஆனால் மற்றவர்களோ இதில் ஏதோ சர்ச்சையைக் கண்டவர்கள்போல வாளா இருந்துவிட்டதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஒரு பதிவு செய்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம் இவ்வாறு வீணாகப் போகிறது. அந்த நேரத்தில் நாம் எவ்வளவோ பயனுள்ளவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டிருக்கலாமே என்று தோன்றுகிறது.

எல்லோருக்கும்போலத்தான் எனக்கும் நேரம் பொன் போன்றது. அதனை இனியும் வீணாக்க விரும்பவில்லை. ஒருக்கால் எழுதினால் அதனைப் புத்தகமாகவே வெளியிட்டுவிட்டுப் போகலாம். விருப்பம் உள்ளவர்கள் மட்டும்தானே அதன் அருகில் செல்வார்கள்?  இதற்கு அடுத்தபடியாகத் தொடர்ந்து பதிவிடவேண்டுமென்று நினைப்பவர்கள் கருத்திட்டால் அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே வலைப் பதிவுகள் பகிரக் கூடும். காலம் பொன் போன்றது அல்லவா? 

Friday, March 12, 2021

கொடுத்து அறியாதவர்கள்


மண்ணுலகில் பிறந்த எவருமே எதையும் தன்னோடு கொண்டு வந்ததில்லை. மண் மேல் வாழ்ந்தபிறகு எதையும் தன்னுடன் எடுத்துச் சென்றதும் இல்லை. இதற்கிடையில் ஈட்டிய செல்வம் தன்னுடையது என்று பிறருக்குக் கொடுத்தறியாத அறிவிலிகள் அச் செல்வம் சிவன் தந்தது என்று உணராமல் இருப்பதை என்னவென்று சொல்வேன் என்று பாடுகிறார் பட்டினத்தார்.  இது நூற்றுக்கு நூறு உண்மை. இருந்தாலும் அதை யாருக்கோ செய்த உபதேசமாகக் கருதி, மேன்மேலும் பொருளீட்டுவதிலும், உலோபிகளாக வாழ்வதிலுமே காலத்தைத் தள்ளுபவர்களே அதிகம். நம்மிடம் உள்ள செல்வம், இறைவன் நம்மை அறப் பணிகள் செய்வதற்காக ஏற்படுத்தி அருளிய கொடை என்பதை அவர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. பல ஊர்களில் ஆலயங்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு மரம் முளைத்தும் இடிந்து கிடந்தும் பூஜை இன்றியும் இருப்பதைக் கண்டு உதவ முன்வருவோர் எத்தனை பேர்? அதுபோன்ற ஆலயங்களின் படங்களைப் பகிர்வதன் முன் தாம் என்ன செய்தோம் என்று தன்னையே கேட்டுப் பார்ப்பார்களா? ஆணவம் கண்களை மறைக்கிறது. இவ்வளவுக்கும் நடுவில் விளம்பரம் இன்றித்  தருமம் செய்யும் நல்ல உள்ளங்களையும் பார்க்கிறோம்.

வெளி நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் இங்குள்ள பழைய கோயில்களின் புனரமைப்புக்கும், ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்கும் உதவி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதைப் பார்த்தாவது  இங்கிருப்பவர்கள் அதுபோன்ற பணிகளைச் செய்ய முன்வராதது வருந்தத் தக்கது. மகாசிவராத்திரியன்று எத்தனையோ கோயில்களில் விளக்கு ஏற்றக் கூட வழி இல்லாமல் இருக்கிறது. உள்ளூர் வாசிகளோ அல்லது  வெளியூர் வாசிகளோ இதைக் கண்டு மனம் பதைக்க வேண்டாமா? ஒரு தீபம் போடும் அளவுக்குக் கூட வசதி இல்லாமல் போய் விட்டார்கள் என்றால் அது முழுப் பொய். ஊருக்கு சம்பந்தமே இல்லாத சில நல்லுள்ளங்கள் விளக்கேற்ற உதவியதைப் படங்களில் கண்டவுடன் கண்கள் பனித்தன. அதிலும் சிலர் வெளி நாட்டில் வசிப்பவர்கள். இங்குள்ளவர்கள் சிறிதும் பொறுப்பும் வெட்கமும் இன்றி சுய நலத்துடன் வாழ்கிறார்கள் என்பதே உண்மை.

தீப எண்ணெய் தருவதற்கே மனம் இல்லாதவர்கள் திருப்பணியா செய்து தரப் போகிறார்கள்? மாறாக மருத்துவமனை கட்டலாம் என்று குதர்க்கமாகவும் நாத்திகம் தொனிக்கவும்  பேசுகிறார்கள். ஊரெங்கும் மருத்துவ மனைகள் உள்ள நாடுகளிலும் தற்போது நோயாளியைப் படுக்க வைக்கக்கூட இடமில்லாமல் போனது ஏன்? மன்னர்கள் கோயில்களைக் கட்டியதோடு, அவற்றைப் பராமரிக்கவும் சிப்பந்திகளின் வாழ்வாதாரத்துக்கும் நிவந்தங்கள் பலவற்றை ஏற்படுத்தினார்கள். அவற்றைக் கெடுத்துக் குட்டிச்சுவர்கள் ஆக்கியது யார்? கோயில் நிலத்தை உழுபவர் முதல் ஆலய சிப்பந்திகள் வரை அனைவருக்கும் சமூக நீதி வழங்கப்பட்டு வந்த நிலை, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதால் பலருக்கும் கிடைக்க வேண்டியவை ஒரு சிலருக்கே கிடைக்கும்படி ஆனது சமூகத்திற்கே தலைக் குனிவு தருவதாகும். ஆனால் இதுவே சமூக நீதி என்று முழங்குபவர்களும் இருக்கிறார்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்று ஒடுங்கியிருந்த காலம் போய் தற்போது ஒருசில அன்பர்கள் நீதிமன்றத்தை அணுக முன் வந்திருப்பது வரவேற்கத் தக்க விஷயம். இதுவும் ஒருவகையில் பல கோயில்களின் புனரமைப்புக்கு வழி செய்யும். அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஆத்திகர்களின் கடமை. ஆனால் நாம் காண்பதோ முற்றிலும் நேர் மாறாக இருக்கிறது. நமக்கு ஏன் வீண் வேலை என்று ஒதுங்குவதும், அவர்களை இழித்துப் பேசுவதும் சிலருக்கு வாடிக்கை ஆகி விட்டது. கேட்க வேண்டிய பக்தர்களும், அற நிலையங்களும் வாய் மூடி மௌனிகளாக இருக்கும்போது பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையில் தமது சாத்திர ஞானத்தையும், நீதியையும், இறைவன் துணை இருப்பான் என்ற திடமான நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக்கொண்டவர்களுக்குத் துணை செய்யாமல் வீணாக நம்மை ஏன் ஆத்திகர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம் ? அவர்களிடம் உள்ள குறைதான் என்ன? பொறாமைக்காரர்களின் எதிர்ப்புக்கும் வீண் பழிக்கும் அவர்கள் பணிய வேண்டும் என்று இருப்பது வெட்கமாக இல்லையா ?  இதற்காக அவர்கள் குறைகளே இல்லாதவர்கள் என்று சொல்ல முன்வரவில்லை. குறை தெரிந்தால் எடுத்துச் சொல்லுங்கள். திருத்திக் கொள்ளட்டும் என்றுதான் சொல்ல வருகிறோம். இவர்கள் யார் நம்மைத் தட்டிக் கேட்பது என்ற அகம்பாவத்தைக் கைவிட வேண்டும்.கொடுத்தறியாத வீணர்களாக இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம்?  நம் எல்லோருடைய விருப்பமும் அனைத்துக் கோயில்களின் மறு மலர்ச்சி ஒன்றே என்பதை மறந்து விடலாகாது. காலம் பதில் சொல்லட்டும்.