Thursday, May 27, 2021

மரத்துப்போன உணர்ச்சிகள்

 


காலத்தின் ஆற்றல் யார்க்கும் அளப்பரியது. ஒருவனை ஆயிரத்தில் ஒருவனாக்கவும் அலங்கோலமாக்கவும் வல்லது. அந்த வலிய  அலையில் எதிர் நீச்சல் இட  வல்லவர் மிகச் சிலரே. எத்தகையோரையும் அடிபணியச் செய்யும் காலத்தின் கோலத்தைக் கண்டு அஞ்சுவதைத் தவிர எதுவும் செய்ய இயலாது. எனவேதான் சுயநலம்,சூது, பொறாமை ஆகிய குணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கக் காண்கிறோம். எளியோரை வலியோர் இகழ்வதையும் விரட்டுவதையும் காண நேரிடுகிறது. மனமுடைந்துபோன எளியோர்கள் தெய்வத்திடம் முறையிடுவதைத் தவிர என்ன செய்ய முடியும் ?

நமது இதிகாச புராணங்கள் இதுபோன்ற காலக் கொடுமைகளை விவரமாகக் கூறியிருந்த போதிலும் நமது கண் எதிரே அவலங்கள் அரங்கேறும்போது நெஞ்சம் பதறுகிறது. அதை ஏற்கும் பக்குவம் இல்லாததால் இறைவன் ஒருவனே சரணம் என்ற ஞானம் சிலருக்குப் பிறக்கிறது. சோதனைக் காலத்தின் பலனே இது தான். அல்லல்களைக் காட்டி ஞானத்தை உணர்த்தும் காலம் நெருங்கி விட்டது போலத் தோன்றுகிறது. அவ்வாறு சிந்திக்காதவர்கள் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோமோ என்ற அச்சம் மேலிட்டவர்களாக இருந்தும், தீய பழக்க வழக்கங்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் காலத்தின் கோலமே.

ஆன்மிகம் பேசுவோர் மீதும் இதன் நிழல் விழாமல் இல்லை. தாம் வணங்கும் கடவுளிடம் எத்தகைய ஈடுபாடு உடையவர்கள் என்பதை அவர்களே கேட்டுக் கொள்வது நல்லது. கோயில்களில் முறைகேடுகள் இருந்தால் என்ன, கோயிலே மரம் முளைத்து இடியும் அபாய நிலையில் இருந்தால் தான் என்ன, மூர்த்திகளே களவு போனால் என்ன, வழியில் போகிறவர்கள் நாம் வணங்கும் கடவுளையோ நமது தாய் மொழியையோ, இனத்தையோ, பெண்மையையோ, தேசத்தையோ இழித்தும் பழித்தும் பேசினால் என்ன , நாம் நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்போம் என்ற சுயநலவாதிகள் பெருகியுள்ளதும் கால தேவனின் விளையாட்டோ?

முன்பெல்லாம் சமய ஞானம் மிக்க பெரியோர்கள் அரைகுறை ஆன்மீகவாதிகள் செய்யும் தவறுகளைத் திருத்தி வந்தனர். அதற்குத் தக்கவாறு தமது நூலறிவையும், பக்தியையும் வளர்த்துக் கொண்ட பின்னரே பிறரைத் திருத்த முற்பட்டனர். மக்களின் சமய அறிவும் அதன் பால் உள்ள ஈர்ப்பும் பூஜ்ஜியம் ஆகி விட்ட நிலையில், நுனிப் புல் மேய்ந்தவர்கள் எல்லாம் சமயக் காவலர்கள் என்று சுற்றித் திரிவது பரிதாபம். சமயத்தைத் தாங்கி நின்ற பெரிய தூண்கள் சாய்ந்து விட்டதால் சுயநல வாதிகளின் கை ஓங்குகிறது. சமயத்தையே திருத்த முற்படுவோர் சிலர். எப்படிப் போனால் என்ன என்று மௌனிகளாக இருப்போர் பலர்.

மரபுகளை மீறச் சற்றும் தயங்காதபோது எதையும் செய்யத் துணிவு பிறக்கிறது. ஒரு காலத்தில் சமய நூல்களுக்கு உரை எழுதுவதற்கே தயங்கி, அதனை மேற்கொள்ளாமல் விடுத்த சான்றோர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். சைவ சமயத்திற்கு அரண் போல இருந்து பணி செய்தவர்களே செய்யாததைத் தற்காலத்தில் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது. முப்பது முறை பன்னிருதிருமுறைகளை ஓதிய பின்னரே அகத்தியர் தேவாரத் திரட்டுக்கு உரை எழுத ஒருவாறு முன்வந்தார் கயப் பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள். ஆனால் இப்போதோ யார் வேண்டுமானாலும் தமக்குத் தோன்றியபடி உரை எழுதலாம். கேட்பதற்கு யாருமில்லை.

கயப்பாக்கம் சோமசுந்தரம் செட்டியார் அவர்களின் சிறிய தந்தையாரே கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள். அவரிடம் கற்றறிந்த சமய மரபுகளைத் தாம் பின்பற்றியதோடு பிறரையும் அவற்றிலிருந்து வழுவாதபடி குரல் எழுப்பியவர்கள் சிவத்திரு சோமசுந்தரம் செட்டியார் அவர்கள். நால்வர்துதியாக, “ பூழியர் கோன் வெப்பொழித்த” என்ற பாடலைப் பாடாமல் பிற்காலத்து எழுந்த நால்வர் துதிகளை எவரேனும் தனக்கு முன்பு பாடினால் உடனடியாகத் திருத்தியவர் நமது செட்டியார் அவர்கள். அறுபத்து மூவரில் பேதம் கற்பிப்பவர்கள் நரகத்திற்கே போவார்கள் என்று ஆணித்தனமாக அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். பெரிய புராணத்தை முறையாகக் கற்றால் பேதம் நீங்கப் பெறுவர் என்பது அவரது திடமான கருத்து. இறைவனையும் அடியார்களையும் இழித்துப் பேசும் இக்காலத்தில் அவரைப் போன்ற பெரியோர்கள் இல்லாததால்  வெற்றிடம் உருவாகி உள்ளது.

 சைவர்களுக்கு உயிர் நூலாகக் கருதப் படும் திருமுறைகளின் பெயர்களை மாற்றவும் தயங்காத உள்நோக்கம் கொண்டவர்களைக் கேட்க யாரும் முன்வருவதில்லை. ஒருக்கால் யாராவது முன்வந்தாலும் அவர்களுக்குத் துணை நிற்போர் எவரும் இல்லை. அட்டூழியங்கள் அவரவர் எண்ணப்படி முற்றுப் பெற்று விடுகின்றன. பல நூற்றாண்டுகளாகப் பெரியோர்கள் மூவர் அருளிய திருப்பதிகங்களைத் தேவாரம் என்றே அழைத்து வந்தனர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோரும் சைவ ஆதீனங்களும் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தும், சமீப காலமாகப் பிடிவாதக் காரர்களின் அட்டகாசத்தால் அப்பர் பாடல் மட்டும் தேவாரம் என்றும்  சம்பந்தர் பனுவல்கள் திருக் கடைக் காப்பு என்றும் சுந்தரர் பதிகங்கள் திருப்பாட்டு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதே தலைப்புகளில் புத்தகங்களில் வெளியிடப்படுகிறது. சில ஒதுவா மூர்த்திகளும் இவர்களைப் பின்பற்றுகின்றனர். மூவர் பதிகங்களுமே சிவ வாக்கு என்பதை அறியாதோர் செய்யும் பெரும் பிழை இது. இதற்கு மறுப்பு எழுதப் புகின் மிக விரிவாக அமையும் என்பதால் இத்துடன் அமையலாம். சித்தாந்தம் கற்ற ஒருசிலர் இச்செயலுக்குத் துணை போகிறார்கள். எனவேதான் இதற்கு உள்நோக்கமும் சுயநலமும் இருக்குமோ என்று  சந்தேகம் வருகிறது.

மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேன்? முற்றோதுதல் செய்தேன் என்று கூறிக் கொண்டும் சிவத் தொண்டு செய்கிறேன் என்று கூறிக் கொண்டும், சமயம் இவ்வாறு பிளவு படுவதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாமல் இருப்பது வருந்தத் தக்கது. வேண்டுமானால் பாருங்களேன். இவ்வளவு எழுதியும் ஆமோதிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று. இனி வரும் தலைமுறைகளில் இதுபோன்ற அதிரடி/ அடாவடி மாற்றங்கள் எத்தனை நிகழப் போகின்றனவோ யாமறியோம்.

இத்தனைக்கும் மூல காரணம் உண்மையான சமய உணர்வு இல்லாததே. இறைவனையோ, அடியார்களையோ, சமய நூல்களையோ, சமய மரபுகளையோ பழித்தும், மாற்றியும் சுய நலம் தேடுபவர்களும், அவற்றைக் கண்டும் காணாதது போல இருக்கும் போலித் தொண்டர்களும் நிறைந்த உலகம் இது. காலத்தின் கொடுமை என்றே கூற வேண்டும். உள்ளம் பதைக்காத , உணர்ச்சியற்றவர்களைத் தொண்டர்கள் என்று எவ்வாறு ஏற்பது? எறிபத்த நாயனார் பற்றியும் சத்தி நாயனார் பற்றியும் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதி ஏது?   

 

1 comment:

  1. உள்ள குமுரல்களை மடை திரந்த வெள்ளம் போல் கொட்டிவிட்டீர்கள்.
    ஆண்டவன் கருணை நிறைந்தவன்; தக்க தருணத்தில் கை கொடுப்பார். கவலை வேண்டாம்.
    பொறுமை பெருமைதரும்.
    அவன் அன்றி அணுவும் அசையாது.
    இவர்கள் கூத்து எல்லாம் தற்காலிகமே.🙏🙏🙏🙏

    ReplyDelete