Tuesday, April 21, 2015

சிலை பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்

வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் கோயில் மூலவர்களையும் உற்சவர்களையும் தேவ கோஷ்டங்களையும் படத்துடன் செய்தி வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முகநூலில் சில அன்பர்கள் ஆர்வ மேலீட்டால் இவற்றை வெளியிடுகின்றனர். சிலர் போட்டோ ஆல்பமே வழங்குகிறார்கள். கோயில்களில் பாதுகாப்பற்ற நிலை இருக்கும்போது இவற்றை வெளியிட வேண்டாம் என்று கூறினால் அலட்சியம் செய்கிறார்கள். கோயில் விமானங்கள்,கோபுரங்கள் ஆகியவற்றின் படங்களை மட்டும் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம். படங்களைப் போட்டுவிட்டால் மட்டும் என்ன பெரிய பலன் விளைகிறது? அருமை என்று கமெண்ட் போடுவார்கள். இல்லாவிட்டால் லைக் போடுவார்கள். பார்த்ததனால் அக்கோயில்களுக்குப் போவோர் மிகச் சிலரே.

ராமேஸ்வரம் போகும் வழியில் உள்ளது திருவாடானை என்ற சிவஸ்தலம். தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சில நாட்களுக்கு முன் உற்சவ மூர்த்திகள் களவாடப்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியது.எதற்கெல்லாமோ கண்டன ஊர்வலமும்,சாலை மறியலும் நடத்துபவர்கள் இதை மட்டும் கண்டு கொள்ளாதது ஏன்? நாம் சமய உணர்ச்சியே இல்லாத ஜடங்களாக ஆகி விட்டோமா?  களவு போனவை  மீண்டும் கோவிலுக்கே வந்து சேர இறைவனைப் பிரார்த்திக்கும் அதேவேளையில் இதுபோன்ற கொள்ளைகளைத் தடுக்க என்ன செய்திருக்கிறோம் என்று ஆலோசிக்க வேண்டியது முக்கியம். அளவில்  பெரிய இக்கோயி லிலேயே இப்படி நடந்திருக்கும்போது பாதுகாப்பு முழுவதும் இல்லாத கோயில்கள் எம்மாத்திரம்? அரசாங்கத்தைக் கேட்டால் உற்சவர்கள் பாதுகாப்புக்காக பெரிய ஊர்க் கோயில்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று விடுகிறோம் என்பார்கள். இப்படி எல்லாவற்றையும் அன்ன ஆகாரமின்றி வழிபாடின்றி காற்றுப்புகாதபடி ஒரே அறையில் பூட்டி வைப்பதற்காகவா ஊர்தோறும் உற்சவ மூர்த்திகள் செய்து வைத்தார்கள்?

உலகெங்கும் கலைப்பிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு பணத்திமிரால் அவற்றைக் கடத்துபவர்களாலேயே இந்த அக்கிரமம் நடைபெறுகிறது. நட்சத்திர ஹோட்டல்கள் செய்யும் அட்டகாசமோ கொஞ்ச நஞ்சம் இல்லை. விலை ஒரு பொருட்டே இல்லை என்னும்போது திருடப் பட்டவற்றுக்கு விலை பேசி விடுகிறார்கள். இதெல்லாமும் ஒரு பிழைப்பா ? நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். அவர்களுக்கு ஊடகங்களும் பத்திரிகைகளும்,கலைப்பிரியர்களும் தரும் படங்களும் செய்திகளும் துணை செய்யாது என்பது என்ன நிச்சயம்?

சோழ நாட்டுக் கோயில்களில் திருடப்பட்ட பொக்கிஷங்களில் அரசாங்கத்தால் எவ்வளவு மீட்கப்பட்டிருக்கின்றன? திருட்டுக் கும்பலைப் பிடிக்கக் கால நிர்ணயம் ஏன் வரையறுக்கக் கூடாது? இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்போர் யார் என்று ஏன் அடையாளம் காட்டப் படுவதில்லை? தனி நபர் ஒருவர் வெளியூர் சென்றால் போலீஸ் நிலையத்தில் தகவல் சொல்லிவிட்டுப் போனால் பாதுகாப்புத் தருவது போல உள்ளூர்க் கோயிலுக்கும் பாதுகாப்பு ஏன் வழங்கப்படுவதில்லை? அங்குள்ள விக்கிரகங்களுக்கும்,ஆபரணங்களுக்கும், உண்டியல்களுக்கும் யார் பாதுகாப்பு தர முடியும்? கோயில்களுக்கு வருமானத்தை வாங்கித்தராமல் கை விரித்து விட்ட அற நிலையத்துறையே இதற்கும் பொறுப்பு ஏற்குமா? ஒரு கோவிலில் களவு நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பேற்று பணியிலிருந்து விலகுவார்களா? ஆனால் நடப்பது என்ன? கோயில் சிப்பந்திகளின் மீது கை காட்டிவிட்டு விலகிக் கொள்வதை அல்லவா காண்கிறோம் !

ஒவ்வொரு கோயிலிலும் பலத்த பாதுகாப்பு அறை கட்டப்பெற்று அதில் உற்சவ விக்ரகங்கள் பாதுகாக்கப் பட வேண்டும். அவற்றுக்குத் தொங்கும் பூட்டு அமைப்பதால் எந்த உபயோகமும் இல்லை. தொட்டிப்பூட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். இரவு நேரக் காவலாளியும்,பாதுகாப்பு அலாரமும் இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று பொறுப்பான நபர்கள் வெவ்வேறு    சாவிகளைக் கொண்டே பாதுகாப்பு அறைப் பூட்டைத் திறக்கும்படி செய்ய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது துணை கமிஷனர் நேரில் வந்து பார்வையிட்டுத் தணிக்கை செய்து அறிவிப்பை அறநிலையத்துறைக்கு அனுப்ப வேண்டும்.   
             
மேற்கூறியவை எல்லாம் நடக்கக் கூடியவைகளா என்று சந்தேகம் எழத்தான் செய்யும். காலம் தாழ்த்துவதால் மேன்மேலும் திருட்டுக்கள் நடந்துவிட்டுப்போகட்டும் என்று நாமே அசிரத்தையாக இருப்பதாகத்தானே அர்த்தம் ? தஞ்சை மாவட்டத்தில் ஒரு காலத்தில் தோப்பு க்களில் இரவு நேரத்தில் திருட்டுப் போவதைக் கண் காணிக்க ஊரார் தங்களுக்குள் ஒரு முறை போட்டுக் கொண்டு ஒரு குழுவாகக் கையில் டார்ச்சும்,கைத்தடியும் ஏந்தி ரோந்து வருவார்கள். தில்லையில் கோயிலுக்குள் இரவு நேரக் காவல் செய்வதை ஒரு கைங்கர்யமாக தீட்சிதர்களே ஏற்று நடத்தியதைக் கண்டிருக்கிறோம். அதேபோல் ஊரார் சிலராவது கண்காணிப்பு மேற்கொள்வது நல்லது. நம் தெய்வங்கள் கோயிலைத்தான் அலங்கரிக்க வேண்டும். மாறாக மியூசியங்களையும்,வரவேற்பு அறைகளையும், ஹோட்டல்களையும் அலங்கரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.         


1 comment:

  1. Very sad to inform u, almost everyday we can see in newspapers"" idols theft""not only panchalokam,stone vigraharams also,,,,if we visit any village we can hear this,,,

    ReplyDelete