Tuesday, April 28, 2015

நேபாளத்தில் துயரம்

நேபாளத்தில் நடந்துள்ள நிலநடுக்கத்தில் மூவாயிரத்திற்கும் மேலான சகோதர-சகோதரிகள்  இடிபாடுகளால் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. மேலும் பழங்காலக் கலைச்சின்னங்களும் இந்துக் கோயில்களும் இடிந்து விட்டன என்றும் அறிகிறோம். எத்தனையோ குடும்பங்கள் வீடுகளையும் உற்றார்களையும் இழந்து நடுவீதிகளில் தவிக்கும் படங்களைக் காணும்போது சொல்லமுடியாத துயரம் ஏற்படுகிறது. நேபாள மக்களுக்கு இந்த அதிர்ச்சி , மனத்தை விட்டு  நீங்கமுடியாத சோகமாக ஆகிவிட்டது.

இந்தியாவிலும் இதன் தாக்கத்தால் அறுபது பேருக்கும் மேலானவர்கள் உயிர் இழந்துள்ளார்கள். நேபாளத்தின் துயரத்தில் நமக்கும் பங்கு உண்டு. இரு நாடுகளுக்கும் ஒருமித்த கலாசாரம் உண்டு.ஆகவே,இத்துயர சம்பவம் நடந்த அன்றே , நமது அரசாங்கம் அந்நாட்டிற்குத் தேவையான  உதவிகளைச் செய்ய முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டியதும் நேபாள மக்களுக்கு ஆறுதலை அளிப்பதுமான செயல்.

உயிரிழந்தோருக்காக நாட்டின் பல பாகங்களிலும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்நாட்டு மக்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும், நம்மாலான உதவிகளை அப்பரிதவிக்கும் மக்களுக்குச் சேரும்படி செய்ய வேண்டியது அவசியம். பிற நாடுகளின் உதவியை நேபாளம் எதிர்நோக்கி இருக்கும் இந்த வேளையில் இந்தியா முன்னின்று உதவ வேண்டும்.

ஆயிரக்கணக்கான பொது நலத் தொண்டர்கள் நேபாளம் விரைந்துள்ளனர் என்பது ஆறுதலான செய்தி. நேரில் சென்று உதவுவதுபோல் பணத்தால் செய்து விட முடியாது. இப்புண்ணி யச் செயலில் ஈடுபடுவோரைக் குறை சொல்லுபவர்களும் உளர். அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். நம்மால்தான்  செய்ய முடியவில்லை. செய்பவர்களையும் குறை சொல்வானேன்? அவர்கள் தங்களது சொந்தக் காசை செலவழித்துக் கொண்டு துயர்  துடைக்கச் செல்கிறார்கள். நம்மில் அதுபோலப் பணத்தையும் நேரத்தையும், குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து விட்டுச்  சமூகப் பணி  செய்பவர்  இல்லையே! இதைக் கூடவா அரசியலாக்க வேண்டும் ? உலகில் குறையே இல்லாதவர்கள்  யார்? புண்ணியவான்களே, தயவு செய்து நிலைமையைப் புரிந்து கொண்டு பேசுங்கள்.

மற்ற நாட்களில்தான் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவதில்லை. இந்தத் தருணத்திலாவது நமது இலட்சாதிபதிகளும் கோடீசுவரர்களும் மனம் இரங்கி உதவலாம் அல்லவா? உடலை விட்டு உயிர் போகும்போது அவர்கள் சேர்த்து வைத்த  கோடிகள் கூட வரப்போவதில்லை.     இருக்கும்போதே செய்யும் தருமம் தான் அவர்களது தலைமுறையைக்காக்கும். கோடிகளில் புரளும் நமது தொழிலதிபர்களும், திரைப்படத் துறை செல்வந்தர்களும்  , கிரிகெட் ஆட்டக்காரர்களும்,ஊடகங்களும்  மனம் வைத்தால் இடிந்த வீடுகளையும் கோயில்களையும் மீண்டும் புதுப்பிக்கலாம். அதனைப் பொறுப்பான ஒரு அமைப்பு முன்வந்து பொறுப்புடன் செயல் படுத்த வேண்டும்.

பஞ்சாப் ,டெல்லி மாநிலங்கள் தினமும் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களை அனுப்புகின்றன. விபத்தில் காயமுற்றோருக்கு மருந்து கம்பெனிகளும்,மருத்துவ மனைகளும் தேவையான மருந்துப் பொருள்களையும் உபகரணங்களையும் தந்து உதவலாம். சுனாமி தாக்கியபோது வீடுகளைக் கட்டித் தந்தவர்கள் இதற்கும் அதே வகையில் உதவி செய்யலாம். சாமானியர்களும் தங்களால் முடிந்த  தொகையையோ, பொருள்களையோ  தந்து உதவ முடியும். இதை எல்லாம் சொல்ல வேண்டியவர்கள் சொன்னால் எளிதாக நடைபெற்று விடும். விளம்பரம் பெறும் நோக்கத்தோடாவது உதவி செய்ய முன் வருவார்கள். எந்த விதத்திலாவது பாதிக்கப்பட்டோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால்  சரி. எதுவும் செய்யாமல் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. பிரார்த்தனையும் முக்கியம் தான். அதோடு உதவிக்கரம் நீட்டுவதும் முக்கியம் தானே?

Tuesday, April 21, 2015

சிலை பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்

வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் கோயில் மூலவர்களையும் உற்சவர்களையும் தேவ கோஷ்டங்களையும் படத்துடன் செய்தி வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முகநூலில் சில அன்பர்கள் ஆர்வ மேலீட்டால் இவற்றை வெளியிடுகின்றனர். சிலர் போட்டோ ஆல்பமே வழங்குகிறார்கள். கோயில்களில் பாதுகாப்பற்ற நிலை இருக்கும்போது இவற்றை வெளியிட வேண்டாம் என்று கூறினால் அலட்சியம் செய்கிறார்கள். கோயில் விமானங்கள்,கோபுரங்கள் ஆகியவற்றின் படங்களை மட்டும் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம். படங்களைப் போட்டுவிட்டால் மட்டும் என்ன பெரிய பலன் விளைகிறது? அருமை என்று கமெண்ட் போடுவார்கள். இல்லாவிட்டால் லைக் போடுவார்கள். பார்த்ததனால் அக்கோயில்களுக்குப் போவோர் மிகச் சிலரே.

ராமேஸ்வரம் போகும் வழியில் உள்ளது திருவாடானை என்ற சிவஸ்தலம். தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சில நாட்களுக்கு முன் உற்சவ மூர்த்திகள் களவாடப்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியது.எதற்கெல்லாமோ கண்டன ஊர்வலமும்,சாலை மறியலும் நடத்துபவர்கள் இதை மட்டும் கண்டு கொள்ளாதது ஏன்? நாம் சமய உணர்ச்சியே இல்லாத ஜடங்களாக ஆகி விட்டோமா?  களவு போனவை  மீண்டும் கோவிலுக்கே வந்து சேர இறைவனைப் பிரார்த்திக்கும் அதேவேளையில் இதுபோன்ற கொள்ளைகளைத் தடுக்க என்ன செய்திருக்கிறோம் என்று ஆலோசிக்க வேண்டியது முக்கியம். அளவில்  பெரிய இக்கோயி லிலேயே இப்படி நடந்திருக்கும்போது பாதுகாப்பு முழுவதும் இல்லாத கோயில்கள் எம்மாத்திரம்? அரசாங்கத்தைக் கேட்டால் உற்சவர்கள் பாதுகாப்புக்காக பெரிய ஊர்க் கோயில்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று விடுகிறோம் என்பார்கள். இப்படி எல்லாவற்றையும் அன்ன ஆகாரமின்றி வழிபாடின்றி காற்றுப்புகாதபடி ஒரே அறையில் பூட்டி வைப்பதற்காகவா ஊர்தோறும் உற்சவ மூர்த்திகள் செய்து வைத்தார்கள்?

உலகெங்கும் கலைப்பிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு பணத்திமிரால் அவற்றைக் கடத்துபவர்களாலேயே இந்த அக்கிரமம் நடைபெறுகிறது. நட்சத்திர ஹோட்டல்கள் செய்யும் அட்டகாசமோ கொஞ்ச நஞ்சம் இல்லை. விலை ஒரு பொருட்டே இல்லை என்னும்போது திருடப் பட்டவற்றுக்கு விலை பேசி விடுகிறார்கள். இதெல்லாமும் ஒரு பிழைப்பா ? நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். அவர்களுக்கு ஊடகங்களும் பத்திரிகைகளும்,கலைப்பிரியர்களும் தரும் படங்களும் செய்திகளும் துணை செய்யாது என்பது என்ன நிச்சயம்?

சோழ நாட்டுக் கோயில்களில் திருடப்பட்ட பொக்கிஷங்களில் அரசாங்கத்தால் எவ்வளவு மீட்கப்பட்டிருக்கின்றன? திருட்டுக் கும்பலைப் பிடிக்கக் கால நிர்ணயம் ஏன் வரையறுக்கக் கூடாது? இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்போர் யார் என்று ஏன் அடையாளம் காட்டப் படுவதில்லை? தனி நபர் ஒருவர் வெளியூர் சென்றால் போலீஸ் நிலையத்தில் தகவல் சொல்லிவிட்டுப் போனால் பாதுகாப்புத் தருவது போல உள்ளூர்க் கோயிலுக்கும் பாதுகாப்பு ஏன் வழங்கப்படுவதில்லை? அங்குள்ள விக்கிரகங்களுக்கும்,ஆபரணங்களுக்கும், உண்டியல்களுக்கும் யார் பாதுகாப்பு தர முடியும்? கோயில்களுக்கு வருமானத்தை வாங்கித்தராமல் கை விரித்து விட்ட அற நிலையத்துறையே இதற்கும் பொறுப்பு ஏற்குமா? ஒரு கோவிலில் களவு நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பேற்று பணியிலிருந்து விலகுவார்களா? ஆனால் நடப்பது என்ன? கோயில் சிப்பந்திகளின் மீது கை காட்டிவிட்டு விலகிக் கொள்வதை அல்லவா காண்கிறோம் !

ஒவ்வொரு கோயிலிலும் பலத்த பாதுகாப்பு அறை கட்டப்பெற்று அதில் உற்சவ விக்ரகங்கள் பாதுகாக்கப் பட வேண்டும். அவற்றுக்குத் தொங்கும் பூட்டு அமைப்பதால் எந்த உபயோகமும் இல்லை. தொட்டிப்பூட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். இரவு நேரக் காவலாளியும்,பாதுகாப்பு அலாரமும் இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று பொறுப்பான நபர்கள் வெவ்வேறு    சாவிகளைக் கொண்டே பாதுகாப்பு அறைப் பூட்டைத் திறக்கும்படி செய்ய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது துணை கமிஷனர் நேரில் வந்து பார்வையிட்டுத் தணிக்கை செய்து அறிவிப்பை அறநிலையத்துறைக்கு அனுப்ப வேண்டும்.   
             
மேற்கூறியவை எல்லாம் நடக்கக் கூடியவைகளா என்று சந்தேகம் எழத்தான் செய்யும். காலம் தாழ்த்துவதால் மேன்மேலும் திருட்டுக்கள் நடந்துவிட்டுப்போகட்டும் என்று நாமே அசிரத்தையாக இருப்பதாகத்தானே அர்த்தம் ? தஞ்சை மாவட்டத்தில் ஒரு காலத்தில் தோப்பு க்களில் இரவு நேரத்தில் திருட்டுப் போவதைக் கண் காணிக்க ஊரார் தங்களுக்குள் ஒரு முறை போட்டுக் கொண்டு ஒரு குழுவாகக் கையில் டார்ச்சும்,கைத்தடியும் ஏந்தி ரோந்து வருவார்கள். தில்லையில் கோயிலுக்குள் இரவு நேரக் காவல் செய்வதை ஒரு கைங்கர்யமாக தீட்சிதர்களே ஏற்று நடத்தியதைக் கண்டிருக்கிறோம். அதேபோல் ஊரார் சிலராவது கண்காணிப்பு மேற்கொள்வது நல்லது. நம் தெய்வங்கள் கோயிலைத்தான் அலங்கரிக்க வேண்டும். மாறாக மியூசியங்களையும்,வரவேற்பு அறைகளையும், ஹோட்டல்களையும் அலங்கரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.         


Sunday, April 19, 2015

குடந்தை ஏழூர் பல்லக்கு உற்சவம் தடைபடலாமா ?

கும்பகோணம் என்றவுடனேயே அப்பெயருக்குக் காரணமான கும்பேசுவரரின் கோயிலும் மகா மகத் திருவிழாவும் நினைவுக்கு வரும். இங்கு நடக்கும் சப்த ஸ்தானப் பல்லக்கு உற்சவமும் பிரசித்தமானது. அலங்கரித்த பல்லக்கில் சுவாமியும் அம்பிகையும் குடந்தையைச் சுற்றியுள்ள எழூர்களுக்கு விஜயம் செய்யும் இந்த விழா சென்ற ஆண்டு நின்று விட்டதாகவும், இந்த மகா மக ஆண்டிலும் நடைபெறாமல் கைவிடப்பட்டு விட்டதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த சிவத் தொண்டரும் ,நமது முக நூல் அன்பருமான ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இது நமக்கு மட்டும் அல்ல. சைவ உலகிற்கே அதிர்ச்சியைத் தரும் செய்தி.

பல்லக்கு பழுது பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் அதனைச் சரி செய்யாமல் உற்சவத்தையே நிறுத்திவிடுவது எந்த வகையில் நியாயம்? நிதி நிலைமை போதுமானதாக இல்லை என்றும் சொல்வதற்கில்லை. கோயில் நகரமான இதற்கு நாள் தோறும் யாத்ரீகர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நவக்கிரக பரிகாரத் தலங்களில் சில இதற்கு அண்மையில் இருப்பதால் குடந்தையைத் தங்கும் இடமாகக் கொண்டு அப்படியே இங்குள்ள கோயில்களையும் தரிசிக்க வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் பிராகாரத்தில் முளைக்கும் கடைகளையும், சிறுவர்களுக்கான விளையாட்டுக்களையும் பார்க்கும்போது ஏதோ பொருட்காட்சிக்கு வந்து விட்டதுபோலத் தோன்றும். அதில் கோயிலுக்கு வரும் வருமானம் கணிசமாகவே இருக்கும். அப்படியும், பல்லக்கைப் பழுது பார்க்கவில்லை என்று சொன்னால் அலட்சியம் என்பதைத்தவிர என்ன சொல்வது!

இப்பகுதியில் உள்ள நல்லூர், திருநீலக்குடி,சக்கரப்பள்ளி போன்ற சிறிய கிராமங்களிலும் சப்த ஸ்தான உற்சவம் நடைபெறும்போது கும்பேசுவர சுவாமியின் விழாவை நிறுத்துவது முறையல்ல. திருவையாற்று சப்த ஸ்தானங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறையிலும் பல்லக்கு பழுதாகி இருந்தது கண்டு, அக்கோயில் பரம்பரை டிரஸ்டி, பெரும் முயற்சி மேற்கொண்டு அன்பர்கள் உதவியோடு புதிய பல்லக்கை ஏற்பாடு செய்தும் அதற்காகக்  கோயிலைச் சுற்றி வரும் பாதையை அமைத்தும் சைவ உலகிற்குப் பேருபகாரம் செய்தார்கள். அப்பல்லக்கு சென்ற ஆண்டு சப்த ஸ்தான விழாவில் பவனி வந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. திருவாவடுதுறை ஆதீன 23 வது மகா சந்நிதானமாக இருந்தவர்கள், ஆதீனக் கோயில்களில் நின்றுபோயிருந்த உற்சவங்களை மீண்டும் துவக்கியும், பிற கோயில்களில் நடராஜர் அபிஷேகம் செய்ய உதவியும் அன்ன தானம் செய்தும் கருணை பாலித்தார்கள்.

கும்பேசுவர சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அலுவலகம் இருந்தும் அதன் பார்வையில் இதெல்லாம் ஏன் படுவதில்லை என்று புரியவில்லை. ஆளுயர உண்டியல் வைத்துப் பொருள் ஈட்டுவதுதான் நோக்கமா? இவ்வளவு பெரிய கோயிலுக்கே இந்த நிலை என்றால் கிராமத்துக் கோயில்களை நிர்வாக அதிகாரிகள் ஆண்டில் எத்தனை முறை திரும்பிப் பார்ப்பார்கள் ? நில வருவாயைக் குத்தகைக் காரர்களிடமிருந்து வசூலிக்காமலும், திருவிழாக்களை நடத்தாமல் நன்கொடையாளர்கள் தலையில் கட்டி விட்டு நமக்கேன் என்று இருப்பதற்கு அறநிலையத்துறை எதற்கு என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது. கோயிலுக்குள் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு ஆயிரமாயிரங்கள் சம்பாதிக்கும் அதிகாரிகள் பதில் சொல்லட்டும். திருப்பணியிலும் சுமார் தொண்ணூறு சதவீதத்தை நன்கொடையாளர்களே எற்கிறார்கள். ஆனால் அனுமதி மட்டும் இவர்கள் வழங்க வேண்டுமாம் !! இவர்கள் பெயர்களை ஒன்று விடாமல் பத்திரிகையில் போட வேண்டுமாம். அன்னதானமும் நன்கொடையாளர்களது பங்குதான். கோயில் மரியாதை மட்டும் ஒன்று விடாமல் வாங்கிக் கொள்ள முன் வந்து விடுவார்கள்.

இனியும் அறநிலையத்துறையை நம்பிப் பயன் இல்லை. திருப்பணியை எவ்வாறு நன்கொடையாளர்களே ஏற்கிறார்களோ அவ்வாறு உற்சவங்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். கும்பகோணத்தைப் பொறுத்தவரையில் இது சாத்தியமே. இந்நகரிலும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மடாலயங்கள் ஏன் மனம் வைத்து முன் வரவில்லை என்று தெரியவில்லை. வியாபாரத்தலமாக இருந்தும் இவ்விழா தடைப்பட்டுப் போவானேன்? சென்ற நூற்றாண்டில் குடந்தை நாகேச்வர சுவாமி ஆலயத்தைத் தான் ஒருவராகவே திருப்பணி செய்த பாடகச்சேரி சுவாமிகளைப் போல இன்று யாருமே இல்லையா? அவரைப்போல வீதி வீதியாகச் சென்று “ சிவ தர்மம் “ என்று சொல்லி உதவி கேட்காவிட்டாலும் உரியவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்யக்கூடவா முடியாமல் போய் விட்டது? அவமானமும் வெட்கமும் பட வேண்டிய விஷயம். கும்பேசப் பெருமானது அருள்  எந்த அடியாருக்குக் கிடைக்க இருக்கிறதோ ,நாம் அறியோம்.

Wednesday, April 15, 2015

கசப்பும் இனிப்பும்


“ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா “ என்பதெல்லாம் சரிதான். பழந்தமிழர் நாகரிகத்தையும் ,பண்பாட்டையும் நினைக்கும் பொது பெருமிதமாகத்தான் இருக்கிறது. தலை நிமிர நிற்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் படிக்கும்போது ( ? ) பெருமை அடைகிறோம். கபாடபுரம் என்ற மிகப்பழமை வாய்ந்த பகுதி கடலால் பிளவுபட்டு அழிந்தது என்று வரலாறு சொல்லும்போது அந்நிலத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் கர்வம் கூடப் படுகிறோம். ஆனால் இன்றைய நிலையை நோக்கும்போது தலை நிமிர்ந்த காலம் போய், தலை குனிய வைத்து விடுவார்களோ என்ற  அச்சம் ஏற்படுகிறது.

சமீபகாலமாக நாம் நடந்துகொள்ளும் விதம் பாராட்டும் விதமாக இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சுயநல வாதிகளின் பிடியில் நமது தொன்மையான பண்பாடு சிக்கித் தவிக்கிறது. மனம் போனபடி எல்லாம் மாற்றம் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.அதில் முதல் பலி ஆனது விவசாயம். அடுத்தபடியாகக் கல்வி. மூன்றாவதாகக் கலாசாரம். இம்மூன்றும் நமது பண்பாட்டின் அடிப்படைத் தூண்கள். அவை ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. மொத்தமும் ஆடி அழிவதைக் கண் முன்னே காணச் சகிக்காதவர்கள் வேறு இடம் தேடிக் குடிபுக ஆரம்பித்து விட்டனர். இந்த நிலை நீடித்தால் எப்படிப்பட்டவர்கள் எஞ்சுவார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

வெளி மாநிலத்திற்கும்,வெளி நாட்டிக்கும் சென்று திரும்புபவர்கள் அங்கெல்லாம் பிறர் நம்மைப் பற்றிப் பேசும் ஏளனப் பேச்சையே கேட்க வேண்டி இருக்கிறது.இதற்குக் காரணம் நாம் பெருமைப் படும்படியாக இன்றைய சூழ் நிலையில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாதததுதான். இதையும் மீறி ஒரு சில சாதனையாளர்கள் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு,போராட்டம்,புரட்சி,வன்முறை, அநாகரீகம் போன்ற செயல்கள் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகும்போது பிறர் நம்மைப்பற்றித் தாழ்வாகவே நினைப்பர்.
நிலைமை விபரீதம் ஆவதற்குள் அதைச் சீர் செய்ய முனைய வேண்டும்.

மக்களால் ஆளப் படுவதே அரசாங்கம் என்று இருந்தபோதிலும் , அந்த முறை பணம் சம்பாதிக்கும் வழியாக  சாதகப்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே அரசாங்கம் வழியாக சீர்திருத்தம் வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். காலம் வேகமாக நகர்வதால் கால தாமதங்களால் நிலைமை மேலும் சீர்குலைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருக்கும்போது ஒவ்வொரு தனி நபரும் நம்மால் இம்மண்ணுக்கு எப்படிப் பெருமை சேர்க்க முடியும் என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது.

வேலைக்குச் செல்பவர்கள் உற்பத்தி,வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் முன்னேற்றம் காண முடியும். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஏதேனும் ஒரு சேவை செய்தே ஆக வேண்டும். அது இலக்கியத் துறையாகவோ,ஆன்மீகமாகவோ, சமூக நலத் திட்டமாகவோ, இருக்கலாம். ஓய்வு பெற்றவர்கள் ஒன்று கூடிப் பூங்காக்களில் தேவையில்லாதவற்றை விவாதித்துக் கொண்டிருப்பதை விட, ஓய்வு நேரங்களில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, நீதிக் கதைகளில் ஆர்வம் ஏற்படுத்துவது,கணினியின்மூலம் பொது அறிவை வளர்ப்பது, தோத்திர வகுப்புக்கள்,போட்டிகள் நடத்தி ஊக்குவிப்பது, அருகிலுள்ள புராதனக் கோயிலின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைப்பது, நந்தவனம் அமைத்து மரங்களை வளர்ப்பது, திருக்குளங்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பராமரிப்பது, சோலார் சக்தி  மின்சாரம்,எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பால் பண்ணைகள் அமைப்பது, கோபார் வாயுவைக் கொண்டு எரிபொருள் உற்பத்தி செய்வதோடு,பசு பராமரிப்பது பற்றி உணர்த்துவது என்று எத்தனையோ இருக்கும்போது தனது விருப்பத்திற்கேற்றபடி ஏதாவது ஒன்றிலாவது ஈடுபட்டுத் தொண்டு செய்யக் கூடாதா ?

கிராமங்கள் நலிவடைந்தால் நாடு நலிவடையும். விளை நிலங்களை நல்ல விலையில் விற்று விடுபவர்கள் நாளை உணவுக்குக் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அப்போது சமூகம் நம்மை மன்னிக்காது. ஒவ்வொருவரும் மனதைத்தொட்டுப் பார்த்து, நான் ஏதாவது ஒரு தொண்டு செய்கிறேனா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். இல்லை என்று பதில் வந்தால் இனியும் தாமதிக்காமல் இன்றே செய்யத் துவங்க வேண்டும். இதையே புத்தாண்டு தின உறுதி மொழியாக நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். முகநூலில் ஒரு நண்பர் தான் சென்ற ஆண்டில் ஈடுபட்ட நல்ல பணிகளை அழகாகப் பட்டியலிட்டிருந்தார். அதில் அடுத்த ஆண்டிலும் அப்பணிகளைத் தொடர வேண்டும் என்ற அவரது ஆர்வம் தெரிந்தது. அதுபோல் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் வெறும் வாழ்த்து தெரிவிப்பதால் எந்தப் பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை. சென்றதை நினைவுபடுத்தி, இனி செய்ய வேண்டியதை ஏற்கவேண்டிய நன்னாளாகவே புத்தாண்டு தினத்தை அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும்.கடந்த ஆண்டில் கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கலாம். இனிமேல் அவை இனியதாக இருக்கட்டும் என்ற எண்ணத்தாலோ என்னவோ நமது முன்னோர்கள் கசப்பான வேப்பம்பூ பச்சடியையும் இனிப்பான பாயசத்தையும் அன்றைய உணவில் சேர்த்தார்கள்.

                                                                 

Sunday, April 12, 2015

நகரத்தார் தொண்டு

திருக்களர் கோயிலும் பாடசாலையும் 
தஞ்சை-திருச்சி மாவட்டங்களில் வேத பாடசாலைகளும், ஆகம பாடசாலைகளும், தேவார பாடசாலைகளும் பல இடங்களில் நடந்து வந்தன. அவற்றில் சில மடாலயங்களின் நேரடிப் பார்வையில் இயங்கி வந்தன. இது மட்டுமல்லாமல் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் அமைத்துக் கொடுத்த பாட சாலைகளும் இருந்தன. நகரத்தார்களது சிவபக்தியை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்தக்காலத்திலேயே லக்ஷக் கணக்கான ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்தார்கள். மலைகள் இல்லாத தஞ்சை மாவட்டக் கோயில்களுக்குக் கருங்கற்களை புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து அத்திருப்பணிகளைச் செய்தார்கள். சோழ மன்னர்களுக்கு அடுத்தபடியாக சிவாலயத் திருப்பணி செய்த பெருமை நகரத்தார்களுக்கு உண்டு என்று காஞ்சிப் பெரியவர்களே புகழ்ந்து வாழ்த்தியிருக்கிறார்கள். இந்த பரோபகாரத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.

மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள திருக்களர் என்ற சிவ ஸ்தலத்தில் நகரத்தாரின்  சிவத் தொண்டை நன்றியுடன் குறிப்பிடுகிறோம். ஸ்ரீ பாரிஜாத வனேசுவர சுவாமி கோயிலின் கருங்கல் திருப்பணி மட்டுமல்லாமல்,திருக்குளத் திருப்பணி, தேர் திருப்பணி ஆகியவற்றையும் செய்திருக்கிறார்கள். அதை மனதாரப் பாராட்டுவதற்காகவாவது சிவ பக்தர்கள் ஒரு முறையாவது திருக்களருக்குச் சென்று வர வேண்டும். 

இன்னொரு மகத்தான தொண்டையும் நகரத்தார்கள் இங்கு செய்திருக்கிறார்கள். சுவாமி சன்னதித் தெருவில் இரண்டு புறமும் வேத பாட சாலைகளையும் வெளி வீதியில் தேவார பாட சாலையும் அமைத்துள்ளனர். ஒவ்வொரு பாடசாலையும் ஒரு பெரிய வீடு என்று சொல்லலாம். எல்லா ஊர்களிலும் பாடசாலைகளுக்கு நேர்ந்துள்ள கதி இவ்வூரையும் விட்டு வைக்கவில்லை. அவை பூட்டப்பட்டுக் காட்சி அளிப்பதைக் கண்டால் கலியுகக் கொடுமை இதுதானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.இப் பாரம்பர்யத்தைப் புறக்கணித்து விட்டு வேலைக்காக நகரங்களையும் வெளி நாடுகளையும் நோக்கிச் சென்றுள்ளவர்கள் தங்களின் மூதாதையர் வசித்த கிராமம் நம் கண் முன்னால் நசித்துப் போவதை அனுமதிக்கலாமா? வசதி படித்தவர்களது கவனத்திற்கு இதனை விட்டு விடுகிறோம். வசதி அற்றவர்களும் ஆண்டுக்கொருமுறையாவது தங்கள் பூர்வீக கிராமத்திற்கு வருகை தந்து தங்களால் ஆன உதவியை செய்யலாம். எதற்கும் மனம் வர வேண்டுமே!!

தற்சமயம் பல கிராமங்களில் வீடுகள் கை மாறி விட்டன. எஞ்சியுள்ள சில வீடுகளும் இடிந்தும் மரங்கள் முளைத்தும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. விற்பனைக்காக தேதி குறிப்பிட வேண்டியதுதான் பாக்கி. எந்த கிராமத்திலும் மறுபடியும் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் திரும்பி வருவது என்பது துர்லபமாகவே தோன்றுகிறது. இதனால் முதலில் பாதிக்கப்பட்டது அங்கு உள்ள கோயில்களும் அவற்றை நம்பி உள்ள அர்ச்சகர்களுமே. எல்லோரும் வெளியேறிய பிறகும் கோயில் பூஜையைத் தொடர்ந்து செய்து வருபவர்களைப் பாராட்டினால் மட்டும் போதாது. அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து உதவலாமே! இல்லாவிட்டால் பிறரைப்போல அவர்களும் ஊரை விட்டு நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். பாரம்பர்யத்தைப் பற்றிப்  பேசினால் மட்டுமே போதாது. செயலிலும் காட்ட வேண்டும். அரசாங்கம் செய்யத் தவறியவற்றை மக்கள் செய்யலாம் அல்லவா? 

Thursday, April 2, 2015

எது மூட நம்பிக்கை ?

நம்பிக்கைகள் பலவிதம். எதிர்பார்ப்பே நம்பிக்கையின் அடிப்படை தானே !  எதாவது ஒன்றைச் செய்கிறோம். அதற்கான பலனையும் எதிர் பார்க்கிறோம். அப்பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே  ஒரு  காரியத்தைச் செய்கிறோம் !  அது எப்படிப்பட்ட நம்பிக்கையாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றைப் பிறர் செய்யும்போது அதை மூட நம்பிக்கை என்று பழிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கோடை வெய்யிலின் தாக்கத்தால் நீர் நிலைகள் வற்றிப் போய் விடுகின்றன. சில ஊர்களில் தண்ணீருக்காகத் தொலைவிலுள்ள கிணற்றுக்கோ நீர்நிலைக்கோ சென்று வருகிறார்கள். பெரிய  நகரங்களில் மட்டுமே மக்கள் குடியிருப்புக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. வண்டி வந்தவுடன் அதன் பின்னே குடத்துடன் ஓடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தவர்களுக்கே இத் துன்பத்தின் அளவு புரியும். சில சமயம் நடு நிசிக்கு அப்புறமும் தண்ணீர் லாரிகள் வருவது உண்டு. இரவு தூக்கம் இல்லாமல் அதற்காகக் காத்திருப்போர் எத்தனையோ பேர்!

கிராமங்களிலேயோ தண்ணீருக்குப் படும் பாடு சொல்லி மாளாது. அங்கெல்லாம் தினசரி பேச்சே, மழை எப்போது வரும் என்பதுதான். அதற்காகக் கூட்டுப் பிரார்த்தனைகளை நடத்துவார்கள். சில ஊர்களில் ஊரார் ஒன்று கூடி மழைக்காக வேண்டுவர். அப்படிச் செய்த ஒன்றைத் தான் தொலைக்காட்சியில்  காண நேரிட்டது. ஒரு கிராமத்தில் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். கழுதைகள் அலங்கரிக்கப்படுகின்றன. பெண் கழுதைக்கு நெற்றிச் சுட்டியும் உண்டு. அங்கும் ஆண் வீட்டார் பெண் வீட்டார் என இரு தரப்பினரும் சீர் வரிசைகள் கொண்டு வருகிறார்கள். மேளம் முழங்கத் தாலி கட்டப்படுகிறது. நிறைவாக ஒரு முதியவர் சொல்கிறார்: " இது போலத் திருமணம் நடந்தால் நிச்சயம் மழை வரும் என்பது கடந்த கால அனுபவம். வேண்டுமானால் பாருங்களேன், அடுத்த பத்து தினங்களுக்குள் மழை வருகிறதா இல்லையா என்று."  அவரது அனுபவம் பேசியது. அது மட்டுமல்ல. ஒரு ஊரில் தவளைகளுக்குக் கல்யாணம் நடை பெற்றதைக் காட்டினார்கள். கூடவே அவநம்பிக்கைப் பேச்சுக்கள் வேறு. விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைக்கிறார்கள். வானிலை அறிவிப்பிலேயே " மழையை எதிர்பார்க்கலாம் " என்று தானே சொல்கிறார்கள்? நிச்சயமாக இந்த நேரத்தில் இத்தனை அளவு பெய்யும் என்று திட்ட வட்டமாக ஏன் கூறுவதில்லை? அங்கும் எதிர்பார்ப்புத்தான். விஞ்ஞானி நம்பினால் அது எதிர்பார்ப்பு. விவசாயி நம்பினால் அது மூட நம்பிக்கையா? இது என்ன நியாயம் ?

நம்பிக்கை அற்றவர்களுக்கு ஒன்று சொல்கிறோம். உங்களுக்கு நம்பிக்கை இல்லா விட்டால் பரவாயில்லை. ஏதோ ஒன்றைச் செய்தாவது கிராமத்திற்கு மழை வேண்டும் என்ற அவர்களது  நல்லெண்ணத்தைப் பார்க்காமல் அவர்களைப் பழிப்பதிலேயே இருக்கிறீர்களே! அவர்கள் செய்வது என்னவோ வித்தியாசமான செயல் தான். கள்ளமற்ற அந்த நெஞ்சங்களைப் பழிக்கும் நீங்கள் நீர் பற்றாக்குறைக்குத் தீர்வு சொல்லாமல் வேடிக்கை பார்பதாலோ கண்களை மூடிக் கொள்வதாலோ என்ன பயன்? வறண்ட வைகையும், காவிரியும்,பாலாறும், பெண்ணை ஆறும் மணல் படுகைகள்  ஆன பின்பாவது ஏதேனும் செய்ய முடிந்ததா?  மீதமுள்ள மண்ணை அள்ளிக் கொண்டு போவதுதான்  அன்றாடக் காட்சி.  கிராமத்தவர் செய்கைகள் மூட நம்பிக்கைகள் என்றால் , ஒருவேளை,  மழை வந்தால் அது அவர்களது வீட்டுக்கும் நிலங்களுக்கும் மட்டுமா பொழியும்? ஏரி  நிறைந்து குழாய்களில் விடப்படும் நீரை நீங்களும் அனுபவிக்கவில்லையா ?  எதற்கெடுத்தாலும் அடுத்தவனைக் குறை  சொல்வது என்பது சீர்திருத்தமாகாது. தீர்வைச் சொல்லிவிட்டு சீர்திருத்தம் செய்ய வாருங்கள். அதுவரைப் பிறர் மனதை நோக அடிக்க வேண்டாம்.