கும்பகோணம் என்றவுடனேயே அப்பெயருக்குக் காரணமான
கும்பேசுவரரின் கோயிலும் மகா மகத் திருவிழாவும் நினைவுக்கு வரும். இங்கு நடக்கும்
சப்த ஸ்தானப் பல்லக்கு உற்சவமும் பிரசித்தமானது. அலங்கரித்த பல்லக்கில் சுவாமியும்
அம்பிகையும் குடந்தையைச் சுற்றியுள்ள எழூர்களுக்கு விஜயம் செய்யும் இந்த விழா சென்ற
ஆண்டு நின்று விட்டதாகவும், இந்த மகா மக ஆண்டிலும் நடைபெறாமல் கைவிடப்பட்டு
விட்டதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த சிவத் தொண்டரும் ,நமது முக நூல் அன்பருமான ஒருவர்
வருத்தம் தெரிவித்திருந்தார். இது நமக்கு மட்டும் அல்ல. சைவ உலகிற்கே
அதிர்ச்சியைத் தரும் செய்தி.
பல்லக்கு பழுது பார்க்க வேண்டிய நிலையில்
இருப்பதாகத் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் அதனைச் சரி செய்யாமல் உற்சவத்தையே
நிறுத்திவிடுவது எந்த வகையில் நியாயம்? நிதி நிலைமை போதுமானதாக இல்லை என்றும்
சொல்வதற்கில்லை. கோயில் நகரமான இதற்கு நாள் தோறும் யாத்ரீகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
நவக்கிரக பரிகாரத் தலங்களில் சில இதற்கு அண்மையில் இருப்பதால் குடந்தையைத் தங்கும்
இடமாகக் கொண்டு அப்படியே இங்குள்ள கோயில்களையும் தரிசிக்க வருகிறார்கள்.
நவராத்திரி தினங்களில் பிராகாரத்தில் முளைக்கும் கடைகளையும், சிறுவர்களுக்கான
விளையாட்டுக்களையும் பார்க்கும்போது ஏதோ பொருட்காட்சிக்கு வந்து விட்டதுபோலத்
தோன்றும். அதில் கோயிலுக்கு வரும் வருமானம் கணிசமாகவே இருக்கும். அப்படியும், பல்லக்கைப்
பழுது பார்க்கவில்லை என்று சொன்னால் அலட்சியம் என்பதைத்தவிர என்ன சொல்வது!
இப்பகுதியில் உள்ள நல்லூர், திருநீலக்குடி,சக்கரப்பள்ளி
போன்ற சிறிய கிராமங்களிலும் சப்த ஸ்தான உற்சவம் நடைபெறும்போது கும்பேசுவர சுவாமியின்
விழாவை நிறுத்துவது முறையல்ல. திருவையாற்று சப்த ஸ்தானங்களில் ஒன்றான
திருச்சோற்றுத்துறையிலும் பல்லக்கு பழுதாகி இருந்தது கண்டு, அக்கோயில் பரம்பரை
டிரஸ்டி, பெரும் முயற்சி மேற்கொண்டு அன்பர்கள் உதவியோடு புதிய பல்லக்கை ஏற்பாடு
செய்தும் அதற்காகக் கோயிலைச் சுற்றி வரும்
பாதையை அமைத்தும் சைவ உலகிற்குப் பேருபகாரம் செய்தார்கள். அப்பல்லக்கு சென்ற ஆண்டு
சப்த ஸ்தான விழாவில் பவனி வந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. திருவாவடுதுறை
ஆதீன 23
வது மகா சந்நிதானமாக இருந்தவர்கள், ஆதீனக் கோயில்களில்
நின்றுபோயிருந்த உற்சவங்களை மீண்டும் துவக்கியும், பிற கோயில்களில் நடராஜர்
அபிஷேகம் செய்ய உதவியும் அன்ன தானம் செய்தும் கருணை பாலித்தார்கள்.
கும்பேசுவர சுவாமி கோயிலில் அறநிலையத்துறை
அலுவலகம் இருந்தும் அதன் பார்வையில் இதெல்லாம் ஏன் படுவதில்லை என்று புரியவில்லை.
ஆளுயர உண்டியல் வைத்துப் பொருள் ஈட்டுவதுதான் நோக்கமா? இவ்வளவு பெரிய கோயிலுக்கே
இந்த நிலை என்றால் கிராமத்துக் கோயில்களை நிர்வாக அதிகாரிகள் ஆண்டில் எத்தனை முறை
திரும்பிப் பார்ப்பார்கள் ? நில வருவாயைக் குத்தகைக் காரர்களிடமிருந்து
வசூலிக்காமலும், திருவிழாக்களை நடத்தாமல் நன்கொடையாளர்கள் தலையில் கட்டி விட்டு
நமக்கேன் என்று இருப்பதற்கு அறநிலையத்துறை எதற்கு என்றுதான் கேட்க வேண்டி
இருக்கிறது. கோயிலுக்குள் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு ஆயிரமாயிரங்கள் சம்பாதிக்கும்
அதிகாரிகள் பதில் சொல்லட்டும். திருப்பணியிலும் சுமார் தொண்ணூறு சதவீதத்தை
நன்கொடையாளர்களே எற்கிறார்கள். ஆனால் அனுமதி மட்டும் இவர்கள் வழங்க வேண்டுமாம் !!
இவர்கள் பெயர்களை ஒன்று விடாமல் பத்திரிகையில் போட வேண்டுமாம். அன்னதானமும்
நன்கொடையாளர்களது பங்குதான். கோயில் மரியாதை மட்டும் ஒன்று விடாமல் வாங்கிக் கொள்ள
முன் வந்து விடுவார்கள்.
இனியும் அறநிலையத்துறையை நம்பிப் பயன் இல்லை.
திருப்பணியை எவ்வாறு நன்கொடையாளர்களே ஏற்கிறார்களோ அவ்வாறு உற்சவங்களையும்
ஏற்றுத்தான் ஆக வேண்டும். கும்பகோணத்தைப் பொறுத்தவரையில் இது சாத்தியமே.
இந்நகரிலும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மடாலயங்கள் ஏன் மனம் வைத்து
முன் வரவில்லை என்று தெரியவில்லை. வியாபாரத்தலமாக இருந்தும் இவ்விழா தடைப்பட்டுப்
போவானேன்? சென்ற நூற்றாண்டில் குடந்தை நாகேச்வர சுவாமி ஆலயத்தைத் தான் ஒருவராகவே
திருப்பணி செய்த பாடகச்சேரி சுவாமிகளைப் போல இன்று யாருமே இல்லையா? அவரைப்போல வீதி
வீதியாகச் சென்று “ சிவ தர்மம் “ என்று சொல்லி உதவி கேட்காவிட்டாலும்
உரியவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்யக்கூடவா முடியாமல் போய் விட்டது? அவமானமும்
வெட்கமும் பட வேண்டிய விஷயம். கும்பேசப் பெருமானது அருள் எந்த அடியாருக்குக் கிடைக்க இருக்கிறதோ ,நாம்
அறியோம்.
No comments:
Post a Comment