சென்னை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள பாடி என்ற இடத்தில் திருவலிதாயம் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் அமைந்துள்ளது. சின்னஞ்சிறு குருவி ஒன்றை வலிமை மிக்க பறவைகள் விரட்டியதால் அஞ்சிய அப்பறவை , இத்தலத்து இறைவனிடம் புகலடைந்து, “ பெருமானே, நான் வலியற்ற சிறு பறவையாக இருப்பதால் பிற வலிய பறவைகள் என்னை விரட்டி அடிக்கின்றன. தேவரீர் ஒருவரே எனக்குப் புகலிடம் ஆவீர் . அடியேனுக்கு அடைக்கலம் தந்து ஆட்கொண்டு அருள வேண்டும் “ என்று மனம் உருகி வழிபட்டது. அதற்கு மனம் இரங்கிய பெருமான், அதற்கு வலிமை அளித்துக் காத்ததாக அத்தல வரலாறு கூறுகிறது. “எளியாரை வலியார் வெல்லின் ,வலியாரைத் தெய்வம் வெல்லும் “ என்பார்கள். வேறு எங்கு சென்று முறையிட்டாலும் பலன் கிட்டுவதில்லை. பாற்கடல் நஞ்சு போல பின் தொடர்ந்து எளியோரை விரட்டி அடிக்கும் சூழ்நிலை இன்றும் தொடர்கிறது.
சிதம்பரம் கோயிலை அரசு எடுக்கலாகாது என்று நீதி
மன்றங்கள் தீர்ப்பு வழங்கிய போதிலும், மாற்று வழிகளில் அதனைக் கைப்பற்றுவதற்குத்
திட்டங்கள் தயாராவது போலத் தோன்றுகிறது. உச்சநீதி மன்றத் தீர்ப்பு நகலைக்
குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தில்லை வாழந்தணர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட
அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர்களது நோக்கம் தமிழையோ, தேவாரத்தையோ
வளர்க்க வேண்டும் என்பதல்ல. எதையாவது காரணம் காட்டி ஆதிக்கம் செலுத்த முடியுமா
என்று யோசிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
நடராஜப் பெருமான் திருமுன்னர் திருமுறை
விண்ணப்பம் செய்யாத நாட்களே இல்லை என்பதை முதலில் மக்கள் அனைவரும் அறிய வேண்டும்.
எந்த இடத்திலிருந்து பாடுவது என்பதே இவர்களது பிரச்னை. அக் கேள்வியை எழுப்புவதன்
முன்பு சன்னதி அமைப்பையும், ஆலய வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொண்டு வந்து
விட்டுப் பின்னர் அந்த வினாவினை எழு ப்பலாம்.
முதலாவதாக, சிவ சன்னதியின் அமைப்பை விளக்க முற்படுவோம். அது கர்ப்பக்
கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற மூன்று பகுதிகளை உடையது. மூலவர் மட்டுமே
இருக்குமிடம் கர்பக்கிருகம் ஆகும். அபிஷேகம், அர்ச்சனை,அலங்காரம் ,தீபம் ஏற்றுதல்
ஆகியவற்றைச் செய்யும் நேரங்களில் மட்டுமே அர்ச்சகர் இங்கு நுழையலாம். அடுத்ததாக விளங்கும்
அர்த்த மண்டபத்தில் இருந்து கொண்டுதான் அர்ச்சகர் தீபாராதனை, உபசாரங்கள் ஆகியவற்றைச்
செய்வார். வேத விண்ணப்பம் செய்யும்
நேரத்தில் மட்டுமே இங்கு வேத விற்பன்னர் நுழையலாம். மூன்றாவது பகுதியாகிய மகா
மண்டபத்தில் இருந்துதான் சேவார்த்திகள் தரிசனம் செய்யலாம். அங்கிருந்துதான்
ஓதுவாமூர்த்திகள் திருமுறை விண்ணப்பம் செய்வது மரபு. மாமன்னர் முதல் இன்றைய
அரசியல் பிரமுகர்களும் கூட இதற்கு விதி விலக்கல்ல. தமிழகத்தில் சிவாகம வழியில்
அமைந்துள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் இம்மரபே இன்றும் பின்பற்றப் படும் நிலையில்
சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறையை மாற்றத் துடிப்பது வேறு காரணம் பற்றி இருக்குமோ
என்ற ஐயத்தை வலுப் படுத்துகிறது.
இப்பொழுது நடராஜப் பெருமானது சன்னதி அமைப்பை
நோக்குவோம். இத்தலத்தில் நடராஜரே பிரதான மூர்த்தியாக சித் சபையாகிய
கர்பக்கிருகத்தில் காட்சி அளிக்கிறார். அவரது திருமுன்பு விளங்கும் மேடையே
நந்திஎம்பெருமான் வீற்றிருக்கும் அர்த்த மண்டபம் ஆகும். இங்கிருந்தபடியே தீக்ஷிதர்கள்
தீபாராதனை செய்வதை இன்றும் காண்கிறோம். அங்கிருந்தபடியே பெருமானுக்கு வேத
விண்ணப்பமும் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களிலும் இதைப் போலவே தான் வழிபாடுகள்
நடை பெறுகின்றன. இதற்கு அடுத்த பகுதியான மகாமண்டபம் பிற தலங்களைப் போல் சம தளத்தில்
அமைக்கப் பெறாமல் சற்றுத் தாழ்ந்த இடத்தில் உள்ளது. தில்லைச் சிற்றம்பலவனை
அங்கிருந்தபடியே தரிசித்தும், திருமுறைகள் பாடியும் ஆனந்தம் அடைவதை இன்றும்
நடைமுறையில் காண்கிறோம். இப்படி இருக்கும் தெய்வீக சூழ்நிலைக்குக் குந்தகம்
விளைக்கும் நோக்கத்தில் நாத்திக வாதிகளும் அரசியல் ஆதாயம் தேடுபவர்களும், காழ்ப்பு
உணர்ச்சி கொண்டவர்களும் தமிழ்த் திருமுறைகள் மீது அக்கறையும் பக்தியும்
கொண்டவர்கள் போலக் கூக்குரல் எழுப்புகிறார்கள். ஆன்மீக வாதிகளும் மடாதிபதிகளும்
மௌனம் காப்பது, இவர்களுக்கு சாதகமாகப் போய் விட்டது. சிதம்பரத்தில் தினமும்
அம்பலவனைத் தரிசிப்பவர்கள் ஏராளமாக இருந்தும் தங்களது வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏன் என்று புரியவில்லை. வழிபாட்டு
முறை, சன்னதி அமைப்பை ஒட்டியே அமைந்துள்ளது என்றும், மற்ற ஆலயங்களைப் போலவே மகா
மண்டபத்தில் இருந்து திருமுறை விண்ணப்பம் செய்யப்படுகிறது என்றும் அரசுக்கும் நீதி
மன்றங்களுக்கும் தெரிவிக்கப் பட்டதா என்று அறியக் கூடவில்லை.