Tuesday, September 29, 2020

உடற்பிணியும் பசிப்பிணியும்

                  உடற்பிணியும்  பசிப்பிணியும்                  

                                           சிவபாதசேகரன்


எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று கூறுவார்கள். அரை சாண் வயிறே பிரதானம் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக  வேலை தேடும் காலம் இது. வேலை தேடுவதோடு வேலையும் ( முருகனது கரத்திலுள்ள வேலையும் ) தேடுவது ஏனோ பலருக்கு மறந்து விட்டது. வயிற்றுப்  பிழைப்புக்கு என்று சொல்லிக் கொண்டு வேலைக்குப் போனவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதால் இறைவனைப் பற்றிய சிந்தனையே எழுவதில்லை.  

 அறுவடை ஆகி வந்த நெல்லைச்  சேமித்து வைக்க அந்தக் காலத்தில் இல்லங்களில் மரத்தாலான கிடங்கு ஒன்றோ அல்லது பலவோ இருந்தது. அதைத்  தஞ்சாவூர் ஜில்லாக் காரர்கள் பத்தாயம் என்று அழைப்பார்கள். அதில் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல் சேமித்து வைக்கப்படும். அதற்கும் மேல் நெல் விளைந்தால் வெளியில் கொடுப்பார்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் கோட்புலி நாயனார் என்பவர். அவர் தமது இல்லத்தில் தனித்தனியாக நெல்லை சேமித்து வைத்து ஒரு பகுதியை வீட்டு உபயோகத்திற்கும் மற்றொன்றை சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்கவும் பயன்  படுத்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சிறுத்தொண்ட நாயனாரும் தினந்தோறும் ஒரு சிவனடியாரைத் தனது  இல்லத்திற்கு அழைத்து வந்து அன்னமிட்டதையும் அப்புராணம் மூலம் அறிகிறோம்.

வறியவர்களுக்கு அன்னமிடாமல் ஒரு நாள் கூடக் கழியக் கூடாது என்ற தரும சிந்தனை மிக்கவர்கள் பலர் வாழ்ந்த காலம் போய் தற்போது காக்கைக்குக் கூடப்  பிடி அன்னம் தராத காலத்தில் நாம் வாழ்கிறோம். காக்கையும் உண்ணும் முன்பாகத் இனத்தைக் கூவி அழைக்கும். இறைவனுக்கு  அர்ச்சிப்பதும் பசுமாட்டுக்கு ஒரு வாயளவு உண்ணத் தருவதும் உண்ணும் முன்பு ஒரு கைப்பிடி பிறர்க்கு ஈவதும்  மிகுந்த புண்ணியம் தரும் செயல்களாம். இதனைத் திருமூலரும் எடுத்தருளுவார்.

வீட்டுத் திண்ணைகள் தேசாந்திரிகள் தங்கவும் உணவருந்தவும் பயன் பட்டன. அன்ன சத்திரங்கள் இருந்த ஊர்களில் அந்தத் தருமம் தழைக்க நல்ல மனம் கொண்டவர்கள் தங்களது நிலங்களை அளித்தனர். விழாக் காலங்களில் வரும் வெளியூர் பக்தர்களுக்கு உணவளிக்கத்  தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.நாளடைவில் தருமசிந்தனை சுருங்கித் தன்னலம் மேலோங்கியவுடன்  ஏழை எளியவர்கள் வறுமையின் எல்லைக்கே விரட்டப் பட்டனர்.

அன்னதானம் என்று சொல்லிக் கொண்டு தனது பண பலத்தை நிரூபிப் பவர்கள் உண்மையிலேயே பசியால் வாடும் மக்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. கல்யாண சத்திரங்கள், உணவகங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான உணவு விரயமாக்கப் படுகிறது. பாவம், அதற்கும் தவம் கிடக்கும் காக்கைகளும் தெரு நாய்களும் நம்மூரில் உண்டே !

பிறவி என்பதே ஒருவகையில் பிணிதான். உடலுக்கு வரும் பிணிகள் பல்லாயிரம் இருக்க உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்காவிட்டால் அதுவே பசிப் பிணி ஆகி விடுகிறது. தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிட்டால் ஜகத்தை அழித்திடுவோம் என்று பாரதி நினைவு நாளன்று வீர வசனம் பேசுபவர்கள் என்றாவது கிராமப்புறங்களில் நாள் கணக்கில் பசியோடு வாடும் நபர்களுக்கு இரங்கி அன்னமிட்டதுண்டா ?  “ இரப்பவர்க்கு ஒன்று ஈயேன் “ என்றும்     இரப்பவர்க்கு ஈய வைத்தார் “ என்றும்  திருமுறை வரிகளைப் பாடுபவர்கள் வாழ்க்கையில் அந்த நல்லுபதேசத்தைச் செயல் படுத்துகிறார்களா ?


உடல் வலிமை இருந்தும் பிச்சை எடுப்பவர்கள் உண்டு. அவர்களை வேண்டுமானால் நல்வழிப்படுத்தி உழைத்து வாழச் செய்யலாம். ஆனால் உற்றார் உறவினர் இல்லோரையும் , அங்கஹீனம் உற்றவர்களையும், முதியோர்களையும் , மன நலம் குன்றிக் காணப்படுவோரையும் பற்றிக்  கவலைப் படுவோர் மிகச் 

சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவரும், நெருங்கிய  நண்பருமான ஒருவரைப் பற்றி இங்கே கூற ஆசைப் படுகிறேன்.

திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடும்பத்துடன் வாழும் இந்த நண்பர் ( பெயர் குறிப்பிடுவதை வேண்டாதவர். எவ்வித விளம்பரமுமின்றிச்  சிவப்பணி செய்பவர்) தனது ஊர்ச் சிவாலயத்தை அழிவிலிருந்து காக்க அரும்பாடு பட்டவர். உபயதாரர்களைக் கண்டறிந்து அவர்கள் மூலம் ஆலயத் திருப்பணி , கும்பாபிஷேகம் ஆகியன செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.


 இவரது ஊருக்கு அருகில் உள்ளது தண்டலைச்சேரி என்ற சிவ ஸ்தலம் . இதற்குத் தண்டலை நீணெறி என்று தேவார காலத்தில் பெயர். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதும் கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்றதும் இக்கோயிலுக்கான தனிச் சிறப்புக்கள்.இதற்கு அருகிலுள்ள கணமங்கலம்  என்ற ஊரில் வாழ்ந்தவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான  அரிவாட்டாய நாயனார் என்பவர்   இவரது இயற்பெயர், தாயனார் என்பது. இறைவனது திருவமுதுக்காகத் தினமும் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் அளித்து வந்தார்.  தனது செல்வம் யாவும் குன்றிப்போய்  வறுமைவந்தபோதிலும் அந்த நியமத்திலிருந்து  தவறவில்லை. ஒருநாள் அருகிலிருந்த வயலுக்குச் சென்று செந்நெல்லும் கீரையும் மாவடுவும் பறித்து வரும்வழியில் கால் இடறியதால் கமரில் அவை யாவும்  சிந்திவிடவே, இன்றையதினம் திருவமுதளிக்கத்  தவறி விட்டேனே என்று வருந்திய நாயனார் தனது கழுத்தை அரிவாளால் அரிய முற்பட்டபோது பெருமான் அவரைத் தடுத்தருளி ஆட்கொண்டதாகப் பெரியபுராணம் கூறும். இதன் காரணமாக அவருக்கு அரிவாள் தாயர்        (அரிவாட்டாயர் ) என்னும் தூய நாமம் உண்டாயிற்று. 


நாயனாரது அரும்பணி நமது நண்பரை ஈர்த்துவிட்டது போலும். அவ்வூரிலும் அருகாமையில்  உள்ள கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள முதிய ஏழைகளுக்கு உணவைத் தனது இல்லத்தில் தயார் செய்துகொண்டு விநியோகித்து வருகிறார். இப்பணியில் ஒரு சிலரிவருக்குத் துணை செய்தாலும் நாமும் இச் சிவ புண்ணியத்தில் ஈடுபட விரும்புகிறோம்.


மண்ணில் பிறந்ததன் பயனே சிவனடியாருக்கு உணவளித்தல் என்ற சேக்கிழார் பெருமானது வாக்கு இப்படிப்பட்ட நல்லோர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது.  நிறைவு செய்யும் முன்னர் ஒரு மனம் வருத்தம் தரும் செய்தியையும் சொல்ல வேண்டியிருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் தனது காலை இழந்தவர் இந்த நண்பர் என்பதே அது. மதிய உணவும் இரவு நேர சிற்றுண்டியும் தன வீட்டிலிருந்தே சமைத்து ஏழைகளுக்கு வழங்கும் உயர்ந்த பணியைச் செய்து வருகிறார். தினமும் செயற்கைக் காலின் துணை கொண்டு , தனது இரு சக்கர வண்டியில் பல கிராமங்களுக்குச் சென்று இந்தத் தெய்வீகப் பணியைக் கடந்த பத்து மாதங்களாக ஒரு நாளும் தவறாமல்  செய்து வருகிறார். இவரது வருகைக்காக  வழி மேல் விழி வைத்து வெறும் வயிற்றுடன் காத்திருக்கும் அந்த ஏழை மக்களின் முகங்கள் இவரைக் கண்டவுடன் மலர்வதில் வியப்பில்லை தானே. அவருக்கு இந்த முக மலர்ச்சி ஒன்றே போதும். பாராட்டை எதிர்பார்க்காத அபூர்வ மனிதர் எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்துகொண்டு சேவை மனப்பான்மை கொண்டவராக இருப்பதே இம்மண் செய்த பாக்கியம்.   

Saturday, September 19, 2020

இன்னல்களை ஏற்கும் மனம்


 முகநூலாகட்டும், வாட்சப் ஆகட்டும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தது அதன் பயன். நமது நண்பர்களாக ஒத்த மனமும் செயல்பாடும் கொண்டவர்கள் அமையைப் பெறுவது இதற்கு மிகவும் அவசியமாகிறது. இவ்வளவு பார்த்துப் பார்த்து நண்பர் வளையத்தை அமைத்துக் கொண்டாலும் சில சமயங்களில் ஊடுருவல்கள் நிகழ்வதால் வெறுப்புக்கு ஆளாகிறோம். ஆனால் இத்தகைய ஊடுருவல்கள் சமயம், கலை, இசை போன்றவற்றில் அதிகமாகக் கலப்பதில்லை. தெரியாத பல தகவல்கள் பரிமாறப் படுகின்றன. பலரது மனக்குமுறல்களும் பிரச்சினைகளும் தெரிய வருகிறது. ஆனால் வலைப் பதிவுகள் பல படிப்போர் இல்லாமல் போவதும் உண்டு. நட்பு வளையத்தில் உள்ள பலர் படிப்பதோ பின்னூட்டம் இடுவதோ இல்லை. சில சமயங்களில் திருப்பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆலயங்களின் இடிபாடுகளைப் பற்றிப் புகைப்படங்களுடன் பதிவு செய்தாலும் அதிக பட்சமாக ஒரு " லைக் " போட்டு விட்டுக் கடந்து போய் விடுகிறார்கள். " வேலை வெட்டி இல்லாமல் " எழுதியவரின் மன நிலையைப் பற்றிக் கவலைப் படவா போகிறார்கள் ?   

முக நூலில் ஒரு அன்பர் திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களை அருமையாகக் குறிப்பிட்டிருந்தார். உபயதாரர்களை முன்னிலைப் படுத்தி அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பலரும் அறியும் வகையில் அவர் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. துரும்பைக் கூடக்  கிள்ளிப் போடாத பல அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களின் மிரட்டல்களைத் திருப்பணிக் குழுவினரும் உபயதாரரும் சந்திக்க வேண்டியிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இதில் பங்கு பெற்ற  அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

திருப்பணி செய்வதில் உள்ள சிரமங்களைக் கூடவே இருந்து பார்ப்பவர்கள் உள்ளூர்க் காரர்களும் ஆலய சிப்பந்திகளுமே ஆவார்கள். திருப்பணி செய்ய அனுமதி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிர்வாக அதிகாரிகள், வேலை நடக்கும்போது வருகை தருவதில்லை. கும்பாபிஷேகம் செய்யும் தேதியையும் இவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே தீர்மானிக்க வேண்டி உள்ளது. கும்பாபிஷேக யாக சாலை நிகழ்ச்சிகளிலும் இவர்களுக்கு அக்கறை இல்லை. கும்பாபிஷேகத்தன்று சௌகரியப்பட்டால் மட்டுமே வருவார்கள். அதிலும் ஆலய  முதல் மரியாதை தரப்படவேண்டும் என்பது என்னவோ எழுதப்படாத சட்டம். 

முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு ஒரு கிராமக் கோயில் சிவாச்சாரியார் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மையே ஆயினும், சிறு அணில் போல நாங்களும் இறைவனுக்குப் பணி  செய்கிறோம் என்று  எழுதியிருந்தார். எதார்த்தமாகச் சொல்லப்போனால் நாம் அனைவரும் அணில்களே ! ஒரு ஏழை அடியவன் இறைவனுக்குப் பூவும் நீரும் கொண்டு வந்து தர முடியும். ஒரு வகையில் அதுவும் அணில் சேவையே. அதைப் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றால் சுவாமிக்குச் செய்யும் பூஜையும் அத்தகையதே. பழுதுற்ற ஆலயத்தை இறைவன் தந்த செல்வத்தைக் கொண்டு திருப்பணி செய்யும் உபயதாரர் சேவைகூட அணிலின் செய்கை போன்றதே. நாம் ஒவ்வொருவரும் இறைவன் நமக்குத் தந்ததை அவனுக்கே அர்ப்பணிக்கிறோம். இத்தகைய மனோபாவம் இருந்துவிட்டால், மாலை, மரியாதை, கல்வெட்டில் உபாயதாரர் பெயர் பொறிப்பது போன்றவை எழ நியாயமே இல்லை.  ஆன்மீகப் பயணத்தில் ஏதோ வகையில் பணி செய்வதே முக்கியம் ஆதலால் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. 

அறியாமல் செய்த செயலையும் ஈசன் ஆராதனையாக ஏற்றுக் கொள்கிறான். ஆறறிவற்ற உயிர்களது செயலும் சிவாராதனையாக ஆகி விடுகிறது. வேதாரண்யம் கோயிலில் கருவறையில் விளக்கில் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தபோது அவ்விளக்கிலிருந்த எண்ணையை ஒரு எலி உண்ண வந்தது. அத்தீபத்தால் அதன் மூக்குச்  சுட்டிடவே, தனது மூக்கைத் திரியுடன் சேர்த்து வெளியே இழுத்துக் கொண்டது. அதனால் தீபம் மேலும் பிரகாசமாக   எரியவே, தீபத்தை மேலும் தூண்டியதாக இறைவன் அதனை ஏற்றுக் கொண்டு, அவ்வெலியை மறு  பிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக்கினான் என்பது வரலாறு. திருவானைக்காவலில் சிலந்தியும், யானையும் அருள் பெற்றதும் இந்த அடிப்படையில் தான்.

ஆன்மீகவாதிக்கு அடக்கமும், பலன் எதிர்பாராத மனமும், பிறர் துயர் கண்டு உதவும் கொள்கையும்  , எதிர்ப்புக்களைக் கண்டு சலியாத மனமும், எல்லாம் சிவன் செயலே என்ற தெளிந்த சிந்தையும் இன்றியமையாதவை. இவை எல்லாம் இறைவனது அருட்கொடைகள். தன்னிச்சையால் நடைபெறுவன  அல்ல. இதையே அப்பர் பெருமானும், " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் " என்று அருளிச் செய்தார். " பழித்து இகழ்வாரையும் உடைய பெருமானுக்கு யாரை ஆட்கொள்வது யார் மூலம் பணி கொள்வது என்பது தெரியும். அவனன்றி எதுவும் நடை பெற இயலாது என்பதை மாணிக்கவாசகரும்.

" ... சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே, ஒன்று நீயல்லை அன்றி ஒன்று இல்லை, யார் உன்னை அறியகிற்பாரே " என்றருளியமை காண்க.

 அதுபோலவே,திருப்பணியில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்களையும் இன்னல்களையும் ஏற்கும் மனத்தையும் இறைவன் நமக்குத் தந்தருளவேண்டும். அவ்வருள் கிட்டி விட்டால் இப்பிறவி தூய்மை பெற்று விடுகிறது. " என் கடன் பணி  செய்து கிடப்பதே " என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. 

  


.     

Saturday, September 5, 2020

சொல்லாமல் சொன்ன ஞானாசிரியர்


 நல்லாசிரியர் என்பவர் யார்?  மாணவர்களால் பெரிதும் விரும்பப்படுபவரா, அல்லது  வகுப்பிலுள்ள அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்பவரா அல்லது தேச பக்தியையும் நன்னெறியையும் போதிப்பவரா அல்லது மற்ற ஆசிரியர்களை விடச் சிறந்தவரா என்பதில் , எந்தவகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம். நல்ல ஆசிரியருக்கான அடையாளம் எது என்பது இன்னமும் முழுமையாக வரையறுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. 

பள்ளியை விட்டு அகன்றவுடன் எத்தனை மாணவர்களும் பெற்றோரும் அவ்வாசிரியர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்? வெகு சிலரே !! படிக்கும்போதே நல்லொழுக்கம் இல்லாத மாணவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களைத் திருத்த வகை அறியாமல் மனம் நொந்து போகிற ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். என்னதான் திறமையாகப் பாடம் நடத்தினாலும் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இக்காலத்தில் மிகவும் கடினம். 

சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் வரும்போதே மாணவர்களது முகத்தில் குதூகலம் தெரிவதைக் கண்டிருக்கிறோம். அதே சமயம் சில பரம சாதுவான ஆசிரியர்கள் வந்தால் கூச்சல் போடுபவர்களையும் பார்க்கிறோம். மதிப்பும் மரியாதையும் அவர்கள் வாயைத் திறந்து பாடம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தானாகவே ஏற்படுவது. அவர்கள் கற்பித்த பாடத்தைக் கேட்டு அமைதியாக மணி ஒலிக்கும் வரை இருக்கும் மாணவர்களைக் காணும் போது அந்த ஆசிரியரைப் பாராட்டவே தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்கள் எதையும் எதிர்பார்க்காதவர்கள். வீண் பேச்சைத் தவிர்ப்பவர்கள். மாணவர்கள் நலன் ஒன்றையே கருதி அவர்களை உயர்த்த முயற்சிப்பவர்கள். 

தக்ஷிணாமூர்த்தியாக இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றியபோது சனகாதி முனிவர்கள் பெருமானது சின்முத்திரையைப் பார்த்த மாத்திரத்தில் தெளிவு பெற்றதாகத் திருவிளையாடற்புராணம் கூறுகிறது. பெருமான் தனது திருவாயைத் திறக்காமல் சின்முத்திரை காட்டியே உபதேசம் செய்தார் .

கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை, ஆறங்கம், ஆகியவற்றில் வல்ல நான்கு முனிவர்களுக்கும் வாக்குக்கு அப்பாற்பட்ட பரிபூரண மௌன நிலையில் , அனைத்துமாகி அதே சமயம் அல்லதுமாகி எல்லாப் பொருள் உண்மைகளையும் தனது சின் முத்திரையால் காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நாமும் நினைந்து இப்பிறவித்  தொடரை வெல்வோமாக என்று  அப்புராணத்தில் வரும் பாடல் இதையே காட்டுகிறது. 

அறுபதுகளில் ஆறாண்டுகள் எனது தாயாரது பெற்றோரிடம் தங்கி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில்  படித்துக் கொண்டிருந்தபோது  வகுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீ நாக சுப்பிரமணிய அய்யர் அவர்கள். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளமே பெற்று வந்தார்கள். வீட்டு வாடகைக்கும் பிற செலவுகளுக்கும் அது போதாததாக இருந்தது.அப்படிப்பட்ட வறுமையிலும் மிகக் கடினமாக உழைத்த உத்தமர்கள் அவர்கள். ஒருநாள் அவருக்கு வறுமையின் கொடுமை மேலும் பாதிக்கவே, வகுப்பறையில் மாணவர்களாகிய எங்களிடம் தழுதழுத்த குரலில், " நான் மிகவும் வறுமையால் கஷ்டப் படுகிறேன். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பன்னிரண்டு ரூபாய் கடனாக வாங்கித் தர முடியுமா " என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்தது. எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. 

எனது பெற்றோர்கள் சென்னையிலிருந்து வரும்போது எனக்கு ஒரு ருபாய் கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம். ஏதாவது தின் பண்டங்கள் வாங்கிச் சாப்பிடட்டும் என்பதற்காக அப்படிக் கொடுத்து வந்தார்கள். ஆனால் நானோ அதைச்  செலவழிக்காமல் ஒரு டப்பியில் போட்டு வைத்திருந்தேன். ஆசிரியருக்கு அதிலிருந்து எடுத்துக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது.   டப்பியிலும் அவர் கேட்ட அளவு சில்லரை இருந்தது. மறு நாள் அதை எடுத்துக் கொண்டு ( வீட்டில் யாரிடமும் சொல்லாமலே) பள்ளிக்குச் சென்றேன். அதைக் கொடுக்கும் முடிவை சக மாணவர்களிடம் சொன்னபோது அவர்கள் என்னைத் தடுத்தனர். " கொடுத்தால் திரும்பி வராது. பட்டை நாமம் தான் " என்றார்கள். நானோ, " எதற்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் ? ஆசிரியருக்கு நமது பாத காணிக்கையாக இருக்கட்டுமே"  என்றேன். அவர்களோ ஏளனம் செய்தனர். அது என்னைப் பாதிக்கவில்லை. ஆசிரியரின் வருகைக்காகக் காத்திருந்தேன். மணி ஒலித்ததும் ஆசிரியர், சோர்ந்த முகத்துடன் வகுப்பில் நுழைந்தார். அவர் அமர்ந்தவுடன் அவர் அருகே சென்று அந்த பன்னிரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவரிடம் கொடுத்தேன். உடனே எனது இரு கரங்களையும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார். அவரை எப்படிச்  சமாதானம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவாறு சமாதானம் அடைந்த ஆசிரியர், " உன்னுடைய இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீ வாழ்நாளில் நன்றாக இருப்பாய். இந்தப் பணத்தைக் கண்டிப்பாக அடுத்த மாதம் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் முன்போலவே ஏளனம் செய்தனர். " விடாதே இந்த மாதம் போய் அவரிடம் திருப்பித் தரும்படி கேள் " என்று தூண்டி விட்டார்கள். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "அவருக்கு எப்போது முடியுமோ அப்போது கொடுக்கட்டும். இல்லாவிட்டாலும் நான் முன் சொன்னபடி அதைக் குரு  காணிக்கை என்று நினைத்துக் கொள்கிறேன்" என்றேன். ஆனால் ஆசிரியருக்கோ தன்னால் திருப்பித் தர முடியவில்லையே என்ற எண்ணம் இருந்து வந்தது. துக்கம் தொண்டையை அடைக்கும்படி அவரே ஒருநாள் இதைக் கூறி விட்டார். அதற்குப் பிறகும் அவரை மேலும் வருந்தச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசி வரை அவரிடம் அது பற்றிப்  பேசவே இல்லை. ஆனால் பிறவி எடுத்ததன் பலனைப் பெற்று விட்டது போன்ற உணர்வு அன்றுமுதல் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது. அவரை இன்றும் நினைத்து நெகிழ்ந்து ஆசிரியர் தினத்தன்று  அஞ்சலி செய்வதல்லால் அவருக்கு இந்த அற்பன் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும் ?  


   

Thursday, September 3, 2020

தகவல் அறிய முன்வருவோமா ?


 பொதுவாகவே நம் மக்களுக்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. சட்ட நுட்பங்கள் தெரியாவிட்டாலும் சட்டத்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகக் கூடத்  தெரிவதில்லை. அதே நேரத்தில் அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்து நீதியின் முன் நிறுத்தப்படும்போது எனக்குச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றால் சட்டம் நம்மை மன்னிக்காது. நம்மைச் சுற்றிலும் பல குற்றங்கள் நடக்கும்போதும் சட்ட வல்லுனர்களும் காவல் துறையும் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடுகிறோம். பள்ளிகளில் சட்டத்தின் அடிப்படைகளையாவது வாழ்க்கைக்குப் பயன் படும் அளவில் கற்பிக்கலாம். அரசின் கட்டுப்பாட்டில் கல்வி, காவல், நீதி ஆகியவை இருக்கும்போது ஆட்சியாளர்களின் கொள்கைகள் அவற்றில் புகுத்தப்பட்டு அதுவே சட்டமும் ஆகி விடுகிறது. 

இந்து அறநிலையத் துறை எதற்கு என்று அதைச் சட்டம் ஆக்கிப் பல ஆண்டுகள் கேள்விகளை எழுப்பாமல் இப்போது எழுப்பத்  தொடங்கியுள்ளனர். எந்த வழக்கும் அவ்வளவு எளிதில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் அறநிலையத் துறையயைப் பற்றி யார் கவலைப் படப்  போகிறார்கள்? அந்த தைரியத்தில் தான் அக்கிரமங்கள் தொடர்கின்றன. வழக்குத் தொடுத்தால் தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டுமோ தெரியாது.

இந்து அற  நிலையத்துறை  பற்றிய சட்டத்தைப் படித்தவர்களுக்காவது அதை எடுத்துக் காட்டி வழக்காடத் தோன்றவில்லை இத்தனை காலமும். இதற்கு இப்போதாவது ஒரு சிலர் முன் வந்து நீதி மன்றத்தை நாடியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தி ஆகும். தகவல் அறியும் சட்டம் என்று ஒன்று இருப்பதே அநேகருக்குத் தெரிவதில்லை. அதன் மூலமாகவாவது விவரங்களை அறியவும் அதற்கேற்ப வழக்குத் தொடுக்கவும் முடியும். ஆனால் வழக்குக்கான செலவை யாரும் ஏற்கத்  தயங்குவதால் விடியும்  காலம் அவ்வளவு எளிதில் உதயமாகும் என்ற நம்பிக்கை ஏற்படுவதில்லை. 

ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெறும் வாயால் புலம்பிக்கொண்டு இருந்து கொண்டு அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க முன்வருவதில்லை. மடாலயங்களும், வசதி படைத்த ஆத்திகர்களும் முன் வரலாம். அதுகூட இத்தனை ஆண்டுகளும் நடக்காதபோது ஏழை அடியார்கள் இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?   அவரவர்களுக்கு அவரவர் கவலை. தங்களை எக்காலத்திலும் பாதுகாத்துக்  கொள்வதே அவர்களது கவலை. 

ஆத்திக உலகம் ஒன்றுபட்டால் ஒழிய இந்நிலை மாற வாய்ப்பே இல்லை. அறநிலையத்துறைக்கு மாற்று ஒன்று அமையும் வரை இறைவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விடப்போகிறார்களா? மற்றொரு அமைப்பை மக்களே வகுத்துக் கொண்டு கோயில்களையும் அவற்றின் உடைமைகளையும் பாதுகாக்க முடியாதா ? அந்த அமைப்பில் சட்ட வல்லுநர்கள் இடம் பெற்றால் வாதிடுவதற்குச்  செலவழிக்க வேண்டுமே என்ற கவலை இருக்க முடியாது அல்லவா ? அவ்வல்லுனர்களும் மகேசன் பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்யும் புண்ணியம் பெறலாமே. 

இந்து அற  நிலையத்துறையின்  கீழ் தற்போது 44120 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 36000 கோயில்களுக்கு ஆண்டு வருமானம் ரூ 10000 கூட இல்லை என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அத்தனை கோயில்களுக்கும் நிலங்களும் கட்டிடங்களும் இருந்தும் இவ்வளவு வருமானம் தான் வருகிறது என்றால் இதற்கு யார் காரணம்? பொறுப்பு ஏற்காத வரை அற நிலையத்துறை எதற்கு என்று கேட்பது நியாயம் தானே ! 

உண்டியல் முதலியவற்றால் பண மழை கொட்டியபோதிலும் வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் இத்துறையால் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் பணி  செய்பவர்களுக்கோ அற்ப சம்பளமும் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை. அந்த அப்பாவிகள் உருட்டல்களையும் மிரட்டல்களையுமே சந்தித்து வருகிறார்கள்.   அதிகார துஷ்பிரயோகமும், ஊழல்களும் சிலை கடத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் தொடர் கதைகள் ஆகி விட்டன. 

கூடிய சீக்கிரமே இறை சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி இதற்கான செயல் முறையை வகுக்க வழி காண வேண்டும். நீதி மன்றத் தீர்ப்பு வரும்வரை இன்னும் எத்தனை முறைகேடுகள் நடைபெறுமோ  தெரியவில்லை. அதைத் தடுப்பதற்காகவாவது மற்ற வேலைகளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.செய்வார்களா? ( செய்யத் துவங்குவோமா என்று கேட்பதே பொருத்தம் )  ஒவ்வொரு ஊர் மக்களும் தகவல் அறியும் சட்டம் மூலம் அந்தந்தக் கோயில்கள் பற்றிய விவரங்களை அறிய முன்வர வேண்டும். அப்போதாவது நல்ல காலம் பிறக்குமா என்று பார்ப்போம். இறைவன் துணை நிற்பான்.