Thursday, January 11, 2018

வேலியே பயிரை மேயலாமா?


" வேலியே பயிரை மேயலாமா " என்பார்கள். இப்போது அதுவும் நடக்கிறது. அறத்தை நிலை நிறுத்த வேண்டியவர்கள், பாதுகாக்க வேண்டியவர்கள் அறமற்ற செயல்களை செய்யத்துணிந்து விட்டார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பணம் சம்பாதிக்க உலகத்தில் எத்தனையோ வழிகள் இருந்தும் ஆலயத்தையும் அதன் சொத்துக்களையும் கொள்ளையடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் வெளியார்களே இவ்விதக் கொள்ளைகளையும், ஏமாற்று வேலைகளையும் செய்து வந்தார்கள். ஆனால் இப்போதோ அறத்தை நிலைக்கச் செய்ய வேண்டிய உயர் அதிகாரிகளே தெய்வச் சிலைகளைக் கடத்தவும், பக்தர்கள் தரும் தங்கத்தைத் திருடவும் துணிந்து விட்டார்கள். பாதுகாப்புத் தருகிறோம் என்று சிலைகளை எடுத்துக் கொண்டு போய் கடத்தல் காரனிடம் விற்கும் இந்த அற்பர்களை தெய்வம் மன்னித்தாலும் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. 

விக்கிரகங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு அவற்றை வேறு ஒரு கோயிலில் வைத்துப் பூட்டி வைப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள். ஆக, காணாமல் போவதும், இவர்கள் கையில் கொடுப்பதும் ஒன்றோ என்னும்படி ஆகிறது. மொத்தத்தில் அவை உரிய கோயில்களில் இல்லாமல் போய் விடுகின்றன.. 

ஆகம மரபு மாறாமல் நிர்வகிப்பதாக , அற  நிலையத்துறை சொல்வதாக இருந்தால் அவர்களை ஒன்று கேட்கிறோம். உற்சவர் வீதி உலா சென்றால், கோயில்களை மூடி விடுவார்கள். காரணம், மூலவரே, வீதியில் உள்ளவர்களுக்கு அருள் புரிய வேண்டி உற்சவர் வடிவில் செல்வதால் கருவறையில் ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. உற்சவர் மீண்டும் ஆலயத்திற்கு வந்த பின்னரே மூலவருக்குப்  பூஜைகள் துவங்கப்படும். இதுவே ஆகமம் நமக்குக் காட்டும் நெறி. ஆனால் நடப்பது என்ன? உற்சவர்கள் வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் மூலவருக்கு பூஜைகள் நடத்தப் படுகின்றன. இது ஆகம விரோதம் இல்லையா? இதற்காகவா மன்னர்கள் எல்லாக் கோயில்களுக்கும் உற்சவ மூர்த்திகளை வார்த்துக் கொடுத்தார்கள்? 

சமீபத்தில் பந்தநல்லூர் ஆலயத்தில் நடை பெற்ற அதிகார துஷ்ப்ரயோகமும் அதனைத் தொடர்ந்து, அதிகாரியின் துணையோடு, உற்சவர்கள் களவாடப்பட்டதும் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. இப்படியும் ஒரு பிழைப்பா இந்த அதிகாரிகளுக்கு!! வெட்கக் கேடு!! கேட்பவர்கள் காறித் துப்புவார்கள். நம்பிக்கைத் துரோகம்  அல்லவா இது!!  இதுபோல எத்தனை மூர்த்திகள் எத்தனை கோயில்களில் களவாடப் பட்டுள்ளனவோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால் நல்லவர்களுக்கும் அவப்பெயர் உண்டாகிறது. 
உற்சவங்கள், கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெறும் ஆலயங்கள் மட்டும் அந்த நிகழ்ச்சிகளுக்காக உற்சவர்களைத் தங்கள் கோயிலுக்குக் கொண்டு வந்து விட்டு, மறுநாளே பாதுகாப்பு வழங்கும் கோயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதற்குக் குருக்களிடம் உத்தரவாதம் வேறு பெறப்படுகிறது! நிர்வாக அதிகாரியும்  பொறுப்பேற்றுக்  கூட இருந்து நடத்தலாமே ! 

ஆலயத் திருட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில், காமிராக்கள் பொருத்தும் வேலை துரிதமாக  நடைபெற்று வருகிறது. இதனால் என்ன பயன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. திருடர்கள் வருகையைப் பதிவு செய்வதோடு சரி. அடையாளம் காண இயலாதபடித் திருடர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டினால் அப்பதிவினால் எப்படித் துப்புத் துலக்க முடியும் என்பது புரியவில்லை. ஆனால் அலாரம் பொருத்தினால், மணி ஓசை கேட்டவுடன், திருடுவதைக் கைவிட்டபடியே, வந்தவர்கள் தப்பித்து ஓடத்  துவங்குவர். .

ஒவ்வொரு கோயிலுக்கும் காமிரா பொருத்துவதற்கு குறைந்தது இருபதாயிரம் செலவாகிறது. டெண்டர் விடுவதில் மோசடி நடந்தால் இத்தொகை அதிகமாகும். இந்நாளில் அதுவும் சாத்தியமே.!  உயர் மட்டத்திலிருந்து கீழ் வரை லஞ்சம் புரையோடிக் கிடக்கிறது. இதற்கு அறநிலையத் துறை விதி விலக்காக இருக்க வாய்ப்பு உண்டா?  

அரசு அதிகாரிகளை இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். சிவசொத்தைக் கொள்ளை அடிப்பதைக்  கயவர்கள் மட்டும் செய்து வந்தது போக , அறம் காக்க வந்தவர்களும் உடந்தை ஆகிறார்கள் என்ற பழி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அற  வழி நின்றால், அதுவே உங்களது பல தலைமுறைகளைக் காக்கும். இல்லையேல், உங்கள் கண்முன்பே குடும்பம் சீரழிவதைக் காண்பீர்கள். இக்கலியுகத்தில் கண்கூடாகக் காணும் பல உண்மைகளுள் இதுவும் ஒன்று. மறந்தும் இத்தவறை மீண்டும் செய்ய வேண்டாம் ஐயா. 

கோயில்களில் அராஜகம் நடக்க விடலாமா?

குறிச்சி சிவாலயம் 
நல்லதொரு குடும்பப்பின்னணி இருந்தால் , ஒழுக்கம்,அடக்கம், கடவுளிடத்து பக்தி ஆகியவை இயல்பாகவே அமைந்து விடும். பிற்காலத்தில் கெட்ட சகவாசத்தால் பிள்ளைகள் தவறான வழிக்குப் போவதுமுண்டு. அப்போது அவர்களைப் பெற்றோர்கள் திருத்த முடியாமல் போய் விடுகிறது. தவறுகளைத் தெரிந்தே, தைரியமாகச் செய்யும் திமிர் பிடித்தவர்களாக மாறி விடுகிறார்கள். பார்ப்பவர்களுக்கும் அவர்களிடம் நெருங்கவே பயம் ஏற்படுகிறது. சமூக விரோதிகள் வேறு எங்கேயாவது தொலைந்து சீரழிந்து போகட்டும். ஆலயத்திற்குள் பிரவேசித்து அக்கிரமங்கள் செய்யலாமா? 

அண்மையில் திருப்பனந்தாளிலிருந்து பந்தநல்லூர் செல்லும் வழியிலுள்ள குறிச்சி என்ற கிராமத்திலுள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். சிறிய கோயில் தான். ஒரே பிராகாரம். செடிகளும் ,புதர்களும் மண்டிக் கிடந்தன. விமானங்களின் மீது பெரிய அரச மரங்கள் முளைத்து, வேரூன்றியிருந்தன. அதனால் ஆலயச் சுவற்றின் பல பகுதிகள் பிளவு பட்டிருந்தன. 

அராஜகம் 
ஜாக்கிரதையாகப்  பிராகாரத்தை வலம் வரும் போது கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. காலி செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் அங்கு கிடந்ததைக் கண்டு பதறினோம். பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெறாத அந்த ஆலயத்தை இப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் சமூக விரோதிகள். ( துரோகிகள் என்று கூடச் சொல்லலாம். ) 

அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரைக் கேட்ட போது, ஆலயத்திற்குச் சுற்றுச் சுவர்  பல இடங்களில் இல்லாமல் இருப்பதால், இவ்வாறு குடிக்கவும், மலஜலம் கழிக்கவும் கயவர்கள் உள்ளே நுழைந்து பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  சுற்றுச் சுவர் கட்டாத வரையில் இந்த அராஜகங்கள் தொர்ந்து நடக்கும் என்றும்  கவலை தெரிவித்தார். ஆலயத்திற்குச் செல்லும் வழியில் பால் விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தார் மனம் வைத்தால் ஆலயத்தைத் தூய்மைப் படுத்தி , சுற்றுச் சுவர் அமைக்கலாம். எப்போது மனம் வைப்பார்களோ தெரியவில்லை. தினசரி பூஜைகளுக்கு வழி இல்லாததால் ஒரு அன்பர் தினமும் சன்னதியில் விளக்கு ஏற்றிச் செல்கிறார். ஆனால், புத்தி கெட்டுப்போய் ஆலயத்தைச்  சீரழிக்கும் ஈனப் பிறவிகளைத் திருத்துபவர் யார் ? 

இவ்வாறு கைவிடப்பட்ட ஆலயங்களை வெளியூர் நபர்கள்  தூய்மைப்படுத்தித்  திருப்பணி செய்து கொடுத்தாலும்   , உள்ளூர் வாசிகளிடம் அக்கறை இல்லா விட்டால் அத்தனையும் வீணாகிப் போகிறது. தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள் இல்லாத வரையில் கோயில்கள் வௌவால்களுக்கும் பாம்புகளுக்கும் புகலிடமாக மாறி விடுகின்றன. 

இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவது. (பராமரிப்பின் கீழ் வருவது என்று இங்கு குறிப்பிட மனம் வரவில்லை.) பராமரிப்பே இல்லாமல் அழிவை நோக்கிச் செல்லும் ஆலயத்தைக்  காப்பாற்றிப்   பராமரிக்கத்தவறி  விட்டது அறநிலையத்துறை. நிர்வாக அதிகாரி எப்போதாவது இந்தப் பக்கம் வந்திருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி என்றால் எதற்காக அவர்களிடம் இக்கோயிலை வைத்துக் கொண்டு இப்படி அழியச் செய்கிறார்கள்? ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் பதில் சொல்லட்டுமே பார்ப்போம். 

Wednesday, November 15, 2017

குரு பீடங்களும் மக்களின் எதிர்பார்ப்பும்

                          Image result for kanchi sankaracharya
அண்மையில் அன்பர் ஒருவர் சொன்னார் , " குருபீடங்களில் பெரும்பாலானவை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டவை. அதற்கு முன்னதாக, மக்கள் வேத- சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்களையே அணுகியிருக்கக் கூடும்." என்றார். ஒரே மடாதிபதி அனைத்துப் பகுதி மக்களையும் இணைப்பது மிகவும் கடினமான செயல். ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு மடம் நிறுவுவது என்பது ஆதி சங்கரர் காலத்திலிருந்தே இருந்து வந்தது. அப்படி இருந்தும், கால் நடையாச் சென்று மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து அங்கே சில நாட்கள் தங்கிப் பூஜைகள் செய்தும்,மக்களை நல்வழிப்படுத்தியும் வந்தவர்கள் சிலரே.

நாளடைவில் அந்நியர்களது படையெடுப்பால் கலாசார மாற்றங்கள் நிகழ இருந்தபோது மடங்கள் தோன்றி தர்மப் பிரச்சாரம் செய்யலாயின.நாகரீகத் தாக்கமும் மக்களைப் பாதித்தபடியால் மடாதிபதிகளின் யாத்திரைகள் அத்தியாவசியமாயிற்று.கால் நடையாகவே நாட்டின் பெரும்பகுதிகளுக்குச் சென்று வந்த காஞ்சி பெரியவர்களது கருணை இங்குக் குறிப்பிடத்தக்கது. 

மடங்களுக்குப் பாரம்பர்யமாக வரும் பூஜை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மக்களை நல்வழிப் படுத்துவது. மடங்களில் பெரும்பாலானவை கிராமங்களில் அமைந்திருப்பதால் மடாதிபதிகள் தங்களுக்கு அண்மையில் உள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களுக்கு அருளாசி வழங்குவது சாத்தியமாகிறது. தங்களைச் சார்ந்தவர்களையும், மடத்துச் சிப்பந்திகளையும் இவ்வாறு கிராமங்களுக்கு அனுப்ப முடியும். 

என்ன காரணத்தாலோ மடாதிபதிகளின் கிராம விஜயங்கள் அவ்வூர்க் கோயில்களின் கும்பாபிஷேகம் மற்றும் சில வைபவங்களுக்குப் போவதோடு நின்று விடுகிறது. தங்கள் மடங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களுக்கும் எப்போதாவது தான் விஜயம் செய்கிறார்கள் . அந்தக் கோயில்கள் கும்பாபிஷேகம் கண்டு எழுபது ஆண்டுகள் ஆகி , விமானங்களில் மரம் முளைத்து, மேற்கூரை ஒழுகினாலும் திருப்பணிகளை மேற்கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை. உள்ளூர் மக்களுக்குக் கோயில்களுக்குத்  தினமும் வரவேண்டும் என்ற எண்ணம் இவர்களது விஜயத்தால் ஏற்படலாம் அல்லவா? 

கிராமங்களுக்கு மடாதிபதிகள் அடிக்கடி வராததால் மக்களில் சிலர் வேறு திசையை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்களைப் பிறரும் பின்பற்றுகிறார்கள். கோயில்கள் கைவிடப்படும் நிலை உருவாகிறது. சிப்பந்திகளைத் திரும்பிப் பார்க்கவும் நாதி இல்லை. இதனால் சமயத்திற்கே பேராபத்து ஏற்படுகிறது என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம். நகரங்களுக்கு மட்டும் வாகனத்தில் வந்து பார்த்து விட்டுப் போவதால் கிராமங்கள் மெல்ல மெல்ல அவற்றின் பாரம்பரியத்தை இழக்கின்றன. 

கிராமங்களில் அழைத்து ஆதரிப்பவர்கள் குறைந்து விட்டது என்பதை ஏற்க முடியாது. அப்பாவி கிராமவாசிகள் தங்களது ஊருக்கு நல்லது செய்ய யாராவது வெளியூரிலிருந்து வந்தால் அவர்களைத் தலை மேல் தாங்குகிறார்கள். நாம் அவர்களை அலட்சியப்படுத்தினால் அவர்கள்  நம்மிடம் இருந்து நிரந்தரமாக விலகுவார்கள்.வருமானத்திற்குத் தவிக்கும் அவர்களை ஆசை காட்டி மயங்கச் செய்பவர்கள் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவை அரவணைப்பு ஒன்றே. 

இப்படிச் சொல்வதால் மடாலயங்களைக் குறை கூறுவதாக எண்ணக் கூடாது. எத்தனையோ சமயப் பணிகள் ஆற்றி வரும்போது இதனைச் சற்று கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்ற விண்ணப்பமே இது.காலத்தால் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் இதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . காலம் தாழ்த்தினால் கை விட்டுப் போகும் நிலை வருவதன் முன் இன்றே இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தாழ்மையாக விண்ணப்பிக்கிறோம்.எல்லாம் சிவன் செயல் என்றாலும் அப்பெருமானே நமது பணியையும் ஒரு பொருட்டாக  உவந்து ஏற்பான் அல்லவா?            

Tuesday, November 14, 2017

ஆலயமும் ஆஸ்பத்திரியும்

                  
நாளடைவில் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரிமாறப்படுவது அதிகரித்து வருகிறது. சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசவோ எழுதவோ துணிந்து விட்டார்கள். தனிமனிதனது நம்பிக்கைக்கு இந்த நாடு அனுமதி அளிக்கும் அதே வேளையில் அதை துஷ்பிரயோகம் செய்வது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. நமது கொள்கையை பிறர் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்? அவரவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வதைக் குறை கூறி அவர்களைப் புண் படுத்துவது இப்போது கை வந்த கலை ஆகிவிட்டது.

தெய்வ நம்பிக்கையும் அப்படித்தான். நம்பிக்கை இல்லாதவர் ஒதுங்கிப் போகட்டுமே! இன்ன தினத்தில் கோவிலுக்கு அனைவரும் வந்து ஆஜர் கொடுக்கவேண்டும் என்றா வற்புறுத்துகிறார்கள்? இத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டும் மண்ணை வாரித் தூற்றுவது எதனால்? நம்பிக்கையே இல்லாதவன், பழக்க வழக்கங்களைக் குறை கூறுகிறான். மரபுகளை மாற்றி அமைக்கத் துடிக்கிறான். இதை வைத்தே பிழைப்பும் நடத்துகிறான். கண்டனம் தெரிவிப்போர் இல்லாததை சாதகமாக்கிக் கொள்கிறான்.

சினிமா,நாடகம்,தொலைக் காட்சி, செய்தித் தாள்கள் ஆகியவை இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு நேரத்தில் ஆன்மீகச் செய்திகளைச் சேர்த்துக் கொள்ளும் இவர்கள் மறு நேரத்தில் அதற்கு நேர் மாறாக நம்பிக்கை உள்ளவர்கள் மனதை நோக அடிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் சம்பாதிப்பது ஒன்று தான். மற்றபடி சமுதாய நலன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் வெளி வேஷமே.

பெரிய சீர்திருத்த வாதம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி கட்டலாம் என்று அபத்தமாக உளறுகிறார்கள். கேட்டால் மக்கள் சேவையே மகாதேவன் சேவை என்று பொன் (புண் ? ) மொழி உதிர்க்கிறார்கள். கோயில்கள் மக்கள் நலனுக்காகவே ஏற்பட்டவை என்பதை அறியாத மூடர்கள் பின் எப்படிச் சொல்ல முடியும்? சமூக சேவை வேண்டாம் என்று எந்த மதமாவது சொல்கிறதா? மக்கள் சேவையும் மாதேவன் சேவையும்  இரு கண்கள் என்ற மரபைத்தானே நாம் பின்பற்றி வருகிறோம்!

ஆஸ்பத்திரி வேண்டும் என்பவர்கள் மருத்துவத்தால் நிரந்தரத் தீர்வு காண முடிவதில்லை என்பதை ஏன் நினைப்பதில்லை? இவர்கள் கொடுக்கும் மருந்தும் மாத்திரையும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தும் தெருவுக்குத் தெரு மருத்துவ மனைகள் ஏற்படுத்திப் பணம் சம்பாதிக்க வேண்டுமா? ஏழைகளாக இருந்தாலும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் குறைந்த பட்சம் ஐநூறு ரூபாயாவது இல்லாமல் செல்ல முடியுமா? அரசு மருத்துவ மனைகளின் தரத்தையும் சேவையையும் மேம்படுத்தி,அனைவரும் பயனுறச் செய்யலாமே? மத்திய அரசு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ஈடாக தமிழகத்தில் கட்டித்தர முன்வந்தும் ஏன் இன்னும் செயல் படுத்த முடியவில்லை?

சிவபெருமானை “ ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்கிறது ருத்ரம். எல்லா வைத்தியர்களுக்கும் மேலான, முதன்மையான வைத்தியன் என்பது கருத்து. வைதீஸ்வரன் கோயிலில் சுவாமிக்கு வைத்திய நாதன் என்று பெயர். உலகிலுள்ள நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நோய்களைத் தீர்ப்தற்காக இத்தலத்தில் எழுந்தருளினான் என்பது தல புராணம். இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி நோய் நீங்கப்பெற்றோர் அநேகர் உளர். “ தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை“ என்று இத்தலத் தேவாரமும் பெருமானைப் பரவுகிறது.

உலகில் பிறந்துவிட்டால் கூடவே வருவன நோயும்,அவலமும் தான். இன்பம் வருவது சிறிது அளவே தான். இதனை உணர்ந்த முன்னோர்கள் இனி ஒரு பிறவி வேண்டாம் என்று வேண்டினார்கள். அனாயசமான மரணம் இறுதிக் காலத்தில் ஏற்படவேண்டும் என்று சிவ பூஜையில் ஒவ்வொரு நாளும் பரமேசுவரனை பிரார்த்திக்கிறோம். ஆஸ்பத்திரியில் முதிய வயதில் வாயிலும் மூக்கிலும் குழாய்களைச் செலுத்தியும், துளித் துளியாக ஆகாரத்தைச் செலுத்தியும் காப்பாற்ற முடியாது போகம் நிலையில், மருத்துவர்களே, “ இனி செய்வதற்கு ஒன்றுமில்லை, கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் “ என்னும்போது கைதர வல்லவன் யார் என்று சற்று யோசிக்க வேண்டும். இறைவன் நோயை அகற்றும் மருத்துவன் மட்டுமல்ல. பிறவியாகிய நோயையே அகற்றுபவன். அதனால்தான் அவனை பவரோக ஔஷதீசுவரன் என்கிறோம்.


இனியாகிலும் ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி வேண்டும் என்பவர்கள் தமது  அறியாமை நீங்கி மக்களுக்கு நல்லதை எடுத்துச் சொல்ல முன்வர வேண்டும்.  அதற்குத் தயாராக  இல்லாவிட்டால் இதுபோன்று  உளறாது தன வேலை உண்டு தான் உண்டு என்று இருந்தால் அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.          

Thursday, October 26, 2017

தீர்த்தம் என்பதும் இறை வடிவமே

இராமேசுவரம் ஆலய தீர்த்தங்கள் சில - இணையதளப் படம் 
" சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று பாடி அருளினார் அப்பர் ஸ்வாமிகள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. உலகம் யாவையும் படைத்த பெருமான் தீர்த்தங்களையும் படைத்தான் என்பது அதில் அடங்குவது தானே என்று நினைக்கலாம். ஏழண்டத்திற்கும் அப்பால் நின்ற பரம்பொருள் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறான் அல்லவா? அப்படி இருக்கும்போது தீர்த்தத்தைத் தனியாகக் குறிப்பிடுவானேன் என்று தோன்றும். மறுபடியும் மேலேசொன்ன அவரது வாக்கைப் படித்தால் அதற்கு  விளக்கம் கிடைக்கும். தீர்த்தங்கள் படைத்தார் என்று குறிப்பிடாமல், " ஆனார் "   என்று அல்லவா   சொல்லியிருக்கிறார்!  அதேபோல , " வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் " என்பதால் வேதமும் தமிழும் இறைவனது வடிவங்களே என்று தெரிகிறது. 

 தீர்த்தம் வேறு,  சிவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. காரணம் , ஈசுவரன் எப்படிப் புண்ணிய மூர்த்தியோ அதேபோல தீர்த்தமும் புண்ணிய தீர்த்தம் எனப்படுகிறது. எல்லா நீர் நிலைகளையும் நாம் புண்ணிய தீர்த்தமாகவா கருதுகிறோம்? புண்ணிய தலங்களில் அமைந்துள்ள திருக்குளங்களையும் , கிணறுகளையும்,ஆறுகளையும் மட்டுமே அந்தந்த ஊர்த் தல புராணங்கள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. தீர்த்தப் படலம் என்றும்,தீர்த்தச் சிறப்பு என்றும் தலங்கள் மீது அமைந்துள்ள  புராணங்களில் பாடப்பெற்றிருப்பதைக் காணலாம்.  " தீர்த்தனை, சிவனை சிவலோகனை " என்று அப்பர் பாடுவதை, கங்கை என்னும் தீர்த்தத்தை முடி மேல் கொண்டவன் என்று மட்டும் பொருள் கொள்ளாமல், எல்லா தீர்த்தங்களையும் தன் வடிவாகவே கொண்டவன் என்று பொருள் உரைப்பது இன்னும் சிறப்பாக அமையும். 

தீர்த்த யாத்திரை என்ற சொல்லை நோக்கும்போது, தீர்த்தங்களில் நீராடுவதன் பொருட்டு யாத்திரை மேற்கொள்ளுதல் என்ற விளக்கத்தைப் பெற முடிகிறது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றுமே யாத்திரை செய்பவர்களுக்குக் கிடைத்து  விடுவதால் அன்னோர்க்கு சற்குருவும் கிடைத்து விடுவார் என்கிறார் தாயுமானவர். திருவிழாக்களிலும் தீர்த்தவாரி முக்கிய நிகழ்ச்சியாக இன்றும் கருதப்படுகிறது. அப்போது, திருக்கோயிலில் இருந்து எழுந்தருளும் அஸ்திர தேவருக்கும் அப்புண்ணிய தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

காசியில் கங்கா நதி ஒன்றிலேயே பல கட்டங்கள் இருப்பதால், யாத்ரீகர்கள் அங்கெல்லாம் சென்று நீராடி நற்பலனைப் பெற்று வருகிறார்கள். ஒரே நீர்தானே எல்லாக் கட்டங்களிலும் வருகிறது என்றும் ஒரு துறையில் நீராடினால் போதாதா என்றும் குறுக்குக் கேள்விகள் கேட்பதில்லை. அதேபோல இராமேசுவரம் ஆலயத்திற்குள் உள்ள எல்லாக் கிணறுகளிலும் மக்கள் நீராடி யாத்திரையின் பயனைப் பெறுகிறார்கள். சில தீர்த்தங்கள் . அருகருகே இருந்தாலும் சுவை , நிறம் ஆகியவை வேறுபடுவதை அங்கு சென்றவர்கள் கவனித்து இருக்கலாம். 

விழாக் காலங்களில் கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக வடக்கு ப்ராகாரத்திலுள்ள ஆறு தீர்த்தங்களைக் கோயிலுக்குள் இடமாற்றம் செய்ய இருப்பதாகச்  செய்தி வந்துள்ளது. இது துரதிருஷ்டமான முடிவு என்றே கூறலாம். கிணறு வேண்டுமானால் மனிதன் தோண்டலாம். அப்படித் தோண்டப்பட்டவற்றைத்  தீர்த்தம் என்று நாம் அழைப்பதில்லை. தோண்டிய கிணற்றிலிருந்து கங்கையை வரவழைக்க நாம் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் அளவிற்குத் தவம் செய்யவில்லை. நமது ஊனக் கண்களுக்கு எல்லாமே சமமான நீர் நிலைகளாகவே தெரிவதால் ஏற்பட்டுள்ள விபரீதம் இது. அந்த புண்ணிய தீர்த்தங்களை மூடி விட்டு அதேபெயரில் கோயிலுக்குள் வேறு இடத்தில் கிணறு தோண்டி விடுவதால் எவ்வாறு அவை பழையபடி தீர்த்தங்கள் ஆக முடியும் என்று தெரியவில்லை. ஆன்மீகப் பெரியவர்கள் சிலரும் இதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர் என்ற செய்தி  உண்மையாக இருந்தால் அதை என்னென்று சொல்வது? மக்களது நம்பிக்கையைப்  பயன் படுத்திக்கொள்ளும் செயலாக இது அமைந்து விடக்கூடாது. ஆன்மீகப் பெரியவர்களாகட்டும், அற  நிலையத் துறையாகட்டும், இது பற்றிய விரிவான அறிக்கையை மக்கள் நலனுக்காக வெளியிடுவார்கள் என்று நம்புவோமாக. 

Wednesday, October 18, 2017

தவ வலிமை

காஞ்சி காமகோடி பெரியவர்கள் 
                     ஒரு காலத்தில் விருத்திராசுரனால் தேவர்கள் அனைவரும்  துன்புறுத்தப்பட்டபோது அவனைப்  போரிட்டு வெல்ல முடியாமல் போன தேவேந்திரன், திருமாலின் அறிவுரைப்படி ததீசி முனிவரை அணுகினான் . பாற்கடலைக் கடைந்த காலத்தில் தேவாசுரர்களின் ஆயுதங்கள்  ததீசி முனிவரிடம் சேர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அவற்றை எவரும் திரும்பக் கேளாது போகவே, ததீசி முனிவர் அவ்வாயுதங்களை விழுங்கி விட்டார். அவை யாவும் ஒன்று சேர்ந்து அவரது வஜ்ஜிரமான முதுகுத் தண்டாக ஆயின. அந்த வஜ்ஜிரப்படையை முனிவரிடம் பெற்றுப் போரிட்டால் அசுரனை அழிக்கலாம் என்று திருமால் கூறியிருந்தபடியால் அதனை முனிவரிடம் தேவர்கள் யாசித்தனர். 

ததீசி முனிவர் தேவர்களிடம் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம்: "  இந்த உடல் அழியும் தன்மையை உடையது. அவ்வாறு அழிந்தபின், அதை நாய்கள் தமக்குச் சொந்தம் என்கின்றன. .இயமனோ அது என்னுடையது என்று கைப்பற்றுகிறான். காட்டிலுள்ள பேய்களோ தமக்கே உரிய இரையாகக் கருதிக் குதூகலிக்கின்றன. ஆனால் அத்தருணம் வரையில் நாம் இவ்வுடல் நம்முடையது என்று நினைக்கிறோம்.இப்புழுக் கூட்டை நம்முடையது என்றும்  எல்லாம் நமக்கே சொந்தமானது என்றும்  கருதி , பிறருக்கு இம்மி அளவும் தானம் செய்யாமலும் உதவாமலும் கல் நெஞ்சர்களாக இருக்கிறோம். நீங்கள் அசுரர்களால் துன்பம் அனுபவிக்கும் இந்நேரத்தில் இவ்வுடம்பால் உங்களுக்குத்  தீமை விலகி  நன்மை ஏற்படப்போகிறது என்றால் அதை விட இவ்வுடல் எடுத்ததன் பலன்  எனக்கு வேறு என்ன இருக்கப் போகிறது " என்று கூறி சமாதியில் அமர்ந்து,  கபாலம் திறக்கப்பெற்று,விமானமேறி, சிவலோகம் அடைந்தார். அவரது பூதவுடலிலிருந்து எடுக்கப்பெற்ற வச்சிராயுதம் மூலம்  இந்திரன் விருத்திராசுரனைப் போரிட்டு வென்றான். இதை வள்ளுவரும் " என்பும் உரியர் பிறர்க்கு " என்று சிறப்பிக்கிறார். 

நான்கு ஆசிரமங்களுள் சந்நியாச ஆசிரமம் பிறர்க்கெனவே தன்னை அர்ப்பணிப்பதாக அமைவது. இதையே வேறு விதமாகச் சொல்லப்போனால், பிறர் செய்வதற்கு  அரிய தருமத்தை இராப் பகலாகச் செய்வதற்காகவே ஏற்பட்டதாகக் கூடக் கொள்ளலாம். ஆகவேதான் அதனைப் புனிதமானது என்கிறோம்.சராசரி மனிதன் செய்வதையே தானும் செய்தால் அவர் எப்படி சந்நியாசி ஆக முடியும்? பிறர் ஆனந்தமாக வாழ்வதற்குத் தவம் செய்பவரே  தவசி. நம் நாட்டில் இத்தனை கஷ்டங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் கேட்டபோது அதற்கு அவர், " நான் செய்யும் தவம் போதவில்லை என்றே நினைக்கிறேன். ஆகவே நான் மேன்மேலும் கடும் தவத்தை மேற்கொள்ள வேண்டும். உலக நன்மைக்காக பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும் " என்றார்களாம். 

தவம் சிறக்க வேண்டும் என்றால் நாட்டின் மூலை  முடுக்கிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று தவமும் பூஜையும் செய்து அங்கு சில நாட்கள் தங்கி ,மக்களை ஆட்படுத்த வேண்டும். காஞ்சிப் புராணம் அப்பர் பெருமானைக் குறிப்பிடுகையில் " நடை அறாப் பெருந்துறவு "அவர் பூண்டு ஒழுகியதாகக் கூறுகிறது. இங்கு நடை என்பது காலால் நடந்து வருவது என்பதை விட ஒழுக்கம், தவம் என்றெல்லாம் பொருள் கொள்வதே சிறப்பு. இதைத்தான் காஞ்சிப் பெரியவர் அனுசரித்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்கள் நம்மைப் போல் பண்டிகை கொண்டாடுவதில் நமக்கு நிகராக இருக்க மாட்டார்கள். நம்மைப் போல் வாணங்கள் கொளுத்திக் கொண்டு இருக்க மாட்டார்கள். தீப ஒளியில் இறைவனைக் கண்டு நமக்கும் காட்டும்  கருணை பாலிப்பவர்களாகவே இருப்பார்கள். 

நாட்டில் மழை பொய்க்கிறது. ஆறுகள் வற்றிப் போகின்றன. குளங்களும்,நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இப்படி இருந்தும், நா வற்றும் அளவுக்கு சிலர்  நாத்திகம் பேசி மக்களைக்  கெடுக்கின்றனர். ஒற்றுமை இன்மையின் உச்ச கட்டத்தைப் பார்க்கிறோம். தீயவற்றைச் செய்வதில்  பயம் போய் விட்டது. அக்கிரமங்கள் தலை விரித்து ஆடுகின்றன. துறவறம் மேற்கொள்வோரும் வாய்ப் பேச்சோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தவ வலிமையால் மக்களின் துயர் தீர்க்க முன் வருவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் மக்களது நம்பிக்கையை விரைவில் இழக்கக் கூடும். இப்போதாவது அவர்கள் தவத்திற்கும் பூஜைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்களா?   

Sunday, October 1, 2017

பண்டிகைகள் வியாபாரிகளின் பிடியிலா?

நவராத்திரி ஒன்பது நாளும் உபவாசத்துடன் அம்பிகையை வழிபடுவோர் பலர் . வீடுகளிலும்,கோயில்களிலும் இப்பண்டிகை  ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களின் ஆர்வத்தையும், நம்பிக்கையையும்,பக்தியையும்  தங்களுக்குச்  சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகளைக் காணும் போது வருத்தமும்  ஏமாற்றமும் ஏற்படுகிறது.  வேறு எந்தப் பண்டிகை வந்தாலும் இதே நிலை தொடர்கிறது.    பூஜை செய்வதற்குப் பூவும் நீரும் இருந்தாலே அதனை செய்து விடலாம். அவ்வளவு எளிதாக நமக்குப் புண்ணியம் கிடைக்க விடுவார்களா நமது வியாபாரிகள்? நாளைக்கு ஒரு பண்டிகை வருகிறது என்றால் அதைக் காரணமாகக் கொண்டு விலையைக் கடுமையாக உயர்த்தி விடுகிறார்கள். பூ வரத்து குறைந்து விட்டதாம். இவர்களுக்கு மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் வானளவு லாபம் வந்தே தீர வேண்டும். அமோக விளைச்சலால் விலை சரிந்து விட்டால் விவசாயிகள் வேதனை என்றுதானே செய்தி வெளியிடுகிறார்கள்! பாமரர்கள் வேதனைப் படுவதற்கு யார் கவலைப் படப் போகிறார்கள்? 

நவராத்திரி கொலு பொம்மை விஷயத்திற்கு வருவோம். இந்த ஆண்டு பொம்மை வாங்கப்போனவர்களுக்குத் தெரியும், எத்தனை கடுமையாக விலையை ஏற்றி விற்கிறார்கள் என்பது. ஒரு சாண் அளவு கூட இல்லாத பொம்மைகளை சுமார் எண்ணூறு ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் ஜீ.எஸ்.டி வரியை அபத்தமாகக் காரணம் காட்டுகிறார்கள். எப்படியும் நம் வழிக்கு வந்து பொம்மைகளை வாங்கத்தானே வேண்டும் என்ற தைரியத்தால் இவ்வாறு விற்கப்படுகிறது.


இங்கு நீங்கள் காணும் இரண்டடி உயர பொம்மையின் விலையைக் கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். முதலில் அது என்ன பொம்மை என்று பலருக்குப் புரியாத நிலையில், கையில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியின் பொம்மை அது என்றார் ஒருவர். விலையைக் கேட்டால் மயக்கமே வந்து விடும். பதினெட்டாயிரமாம்! என்னதான் வேலைப்பாடாக இருந்தாலும்  ஊரை உலையில் போட்டுப் பணம் சம்பாதிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு ஏழையோ, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரோ வாங்க முடியாதபடி பொம்மையின் விலை எட்டாக் கனி ஆக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுத பூஜை என்றால் நெருங்க முடியாத அளவுக்குப் பழங்களின் விலையும்,பூக்களின் விலையும்  ஏறி விடுகின்றன. பாவம் மக்கள்! ஆண்டுக்கு ஒரு முறை தானே என்று இந்த விலை உயர்வை சகித்துக் கொண்டு வாங்குகிறார்கள். முதலில் ஆயுதங்களுக்குப் பூஜை என்று ஆரம்பித்து, சைக்கிள், பைக்,கார் என்று எல்லாவற்றிற்கும் வாழை ,தோரணம்,பூ ஆகியவற்றைக் கட்ட ஆரம்பித்து விட்டதால், வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம் தானே! 

உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது என்று சொல்லிக்கொண்டு,இப்படி ஏற்றிக்கொண்டே போனால் ஒரு நாள் தாங்கவே முடியாத நிலை வந்து, இந்த பூஜைகளுக்குக் குந்தகம் வராது என்பது என்ன நிச்சயம்? மக்களும் இன்று பூத்து நாளை வாடும் மலருக்கு சேர் ஆயிரம் என்று கொடுத்து வாங்குவதை முடிந்த வரை தவிர்த்து, விலை குறைவான பிறவற்றை வாங்கினால் இவர்களின் கொட்டம் கொஞ்சமாவது அடங்கும். இல்லாவிட்டால், தெரு ஓரம் முளைத்துக் கிடக்கும் அருகம் புல்லையும், எருக்கம் பூவையும் பறித்துக் கொண்டு வந்து விட்டு, சிறிய ஒரு கூறையும் பத்து ரூபாய்க்கு விற்றாலும் அதனை  வாங்கும் நிலை தொடரும். பூஜை செய்யும் அன்பர்கள் சிந்திப்பார்களா? இப்பொழுதாவது வீட்டில்,காய்கறி, பூ ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்பத் தொட்டிகளில் பயிரிடலாம். அதை விட்டுவிட்டு, அரசாங்கத்தையும், வியாபாரிகளையும் நம்புவதோ,குறைகூறுவதோ எந்தப் பலனையும் தரப்போவதில்லை.