திருவாரூர்த் தேரழகு மட்டுமல்ல, திருக்குளமும்
அழகுதான். பூங்கோயில் எனப்படும் தியாகராஜப் பெருமானது கோயில் அழகோ வருணிக்க
இயலாது. “ கோயில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி”
என்றபடியால் இவை மூன்றின் விஸ்தீரணம் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் புனிதத்
தீர்த்தமான கமலாலயம் என்பது பழம் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் உடையது.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலர்
வரலாற்றோடு இணைந்தது இத்தலம். தண்டியடிகள்
நாயனார் இத்திருக் குளத்தைத் தூர் வாரும் திருத்தொண்டு செய்தவர். கண் பார்வை இழந்தவராதலால்
கரையில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதைப் பற்றியவராகக் குளத்தில் இறங்கி அங்கிருந்த
கற்கள் போன்றவற்றைக் கரைக்குக் கொண்டு சேர்த்து சுத்தம் செய்யும் ஒப்பற்ற தொண்டு
செய்த இவரது பணிக்கு இடையூறு விளைவித்த சமணர்கள் அவர் பிணித்திருந்த கயிற்றை
அப்புறப் படுத்தவே, மனம் நொந்த நாயனார் கோயிலுக்குச் சென்று தியாகேசப் பெருமானிடம்
முறையிட, “ அன்பனே, நாளை நீ கண் பெற்று, உன்னை நகை செய்தவர்கள் கண் இழப்பதைக்
காண்பாய்” என்று பெருமானது அசரீரி வாக்கு
ஒலித்தது. அதன்படியே மறுநாள் தண்டியடிகள் நாயனார் கண்பார்வை பெற்றுப் பெருமானைக்
கண் குளிர தரிசித்தார். எள்ளி நகையாடிய சமணர்கள் கண்ணிழந்தனர் என்பது பெரிய
புராணம் கூறும் வரலாறு.
திருவாரூருக்கு அண்மையிலுள்ள திருநெய்ப்பேர்
என்ற ஊரில் வாழ்ந்த நமிநந்தி அடிகள் நாயனார் நாள்தோறும் திருவாரூருக்குச் சென்று
பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழி பட்டு வந்தார். ஒரு நாள் நெய் கிடைக்காமல்
போகவே, அருகிலிருந்த வீடுகளில் நெய் வேண்டிக் கேட்டபோது அங்கிருந்த சமணர்கள் அவரை
நகையாடவே, வருத்தத்துடன் ஆலயத்திற்குச் சென்று பெருமானிடம் முறையிட்டபோது, அசரீரி
வாக்கு,” அஞ்சற்க, எதிரில் உள்ள கமலாலயத் திருக்குளத்து நீரைக் கொண்டு வந்து
விளக்கை ஏற்றுக” என்று ஒலித்தது. அதன்படி நாயனார் நீரால் விளக்கெரித்ததை நாடு அறியும்.
திருவாரூரில் வசித்து வந்த சுந்தர மூர்த்தி
நாயனார், விருத்தாசலம் எனப்படும் திரு முதுகுன்றத்து இறைவர் அருளிய பன்னீராயிரம்
பொன்னைப் பெருமானது கட்டளைப்படி மணிமுத்தா
நதியில் இட்டு விட்டு ஆரூர் வந்தபோது , கமலாலயக் குளத்தில் அதை எடுத்துக் கொள்க
என்ற இறை வாக்கின் படி, குளத்தில் இறங்கிப் பொன்னைத் தேடும்போது முதலில் அகப்படாது
போகவே, முதுகுன்றத்து ஈசர் மீது சுந்தரர் பதிகம் பாடியவுடன் பொன்னானது
குளத்திலிருந்து வெளிப்பட்டு சுந்தரரை வந்தடைந்தது. இத்தகைய அதிசயம் நடந்த
திருக்குளமும் இதுவேயாகும்.
தமிழகத்தில் பிறந்தும் பலருக்கு இவ்வரலாறுகள்
சொல்லித் தரப் படுவதில்லை. ஆகவேதான் நினைவூட்ட வேண்டிய கட்டத்தில் நாம்
இருக்கிறோம். பல வரலாறுகள் மறைக்கப்படும் இக்காலத்தில் இதுபோன்றவையும்
மறைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் இவ்வாறு கூறவேண்டியுள்ளது. முந்தைய முதல்வர்
நீந்தியது இதற்குப் பெருமை சேர்க்கும் என்று எண்ணத்தாலோ என்னவோ ஒரு அமைச்சர் அக்கருத்தைக்
கூறியதாகவும் மேலும் இந்நகரை சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும் தெரிவித்ததாகச்
செய்திகள் வருகின்றன. இது உண்மையான செய்தியாக இருந்தால் நாம் நமது கருத்தை
ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர் தனது கருத்தை
மாற்றிக்கொள்ள சிறிது வாய்ப்பு உண்டு. அதனை விடுத்து, அக்கருத்துக்குக் கண்டனம்
தெரிவிப்பதோ, தனிப் பட்ட மனிதரை விமரிசிப்பதோ நன்றல்ல.
ஆலயங்களை சுய லாபத்திற்கோ அரசியலுக்காகவோ
பயன்படுத்துவதை அனைவரும் கை விட வேண்டும். கோயில்கள் நம்பிக்கையின் அடிப்படையில்
எழுந்தவை. புனிதத்துவம் வாய்ந்தவை. சிவபெருமானுக்கு “ நம்புவார்க்கு அன்பர்”
என்றும் “ சார்ந்தாரைக் காத்த பெருமான்” என்றும் நாமங்கள் இவற்றின் காரணமாகவே
விளங்குவதைக் காணலாம். சிவ பெருமானைத் தம் உயிரைக் காட்டிலும் மேலானதாகக்
கருதுவோர் அன்றும், இன்றும் என்றும் உளர். “ கோழம்பம் மேய ஏன் உயிரை நினைந்து
உள்ளம் உருகுமே” என்பது அப்பர் தேவாரம்.
நமது கருத்தை வெளிப்படுத்தும் போது பிறர் மனம்
புண்படாத அளவில் வரையறைக்கு மிகாமல் சொல்ல
வேண்டியது இன்றியமையாதது. நமது மனத்தைப் பிறரது சொற்கள் காயப் படுத்தி இருந்தால்
அதற்குத் தக்க விளக்கம் தருவது நமது கடமையும் உரிமையும் ஆகும். இதற்குப் பெயர்
பதிலடி, சாட்டையடி ,கண்டனம், எதிர்ப்பு என்றெல்லாம் பெயர் வைத்து இரு
தரப்பினரையும் உசுப்பேற்றி விடுகிறார்கள். விளக்கம் என்பதை ஒருபோதும் சர்ச்சை
ஆக்கி விடக் கூடாது. இனியவை கூறல் என்று வள்ளுவர் உபதேசித்ததை மறக்கக் கூடாது.
தல யாத்திரை வேறு, சுற்றுலா என்பது வேறு. காசி, மதுரை
, இராமேசுவரம் ஆகிய புனிதத் தலங்களுக்குச்
செல்வதை எவ்வாறு சுற்றுலா எனக் கூற முடியும்? நீர்வீழ்ச்சிகள், மலைகள், காடுகள்,
கடற் பயணம் ஆகியவற்றைக் காணச் செல்வதை வேண்டுமானால் சுற்றுலா எனலாம். சுருங்கச் சொன்னால் , ஊர்
சுற்றுவதுதான் சுற்றுலா. ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது என்று ஆகி அதுவே கேளிக்கை
உலாவாக ஆகி விடுகிறது. எனவே திருவாரூரை சுற்றுலாத் தலமாக்குவது என்பது தவறான புரிதலினால் எழுவதாகும். ஆங்கிலத்திலுள்ள Tour, Picnic, Pilgrimage ஆகியவை
ஒரே பொருளையா தருகின்றன ?
ஆன்மீக அன்பர்களாகட்டும், தமிழறிஞர்கள்
ஆகட்டும், இத்தகைய தவறான புரிதல்களைத் தவிர்க்க முன்வரவேண்டும். இதற்குப் பெயர்
எதிர்ப்போ அல்லது கண்டனமோ அல்ல. தமிழ்ச் சொற்களை அனைவரும் அறியுமாறு செம்மைப் படுத்தும் முயற்சி என்று வேண்டுமானால்
சொல்லலாம். இதனால் தவறாகப் பொருள் உரைத்தவர் வருத்தம் தெரிவிப்பதோ மன்னிப்பு
கேட்பதோ சுய கெளரவம் காரணமாக நடைபெறப் போவதில்லை. நமது நோக்கம் சுட்டிக்
காட்டுவதோடு நின்று விடுகிறது. திருத்திக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
ஆன்மீகப் போர்வையில் இருக்கும் அன்பர்கள் வெளி
வேஷம் போடுவதை முதலில் நிறுத்தி விட்டு இறைவன் மீது உண்மையிலேயே பற்று உடையவர்களாக
இருக்கவேண்டும். இதனால் சிவாபராதம் செய்தவர்களைத் தண்டித்த சத்தி நாயனராகவோ,
செருத்துணை நாயனாரகவோ, கழற்சிங்க நாயனாராகவோ, ஆகச் சொல்லவில்லை. ஒருபோதும் ஆக முடியாது. அதற்காக, இறைவனே
பார்த்துக் கொள்வார் என்று மௌனிகளாக இருக்காமல் நாகரீகமான முறையில் நமது கருத்தைத் தெரிவிக்கத் தயங்கக் கூடாது. இதுவே
உண்மையான கருத்து சுதந்திரமும் ஆகும். ஆனால் நடப்பது என்ன ? மடாதிபதிகள் உட்பட
எவரும் சமயத்தையோ சமயக் கருத்துக்களையோ சம்பிரதாயங்களையோ பாதுகாக்கப் போதிய அளவில்
முன் வருவதில்லை என்பது நிதரிசனமான உண்மை.
தவ வலிமை உடையவர்களையும் காணோம். தெய்வமே பார்த்துக் கொள்ளட்டும் என்றால்,
பக்தர்கள் என்ற போலிப் போர்வையில் பதுங்கியும் உறங்கியும் கிடக்கும் நாம் என்னதான்
செய்யப் போகிறோம்?
No comments:
Post a Comment