மாதக் கணக்கில் ஆலயங்கள் பூட்டிக் கிடப்பதைக் கண்டு மனம் வருந்தாத ஆத்தீகரே இல்லை எனலாம். இதனால் ஆகம விதி முறைகள் மீறப்படுவதாகப் பலர் குரலெழுப்பி வருவதையும் காண்கிறோம். இதனை எதிர்த்துச் சிலர் நீதி மன்றப் படிகளில் ஏறவும் துவங்கியுள்ளனர். நீதி கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆவதைக் காணும்போது , உடனடியாக இதற்கு தீர்வு இல்லையோ என்ற ஐயமும் எழுகின்றது. எனினும் நீதி மன்றத்தில் விவாதம் நடை பெற இருக்கையில் இது பற்றிப் பேசுவதும் முறை ஆகாது. அப்படியானால் இதே நிலை நீடிக்க வேண்டியது தானா என்ற கவலையும் கூடவே எழுகிறது.
வாரத்தில் எல்லா நாட்களும் கோயில்கள்
தரிசனத்திற்காகத் திறந்து விடாத நிலை இப்போது சற்று மாறி, வெள்ளி,சனி ஞாயிறு ஆகிய
நாட்களில் மட்டும் அனுமதி இல்லை என்று ஆகி இருக்கிறது. விசேஷ நாட்கள் தவிர, கிராமக் கோயில்களுக்கு வருகை தருவோர் மிகக்
குறைவே. உள்ளூர் வாசிகள் ஒரே நேரத்தில் வராமல் தங்களுக்கு முடிந்தபோது காலையிலோ
அல்லது மாலையிலோ வருகிறார்கள். விசேஷ நாட்களிலும் அதிகபட்சமாக இருபது பேர் கூட
வராத கிராமங்கள் உண்டு. மிகப்பெரிய ஆலயமாக இருந்தாலும் இதே நிலை தான்! பிரார்த்தனை
தலங்களுக்கும் மற்றும் நகரங்களில் உள்ள கோயில்களுக்கும் மட்டுமே வருவோர் எண்ணிக்கை
அதிகம். இப்படி இருக்கும்போது அனைத்துக் கோயில்களையும் மூடுவதன் அவசியம்
புலப்படவில்லை.
பக்தர்கள் அதிக அளவில் கோயில்களில் கூடினால் கோவிட் நோய் எளிதில் பரவ ஏதுவாகும் என்று மக்கள்
நலத்தில் அக்கறை காட்டும் அரசு பிற சமயக் கோயில்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை
விதிக்காமலும், திரை அரங்குகள் , மால்கள், மதுக் கடைகள் ஆகியவற்றை மட்டும்
திறந்திருக்கவும் அனுமதி தருவது ஏன் என்று
கேட்கிறார்கள். அதே போல் ஒரு பேருந்து முழுதும் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்த
போதிலும் நெருக்கமாக அமர்ந்தும், நின்றும் பயணிப்பவர்களுக்கு அந்நோய் பரவாதா என்றும் வினா எழுகிறது.
தகுந்த இடை வெளி விட்டு நின்று நிற்பது, முகக்
கவசம் அணிந்து வருகை தருவது, கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் போட்டுக் கொண்டவர்களை
அனுமதிப்பது போன்ற தற்காப்பு முறைகளைப் பக்தர்களுக்கு வலியுறுத்திக் கோயில்களைத்
திறந்து வைப்பதே நியாயமானது. பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும்
அனுமதி தருவது மக்களிடையே அதிருப்தியையே தரும். இவ்வாண்டு முடிவு வரை மிக்க
கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டும் என்பதில் எவ்விதக் கருத்து வேறு பாடும் இல்லை.
அதை முறைப்படுத்துவதும் செயல் படுத்துவதும் அரசின் கடமை. மக்களுக்காகவே
ஏற்படுத்தப்படும் ஜனநாயக ஆட்சி முறை மக்களின் தேவைகளைச் செவி மடுத்து, அவர்களின் நலன்களைக் கருத்தில்
கொண்டு உரிய வகையில் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண்பதே முறை ஆகும். அதை
விடுத்து அதிகாரம் மூலம் ஆள்வது என்பது ஜனநாயகம் தந்துள்ள சுதந்திரத்திற்கே பங்கம்
விளைவிப்பதாகும். சட்டம் மக்களுக்கும் அரசுக்கும் தந்துள்ள முறைகளைக் கடைப்
பிடித்தால் தவறுகள் நேர வாய்ப்பே இல்லை.
கோயில்கள் திறந்திருக்க வேண்டிய நேரத்தில்
மூடப் பட்டிருந்தால் அவற்றைச் சுற்றிலும் உள்ள வீதிகளில் அசம்பாவிதம்
நடந்திருக்கிறது என்று பொருள். மரணித்தவரின் பூத உடலை அகற்றும் வரை கோயில்கள்
திறக்கப் படுவதில்லை. இறையருளால் எவருக்கும் இதுபோல நேராத போது கோயில்களை மூடுவது
அபசகுனமாகத் தோன்றவில்லையா? ஒரே நேரத்தில் பலரை அனுமதிக்காமல் பாதுகாப்புக்குக்
குந்தகம் நேராதபடி தரிசனத்திற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்னை ? உள்ளே சென்று
தரிசித்தவர்கள் வெளியேறிய பின்னர் அடுத்த ஐந்து அல்லது பத்து நபர்களை உள்ளே செல்ல
அனுமதிப்பது எவ்வாறு தவறாகும்? இதற்கும் அனுமதி இல்லை என்றால் வேறு ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்றுதான் மக்கள் சந்தேகப்
படுவார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயமாகவும் பெருமையாகவும்
சொல்லலாம். நமது பக்தகோடிகள் ஒழுங்கீனமாக எக்காரணம் கொண்டும் நடப்பதில்லை. கூட்டம்
கூடி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. சாலை மறியல் செய்வதில்லை. உண்ணாவிரதப்
போராட்டங்களில் இறங்குவதில்லை. ஆன்மீகத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. இப்படிப்
பட்டவர்களை அரசாங்கம் அரவணைத்து ஆவன செய்ய வேண்டும். முறையற்ற செயல்களில்
இறங்குவதற்கு எவரும் தயங்குவதன் காரணம் இறைவன் ஒருவனிடமே முறையிட வேண்டும் என்ற
உறுதியான நம்பிக்கை தான். ஆகவே, மடாதிபதிகள் இவ்விவகாரத்தில் மௌனம் சாதித்துள்ள
போதும் இறைவன் ஒருவனையே துணை என்று இன்னமும் நம்புகிறார்கள். வேதாரணியத்தில் மூடப்
பட்டிருந்த கதவுகளைத் அருளாளர்கள் வேண்டியவுடன் திறப்பித்த இறைவன் இக்காலத்தில்
மட்டுமல்ல எக்காலத்தும் தோன்றாத் துணையாக இருந்து காத்தருளுவான். நமது குறைகள்
நிச்சயமாக அவனது திருச் செவிகளைச் சென்றடையும்.
The restrictions (like Fridays to Sundays, Important events) create more suspicions than confidence. The contrarian stands taken by the present dispensation don't augur well. Prayer is the only best option at our disposal.
ReplyDelete