மண்ணுலகில் பிறந்த எவருமே எதையும் தன்னோடு கொண்டு வந்ததில்லை. மண் மேல் வாழ்ந்தபிறகு எதையும் தன்னுடன் எடுத்துச் சென்றதும் இல்லை. இதற்கிடையில் ஈட்டிய செல்வம் தன்னுடையது என்று பிறருக்குக் கொடுத்தறியாத அறிவிலிகள் அச் செல்வம் சிவன் தந்தது என்று உணராமல் இருப்பதை என்னவென்று சொல்வேன் என்று பாடுகிறார் பட்டினத்தார். இது நூற்றுக்கு நூறு உண்மை. இருந்தாலும் அதை யாருக்கோ செய்த உபதேசமாகக் கருதி, மேன்மேலும் பொருளீட்டுவதிலும், உலோபிகளாக வாழ்வதிலுமே காலத்தைத் தள்ளுபவர்களே அதிகம். நம்மிடம் உள்ள செல்வம், இறைவன் நம்மை அறப் பணிகள் செய்வதற்காக ஏற்படுத்தி அருளிய கொடை என்பதை அவர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. பல ஊர்களில் ஆலயங்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு மரம் முளைத்தும் இடிந்து கிடந்தும் பூஜை இன்றியும் இருப்பதைக் கண்டு உதவ முன்வருவோர் எத்தனை பேர்? அதுபோன்ற ஆலயங்களின் படங்களைப் பகிர்வதன் முன் தாம் என்ன செய்தோம் என்று தன்னையே கேட்டுப் பார்ப்பார்களா? ஆணவம் கண்களை மறைக்கிறது. இவ்வளவுக்கும் நடுவில் விளம்பரம் இன்றித் தருமம் செய்யும் நல்ல உள்ளங்களையும் பார்க்கிறோம்.
வெளி நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் இங்குள்ள
பழைய கோயில்களின் புனரமைப்புக்கும், ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்கும் உதவி வருவது
மகிழ்ச்சியை அளிக்கிறது. அதைப் பார்த்தாவது இங்கிருப்பவர்கள் அதுபோன்ற பணிகளைச் செய்ய
முன்வராதது வருந்தத் தக்கது. மகாசிவராத்திரியன்று எத்தனையோ கோயில்களில் விளக்கு
ஏற்றக் கூட வழி இல்லாமல் இருக்கிறது. உள்ளூர் வாசிகளோ அல்லது வெளியூர் வாசிகளோ இதைக் கண்டு மனம் பதைக்க
வேண்டாமா? ஒரு தீபம் போடும் அளவுக்குக் கூட வசதி இல்லாமல் போய் விட்டார்கள்
என்றால் அது முழுப் பொய். ஊருக்கு சம்பந்தமே இல்லாத சில நல்லுள்ளங்கள் விளக்கேற்ற
உதவியதைப் படங்களில் கண்டவுடன் கண்கள் பனித்தன. அதிலும் சிலர் வெளி நாட்டில்
வசிப்பவர்கள். இங்குள்ளவர்கள் சிறிதும் பொறுப்பும் வெட்கமும் இன்றி சுய நலத்துடன்
வாழ்கிறார்கள் என்பதே உண்மை.
தீப எண்ணெய் தருவதற்கே மனம் இல்லாதவர்கள்
திருப்பணியா செய்து தரப் போகிறார்கள்? மாறாக மருத்துவமனை கட்டலாம் என்று குதர்க்கமாகவும்
நாத்திகம் தொனிக்கவும் பேசுகிறார்கள்.
ஊரெங்கும் மருத்துவ மனைகள் உள்ள நாடுகளிலும் தற்போது நோயாளியைப் படுக்க வைக்கக்கூட
இடமில்லாமல் போனது ஏன்? மன்னர்கள் கோயில்களைக் கட்டியதோடு, அவற்றைப் பராமரிக்கவும்
சிப்பந்திகளின் வாழ்வாதாரத்துக்கும் நிவந்தங்கள் பலவற்றை ஏற்படுத்தினார்கள்.
அவற்றைக் கெடுத்துக் குட்டிச்சுவர்கள் ஆக்கியது யார்? கோயில் நிலத்தை உழுபவர்
முதல் ஆலய சிப்பந்திகள் வரை அனைவருக்கும் சமூக நீதி வழங்கப்பட்டு வந்த நிலை,
சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதால் பலருக்கும் கிடைக்க வேண்டியவை ஒரு சிலருக்கே
கிடைக்கும்படி ஆனது சமூகத்திற்கே தலைக் குனிவு தருவதாகும். ஆனால் இதுவே சமூக நீதி
என்று முழங்குபவர்களும் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment