Sunday, April 12, 2015

நகரத்தார் தொண்டு

திருக்களர் கோயிலும் பாடசாலையும் 
தஞ்சை-திருச்சி மாவட்டங்களில் வேத பாடசாலைகளும், ஆகம பாடசாலைகளும், தேவார பாடசாலைகளும் பல இடங்களில் நடந்து வந்தன. அவற்றில் சில மடாலயங்களின் நேரடிப் பார்வையில் இயங்கி வந்தன. இது மட்டுமல்லாமல் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் அமைத்துக் கொடுத்த பாட சாலைகளும் இருந்தன. நகரத்தார்களது சிவபக்தியை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்தக்காலத்திலேயே லக்ஷக் கணக்கான ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்தார்கள். மலைகள் இல்லாத தஞ்சை மாவட்டக் கோயில்களுக்குக் கருங்கற்களை புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து அத்திருப்பணிகளைச் செய்தார்கள். சோழ மன்னர்களுக்கு அடுத்தபடியாக சிவாலயத் திருப்பணி செய்த பெருமை நகரத்தார்களுக்கு உண்டு என்று காஞ்சிப் பெரியவர்களே புகழ்ந்து வாழ்த்தியிருக்கிறார்கள். இந்த பரோபகாரத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.

மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள திருக்களர் என்ற சிவ ஸ்தலத்தில் நகரத்தாரின்  சிவத் தொண்டை நன்றியுடன் குறிப்பிடுகிறோம். ஸ்ரீ பாரிஜாத வனேசுவர சுவாமி கோயிலின் கருங்கல் திருப்பணி மட்டுமல்லாமல்,திருக்குளத் திருப்பணி, தேர் திருப்பணி ஆகியவற்றையும் செய்திருக்கிறார்கள். அதை மனதாரப் பாராட்டுவதற்காகவாவது சிவ பக்தர்கள் ஒரு முறையாவது திருக்களருக்குச் சென்று வர வேண்டும். 

இன்னொரு மகத்தான தொண்டையும் நகரத்தார்கள் இங்கு செய்திருக்கிறார்கள். சுவாமி சன்னதித் தெருவில் இரண்டு புறமும் வேத பாட சாலைகளையும் வெளி வீதியில் தேவார பாட சாலையும் அமைத்துள்ளனர். ஒவ்வொரு பாடசாலையும் ஒரு பெரிய வீடு என்று சொல்லலாம். எல்லா ஊர்களிலும் பாடசாலைகளுக்கு நேர்ந்துள்ள கதி இவ்வூரையும் விட்டு வைக்கவில்லை. அவை பூட்டப்பட்டுக் காட்சி அளிப்பதைக் கண்டால் கலியுகக் கொடுமை இதுதானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.இப் பாரம்பர்யத்தைப் புறக்கணித்து விட்டு வேலைக்காக நகரங்களையும் வெளி நாடுகளையும் நோக்கிச் சென்றுள்ளவர்கள் தங்களின் மூதாதையர் வசித்த கிராமம் நம் கண் முன்னால் நசித்துப் போவதை அனுமதிக்கலாமா? வசதி படித்தவர்களது கவனத்திற்கு இதனை விட்டு விடுகிறோம். வசதி அற்றவர்களும் ஆண்டுக்கொருமுறையாவது தங்கள் பூர்வீக கிராமத்திற்கு வருகை தந்து தங்களால் ஆன உதவியை செய்யலாம். எதற்கும் மனம் வர வேண்டுமே!!

தற்சமயம் பல கிராமங்களில் வீடுகள் கை மாறி விட்டன. எஞ்சியுள்ள சில வீடுகளும் இடிந்தும் மரங்கள் முளைத்தும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. விற்பனைக்காக தேதி குறிப்பிட வேண்டியதுதான் பாக்கி. எந்த கிராமத்திலும் மறுபடியும் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் திரும்பி வருவது என்பது துர்லபமாகவே தோன்றுகிறது. இதனால் முதலில் பாதிக்கப்பட்டது அங்கு உள்ள கோயில்களும் அவற்றை நம்பி உள்ள அர்ச்சகர்களுமே. எல்லோரும் வெளியேறிய பிறகும் கோயில் பூஜையைத் தொடர்ந்து செய்து வருபவர்களைப் பாராட்டினால் மட்டும் போதாது. அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து உதவலாமே! இல்லாவிட்டால் பிறரைப்போல அவர்களும் ஊரை விட்டு நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். பாரம்பர்யத்தைப் பற்றிப்  பேசினால் மட்டுமே போதாது. செயலிலும் காட்ட வேண்டும். அரசாங்கம் செய்யத் தவறியவற்றை மக்கள் செய்யலாம் அல்லவா? 

No comments:

Post a Comment